முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Index

இஸ்லாத்திற்கு எதிராக தொடரும் ஹாலிவுட் தாக்குதல்கள்.

 
 
 

  அவதார் - 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நான்காவது இடத்தை இப்போது பிடித்திருக்கிறது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர்களான ஸ்டீபன் ஸ்பில்பேர்க், மைக்கல் பேரோலண்ட் எம்ரிச் வரிசையில் டைட்டானிக்,ஏலியன்ஸ், டேர்மினேட்டர் ஆகிய படங்களை இயக்கிய கனடியன் இயக்குனரான ஜேம்ஸ் கமரூனின் திரைக்கதையிலும் இயக்கத்திலும் உருவாக்கப்பட்ட படமே இந்த அவதார்.

THE TERMINATOR - 1984 , ALIENS -1986 , TERMINATOR 2 : JUDGEMENT DAY -1991, TITANIC -1997 போன்ற ஹாலிவுட் படங்களைத் தொடர்ந்து ஜேம்ஸ் கமரூனின் இந்த அவதார் திரைப்படமும் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஹாலிவுட் வாயிலாக இஸ்லாம் பெரிய அளவில் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம் ஒற்றுமை இணைய வாசகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. பிரம்மாண்ட தொழில்நுட்பம், பிரமிக்கவைக்கும் காட்சிகள் என்றுதான் அனைத்து ஹாலிவுட் திரைப்படங்களும் அறிமுகப் படுத்தப்படுகின்றன. அவ்வரிசையில் மட்டும் இந்த அவதார் திரைப்படம் இருந்திருந்தால் நாமும் சும்மா இருந்திருப்போம். ஆனால் இப்படத்தின் மூலம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல 3D அனிமேஷனின் பிரமிப்பிற்கிடையே இஸ்லாத்தின் போதனைகளை திரித்தும், மூடநம்பிக்கைகளை விதைத்தும் இருப்பதால் இந்த அவதார் திரைப்படத்தின் உண்மை நிலையை விளக்குவதற்கு நாம் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.

கடந்த 2009ம் ஆண்டு ஹாலிவுட் வரலாற்றில் பெரும் வெற்றிப்படமாக கருதப்படும் இந்த அவதார் திரைப்படத்திற்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? இப்படத்தில் இஸ்லாமிய கோட்பாடு எங்கே தாக்கப்பட்டுள்ளது என்கிறீர்களா? ஆக்கத்தை இறுதிவரை படியுங்கள். முதலில் அவதார் திரைப்படம் மூலம் விதைக்கப்பட்ட மூடநம்பிக்கைகளில் சிலவற்றை மட்டும் பார்த்துவிட்டு பின்னர் அவதார் திரைப்படத்தில் வரும் காட்சிகள் இஸ்லாமிய கோட்பாட்டில் எவ்வாறெல்லாம் மோதுகிறது என்பதை காண்போம்.

 

மூடநம்பிக்கை 1 - பண்டோரா கிரகம் : சூரியனைச் சுற்றிவரும் பல்லாயிரக்கணக்கான முரண்கோள்களுள் (Asteroids) பண்டோரா என்பதுவும் ஒன்று. முரண்கோள்கள் என்பது சூரியக்குடும்பத்திலுள்ள பூமி, புதன், செவ்வாய், வியாழன் போன்றதோர் துணைக்கோள் அல்ல. இந்நிலையில் பண்டோரா என்ற இந்த முரண்கோளை பெரும் சுவர்க்க பூலோகமாக சித்தரித்து, அதில் கண்ணைக் கவரும் அருவிகள், மரம் செடி கொடிகள் மற்றும் மிருகங்கள் வாழ்வதாக இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஓர் உயிரினம் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளான நிலம் நீர் காற்று போன்றவைகள் இல்லாத ஒரு முரண்கோளில் இத்தனை விஷயங்களும் இருப்பதாக கற்பனை செய்திருப்பது மூடநம்பிக்கை மட்டுமல்லாது அறிவியலுக்கு எதிரான கருத்துமாகும்.

மூடநம்பிக்கை 2 - பண்டோரா கிரகத்தில் நவி மனிதர்கள் : இதுவரை கண்டறியப்பட்டுள்ள பால் வெளிகளில், நாம் வாழுகின்ற சூரிய குடும்பத்திலுள்ள இப்பூமிதான் உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடம் என்பது அறிவியல் கூறும் உண்மை. படைத்த இறைவனும் தன் திருமறையில் பூமியைத்தான் நாம் வாழ்வதற்கு ஏற்ற இடம் என்று கூறுகிறான் (பார்க்க திருக்குர்ஆன் 67:15, 55:10, 40:64). இந்நிலையில் தோற்றத்தில் மனிதர்களுக்கு ஒப்பானதாகவும், பேச்சாற்றல் மற்றும் சிந்தனைத் திறன் கொண்ட நவி என்கிற கற்பனை படைப்பு பண்டோரா கிரகத்தில் வாழ்கிறது என்ற கருத்து இப்படத்தின் வாயிலாக பதியவைக்கப்படுகிறது. இது (Aliens) வேற்றுக் கிரகமனிதர்கள் என்ற அமெரிக்க பெண்டகனின் பழைய மூடகற்பனையை அவதார் படத்தின்மூலம் தூசிதட்டப்பட்டு சற்று 3D மயமாக்கப்பட்டுள்ளது. எனவே பண்டோரா கிரகத்தில் நவி மனிதர்கள் இருப்பதாக நம்புவது மூடத்தனத்தின் உச்சகட்டம் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.

மூடநம்பிக்கை 3 - நவிகளின் DNA வை மனிதனுக்கு செலுத்துதல் : இப்படத்தின் கதாநாயகனை பண்டோரா என்ற ஜேம்ஸ் கமரூனின் கற்பனை உலகத்திற்கு கற்பனையில் அனுப்புவதற்காக அவனது DNA வை நவிகளின் DNA யுடன் கலப்பினம் செய்து ஒரு புதிய நவி-கதாநாயகனை உருவாக்குவதுபோல் காட்டப்படுகிறது. DNA தொழில்நுட்பம் மற்றும் Cloning எனப்படும் படியெடுத்தல் போன்ற உயிரியல் கோட்பாடுகளை நமதூர் பள்ளிமாணவர்கள்கூட தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினைமுட்டையும் சேர்ந்தால்தான் கரு உருவாகும் என்ற அறிவியல் கூறும் கருவியல் தத்துவங்கள் இந்த 21 ம் நூற்றாண்டின் LKG பாடம் எனலாம். ஆணில் துணையில்லாமல் Cloning முறையில் உருவாக்கப்பட்ட Dolly என்ற செம்மறியாடு பல குறைகளோடும், நோய்களோடும் இறந்ததின் மூலம் விஞ்ஞானிகள் இதைத் தெளிவாக ஒப்புக் கொண்டனர்.

ஆக DNA என்னும் ஆக்ஸிஜனற்ற ரைபோ கருஅமிலத்தை கலப்பினம் செய்து மாற்று செல்லை உருவாக்க வேண்டுமென்றால் DNA வின் அந்த இரு மூலக்கூறுகளும் ஒரே இனத்தை சார்ந்தவைகளாக இருத்தல் வேண்டும். அதாவது யானையின் DNA வையும் எறும்பின் DNA வையும் கலப்பினம் செய்து (எறும்பானை?) வேறுஒரு உயிரணுவை உற்பத்தியாக்குவது சாத்தியமற்றது. இந்த பேருண்மை 12 வருட உழைப்பில், 300 மில்லியன் டாலர்களை கொட்டிக்குவிக்கக் காரணமாக இருந்த மகாராஜன் ஜேம்ஸ் காமரூனுக்கு தெரியாமல் போய்விட்டது ஏனோ? அல்லது குரங்கைப்போல வால் முளைத்த நவி என்ற கற்பனை பாத்திரத்தையும் மனிதன் என்கிறாரா? – அவருக்கே வெளிச்சம்.

Loading...

Click here to download this video

மூடநம்பிக்கை 4 - பண்டோரா கிரகத்தினுள் மனிதன் தன் சுய உருவத்தில் புகுதல் : நவிகளின் உருவம் பெற்றால்தான் பண்டோரா கிரகத்தைப் பற்றியும், அதிலுள்ள நவிகளைப் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ள இயலும் என்று கதை சென்று கொண்டிருக்கையில், பண்டோரா கிரகத்தை அழிக்கும் வில்லன்களாக காட்டப்படும் அமெரிக்க இராணுவத்தினரோ தங்கள் பூத உடலோடு அங்கு செல்வதைப்போல படமாக்கியுள்ளனர்.(அழிவுசக்தியான அமெரிக்க இராணுவத்திற்கு எதையும் அழிக்க மட்டுமே தெரியும் என்ற உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்களோ என்னவோ?) ஒரு கட்டத்தில் தனது உயிர்வாயுக் கவசத்தை இழந்த வில்லன் நவிகளோடு பேசுவது போன்றும் காட்டப்படுகிறது. நாம் வாழுகின்ற பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு செல்வதற்கே ஆக்ஸிஜன் அதுஇதுவென்று கடும் தயாரிப்புகளோடு செல்லும் நிலையிலுள்ள மனிதன் பண்டோரா என்ற முரண்கோளுக்கு படைபலத்துடன் எந்த தயாரிப்புகளும் இல்லாமல் படுபந்தாவாக செல்லமுடிகிறதென்றால் இதைவிட மூடநம்பிக்கை வேறேதும் உண்டோ?.  இதற்கு ஒருபடி மேலாக திரைப்படத்தின் இறுதி கட்டத்தில் நவிப்பெண் (கதாநாயகி)  தன் நவி உடலமைப்போடு விஞ்ஞானிகளின் ஆய்வுக் கூடத்திற்கே வந்துவிடுவாள். இவ்வாறு அவதார் திரைப்படம் மூலம் ஏராளமாகவும் தாராளமாகவும் விதைக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக்கத்தின் நீளம் கருதி இத்தோடு நிறுத்திட்டு அவதார் மூலம் விதைக்கப்பட்டுள்ள இஸ்லாத்திற்கெதிரான விஷயங்களுக்குச் செல்வோம்.

பண்டோரா கிரகம் என்னும் கற்பனை சுவர்க்கம்.

இந்த அவதார் திரைப்படமானது பண்டோரா கிரகம், நவி மனிதர்கள் என்ற கற்பனை கதாபாத்திரத்தில் அமைக்கப்பட்டிருப்பது போல தோன்றினாலும் இயக்குனர்களின் கற்பனைகளுக்குப் பின்னால் இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வான சுவனத்தையும் அதன் கட்டமைப்புகளையும் காப்பியடிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை. ஆம் பண்டோரா கிரகம் என்பது அவதார் திரைப்பட தயாரிப்பாளர்களின் கற்பனை சுவர்க்கம் என்று கூறினாலும் மிகையில்லை.

 

 
   


சுவனத்தில், எந்தக் கண்களும் பார்த்திராத, காதுகள் கேட்டிருக்க முடியாத, எந்த மனிதரின் உள்ளத்திலும் சிந்தனைகளிலும் தோன்றிராத அளவு உயர்ந்த எல்லாப் பொருள்களும், உன்னதமான இன்பங்கள் அனைத்தும் உள்ளன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் செய்த நற் கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது (32:17). என்று திருமறை குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.

இத்திரைப்படத்தில் பண்டோரா கிரகம் சம்பந்தமாக வரும் ஒவ்வொரு காட்சிகளும் இறைமறை குர்ஆன் வர்ணிக்கும் சுவர்க்கப் பூஞ்சோலை, மற்றும் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட சுவர்க்கத்தின் காட்சிகள் என்று ஒவ்வொன்றும் கற்பனை செய்யப்பட்டு, அவ்வொவ்வொன்றின் பின்னால் இஸ்லாத்திற்கு எதிர்மறையான சித்தனைகள் புகுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். பண்டோரா கிரகம் சுவர்க்கத்தைப் பற்றிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் இதோ.

காதாநாயகனின் முதல் உணவு: இத்திரைப்படத்தின் கதாநாயகன் நவி உருமேற்று சுவனத்தில்(?) முதலாவதாக பிரவேசிக்கும் போது மகிழ்ச்சியில் அங்கும் இங்கும் ஓடித்திரிவான். இறுதியில் கிரிஸ் என்ற நவிபெண்ணாக உருவெடுத்தவள் ஆப்பிள் நிறத்தில் ரோஜா இதழ்கள்போன்ற தோல்கள் உடைய ஒரு கனியை புசிப்பதற்கு கதாநாயகனுக்குக் கொடுப்பாள். அதை உண்ட கதாநாயகனோ கனியின் சுவையால் பெரும் புலங்காகிதம் அடைவான். என்ன! சுவக்கத்தில் நம் ஆதிபிதா ஆதம் (அலை), ஹவ்வா (அலை) அவர்களை தடைசெய்யப்பட்ட கனியை புசிக்கும்படி செய்து ஏமாற்றிய ஷைத்தானின் செயல் நினைவிற்கு வருகிறதா? மிகச்சரிதான் என்றாலும் அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆதம் ஹவ்வா இருவரும் இறைவனால் சுவனத்திலிருந்து கீழிறக்கப்பட்டார்கள். ஆனால் அவதார் படத்தில் கனியை சுவைத்த பின்னர்தான் கதாநாயகன் பண்டோரா என்ற கற்பனை சுவனத்தை கலக்கோ கலக்கென்று கலக்குகிறார்.

பண்டோராவின் கஸ்தூரி மணல்: பண்டோரா சூரியக் குடும்பத்திலுள்ள ஒரு முரண்கோள் அல்லது துணைக்கோள் என்று வைத்துக்கொண்டாலும் மற்ற கிரகங்களிலுள்ளதுபோல பாறைகளும், மணல் மேடுகளும்தான் இருக்கவேண்டும். ஆனால் எங்கும் வாசனை வீசும் பூஞ்சோலையாகக் காட்சியளிக்கும் பண்டோரா கிரகத்தின் மணல் கஸ்தூரிபோன்ற தோற்றத்தில் காட்டப்படுகிறது. ஆம் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் கூற்றுப்படி சுவனத்தின் மணல் கஸ்தூரிதானே!. அந்த முன்னரிவிப்பை அப்படியே காப்பியடித்துள்ளனர்.

சுவர்க்கத்தின் ஒரு கல் தங்கமும் மற்றொரு கல் வெள்ளியுமாகும், அதனின் சாந்து கஸ்தூரியாகும், அங்கு கிடக்கும் சிறு கற்கள் மருகதமும் பவளமுமாகும், அதன் மண் குங்குமமாகும், அதனுள் நுழைபவர் சந்தோசமடைவார் துற்பாக்கியமுடையவராகமாட்டார். நிரந்தரமாக அங்கிருப்பார் மரணிக்கமாட்டார். அவரின் ஆடைகள் இத்துப்போகாது, அவர் வாலிபத்தை இழக்கமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

நான் சுவர்க்கத்தினுள் நுழைவிக்கப்பட்டேன், அங்கே முத்தினாலுள்ள கோபுரம் இருந்தது. அதன் மண் கஸ்தூரியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

பாண்டோராவின் பிரம்மாண்ட மரம்: இத்திரைப்படத்தில் நவிகளுடைய அரசவையாகவும், நவிகள் தலைவனின் இருப்பிடமாகவும் ஒரு பிரம்மாண்ட மரம் சித்தரிக்கப்படுகிறது. திரைப்படத்தின் முடிவுவரை முக்கியத்துவம் பெரும் அந்த மரம், நாம் இதுவரை கண்டிராத வேரும் விழுதுகளும் நிறைந்திருக்கிறது. படர்ந்திருக்கும் அதன் மெகாசைஸ் விழுதுகளில் நவிகளின் குதிரைகள் சவாரிசெய்யுமளவிற்கு மிகப்பிரம்மாண்டமான மரம் என்பதை அவதார் சனியத்தை பார்த்தவர்களுக்குத் தெரியும். ஒருகட்டத்தில் அம்மரம் வில்லன்களின் குண்டுவீச்சிற்கு இறையாகி வேறோடு சாய்கிறது, அப்போது நவிகளின் சாம்ராஜ்யமும் வீழ்த்தப்படுவதுபோல காட்சி அமைகிறது. அதுசரி அந்த மரத்திற்கும் சுவர்க்கத்திற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? சற்று கீழே படியுங்களேன்.

நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் அருகில் (அதன் நிழலில்) நல்ல வலிமையான, விரைவாகச் செல்லும் குதிரையில் சவாரி செய்யும் மனிதன் நூறு ஆண்டுகள் சவாரி செய்து சென்றாலும், அம்மரத்தைக் கடந்து செல்ல முடியாது. அத்தகு மாபெரும் மரமாகும் அது (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் ஒரு மரமுண்டு, நூறு வருடம் பிரயாணம் செய்யும் ஒரு பிரயாணி அதன் நிழலை கடக்க முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அழகிய ஓடைகளும் அதிசயச் செடிகளும்: நீரோடைகளின் சலசலப்பில் ரம்மியமாக காட்சிதரும் பண்டோராவின் காடுகள் முழுவதும் பூக்கள் நிறைந்த அழகிய நந்தவனம்போல காட்டப்பட்டுள்ளன. ஒருகாட்சியில் கதாநாயகனும் கதாநாயகியும் ஒரு பெரும் பள்ளத்தாக்கில் குதிக்க, மேலிருந்து கீழ்வரை இடையிடையே முளைத்திருக்கும் அழகிய செடிகளின் ராட்ஷச இழைகள் அவ்விருவரையும் வருடிக் கொண்டு எந்தவித உராய்வும் இன்றி அவர்கள் கீழேவர உதவுகிறது. நமதூர் சிற்றுண்டிகளின் மெகாசைஸ் வாழை இலையில் வைக்கப்படும் ஒரு மெதுவடை எந்த அளவிற்கு அந்த இழையின் இடத்தை நிறைக்குமோ அதுபோல சற்றொப்ப 20 அடிகள் கொண்ட நவியின் உடலை அவ்விழைகள் தாங்குவதுகண்டு அதன் அளவை கணித்துக்கொள்ள இயலும்.

இதைப்படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்த ஒருஅறிவிப்பு நினைவிற்கு வரலாம். அதாவது
மிஃராஜின் போது ஏழாவது வானத்திலுள்ள சித்ரத்துல் முன்தஹா எனக்கு உயர்த்தி காட்டப்பட்டது. அதனுடைய பழங்கள் ஹஜர் என்ற ஊரிலுள்ள குடம் போன்றதாகும். அதனுடைய இலைகள் யானையின் காது போன்றதாகும். அதனுடைய தண்டிலிருந்து வெளிப்படையான இரு ஆறுகளும் மறைமுகமான இரு ஆறுகளும் ஓடுகின்றது. ஜிப்ரீலே இது என்னவென்று? நான் கேட்டேன். மறைமுகமான இரு ஆறுகளும் சுவர்க்கத்தில் ஓடுகின்றது, வெளிப்படையான இரு ஆறுகளும் நைலும் ஃபுறாத்துமாகும் என ஜிப்ரீல்(அலை) அவர்கள் அறிவித்தார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

 

 
   

முத்துக்களாலான கூடாரம்: கதாநாயகனும் கதாநாயகியும் வழக்கம்போல காதல் வயப்படும்போது(?) ஒரு முத்துக்களான கூடாரத்தில் சல்லாபிப்பதுபோல ஒரு காட்சியும் உண்டு. கதாநாயகி அந்த முத்துமாலைகளை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் அம்மாலைகள் மூலம் அவர்களின் முன்னோர்களின் பேச்சுக்களை கேட்பதாக விஷயம் திசைதிருப்பப்படும். இந்த முத்துக்கூடாரக் கற்பனை எங்கிருந்து வந்தது என்ற கேட்கிறீர்களா? இதோ படியுங்கள்.

நிச்சயமாக! முஃமினான அடியானுக்குச் சுவர்க்கத்தில் குடையப்பட்ட ஒரே முத்தினாலுள்ள கூடாரம் தயார் செய்யப்பட்டிருக்கும். வானில் அதன் உயரம் அறுபது மைல்களாலும். அக்கூடாரத்தில் அவனுடைய குடும்பத்தார்கள் வசிப்பார்கள். அவர்களை அவன் சுற்றிப் பார்த்து வருவான். (கூடாரம் விஸ்தீரணமாக இருப்பதால்) அவர்கள் சிலர், சிலரைப் பார்க்கமாட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் முத்துக்களின் வகைகளால் உருவாக்கப்பட்ட பல அறைகள் உண்டு, அவைகள் அனைத்தின் உள் பக்கத்திலிருந்து வெளிப்பக்கத்தையும், வெளிப்பக்கத்திலிருந்து உள் பக்கத்தையும் பார்க்கலாம். எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத இன்பங்களும் அருட்கொடைகளும் அங்கிருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல் பைஹகி)

பச்சை கிளியில் உள்ளாசப்பயணம்: திரைப்படத்தின் இறுதிவரை கதாநாயகனும் காதாநாயகியும் பச்சைவர்ண கிளிபோன்ற ராட்சத பறவை மூலம் பண்டோரா முழுவதும் சுற்றித்திரிவதைக் காணலாம். பச்சைநிறப் பறவை என்றாலே ஷஹீதுகள் பற்றிய நபிமொழிதானே நம் நினைவுக்கு வரும்.

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - அவனால் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (3:169)

அவர்கள் இறைவனிடமும் எவ்வாறு உயிருடன் உள்ளனர் என்பதை நபிகள் (ஸல்) அவர்கள் விளக்கமுற்படும் போது, அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள் நுழைந்து சுவனத்தில், தான் நினைத்தபடி சுற்றித்திரிகின்றன” என்று குறிப்பிட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம் அறிவிப்பவர்: இப்னுமஸ்வூது (ரழி))

நவிகள் சுவனக் கன்னியர்களோ?: முத்துக்கள் மின்னும் முகத்தோரனையும், நீண்ட நெடிய கண்களையும், பவளத்தை போன்ற கவர்ச்சிமிகு கருவிழிகளையும் கொண்டதாக நவிகளை வடிவமைத்துள்ளனர். இந்த நவிகளின் உடலமைப்பின் கற்பனைக்கு பின்னால் சுவனத்து அமரகன்னியர்கள் இருந்துள்ளனர் என்பதே உண்மை. இதோ அந்த இறைவசனங்கள்

அவற்றில் அடக்கமான பார்வையுடைய அமர கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள் (55:56-58).

அங்கு இவர்களுக்கு ஹூருல் ஈன் என்னும் நெடிய கண்களுடைய கன்னியர் இருப்பர் (56:22).

இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட அமர கன்னியரும் இருப்பார்கள். தூய்மையில் அவர்கள் சிப்பிகளில் மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். (37:48-49)

இவ்வாறு பண்டோரா கிரகம் என்று ஜேம்ஸ் கமரூன் அறிமுகப்படுத்தியிருப்பது அவர் கற்பனை செய்த சுவர்க்கம்தான் என்பதற்கான சான்றுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். பண்டோரா கிரகத்தை சுவர்க்கம் என்று இவர்கள் சொல்லிவிட்டு போகட்டுமே அதனால் இஸ்லாத்திற்கு என்ன இழுக்கு? என்ற கேள்வி பிறக்கலாம். இதுபோன்ற சிந்தனையில்தான் நம்மில் பெரும்பலானோர் இஸ்லாத்தின் மீதான ஜியோனிஸத் தாக்குதல்களை அடையாளம் கண்டுகொள்வதில் ஏமாந்துவிடுகின்றனர்.

மக்களே! யூத கிருஸ்தவ சக்திகள் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை (மீடியாக்களின் அனைத்துத் துறைகளையும் பயன்படுத்தி ) தொடர்ந்து விதைப்பதின் நோக்கம், அதன் பலனை நாளையோ அல்லது நாளைமறுநாளோ அறுவடை செய்வதற்காக அல்ல. மாறாக இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதுபோல இஸ்லாத்திற்கெதிரான இவர்கள் தொடர்ந்து பதிந்துவரும் பொய்கள் மூலம் நாளைய முஸ்லிம் சமூகத்தை நிலைகுலையச் செய்யவேண்டும் என்ற நோக்கமே!. எனவேதான் பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளம், ஹாலிவுட் திரைப்படம் என்று மீடியாக்களில் இஸ்லாம் தவறாக சித்தரிக்கப்படும்போது அவைகளை உடனுக்குடன் கலைந்து கலையெடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இன்று அவதார் திரைப்படம் பரப்பியிருக்கும் அவதூறுகள் அடயாளப் படுத்தப்படாவிட்டால் நாளைய தலைமுறையினர் இஸ்லாம் போதிக்கும் சுவர்க்கம் அவதார் திரைப்படத்திலுள்ளது போன்று இருக்குமோ என்று எண்ணிவிடக் கூடாது. நல்லடியார்களுக்கு இறைவனின் பரிசு என்று குர்ஆனும், சுன்னாவும் வாக்களிக்கும் அந்த சாந்திமிக்க சுவனத்திலும் கூட மரணம், சண்டை சச்சரவுகள், பிரச்சனைகள் ஏற்படத்தானே செய்கிறது என்று அவதார் படத்தை பார்த்துவிட்டு குழம்பிவிடக் கூடாது. அதற்கான வாசற்படிகளை அடைக்கும் நோக்குடனேயே இந்த அவதார் திரைப்படத்தின் பின்னால் இருக்கும் இஸ்லாமிய விரோத சூழ்ச்சியை விளக்கிக்கொண்டிருக்கிறோம்.

அவதார் பரப்பிய இஸ்லாமிய விரோத கருத்துக்கள்

சுவர்க்கத்தை பற்றி எந்தக் கண்ணும் கண்டிராத, எந்த காதும் கேட்டிராத அதன் இன்பங்களை, எந்த ஆன்மாவும் கற்பனை செய்ய இயலாது என்கிறது இஸ்லாம். ஆனால் கற்பனையாக ஒரு மாதிரி சுவனத்தை உருவாக்க முயன்றுள்ளது இந்த அவதார் திரைப்படம். இவ்வாறு அவதார் பரப்பிய இஸ்லாமிய விரோத கருத்துக்கள் பல இருந்தாலும், பண்டோரா எனும் கற்பனை சுவர்க்கம் சம்மந்தப்பட்டவைகளில் சிலவற்றை மட்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

1) சுவர்க்கம் என்பது இறைவனுக்கு கட்டுப்பட்டு நடந்த நல்லடியார்களுக்கு உரியதாகும். அங்கு அச்சமோ, துன்பமோ, துயரங்களோ, பிரச்சனைகளோ, கொடிய மிருகங்களோ இருக்காது. சுவனத்தில் 'ஸலாம்,ஸலாம்' என்னும் சொல்லையே செவியுறுவார்கள் (56:26) என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் அவதார் திரைப்படம் அறிமுகப்படுத்தும் பண்டோரா சுவர்க்கத்திலோ கொடூரகுண்டுவீச்சுகள், போர்கள், சண்டை சச்சரவுகள், இரத்தம் சிந்துதல், நிம்மதியின்மை போன்ற சுவர்க்கத்தின் தன்மைகளுக்கு எதிரான விஷயங்கள் பதியவைக்கப்பட்டுள்ளன. மேலும் கொடிய மிருகங்கள் வாழ்வதாகவும், அது நவிகளை தாக்க முற்படுவதுபோன்றும் காட்சிகள் அமைந்திருக்கின்றன. இஸ்லாம் கூறுவதுபோன்று சுவர்க்கத்தை (தவறாக) கற்பனை செய்துவிட்டு அதில் இல்லாத விஷயங்களை புகுத்தும் யூத ஜியோனிஸ தந்திரமே இது.

2) குர்ஆன் சுவர்க்கவாசிகளின் உடையை பற்றி சொல்லும் போது ஸூன்துஸூ, இஸ்தபரக் என்ற பச்சைநிற அழகிய பட்டாடைகளும், கடகங்களும் அணிவிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறது (18:21, 44:53, 76:12, 76:21). அவதாரின் கற்பனை சுவர்க்கத்தில் நவிகளுக்கு கடகங்களைப்போல கைகைளில் அணிவிக்கப்பட்டிருந்தாலும், ஆடை விஷயத்தில் மேற்கத்திய நாகரிக ரசனைக்கொப்ப நவிகளை அரைநிர்வாணமாக அழைய விட்டுவிட்டார்கள். இஸ்லாம் ஆடை அணிவித்து உங்களை கௌரவிக்கும் முகமாக போதித்தால் நாங்கள் அதை நிர்வாணமாகக் காட்டுவோம் என்ற கயமைத்தனம் தெரிகிறது.

3) இஸ்லாம் சுவர்க்கவாசிகளை பற்றி கூறும் போது அவர்கள் மகிழ்ச்சியில் திழைத்தவர்களாக, தனக்கு இறைவன் அளித்த பரிசுகளை எண்ணி இறைவனைப் புகழ்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறுகிறது. சுவர்க்கம் ஒரு மாபெரும் அரசாங்கம் என்கிறது (பார்க்க 76 ம் அத்தியாயம் ஸூரா அத்தஹ்ர்). மேலும் சுவனத்தை அடைந்த ஒருவர் தான் சுவனத்தில்தான் இருக்க வேண்டும் என்று விரும்புவாரே அல்லாமல் அதைவிட்டுவிட்டு வெளியேறுதல் என்ற ஒரு நிலையை விரும்பமாட்டார். இவ்வவுலகம் அழிக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பு நாளுக்குப் பின்னர் இறைவன் தன் நல்லடியார்களுக்கு வழங்கும் பரிசுதான் சுவர்க்கம் என்னும் அழிவில்லா வாழ்க்கை. அந்நாளில் வானம் சுருட்டப்பட்டு பூமி அழிக்கப்பட்டு விடும் என்பதையும் கவனத்தில் கொள்க. ஆனால் அவதார் காட்டும் பண்டோரா சுவர்க்கத்திலோ கதாநாயகன் பூமியிலிருந்து சுவர்க்கத்திற்கும் பின்னர் சுவர்க்கத்திலிருந்து பூமிக்கும் வருவதுபோன்ற கட்சிகளை பார்க்கிறோம். இதிலிருந்து சுவர்க்கவாசிகள் மனம்போன போக்கில் சுவனத்திலிருந்து வெளியேறி வேற்றுகிரகங்களுக்கு செல்லலாம் என்றும், பூமி போன்ற மற்ற கோள்கள் அழியாமல் இருக்கும் என்றும் நச்சுப் போதனை செய்யப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

4) சுவர்க்க வாழ்க்கையை நித்திய ஜூவனுள்ள வாழ்க்கையாக இறைவன் ஆக்கியுள்ளான். சுவர்க்கவாசிகளுக்கு மரணம் என்பதே இல்லை என்கிறது இஸ்லாம். முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள் (44:56) என்ற குர்ஆன் கூறுகிறது. இதற்கு எதிராக ஜேம்ஸ் கமரூனின் கற்பனை சுவர்க்கமான பண்டோராவில் நவிகள் மரணிக்கின்றனர், கொலை செய்யப்படுகிறார்கள்.

5) இறுதியாக பண்டோரா சுவர்க்கத்தில் மரணமடைந்த கிரிஸ் என்ற மனித நவிபெண்ணை உயிராக்கும் முயற்சியும் நடக்கிறது. நவிகள் அனைவரும் அந்த பிரமாண்டமரத்தில் ஒன்று கூடி தங்களின் கைகளை கோர்த்துக்கொண்டு புரியாத பாஷையில் பாடல் ஒன்றை படிப்பார்கள். பின்னர் அந்த நவிப்பெண்ணின் பிடரியில் ஓர் ஒளிவெள்ளம் பாய்ந்து மயக்க நிலையை விட்டு அந்தப் பெண் சற்று விலகுவாள். இங்கு நாம் சொல்ல வருவது மரணித்தவர்களை உயிர்த்தெழுப்புவது யார்? மனிதனின் பிடரி நரம்பின் முக்கியத்துவம் போன்ற விஷயங்கள் அல்ல. அவைகள் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே இங்கு நாம் சொல்லவருவது புரியாத பாஷையில் பாடப்பட்ட அந்த பாடல் பற்றிதான். இதுபோன்ற புரியாத பாஷையில் பாடல் ஒன்று Jay-Z The Black Album என்ற பாப் ஆல்பத்தில் வரும். அதாவது Susej Redrum Redrum. இப்படி ஒரு ஆங்கிலச் சொல்லை நாம் படித்ததில்லையே என்று நீங்கள் என்னலாம். இதை கொஞ்சம் வலமிருந்து இடமாக படித்துப்பாருங்கள் Murder Murder Jesus என்று வரும். முஸ்லிம்கள் கண்ணியத்துக்குரிய இறைத்தூதரர்களில் ஒருவராக மதிக்கும் நபி ஈஸா (அலை) அவர்களுக்தெதிராக பாடப்பட்ட பாப் பாடலை நேர்மாறாக பதிவு செய்து கேட்டு கண்டுபிடித்தனர். அதுபோல அவதார் கண்டுபிடித்துள்ள புரியாத நவிப்பாஷையையும், அவர்கள் படிக்கும் பாடலையும் இவ்வாறு ஆய்வு செய்தால் அதில் புதைந்திருக்கும் புரட்டுகள் வெளிவரலாம்.

எனவே அவதார் போன்ற ஹாலிவுட் திரைபடங்களின் விஷமத்தனத்திலிருந்து உங்களையும் உங்களின் குடும்பத்தையும் பாதுகாப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். மறைவான இணைவைப்பான ரியாவின் பக்கம் மெல்ல மெல்ல இழுத்துச்சென்று, பின்னர் பகிரங்க இணைவைப்பில் இட்டுச் செல்லும் ஹாலிவுட் - பாலிவுட் - கோலிவுட் சூழ்ச்சிகளை விட்டும் முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக.


   


 

 


 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
  
   Miscellaneous

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved