முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

இவ்வாக்கத்தை பதிவிறக்கம் செய்ய....

Go To Index


மூல ஆசிரியர் : அபூஅப்தில்லாஹ்,

 தமிழ் அச்சு : இக்பால் மஸ்தான்


முன்னுரை

படைப்புகளிலேயே மிகச்சிறந்த படைப்பு மனிதப் படைப்பு. மனிதனுக்கு இந்த சிறப்பு கிடைக்கக் காரணமே அவனிடமுள்ள பகுத்தறிவாகும். மனிதன் தனக்குள்ள பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தினால் மனிதன் புனிதனாக உயர்ந்து விடுகிறான். பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தத் தவறும் மனிதன் தன்னைவிட தாழ்ந்த மற்ற படைப்புகள் அனைத்தை விடவும் மிக இழிவானதொரு நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான்.

உலகிற்குப் பயனற்ற மனிதன், மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே – பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தும் மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே – பிறப்பின் இலட்சியத்தை எய்துகிறான், இல்லை என்றால் அவனது பிறப்பு பயனற்றதாக மட்டுமல்ல, மீட்சியே இல்லாத நரக வேதனையைப் பெற்றுத் தருவதாக ஆகிவிடுகிறது.

பகுத்தறிவைக் கொண்டு சீர் பெற வேண்டிய மனிதன் அதே பகுத்தறிவைச் சுட்டிக் காட்டியே சீரழியும் நிலையை இன்று உலகெங்கும் பரவலாகக் காண்கிறோம். இதற்குக் காரணம் அவர்கள் கூறும் பகுத்தறிவு உண்மையில் பகுத்தறிவே அல்ல. புலன்களைக் கொண்டு பெறப்படும் ஒரு வகை அறிவாகும் அது. உண்மையான பகுத்தறிவை முறையாகப் பயன் படுத்தும் மனிதன் மனிதப் புனிதனாக உயர்ந்துவிடுவான். தன்னையும், தன்னைப் போன்ற மனிதப் படைப்பையும் மற்றும் படைப்புகள் அனைத்தயும் படைத்த ஒரே ஒரு இறைவன் இருக்கிறான், அவனுக்கு இணையோ, துணையோ, எவ்வித தேவையோ இல்லை என்பதை அந்த பகுத்தறிவைக் கொண்டே விளங்கிக் கொள்வான்.

இப்படி தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுத்தறிவை முறையாகப் பயன் படுத்துவதில் தவறு செய்த சகோதரர்கள். நாஸ்திகத்தால் ஈர்க்கப்பட்டு திசைமாறி சென்று கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் சிந்தனையைத் தூண்ட வேண்டும். அதன் மூலம் அவர்கள் நேர்வழிக்கு வரவேண்டும் என்ற நல்ல நோக்கோடு அந்நஜாத் மாத இதழில் 'நாஸ்திக நண்பர்களே! நாசத்தைத் தவிர்ப்பீர்!!' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. அது நாஸ்திக எண்ணங்கொண்ட பல சகோதரர்களிடையே நல்லதொரு மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கிறது. எனவே அத்தொடரை ஒரு தனி நூலாக்கி வெளியிட்டால் பெரிதும் உதவியாக இருப்பதோடு நாஸ்திக நண்பர்களுக்குக் கொடுத்து படித்துப் பார்க்கச் சொல்லும் வாய்ப்பும் ஏற்படும் என்று பல சகோதரர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள்.

அந்த சகோதரர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் அதனை ஒரு நூலாக வெளியிட்டுருக்கிறோம். தமிழகம் நாஸ்திகத்தால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது நாமறிந்த விஷயமே. எனவே நாஸ்திக நண்பர்களிடையே இந்த நூலை பரவச் செய்ய சகோதரர்கள் முனைய வேண்டுகிறோம். வசதி படைத்தவர்கள் தாராளமாக பல நூறு பிரதிகள் வாங்கி நாஸ்திக நண்பர்களிடம் கொடுத்து படிக்கச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அவர்களில், அல்லாஹ்வின் நாட்டப்படி நேரிய வழிக்கு வருபவர்களுக்கு நம்முடைய இந்த முயற்சி காரணமாகவும் அமையலாம். அப்படி அமைந்தால் அது நமக்கு நன்மையை ஈட்டித்தரும்.

எனவே சகோதர சகோதரிகளே இந்த அரும் பெரும் முயற்சியில் அக்கறையுடனும் ஆர்வமுடனும் இணைந்து ஈடுபட உவகையுடன் ஊக்குவிக்கிறோம்.

1- இரு பிரிவினர்:
இன்று உலகில் வாழும் மனித சமுதாயத்தை இரண்டு பெரும் பிரிவினர்களாகப் பிரிக்கலாம். அவர்களில் ஒரு கூட்டம் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் கூட்டம். வாழ்க்கை வாழ்வதற்கே, ஆண்டு அனுபவிப்பதற்கே பிறந்திருக்கிறோம். தம் மனம் சரி என்று கருதுவதையே காண்பதையே வாழ்க்கையாகக் கருதி, வாழ்ந்து அனுபவித்து மடிய வேண்டியதுதான். முடிந்தபின் மண்ணோடு மண்ணாக ஆகிவிடுவோம். அதன்பின் ஒரு வாழ்க்கை இல்லை' என்பதே இக்கூட்டத்தாரின் நம்பிக்iயாகும். இவர்களையே நாஸ்திகர்கள் என்று அழைக்கிறோம்.

இந்த நாஸ்திக நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களின் வாதத்தில் உண்மையிருக்கிறதா? அவர்கள் வாழ்வில் வெற்றியடையக்கூடியவர்களா? என்பவனவற்றை அவர்கள் மதித்துப் போற்றும் பகுத்தறிவு கொண்டே ஆராய்வோம்.
இவர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது தங்கள் சிந்தனையில் வராதவற்றை எல்லாம், புலன்களுக்கு எட்டாதவற்றை எல்லாம், மறுத்து விடுவது என்பதே இவர்களின் பகுத்தறிவு வாதமாகும். அந்த அடிப்படையில் இறைவனை இவர்களின் அறிவுத்திறமையால் ஆராய்ந்தறிய முடியவில்லை. புலன்களாலும் உய்த்துணர முடியவில்லை. மறுமை விஷயத்திலும் இதே நிலைதான்! ஆகவே இறைவனும் இல்லை, மறுமையும் இல்லை என்று துணிந்து கூறிவிடுகிறார்கள்.

2- பகுத்தறிவின் நிலை:
நாஸ்திக நண்பர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் பகுத்தறிவும், புலன்களும் எந்த அளவு நம்பிக்கைக்கு உரியன என்பதை முதலில் ஆராய்வோம். ஏன் என்றால், அளப்பதற்கு முன் அளக்கும் கருவியையும், நிறுப்பதற்கு முன் நிறுக்கும் கருவியையும் கண்டிப்பாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அளவையிலும். நிறுவையிலும் தவறுகள் ஏற்பட்டு விடும் என்பதை நாஸ்திக நண்பர்களும் மறுக்க மாட்டார்கள்.

பகுத்தறிவைக் கொண்டு மிகப் பெரிய விஷயமான இறைவனையும், இன்னொரு பெரிய விஷயமான மறுமையும் ஆராயப் புகுமுன், அதே பகுத்தறிவைக் கொண்டு மட்டும் சிறிய விஷயமான, நமக்கு நெருக்கமான தாயையும், தகப்பனையும் முதலில் அறிந்து கொள்ள முயற்சி செய்தால் அதன் முடிவு என்ன? தலை மயிரை எல்லாம் பிய்த்துக் கொண்டாலும், சுயமாகத் தம் பகுத்தறிவால் மட்டும் இவர்கள் தம்மைப் பெற்றெடுத்த தாயையும், தகப்பனையும் உறுதியாக அறிந்து கொள்ள முடியாது. உடனே இவர்கள் எனக்கு தாயும், தகப்பனும் இல்லை. நான் வானத்திலிருந்து குதித்துவிட்டேன் என்று சொல்வார்களா? இங்கு பெற்றடுத்தத் தாயையும், தகப்பனையும் அறிந்து கொள்ள இவர்களின் பகுத்தறிவும், புலன்களும் உதவுவதாக இல்லை. ஊரை நம்பி தாயையும், தாயை நம்பி தந்தையையும் அறிந்துகொள்ள வேண்டியதாக உள்ளது. தன்னைப் பெற்றடுத்த தனக்கு மிகவும் நெருக்கமான பெற்றோரைத் தனது பகுத்தறிவு கொண்டு அறிந்து கொள்ள முடியாதவனா அந்த பகுத்தறிவின் துணை கொண்டு, அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் போஷிக்கக் கூடிய, சர்வ வல்லமைமிக்க இறைவனை அறிந்து கொள்ள முடியும்? ஒரு போதும் முடியாது. தங்கள் பகுத்தறிவையும். சிந்தனா சக்தியையும் பெரிதாக நம்பும் இந்த நாஸ்திகர்கள், தாங்கள், தங்கள் தாயின் கர்ப்பபையில் 10 மாதம் இருந்து வந்ததை, தமது சிறு பிராயத்தில் நடந்த சம்பவங்களை சிந்தித்து விளங்கிக் கொள்ள முடிகின்றதா? கண் முன்னால் பல குழந்தைகள் தாயின் வயிற்றில் இருந்து பிறப்பதைப் பார்த்து விளங்கிறோம் என்று சொல்வது தவறு. அப்படி ஒரு வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்காவிட்டால் தாங்கள் கர்ப்பபையில் இருந்து வந்ததை மறுப்பார்களா?.
நடந்த நிகழ்ச்சியைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முடியாதவன், நடக்கப் போகும் ஒரு நிகழ்ச்சியை, அதுவும் மரணத்திற்குப்பின் நடக்க இருப்பதைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முற்படுவது விவேகமான செயலா என்று சிந்திப்பார்களாக
.

அ..ப்..பா என்று சொல்வதற்கே தாளம் போடுகிறவன் திருக்குறளுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்பதையும் 2+2=4 என்பதைத் தெரியதவன் 2 / 100 எவ்வளவு என்பதை நிச்சயமாக அறியமுடியாது. அதே போல் பெற்றெடுத்த பெற்றோரை பகுத்தறிவால் அறிய முடியாததுவரை இறைவனையும், மறுமையையும் நிச்சயமாக அறிய முடியாது என்பதையும் உணர வேண்டும். ஒன்றுமே இல்லாமல் இருந்து, இன்று மனிதனாக உலா வருகிறோமே, இதை முறையாகச் சிந்தித்தால் நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான் என்பதை உணர முடியும்.

3- உலகில் பார்க்க முடியாதவை பல:
அடுத்து உலகில் எத்தனையோ காரியங்களை கண்ணால் பார்க்க முடியாமல், அவற்றின் விளைவுகளை வைத்து நாஸ்திகர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள். உயிர், காற்று, வலி, மின்சாரம் இவற்றைக் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும், விளைவுகளை வைத்து ஒப்புக் கொள்கிறார்கள். சிறுநீரில் சர்க்கரை இருக்கிறதா? என்று எந்த டாக்டரும் சுவைத்துப்பார்த்துச் சொல்வதில்லை. அப்படி எந்த நாஸ்திக நண்பரும் எதிர்பார்க்கவும் மாட்டார். சிறுநீரில் சர்க்கரை இருந்தால் அதன் விளைவு என்ன என்பதை வைத்தே ஒப்புக்கொள்கிறார்கள். இதே போல் உடம்பிலுள்ள எத்தனையோ வியாதிகளைக் கண்ணால் பார்த்தோ, புலன்களால் நேரடியாக உய்த்துணர்ந்தோ வைத்தியம் செய்யப்படுவதில்லை. வியாதிகளின் விளைவுகளை வைத்தே முடிவு செய்யப்படுகிறது, ஆறடி மனிதனுக்குள் இருக்கும் ஒரு வியாதியை நேரடியாகப் பார்க்க முடியவில்லை. புலன்களாலும் உய்த்துணர முடியவில்லை இவ்வளவுதான் பகுத்தறிவின் புலன்களின் நிலைகள், இந்த நிலையில் இவற்றை வைத்துக் கொண்டு இறைவனையும், மறுமையும் அறிய முற்படுவது விவேகமான செயலா? என்று நாஸ்திக சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். இதுவரை நாம் சொல்லி வந்தது போல் உலகில் எத்தனையோ விஷயங்களை பகுத்தறிவு கொண்டு, புலன்கள் கொண்டு நேரடியாக விளங்கிக் கொள்ள முடியாதவற்றை ஒப்புக்கொள்ளும் நாஸ்திக நண்பர்கள், இறைவனையும் மறுமையையும் நேரடியாகப் பார்த்தே புலன்களால் உய்த்துணர்ந்தே ஒப்புக்கொள்வோம், இல்லையென்றால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று விவாதிப்பது நாஸ்திகர்கள் ஏதோ ஒரு வகையில் தவறான நிலையில் இருக்கிறார்கள், என்பதையே நமக்கு உணர்த்துகின்றது. இவர்களின் பகுத்தறிவு வாதத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சம்பவத்தை - ஓர் அறிஞருக்கும், நாஸ்திகருக்கும் நடந்து முடிந்த போட்டி விபரங்களை அறியத் தருகிறோம்.

4- அழகிய படிப்பினை:
ஓர் அறிஞர் இறைவன் இருக்கிறான் என்று சொன்னார். நாஸ்திகர், 'உங்களால் அப்படி நிரூபிக்கவே முடியாது பகிரங்கமாக நமது போட்டியை வைத்துக் கொள்வோம் மக்கள் எல்லாம் பார்வையாளர்களாக இருக்கட்டும்' என்றார். இருவரும் போட்டிக்கு ஒப்புக் கொண்டு நாளும், நேரமும் குறிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியாக நாஸ்திகர் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து விட்டார். மக்கள் நிரம்பி வழிகிறார்கள், அறிஞரையோ காணோம். நாஸ்திகர் முகத்தில் சந்தோஷம், இறைவன் இருக்கிறான் என்று நிரூபிக்க முடியாது என்று அஞ்சி அறிஞர் வீட்டிலேயே இருந்து விட்டார் என்று அங்கு பேசிக்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தூரத்தில் அந்த அறிஞர் ஓட்டமும் நடையுமாக வருவது தெரிகிறது, வேகமாக வந்த அறிஞர் மேடையில் ஏறுகிறார்.

'முதலில் நான் காலதமதமாக வந்ததற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், உரிய நேரத்தில் நான் வீட்டை விட்டு கிளம்பி விட்டேன். இங்கு வருவதற்கு நான் ஒரு ஆற்றைக் கடந்து வரவேண்டும், வழக்கமாகத் தோணிக்காரன் இருப்பான், இன்று தோணிக்காரனும் இல்லை, எனக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது. போட்டிக்கு ஒப்புக் கொண்டிருக்கிறோமே, உரிய காலத்தில் போகாவிட்டால் அது எவ்வளவு பெரிய இழுக்கு என்று என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. திடீரென்று ஒரு அதிசயம் நடந்தது பார்த்தீர்களா? தானாகவே ஒரு மரம் அங்கு வந்தது, அது தானாகவே தோணியாகத் தயாராகிவிட்டது, உடனே மகிழ்ச்சியோடு நான் அதில் ஏறி இக்கரை வந்து ஓடோடி வருகிறேன்' என்று சொல்லி முடித்ததுதான் தாமதம் நாஸ்திகர், என்ன கதை விடுகிறீர்கள்? தானாக மரம் வருமா? தானாகத்தோணி தயாராகுமா?, இதை எந்த மடையனும் ஏற்றுக் கொள்வானா? என்று ஆத்திரத்துடன் கேட்டார். அறிஞர் ஆத்திரப்படாமல் நிதானமாக 'சூரியன் தானாக சுழல்கிறது, பூமி தானாக சுழல்கிறது, பூமியிலுள்ள அனைத்தும் தானாகவே உற்பத்தியாகி இருக்கின்றன என்று நீர் சொல்வதை நாங்கள் நம்ப வேண்டுமென்றால், இவ்வளவு பெரிய பெரிய காரியங்கள் தானாகவே நடப்பது சாத்தியம் என்றால், சின்னஞ்சிறிய காரியமான ஒரு மரம் தானாக வந்து, தானாக தோணி உண்டாவது மட்டும் சாத்தியமில்லாத காரியமோ? அதை நம்பக் கூடாதோ?' என்று கேட்டார். இப்போதுதான் நாஸ்திகரின் முகத்தில் அசடு வழிந்தது, தனது தவறை உணர்ந்தார். நாஸ்திகப் போக்கை மாற்றிக் கொண்டார், நாஸ்திக நண்பர்கள் இதிலிருந்து படிப்பினைப் பெறுவார்களா!.

5- குற்றவாளி தப்ப முடியுமா?
பகுத்தறிவால் பெறப்படும் முடிவுகள் சரியாக இருக்குமானால், எந்த உண்மையான திருடனையும் நீதிபதி திருடன் இல்லையென்று தீர்ப்புக் கூறக் கூடாது. எந்த உண்மையான கொலையாளியையும் நீதிபதி கொலையாளி இல்லை என்று தீர்ப்புக் கூறக்கூடாது, நாட்டில் இப்படியா நடந்து வருகின்றது. குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள், குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள், இது ஒன்றே போதும் பகுத்தறிவின் நிலையை உணர்ந்து கொள்ள. நாஸ்திக நண்பர்களே! பகுத்தறிவை மட்டும் நம்பினால் மோசம் போய்விடுவோம், சிந்தித்து திருந்த முன் வாருங்கள். அடுத்து இறைவனையும் மறுமையுiயும் பகுத்தறிவாலும், புலன்களாலும் மட்டும் ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை என்பதற்குரிய காரணங்கனைப் பார்ப்போம்.

6- இறைவனைப் பார்க்க முடியுமா?
நாஸ்திக நண்பர்கள் 'இறைவனைக் காட்டுங்கள் கண்ணால் பார்த்து ஏற்றுக்கொள்கிறோம்' என்று பிடிவாதம் செய்கின்றனர், இந்த வாதமே மிகவும் பலவீனமான வாதமாகும். இந்த வாதத்தின் காரணமாக மக்களில் பலர் அதிசயமான ஒரு காட்சியையோ ஒரு நிகழ்ச்சியையோ கண்ணால் பார்த்தவுடன் அதனையே தெய்வமாகவோ, தெய்வாம்சம் பெற்றதாகவோ ஏற்றுக் கொள்ளும் மனநிலையைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் உண்மை என்ன தெரியமா? உண்மையான இறைவன் இந்த மனிதனது பார்வையிலோ, புலன்களின் உய்த்துணர்விலோ வரமுடியாது. அப்படி வரும் ஒன்று நிச்சயமாக இறைவனாக இருக்க முடியாது. காரணம் மனிதனது பார்வையிலோ, 'புலன்களின் உய்த்துணர்விலோ வரக்கூடிய ஒன்று நிச்சயமாகச் சில கட்டுப்பாட்டிற்குள் இருந்தாக வேண்டும். கட்டுப்பாட்டிற்குள் கட்டுப்படும் ஒன்று எப்படி இறைவனாக இருக்க முடியும்?.

உதாரணமாக நாம் ஒரு பொருளைப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குச் சில நிபந்தனைகள் நிறைவேறியாக வேண்டும். அப்படியானால் தான் அந்தப் பொருளைப் பார்க்க முடியும். அந்தப் பொருளுக்கு ஒரு உருவம் இருக்க வேண்டும், அந்த பொருளில் வெளிச்சம் பட வேண்டும், அந்தப்பொருளுக்கும் கண்ணுக்கும் இடையில் திரை இருக்கக்கூடாது. இவை பார்ப்பதற்குரிய நிபந்தனைகளாகும், அந்தப் பொருளுக்கு உருவம் இல்லை என்றால், நம்மால் பார்க்க முடியாது. அந்தப் பொருளில் வெளிச்சம் படவில்லை என்றால், இருட்டில் இருக்கிறதென்றால், நம்மால் பார்க்க முடியாது. அந்தப் பொருளுக்கும், கண்ணுக்கும் இடையில் சாதாரண ஒரு திரை இருக்கிறதென்றால் நம்மால் பார்க்க முடியாது. ஆக இவை எல்லாம் சரியாக இருந்து, அந்தப் பொருளிலிருந்து வெளிச்சம் வெளியாகி, அது நமது கண்களின் ஒளித்திரையை (சுயவiயெ) அடைந்தால் மட்டுமே, நம்மால் பார்க்க முடிகிறது. அந்தப் பொருள் நமது கண்களின் கட்டுப்பாட்டில் வந்தால் மட்டுமே, நம்மால் பார்க்க முடிகிறது. மிகவும் சிறிய பொருளாக இருந்தால் அதைப் பெரிதாகக் காட்டும் ஒரு கருவியின் உதவி கொண்டே பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்ட கட்டுப்பாட்டிற்குள்-நிபந்தனைக்குள் வரும் ஒன்று இறைவனாக இருக்க முடியுமா? இப்போது நன்கு சிந்தனை செய்து சொல்லுங்கள். எனவே இறைவனை ஒரு போதும் மனிதர்கள் கண்களால் பார்க்க முடியாது. இப்போது, இறைவனைக் காட்டுங்கள் கண்களால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம், என்று சொல்வதே அறிவார்த்தமான ஒரு பேச்சல்ல என்பதைப் புரிந்துக் கொண்டிருப்பீர்கள். அறிவில் குறைந்தவர்களின் பேச்சாகவே இது இருக்க முடியும்.

இதர புலன்கள் சம்பந்தப்பட்ட நிலைகளும் இதைப் போன்றுதான் இருக்கும். மனிதனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புலனின் சக்தியும், வரையறைக்குள் உட்பட்டிருப்பதையே பார்க்க முடியும். ஒரு புலனின் செயலை, மற்றொரு புலன் செய்ய முடியாது. கண்ணால்தான் பார்க்க முடியும் காதால் பார்க்க முடியாது. காதால் ஒலிகளைக் கேட்க முடியும், கண்ணால் கேட்க முடியாது, பார்ப்பதற்கு இருப்பது போல் கேட்பதற்கும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகள் நிறைவு பெற்றால் மட்டுமே கேட்க முடியும். ஆக மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள புலன்களைக் கொண்டு ஒரு பொருளை அறிந்துகொள்வதாக இருந்தால், அதற்குரிய நிபந்தனைகளை நிறைவேற்றியாக வேண்டும். இல்லையென்றால் அறிந்து கொள்ள முடியாது. பெற்ற தாயையும், தந்தையையும் மனிதன் தனது புலன்களைக் கொண்டு அறிந்து கொள்ள முடியாமல் போனதற்குக் காரணம், அந்தப் சம்பவம் இடம் பெறும்போது, இவனது புலன்கள் இருக்க வில்லை. இவனே இருக்கவில்லையே, இவனது புலன்கள் எப்படி இருந்திருக்க முடியும்? ஊரை நம்பித் தாயையும், தாயை நம்பித் தந்தையையும் அறிந்து கொள்ளும் நிர்பந்தமான ஒரு நிலைக்கு மனிதன் தள்ளப்படுகிறான், இது மனிதனுடைய பலகீனமான நிலை.

இந்த நிலையுடைய மனிதன், ஊரை நம்பித் தாயை ஏற்றுக் கொண்டது போல், தாயை நம்பித் தந்தையை ஏற்றுக் கொண்டது போல், இறைத் தூதர்களை நம்பி இறைவனை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது? இதுவே நமது கேள்வி. சம்பவத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால், தந்தையைப் பற்றித் தாய்க்குத் தெரிந்திருக்கிறது. இதே போல் இறைவனுடன் வஹி என்கிற இறைச் செய்தி மூலமாக தொடர்புடைய இறைத்தூதர்கள் இறைவனைப் பற்றி அறிந்திருப்பதில் நாம் வியப்படைய என்ன இருக்கிறது? சிந்தனையுடையோர் எளிதல் விளங்கிக்கொள்ள முடியும்.

7- நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை இல்லை
இறைவனை நம்பிச் செயல்படத் தயங்கும், மனிதன் தனது வாழ்வில், தனது காரியங்கள் அனைத்தையும் நம்பிச் செயல்பட வேண்டிய நிர்பந்த நிலையில்தான் இருக்கிறான்.
படிக்கும் மாணவன் திறமையுடன் படித்து முடித்தால், உயர்ந்த உத்தியோகமும், அதன் மூலம் வளமான வாழ்வும் கிடைக்கும் என்று நம்பித்தான் படிக்கிறான். உயர்ந்த உத்தியோகத்தையும், வளமாக வாழ்வையும் கண்ணால் பார்த்த பின் படிக்க ஆரம்பிப்பதில்லை.

விவசாயி வீட்டில் பாதுகாப்பாக இருந்த நெல்லை, வயலில் கொண்டு கொட்டுகிறான் என்றால், ஒரு மூட்டைக்கு பகரமாகப் பல மூட்டைகள் கிடைக்கும் என்று நம்பித்தான் செய்கிறான்.
வியாபாரி கையிலுள்ள முதலை எல்லாம் போட்டு வியாபாரம் செய்ய முற்படுகிறான் என்றால், அதைவிட அதிக முதல் (ஆதாயம், வருமானம்) கிடைக்கும் என்று நம்பியே செய்கிறான். ஆக மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும், நம்பிக்கையின் அடிப்படையிலேயே பிறக்கிறது. நம்பியபடி கிடைக்கவும் செய்யலாம், கிடைக்காமலும் போகலாம், இரண்டிற்குமே இடம் உண்டு. இருந்தாலும், மனிதன் நம்பிச் செயல்படத்தான் செய்கிறான். அதிக மூட்டைகள் கிடைக்கும் என்று நம்பி, வயலில் வீட்டிலிருந்த மூட்டைகளையும், உரத்தையும் கொட்டியவன் மழையின்மை காரணமாக, பயிர் காய்ந்து நஷ்டப்படவும் நேரிடுகிறது, அதனால் அவன் விவசாயத்தை விட்டுவிடுவதில்லை.

மனிதனது ஒவ்வொரு முயற்சியிலும் அவன் நம்பிக்கை வைத்ததற்கு நேர்மாற்றமாக, நஷ்டம் அடையும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு, அதன் காரணமாக அதன்பின் மனிதன் அந்த முயற்சியைக் கைவிட்டு விடுவதில்லை. இப்படி உலகக் காரியங்கள் அனைத்தையும் நம்பிச் செயல்படும் மனிதன், மறு உலக வாழ்க்கை விஷயத்தில் மட்டும் நம்பிச் செயல்படத் தயாராக இல்லை என்பது விவேகமான செயலா? என்பதைச் சிந்திக்கவும். நம்பிச்செயல்படும் உலகக் காரியங்களின் பலன்கள் உலகிலேயே கண்டுவிடுகிறோம், மறுமை சம்பந்தப்பட்ட விஷயங்கள் அப்படி அல்லவே? என்று கூறுவதும் தவறான கூற்றேயாகும். நம்பிச்செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பலனையும் கண்டு கொள்ள வௌ;வேறு கால அவகாசம் தேவைப்படுகின்றது. சிலவற்றின் பலன்கள் சில மாதங்களில் பார்க்கிறோம், சிலவற்றின் பலன்களை சில வருடங்களில் பார்க்க முடிகின்றது. ஆக ஒவ்வொன்றிற்கும் பலனைப் பார்க்க ஒரு காலக்கொடு கண்டிப்பாகத் தேவைப்படுகின்றது, அந்தக் கொடு தீருமுன் பலனைப் பார்க்க முடியாது. ஒரு விவேகி அப்படிப் பார்க்க முற்படவும் மாட்டான், இதுபோல் மறுஉலக வாழ்க்கையின் பலன்களைப் பார்க்க மரணம் காலக்கெடுவாக இருக்கிறது. அந்தக்கெடு தீருமுன், பலன்களைப் பார்க்க முற்படுவது அறிவுடைமையா? என்று இப்போது சிந்தித்துப் பாருங்கள்.

8- காலம் கனியுமுன்...?
தாயின் கர்ப்பப் பையில் இருக்கும் போதுதான் குழந்தையின் கைகள், கால்கள், கண்கள் இன்னும் அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன. அவற்றின் பலன்களைத் தாயின் கர்ப்பப்பைலேயே குழந்தை அறிய முற்பட்டால், அது முடிகிற காரியமா? தாயின் கர்ப்பப் பை என்ற இருள் உலகிலிருந்து, இந்த உலகிற்கு வந்த பின்னரே அவற்றின் பலன்களைக் குழந்தை காண்கிறது. நொண்டியாகவோ, குருடனாவோ குழந்தை பிறந்தால், இந்த உலகில் வாழும் காலமெல்லாம் நொண்டியாக் குருடாக வாழ்ந்து கஷ்டங்களை அனுபவிக்கிறது. 10 மாதத் தயாரிப்பு, உதாரணமாக 50 வருடங்கள் வாழ்ந்தால் அதாவது 600 மாதங்களின் வாழ்வைப் பாதிக்கிறது. இதை எந்த நாஸ்திக நண்பரும் மறுக்க மாட்டார் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இதே அடிப்படையில் தாயின் கர்ப்பப் பையில் 10 மாதங்களில் தயாராகும் உடல், இவ்வுலகில் வந்து அதைவிட பல மடங்கு அதிகமான காலம் கர்ப்பப் பையில் தயாரானதற்கு ஒப்ப, நலன்களையோ, கெடுதிகளையோ அனுபவிப்பது போல், இவ்வுலகில் தயாராகும் ஆன்மா மறு உலகில் போய் நலன்கனையோ, கெடுதிகளையோ அனுபவிக்கும் என்பதையும் குழந்தை இவ்வுலகிற்கு வந்த பின்னரே, உடல் உறுப்புகளின் பலன்களைப் பார்க்கிறது. கர்ப்பபையில் பார்க்க முடியவில்லை என்பது போல், மறுஉலகின் லாப நஷ்டங்களை அங்கு போன பின்னரே அறிந்து கொள்ள முடியும். இவ்வுலகில் அறிந்து கொள்ள முடியாது என்பதையும், உடலின் உறுப்புகள் கர்ப்பப் பையில் தயாரானது போல், ஆன்மா இவ்வுலகிலேயே தயாராகியே ஆகவேண்டும் என்பதையும் சிந்திப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்ளமுடியும்.

இந்த மறுக்க முடியாத உண்மைகளை நாஸ்திக நண்பர்கள் விளங்கித் தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். அப்படியானால்தான் அவர்கள் வாழ்வில் வெற்றிபெற முடியும். கைமேல் பலன்களைப் பார்த்துத்தான் செயல்படுவேன் என்று அடம் பிடிக்கும் மனிதன், இவ்வுலகிலும் வெற்றிபெற முடியாது, மறுஉலகிலும் வெற்றி பெறமுடியாது என்பதையும் உணரவேண்டும்.

9- இறைவன் அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா?
அடுத்து நாஸ்திக நண்பர்களுக்கு இருக்கும், இன்னொரு பெரிய சந்தேகம். 'அப்படி இறைவன் ஒருவன் இருந்தால், உலகில் நடைபெறும் அக்கிரமங்களை எல்லாம் எப்படிப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கிறான்? உடனடியாகத் தவறு செய்கிறவர்களை இறைவன் தண்டித்தால், இப்படிப்பட்ட தவறுகள் இடம் பெறாதல்லவா? உலகில் ஒரு சுமூகமான சூழ்நிலை இருக்குமல்லவா? உலகில் தவறுகள் மலிந்து காணப்படுவதால், அப்படி ஒரு இறைவன் இருக்க முடியாது' என்பதாகும். இதைப்பற்றி அடுத்து விரிவாகப் பார்ப்போம்.
இறைவன் ஒருவன் இருப்பானேயாகில், இந்த உலகில் நடக்கிற பஞ்சமா பாதகங்களை எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கிறான்? எந்தவொரு நல்ல உள்ளமும் தீமைகள் நடக்கக் கண்டால் அதைத் தடுத்து நிறுத்த முற்படும் போது, இறைவன் எப்படி கண்டுங்காணாதது போல் இருக்க முடியும்? அப்படியொரு இறைவன் இருக்க முடியாது, என்பது நாஸ்திக நண்பர்களுக்கு இருக்க கூடிய பெரிய சந்தேகம், ஏன் இது அவர்களின் வாதமுங்கூட.

நாஸ்திக உள்ளங்களில் இந்த எண்ணம் மேலோங்கி இருப்பதற்குக் காரணம், அவர்கள் சிந்தனைகள் அனைத்தும் இந்த உலகைப் பற்றி மட்டும் அமைந்து இருப்பதேயாகும். அவர்களுக்கு இந்த உலகம் மிகப் பெரிய ஒன்றாகவும், அதில் இடம்பெறும் சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவையாகவும் தெரிகின்றன. மனித இயல்பும் அதுவே, ஒன்றைப் பற்றிய தாழ்ந்த எண்ணம் எப்போழுது மனித உள்ளத்தில் ஏற்படுமென்றால், அதைவிட உயர்ந்த ஒன்றை அறியும் போதுதான். ஒரு உதாரணம்: கரும்பலகையில் சுமாரான ஒரு பெரிய கோடு வரையப்பட்டிருக்கிறது, அந்த ஒரு கோட்டை மட்டும் பார்க்கும் போது நம் கண்களுக்கு அது பெரிதாகத் தெரிகிறது. ஆனால் அந்தக் கோட்டுக்குப் பக்கத்தில், அதைவிட இரு மடங்கு பெரிதான இன்னொரு கோட்டை வரைந்துவிடுமோமானால், முன்பு நம் கண்களுக்குப் பெரிதாகத் தெரிந்த அந்தக்கோடு, சிறியதொரு கோடாக ஆகிவிடுகிறது. சுருக்கமாக ஒன்றோடு ஒன்றை ஒப்பு நோக்;கி பார்க்கும்போதுதான், சிறியதும் பெரியதும், அவசியமானதும் சாதாரணமானதும் நமக்கு எளிதில் புரிகிறது. ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு, அதைப்பற்றி மட்டுமே ஒருவன் சிந்தித்துக் கொண்டிருந்தால், அவனுக்கு அந்த ஒன்று மட்டுமே பெரிதாகவும், பிரமானதாகவும் தெரியும். இதில் ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஆகவே நாஸ்திக நண்பர்கள், இந்த உலகம் ஒன்றை மட்டுமே நம்பி, அதைப்பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டு இருப்பதால், அதுவே வாழ்க்கையின் அனைத்து லட்சியமும் என்று எண்ணுகிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

மரணத்திற்குப் பின்னால் உள்ள வாழ்க்கை - மறு உலகம் பற்றிய நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அதன் காரணமாக மனித இயல்பின்படி, அவர்களின் சிந்தனை அவ்வாறே அமைந்திருக்கும். உலகக் காரியம் ஒவ்வொன்றும் மிகவும் பாரதூரமானதாகவும், அவற்றில் சில நியாமற்றதாகவும் அவர்களுக்குத் தோன்றும்.

வயிற்றில் ஒரு பெரிய கட்டி, அதை அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த வைத்தியர் முற்படுகிறார். வயிற்றைக் கீறியே கட்டியை அகற்றி, குணப்படுத்த வேண்டும் என்பது வைத்தியருக்கும், விஷயம் அறிந்தவர்களுக்கும் நியாம் என்று படுகிறது. விஷயம் அறியாதோருக்கு, வயிற்றைக் கீறும் செயல் மிக்பெரும் கொடுமையாகத் தோன்றும். காரணம் முன்னவர்கள் பின் விளைவை விளங்கியிருக்கிறார்கள். பின்னவர்கள் பின் விளைவை விளங்கிடாதவர்களாக - அறியாதவர்களாக இருக்கிறார்கள். இப்படி நிறைய உதாரணங்கள் உண்டு. மேற்காட்டிய உதாரணத்தில் பின்னவர்களாக நாஸ்திக நண்பர்கள் இருப்பதால், உலகில் நடைபெறும் பல சம்பவங்கள் நியாய மற்றவைகளாக அவர்களுக்குத் தோன்றுகின்றன.

மரணத்திற்குப் பின்னுள்ள மறுவுலக வாழ்க்கையைப் பற்றி வேண்டுமானால், நாஸ்திகர்கள் நன்கு விளங்கிக் கொண்டபின் சிந்தித்துக் கொள்ளட்டும். இப்போது இங்கே அவர்களும் மறுக்க முடியாத சில மாபெரும் உண்மைகளை, அவர்களின் ஆழ்ந்த சிந்தனைக்கு விருந்தாகத் தருகிறோம்.

10- மறுக்க முடியாத உண்மைகள்:
நாஸ்திகர்கள் மிகவும் பெரிதாக எண்ணியிருக்கும் இந்த உலகம் (பூமி), சூரியக் குடும்பக் கோள்களிலேயே மிகச்சிறிய ஒன்றாகும். அண்ட வெளியில் காணப்படும் பெரும், பெரும் கோள்களுக்கு முன்னால் இந்த பூமி எம்மாத்திரம்? பூமி தன்னைத்தானே சுற்றிவர ஒருநாள் ஆகிறது. ஏனைய சில கிரகங்களோ தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கணித்துக் கூறுகிறார்கள். விஞ்ஞான உலகம் இந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. எண்ணற்ற பெரிய கோளங்கள் இருந்தாலும், அவைகளுள்ள இந்த பூமியைத்தவிர வேறு எந்த கோளத்திலும் மனித சஞ்சாரம் இருப்பதாக இதுகாரும் எந்த விஞ்ஞானியும் கண்டுபிடிக்கவில்லை. அப்படியென்றால், மனித சஞ்சாரமற்ற அந்தப் பெரும்கோள்கள் இயங்கவேண்டியதன் அவசியம் என்ன? இதை நாஸ்திக நண்பர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நடுநிலையோடு சிந்திக்கிறவர்களுக்கு. மனித வாழ்வு மரணத்தோடு முற்றுப் பெறுவதில்லை. உலகில் தோன்றி, நெறிமிக்க நிறைவாழ்வு வாழ்ந்த இறைத்தூதர்கள் சொல்லிச் சென்றதுபோல், மரணத்திற்குப் பின்னால்தான் மனிதனுடைய உண்மையான வாழ்வே ஆரம்பமாகிறது என்பது எளிதில் புரியும். அப்போதுதான் இன்று உலகில், நியாயமானது, நியாயமற்றது என்று சொல்லப்படுபவற்றை நடுநிலையாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியும் காரணம்:
நியாயமானவை என்று சொல்லப்படுபவற்றை எடுத்து நடப்பவர்கள், இவ்வுலக வாழ்வில் பெரும்பாலும் வறுமை, கஷ்டம், துன்பம் ஆகியவற்றை அனுபவிப்பதையே பார்க்கிறோம். இதற்கு நேர்மாற்றமாக நியாயமற்றவை என்று கருதப்படுவற்றை எடுத்து நடப்பவர்கள், பெரும்பாலும் செல்வச் செழிப்பிலும், சந்தோசத்திலும் மூழ்கியிருப்பதையும் பார்க்கிறோம். நாஸ்திகர்கள் சொல்வதுபோல் மரணத்தோடு வாழ்வு முடிவு பெறுகிறதென்றால், இவ்வுலகில் செழிப்பையும், சந்தோஷத்தையும் தரும் காரியங்கள் நியாமானவையாகவும், வறுமை, கஷ்டம், துன்பம் தரும் காரியங்கள் நியாயமற்றவையாகவும் மக்களால் கருதப்படவேண்டும். நிலைமை அவ்வாறில்லை என்பதை நாஸ்திகர்களும் ஏற்றுக்கொள்வார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? மனித செயல்களின் விளைவுகள் இவ்வுலகோடு முற்று பெறுவதில்லை. அவை மரணத்திற்குப் பின்பும் தொடர்கின்றன என்பதைத் தெளிவாகத் தெரிய முடிகிறது. நற்செயல் புரிபவன், இவ்வுலகில், வறுமை, கஷ்டம், துன்பம் இவற்றில் கிடந்து உழன்றபோதிலும், மறுமை வாழ்வில் அவன் புரிந்த நற்செயல்-நியானமான செயல்களுக்குரிய நல்ல பலனை காண்பது உறுதி. அதேபோல், நியாயமற்ற செயல்கனைப் புரிபவன் இவ்வுலகில், செல்வச் செழிப்புக் கொழிக்க இன்பம் அனுபவித்து வாழ்ந்த போதிலும், மறுமை வாழ்வில், அவன் புரிந்த நியாமற்ற செயல்களுக்குரிய தண்டனையைப் பெற்றே தீர்வான். இந்த நிலை இருக்குமானால் தான் இன்று உலகில் நியாயமான செயல்கள், நியாயமற்ற செயல்கள் என்று தரம் பிரித்து வைத்திருப்பதில்; நியாயம் இருக்க முடியும். மனிதனுடைய செயல்கள் குறித்து விசாரித்து தீர்ப்பளிப்பதற்கென்று ஒரு நானை இறைவன் ஏற்படுத்தியிருகிறான், அதானல்தான் பரீட்சா வாழ்வு நடத்தும் மனிதன், உடனுக்குடன் உரிய விசாரணை, தீர்ப்பு, தண்டனை வழங்கப்படாது விடப்பப்டிருக்கிறான்.

11- பரிட்சை வாழ்க்கை:
மாணவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள். பல மாணவர்கள் தவறான விடை எழுதவே செய்வார்கள். பர்Pட்சை எழுதும் மண்டப மேலதிகாரிக்கு விடை தவறு என்று தெரிந்தாலும், தவறாக எழுதும் அந்த மாணவனை உடனே கூப்பிட்டு, தவறை திருத்தவோ அல்லது தண்டிக்கவோ முற்பட்டால், அந்த பரீட்சையே அர்த்தமற்றதாகவும் அனாவசியமாகவும் ஆகிவிடுகிறதல்லவா? எனவேதான், தவறாக விடை எழுதுவது தெரிந்தாலுங்கூட, தெரிந்த மாத்திரத்தில் திருத்தாது-தண்டிக்காது விட்டு, விடைத் தாளை திருத்துவதற்கென்றே குறிக்கப்பட்ட நேரத்தில்-நாளில், திருத்தி, வெற்றிபெற்றவர்கள், பெறாதவர்கள் என்று தரம்பிரிக்கப்படுகிறார்கள். இதில் இன்னொரு உண்மையும் அடங்கியிருக்கிறது. வெற்றிபெற்ற மாணவன், பரீட்சையை எண்ணி, தனது ஆசை, அபிலாஷைகளையெல்லாம் அடக்கிக் கொண்டு, பரீட்சைக்கானவற்றைச் சேகரிப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்திருக்கிறான். வேறு விதமாகச் சொன்னால், அவன் கஷ்ட-துன்ப வாழ்வை அனுபவித்திருக்கிறான். தோல்விகண்ட மாணவன் கதையோ நேர்மாறானது.. அவன் பரீட்சையை அலட்சியம் செய்து, பரீட்சைக்கானவற்றை சேகரிக்காது அதாவது கஷ்டம், துன்பம் அனுபவிக்காது, சிரமம் இல்லாத சந்தோஷ வாழ்வு வாழ்ந்தான். வெற்றிபெற்றவன் இப்போது பேரானந்தத்தை-பெருவாழ்வை அடையவும், அனுபவிக்வும் அவனின் வெற்றி காரணமாகிறது. தோல்வி கண்டவன் கஷ்டம், துன்பம், வறுமைப்பட்டு வாடும் நிலைக்கு, அவனின் நியாமற்ற செயல் காரணமாகிறது.

இதுபோன்று மனித வாழ்வு பரீட்சா வாழ்வாக அமைந்திருக்கிறது. மனிதர்கள் செய்யும் அடாத, கொடும் செயல்களை எல்லாம் இறைவன் கண்டும், உடன் தண்டனையை வழங்காது, தீர்ப்பு நாள் வரும் வரை அவர்களை விட்டுவைத்திருக்கிறான். தவறு கண்ட மாத்திரத்தில் உடனுக்குடன் தண்டனை வழங்குவதாக இருந்தால், பரீட்சா வாழ்வான இவ்வுலக வாழ்வு அர்த்தமற்றதாக, அனாவசியமாக ஆகிவிடும். இப்போது நாஸ்திக நண்பர்கள், உலகில் நடக்கின்ற அக்கிரமங்களை எல்லாம்-பஞ்சமா பாதகங்களை எல்லாம், இறைவன் ஏன் பார்த்துக் கொண்டு, உடனடியாக தண்டனையை வழங்காது விட்டு வைத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும் என்று நம்புகிறோம்.
நாஸ்திகர்களின் பெரியதொரு சந்தேகமான, உலகில் மனிதர்கள் செய்யும் பெரும் தவறுகளை எல்லாம் இறைவன் எப்படி பார்த்துக் கொண்டு இருக்கிறான். உடனுக்குடன் ஏன் தண்டிப்பதில்லை என்பதற்குரிய விளக்கங்களைப் பார்த்தோம்.

இனி சிந்தனையாளர்களையும் திணறச் செய்யும், நாஸ்திகர்களின் ஒரு கேள்வியைப் பார்ப்போம்.

12- மூலத்திற்கு மூலம் வேண்டுமல்லவா?
ஒவ்வொரு பொருளின் தோற்றத்திற்கும் மூலம் இருக்கிறது, அடிப்படை இல்லாத பொருளே இல்லை, படைத்தவன் இல்லாமல் படைப்பினங்கள் ஏற்பட்டிருக்க முடியாது, படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று இதிலிருந்து நிரூபணமாகின்றது என்று ஆஸ்திகர்கள் சொன்ன மாத்திரத்தில், அப்படியானால் அதே அடிப்படையில், இறைவனையும் படைத்தவன் ஒருவன் இருக்கவேண்டுமல்லவா? அவன் யார்? யாருமே படைக்காமல் அவன் இருப்பது உண்மையானால், அதே போல் யாருமே படைக்காமல் எல்லா மூலப்பொருட்களும் ஏன் உண்டாகி இருக்க முடியாது? என்ற கேள்வியேயாகும் அது.

இந்தக் கேள்வியைக் கேட்டமாத்திரத்தில், அறிவாளிகளும் சற்று தடுமாறத்தான் செய்வார்கள், ஆனால் சிந்திப்பவர்கள் இதிலுள்ள போலித் தனத்தை அறிந்துகொள்ள முடியும். ஆழ்ந்து நோக்கும் போது, மனிதன் பார்க்கும் அனைத்திலும் அடிப்படை உண்மைகளுக்கும், அந்த அடிப்படை உண்மைகளை வைத்து முடிவு செய்யக்கூடிய உண்மைகளுக்கும் வித்தயாசம் இருக்கிறது என்பதை விளங்கமுடியும்.

ஒரு தமிழ் பேசும் குழந்தை பள்ளிக்குச் சென்றவுடன், அங்கே 'அ' என்ற எழுத்தை எழுதி, ஆசிரியர் 'ஆனா' என்று சொன்னவுடன் அக்குழந்தை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக்கொள்கிறது. அப்படி எல்லா எழுத்துக்களையும் எவ்வித ஆராய்ச்சியும், சிந்தனையுமில்லாத நிலையில் எற்றுக்கொண்ட அக்குழந்தை, அதன் பின் அ..ப்..பா.. என்ற எழுத்துக்களை அம்மா என்று சொல்லிக் கொடுத்தால் இப்பொழுது ஆட்சேபணையைக் கிளப்புகிறது அக்குழந்தை. அடிப்படை உண்மைகளை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொண்டதையும் அந்த அடிப்படை உண்மைகளை அஸ்திவாரமாக வைத்து அமைக்கப்படும் விஷயங்களில் பார்த்து பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்வதையும் காண்கிறோம். கணக்கிலும் இதே நிலைதான். எல்லாத்துறைகளிலும் இதே நிலைதான் அடிப்படை உண்மைகள்
(Axioms, Fundamental Truths, Assumptions) என்று கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ளாத ஒரு துறையே இல்லை என்று சொல்லாம். அடிப்படை உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் உலகில் எதையுமே செய்ய முடியாது. நாஸ்திக நண்பர்கள் இந்தத்துறைகளிலெல்லாம் தங்கள் விதண்டா வாதங்களளைச் செய்யாமல், அவற்றை கண்ணை மூடிக்கொண்டு, ஒப்புக்கொண்டு செயல்படத்தான் செய்கிறார்கள். அடிப்படை உண்மைகள் என்று ஆரம்பத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தால், பின்னால் உள்ளவற்றையும் அடிப்படை உண்மைகளாகவே ஒப்புக்கொள்ள வேண்டும் என்றோ, அல்லது பின்னால் உள்ளவற்றை பார்த்து பரிசீலினை செய்து ஏற்றுக்கொள்வது போல், ஆரம்பத்தையும் பார்த்து பரிசீலனை செய்தே எற்றுக்கொள்ளவேண்டும் என்றோ முரட்டு வாதம் செய்வதில்லை. இதிலிருந்தே இறைவனை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் மட்டுமே அவர்கள் தங்கள் அறிவை யாருக்கோ கடன் கொடுத்துத்திருக்கிறார்கள் என்பதை நம்மால் எளிதாக உணரமுடிகின்றது. ஆம் சாத்தானின் மாயவலையில் அவர்கள் சிக்குண்டிருக்கிறார்கள். அவனுடைய தூண்டுதலின் காரணமாக இந்த பொருத்தமற்ற விதண்டா வாதங்கனை எடுத்து முன் வைத்கின்றனர்.

நாம் ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இறைவன் விஷயத்தில் நீங்கள் எப்படிப்பட்ட சந்தேகங்களையும், ஐயங்களையும் கிளப்புகின்றீர்களோ, அதே போன்ற சந்தேகங்களையும், ஐயங்களையும் உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பல விஷயங்களில் மட்டும் ஏன் கிளப்ப மாட்டேங்கிறீர்கள்? 2+2=4 என்ற சாதாரணண கணக்கு தெரியாத நிலையில் 2/100 என்ற பெரிய கணக்கைப்பற்றி ஏன் சிந்திக்கிறீர்கள்? என்பதுதான் நமது கேள்வி. 2+2=4 என்ற கணக்கைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை 2/100 என்ற கணக்கைப் பற்றித்தான் எனக்கு அக்கறை என்று சொல்லும் எந்த மனிதனையும் புத்திசாலி என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

இந்த கண்ணோட்டத்தில் தான் குரானோ குரான் என்று நாஸ்திகரான புவணன் புலம்பி இருக்கிறார். அவருடைய ஆதங்கமெல்லாம், இறைவனை மறுத்துப் பேசும், இறைவனை திட்டும் நபர்களையெல்லாம் அந்த இறைவன் எப்படி நீண்டகாலம் விட்டு வைத்திருக்கிறான்? என்பது தான். இதைப்பற்றி முன்னரே தெளிவாகப் பார்த்து விட்டோம். அரசாங்கம் போடும் சட்டங்களை விமர்சித்துக் கொண்டும், எதிர்த்து பேசிக் கொண்டும், திட்டிக்கொண்டும் திரியும் பலரை நாம் பார்க்கிறோம். ஆனால் அந்தச் சட்டங்களின்படி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது வீராப்பு பேசிய இவர்களும் அந்த நடவடிக்கைககளுக்கு அடங்கித்தான் போக நேரிடுகின்றது. சாதாரண ஒரு அரசாங்கத்தை-மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சியை மீற முடியாத இவர்களா, இறையாட்சியை மீறி சாதித்து விடப் போகிறார்கள்? குரைக்கிற நாய் கடிக்காது என்பது போல், உண்மையான சிந்தனைத்திறனோ, ஆற்றலோ அற்றவர்கள்தான், இப்படிப்பட்ட வீண் வாதங்களை பிதற்றித் திரிவார்கள் இவர்கள் எதைப் பகுத்தறிவு என்று சொல்கிறார்களோ, அதுதான் உண்மையில் பகுத்தறிவா என்று அடுத்துப்பார்ப்போம்.  

13- எது பகுத்தறிவு?
ஒவ்வொரு பொருளின் படைப்புக்குக் காரணகர்த்தா ஒருவன் இருப்பது உண்மையானால், அந்தக் காரணக்கர்த்தாவின் படைப்புக்கு யார் காரணம்? என்ற சிந்தனையாளர்களளயும் தினரச் செய்யும் நாஸ்திகர்களின் கேள்விக்குரிய விளக்கத்தைப் பார்த்தோம். அடிப்படை உண்மைக்கும், அந்த அடிப்படை உண்மையை வைத்துப் பெறப்படும் உண்மைகளுக்கும் உள்ள பெருத்த வேறுபாட்டையும் கண்டோம். உலகக் காரியங்களில் அனைத்துத் துறைகளிலும் காணப்படும் இந்த பெருத்த வேறுபாட்டை ஒப்புக் கொள்ளும் நாஸ்திக நண்பர்கள் இறைவன் விஷயத்தில் மட்டும் அந்த மாபெரும் உண்மையை ஒப்புக் கொள்ளாமல் விதண்டாவாதம் செய்வது, அவர்கள் சாத்தானின் வலையில் சிக்குண்டிருக்கிறார்கள் என்பதையே படம் பிடித்துக் காட்டுகிறது என்பதைத் தெளிவாகப் பார்த்தோம், அடுத்து.

இந்த நாஸ்திகர்கள் சொல்லிக் கொள்ளும் பகுத்தறிவுதான் உண்மையில் பகுத்தறிவா? இந்தப் பகுத்தறிவு அவசியமா? என்பதை விரிவாக அலசுவோம்.
அவர்கள் தங்களின் புலன்கனைக் கொண்டுப் பெறப்படும் அறிவையே பகுத்தறிவு என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள், அதன் காரணமாக புலன்களின் எல்லைக்குள் கட்டுப்படாத காரியங்களை எல்லாம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை, மூடநம்பிக்கை என்ற தப்பான முடிவுக்கு அசரப்பட்டு வந்து விடுகிறார்கள். அவர்களின் புலன்களைக் கொண்டு அறியப்படும் காரியங்கள் முழுiயான பகுத்தறிவைச் சார்ந்தவை அல்ல. பகுத்தறிவின் ஒரு பகுதி என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் என்பதை அவர்கள் உணர வேண்டும். தமிழ் பேசும் குடும்பத்தில் வளரும் ஒரு குழந்தை ''தண்ணீர்'' என்று சொல்லும், அதே பொருளை ஹிந்தி பேசும் குடும்பத்திலுள்ள குழந்தை ''பானி'' என்கிறது. ஆங்கிலம் பேசும் குடும்பத்திலுள்ள குழந்தை ''வாட்டர்'' என்கிறது. ஆக ஒரே பொருள் மொழிக்கு மொழி, வேறு  வேறு சொல்லால் அறியப்படுகிறது, அழைக்கப்படுகிறது. இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது என்பதை நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டும்.

நடைமுறையில் இருப்பதைக் காதால் கேட்டு உச்சரிப்பதைத் தவிர இங்கு பகுத்தறிவுக்கு வேலையே இல்லை. ஆறறிவு மனிதன் பேசுவது போல் ஐந்தறிவு (பகுத்தறிவு இல்லாத) கிளி, மைனா போன்ற பறவைகள் பயிற்றுவித்தால் அழகாகப் பேசுகின்றன. பகுத்தறிவில்லாத நாய், குரங்கு போன்ற மிருகங்கள் பயிற்சியின் மூலம் மனிதன் செய்யும் காரியங்களை, மனிதனிடும் கட்டளை கொண்டு விளங்கிச் செயல்படுத்துவதைப் பார்க்கிறோம். ஐந்தறிவைக் கொண்ட குரங்கு இனத்தைச் சார்ந்த ஒருவகை குரங்கு, பயிற்சியின் மூலம் அழகாக கார் ஓட்டிச் செல்வதை அறிகிறோம். இவை எல்லாம் நமக்கு எதை ஊர்ஜிதம் செய்கின்றன? இப்படிப்பட்ட காரியங்களுக்குப் பகுத்தறிவு அவசியமே இல்லை என்பதையே நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

ஆக மனிதன் உலகில் பிறந்து, வளர்ந்து பேசுவதிலிருந்து, அவன் பெறும் கல்விகளிலிருந்து, அவன் செயல்படுத்தும் உலக காரியங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும் போது அவை முழுமையாக பகுத்தறிவு அடிப்படையிலானவை என்று சொல்லுவதை விட, அவனது ஐம்புலன்களைக் கொண்டு அவன் அடைந்து கொண்ட ஒருவகை அறிவு என்று மட்டுமே சொல்லமுடியும். ஏன் என்றால் பகுத்தறிவுவைக்கொண்டு செயல்படுத்தும் காரியங்களை ஐந்தறிவு பிராணிகள் ஒரு போதும் நிறை வேற்ற முடியாது. நாஸ்திக நண்பர்கள் பெருஞ்செயல்களாக, பகுத்தறிவு செயல்களாக நம்பும் காரியங்களை ஐந்தறிவு மிருகங்கள் பயிற்சிகள் கொண்டு செய்கின்றன.

14- இவ்வுலக வாழ்க்கைக்குப் பகுத்தறிவு தேவைதானா?
இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் மனிதனின் இந்த உலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமே இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்லிவிடலாம். பகுத்தறிவோடு படைக்கப்பட்டுள்ள மனித சமுதாயம், பகுத்தறிவில்லாத ஐந்தறிவு சொண்ட ஒரு சமுதாயமாகப் படைக்கபட்டிருந்தால் மனிதனின் இந்த உலக வாழ்க்கை, இப்போதிருப்பதைவிட மிக சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நாஸ்திக நண்பர்கள் சொல்வது போல், இறைவன் இல்லை, மறுமை இல்லை என்றால் மனிதன் பிறந்து வளர்ந்து விருப்பம் போல் விரும்பியதை எல்லாம் சாப்பிட்டு, விரும்பியதை எல்லாம் அனுபவித்து, விரும்பியவர்களோடு எல்லாம் கலவிகள் செய்து வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவித்து மடிய வேண்டியதுதான்.
இவற்றையே ஐந்தறிவு பிராணிகள் செய்து கொண்டிருக்கின்றன. நாம் மேலே குறிப்பிட்ட காரியங்களை நிறைவேற்றுவதற்கு அந்தப் பிராணிகளுக்கு பகுத்தறிவு இல்லாதது ஒரு குறையாகவே இல்லை. மாறாக அது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கிறது.

மனிதனின் இவ்வுலக வாழ்க்கை செழிப்பாக அமைவதற்காக கடவுள் இல்லை, மரணத்தறிகுப் பின் ஒரு வாழ்க்கை இல்லை என்ற பொய்த் தத்துவங்களை எடுத்துச் சொல்வதை நாஸ்திகர்கள் விட்டு, மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கை இன்பமயமாக அமைய பகுத்தறிவு அவசியம் இல்லை என்ற கோஷத்தை அவர்கள் கிளப்புவார்களானால், அது நிச்சயம் நல்ல பலனைத்தரும் என்பது நமது உறுதியான நம்பிக்கை. கடவுள் இல்லை என்ற பொய் தத்துவத்தை, கம்யூனிஸக் கொள்கையை கடந்த சுமார் 75 ஆண்டுகளாக செயல்படுத்திப் பார்த்து விட்டார்கள். முழுக்க முழுக்க அவர்களின் ஆதிக்கத்தில் வந்திருந்த ரஷ்யா, சீனா போன்ற நாடுகில் கூட ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ வாழ்க்கையை, அனைவரும் அனைத்தையும் அடைந்து கொள்ளும் வாய்ப்பை அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை. கம்யூனிஸக் கொள்கை மக்களிடமிருந்து மறைய ஆரம்பித்து விட்டது என்பதற்கு ரஷ்யாவும், சீனாவும் நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.

எனவே நாஸ்திக சகோதரர்கள் அவர்களின் பழைய ''கடவுள் இல்லை'' என்ற பொய்த்துவத்தை விட்டு ''பகுத்தறிவு மனிதனுக்கு அவசியமில்லை'' என்ற புதிய தத்துவத்தை முழக்க ஆரம்பித்தல், அது கம்யூனிச தத்துவத்தைவிட அதிக பலன் கொடுக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. காரணம், உலகில் காணப்படும் போட்டி, பொறாமை, எதோச்சதிகாரம், ஆதிக்க வெறி, பதுக்கல், மிதமிஞ்சிய சொத்துக்களை சேர்த்து தனதாக்கிக் கொள்ளுதல், வஞ்சகம், மோசடி, கொள்ளை, களவு இவை அனைத்திற்கும் மனிதனின் பகுத்தறிவே(?) மூல காரணமாக இருக்கிறது. பகுத்தறிவில்லாத மிருகங்களிடம் இச்செயல்கள் காணப்படுகின்றனவா என்று சிந்தித்துப்பாருங்கள். மிருகங்கள் பல தலை முறைகளுக்குத் தேவையான சொத்துக்களை சேர்த்து வைப்பதில்லை. ஊரிலுள்ள நிலங்களை எல்லாம் தனதாக்கிக் கொள்ள நினைப்பதில்லை. கரன்ஸி நோட்டுக்களை சேர்த்து வைக்க நினைப்பதில்லை. பல ஆண்டுகளுக்கல்ல, பல நாட்களுக்குத் தேவையான உணவுகளiயும் சேர்த்து வைப்பதில்லை. இவை எதுவுமே இல்லாத பகுத்தறிவற்ற பிராணிகள் தங்கள் உலக வாழ்க்கiயை மிகவும் சந்தோஷமாக நடத்திக் கொண்டிருக்கின்றன. அப்படிபட்ட பகுத்தறிவற்ற மிருகங்களுக்கு அவற்றின் உலக வாழ்விற்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. அதே போன்ற சந்தோஷமான மிருக வாழ்க்கையை மனிதனும் ஏன் வாழக் கூடாது? என்றே நாஸ்திக நண்பர்களிடம் நாம் கேட்கிறோம்.

15- விஞ்ஞான வளர்ச்சி..?
பகுத்தறிவின்(?) மூலம் மனிதன் விதவிதமான பல நவீன கருவிகளை கண்டுபிடித்து, வசதியான உலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறான். அதை எப்படி விட்டு விடுவது என்று நாஸ்திகர்கள் கேட்டால் அதற்கு நமது பதிலாவது, நீங்கள் குறிப்பிடும் அந்த விஞ்ஞான வளர்ச்சியின் மூலமும், (மறு உலக வாழ்க்கை ஒரு புறம் இருக்கட்டும்) இவ்வுலக வாழ்க்கைக்கும் மிரட்டல்களே அதிகப்பட்டுள்ளன. இவ்வுலகை அழித்தொழிக்கும் அணுகுண்டுகள், நாசகாரக் கருவிகள், மனிதகுண்டுகள் இன்னும் இவைபோன்ற நவீன கண்டு பிடிப்புகள் மனிதனின் இவ்வுலக வாழ்க்கையில் சந்தோஷத்திற்குச் சவலாக அமைந்துள்ளனவே அல்லாமல், இவ்வுலக வாழ்க்கையை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைக்க கூடியனவாக இல்லை. நிமிடத்திற்கு நிமிடம் அஞ்சிக்கொண்டே வாழ வேண்டியுள்ளது. அந்த வகையிலும் பகுத்தறிவு (?) கொண்டு இவ்வுலக இன்ப வாழ்க்கைக்கு கேடுகள் எற்பட்டுள்ளனவே அல்லாமல் நலன்கள் ஏற்படவில்லை என்பதே உண்மையாகும்.

ஐந்தறிவுள்ள பிராணிகள் செய்ய முடியாத ஒன்றையோ, அல்லது பல காரியங்களையோ சுட்டிக்காட்டி, இதை மனிதன் செய்கிறானே என்று நாஸ்திகர்கள் எதிர்கேள்வி கேட்டால், அதற்கு நமது பதிலாவது: மனிதனைப் போன்று முற்றிலும் உடலமைப்புள்ள ஒரு ஐந்தறிவுப் பிராணியைச் சுட்டிச்காட்டி அப்படிக் கூறினால் அது நியாயமாகும். முற்றிலும் மனிதனைப் போன்ற உடலமைப்பு இல்லாததே அதற்குப் பிரதானக் காரணம் என்று நாம் கூறினால் அவர்கள் என்ன மறுப்பு வைத்திருக்கிறார்கள். இவ்வளவு தெளிவாக எடுத்துக் சொல்லி பகுத்தறிவற்ற மிருக வாழ்க்கை வாழத் தயாரா? என்று நாஸ்திகர்களிடம் நாம் கேட்டால் அவர்கள் தயங்கவே செய்வார்கள். ஆயினும் அவர்கள் பகுத்தறிவு என்று நம்பிக்கொண்டிருப்பது உண்மையில் பகுத்தறிவு அல்லவென்பதை அவர்கள் உணராதது வேதனைக்குரிய ஒரு விஷயமே. அவர்கள் இதை உணர்ந்து கொள்ளத் தொளிவான ஒரு உதாரணத்தைத் தருகிறோம்.

16- ஒப்புக் கொள்கிறார்களா?
''கடவுளைக் காட்டுங்கள் ஒப்புக் கொள்கிறோம்'' இது நாஸ்கிகர்களின் தாரக மந்திரம். இதை வாதம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். டாக்டர் கோவூர் இந்த அடிப்படையில் சவால் விட்டது நாடறிந்த விஷயம். ஆனால் ஆழந்து சிந்திப்பவர்கள்ட மட்டுமே இது வாதம் அல்ல, பகுத்தறிவற்ற மிருக வாதம் என்பதைப் புரிந்து கொள்வார்கள். எப்படி என்பதை விளக்குகிறோம்.
ஓர் ஆடு நின்று கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆந்த ஆட்டை நோக்கி ''ஓ ஆடே! இதோ பார் உனக்கு மிகவும் விஷேசமான ஆகாரம் இங்கே வைத்திருக்கிறேன், இதை நீ சாப்பிடுவதால் உன் பசி தீரும், இது ஜீரணமானால் உனக்கு நல்ல சக்கி உண்டாகும். எனவே விரைந்து இதைச் சாப்பிட்டுப் பலன் அடைந்து கொள். இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாதே'' என்று அந்த ஆட்டின் காதுகளில் விழுமாறு ஒருவன் உரக்கக் கூறுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த அழைப்பை ஏற்று அந்த ஆடு – ஐந்தறிவுள்ள மிருகம - வருமா? என்று சிந்தித்துப் பாருங்கள். ஒருபோதும் வராது. மாறாக, இவன் போடும் சப்பதத்தைக் கேட்டு அந்த ஆடு வெருண்டோடலாம்.

அதே சமயம் இவன் அந்த ஆகாரத்தின் சிறப்பைப்பற்றி எதுவும் பேசாமல், அந்த ஆகாரத்தை அந்த ஆடு பார்க்கும் விதமாகத் தூக்கிப் பிடிக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஆடு அந்த ஆகாரத்தைக் கண்டவுடன் அதை நோக்கி விரைந்து ஓடி வரும். இது பகுத்தறிவற்ற மிருகத்தின் நிலை.

அதே சமயம் ஒரு மனிதன் இன்னொரு மனிதரின் வீட்டுக்குப்போய் ''நாளை பகல் சாப்பாட்டிற்கு எங்கள் வீட்டுக்கு வந்துவிடுங்கள். ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அவசியம் தவறாது கலந்து கொள்ளுங்கள்'' என்று அழைப்பு விடுக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்கு அழைக்கப்பட்ட மனிதன் விருந்துக்குரிய உணவு வகைகளையும் கண்ணால் பார்க்கவில்லை, உணவுகள் தயாரிக்கப்படக்கூடிய எந்த ஏற்பாட்டையும் பார்க்க வில்லை. விருந்து சம்பந்தப்பட்ட எந்த அறிகுறியும் இல்லை. இந்த நிலையில் வந்த மனிதனின் அழைப்பை மட்டும் காதுகளால் கேட்கிறான். அந்த மனிதனையும், அவனது தராதரத்தையும் அறிந்து வைத்திருக்கிறான். அடுத்த நாள் குறிப்பிட்டிருந்த படி அந்த நண்பரின் வீட்டுக்குப் போய் பார்க்கும்போது விதவிதமான ஆகார வகைகளையும், குடிப்பு வகைகளையும் பார்க்கிறான். நன்றாக சாப்பிட்டு மகிழ்கிறான். நேற்று சொன்னதை இன்று கண்ணாரக் காண்கிறான், அனுபவிக்கிறான். ஐந்தறிவுள்ள மிருகத்தைப் பொறுத்தமட்டிலும் இது சாத்தியமா? என்றால் ஒரு போதும் சாத்தியமில்லை. பகுத்தறிவுள்ள மனிதனைப் பொறுத்த மட்டிலுமே இது சாத்தியமான காரியமாகும்.

''கடவுளைக் கண்டால்தான், மறுமையைக் கண்டால்தான் நம்பிச் செயல்படுவோம்'' என்று சொல்லும் நாஸ்திகர்களின் வாதம், ஐந்தறிவு மிருகவாதமா? அல்லது பகுத்தறிவு வாதமா? என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.
பகுத்திறிவு இல்லாத நிலையிலும், இவ்வுலக மனித வாழ்க்கை சாத்தியமானதே, ஒரு வகையில் பகுத்தறிவு இருப்பதைவிட இல்லாமல் இருப்பது, மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவே இவ்வுலக வாழ்க்கை அமையக் காரணமாக இருந்தும், மனிதனுக்கு ஏன் பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது? அந்தப் பகுத்தறிவின் சரியான பொருள் என்ன? இவற்றை அடுத்துப் பார்ப்போம்.
நாஸ்திக நண்பர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் பகுத்தறிவு, உண்மையில் பகுத்தறிவு அல்ல, பகுத்தறிவு இல்லாமல் இவ்வுலக வாழ்க்கையைச் சிறப்பாக அனுபவிக்க முடியும் என்பதைப் பார்த்தோம்.

17- உண்மையில் பகுத்தறிவு என்றால் என்ன?
இந்தப் பகுத்தறிவு ஏன் மனித சமூகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது? அதன் சரியான பொருள் என்ன? என்பதை விரிவாகப் பார்;போம்.
நடுநிலையோடு சிந்திப்பவர்கள் மனித சமுதாயத்தற்கு மறுமை வாழ்க்கையைக் குறிக்கோளாகக் கொண்டே பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். உலகில் படைக்கப்பட்டுள்ள மனிதனல்லாத இதர எல்லாப் படைப்புகளும் இவ்வுலகில் மனிதனுக்கு நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ உதவிவருகின்றன. எல்லா படைப்புகளைக் கொண்டும் மனிதன் பயன் அடைகின்றான். ஆனால் மனிதனைக் கொண்டு எந்தப் படைப்புக்கும் பிரயோஜனம் இல்லை என்பதைத் தெளிவாக நாம் அறிகிறோம். மனிதன் ஒரு படைப்பின் மீது அக்கறை எடுத்து பாடுபடுகிறான் என்றால், அதுவும் தனது சுயநலம் கருதியே. தனது நலனைக் கருதியே அதைச் செய்கிறான். உதாரணமாக, அவன் ஆடு, மாடுகளை வளர்ப்பது அவற்றிலிருந்து தனக்கு கிடைக்கும் பால், இறைச்சி, தோல்கள் இவற்றின் பலனைக் கருதியே. அதிலும் மனிதன் இடைத்தரகனாக இருந்து பூமியிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களைக் கொடுக்கிறானே அல்லாமல் மனிதன் தன்னிலிருந்து எதனையும் கொடுப்பதில்லை.

யானை போன்ற படைப்பினங்கள் உயிரோடிருக்ககும் போதும் மனிதனுக்கு உதவுகின்றன. செத்த பின்பும் மனிதன் அவற்றைக் கொண்டு பயன் அடைகிறான். ஆனால் உயிரோடிருக்கும் மனிதனைக் கொண்டும் இதர படைப்பினங்களுக்கு உபபோயம் இல்லை. செத்த மனிதனைக் கொண்டும் உபயோகமில்லை. எனவே, எதற்கும் உபயோகமற்ற இந்த மனித இனம் உலகில் ஏன் வாழ வேண்டும்? அதற்காக விஷேசமாக மனித இனத்திற்கு மட்டும் பகுத்தறிவு ஏன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? என்று சற்று நிதானமாக சிந்தித்துப்பாருங்கள்.

18- இவ்வுலகில் பயன்படா மனிதன் ஏன் படைக்கபட்டுள்ளான்?
பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனிதனும் இவ்வுலகிற்கு அவசியமற்றவனாக இருக்கிறான். அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பகுத்தறிவும் இவ்வுலக வாழ்விற்கு அவசியமற்றதாக இருக்கிறது. அப்படியானால் மனிதன் ஏன் படைக்கப்பட்டுள்ளான்? அவனுக்கு விஷேசமாக ஏன் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது? இதை முறையாக ஒரு மனிதன் சிந்தித்தால், மனிதன் மறுமைக்காப் படைக்கப்பட்டுள்னான், அந்த மறுமை வாழ்க்கiயை, உணர்ந்து விளங்கி, இவ்வுலக வாழ்க்கையை ஒழுங்குமுறையுடன் நடத்த அவனுக்குப் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். மனிதனல்லாத பிராணிகளுக்கு பகுத்திறவும் இல்லை, அவற்றிற்கு மறுமை வாழ்க்கையும் இல்லை. அவற்றிற்கு மறுமை வாழ்க்கை இல்லை என்றாலும் மனிதனது இவ்வுலக வாழ்க்கைத் தேவைக்காக அவை படைக்கபட்டுள்ளன என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

மறுமைக்காகப் படைக்கப்பட்ட மனிதன், அந்த மறுமை வாழ்க்கையை உணர்ந்து வாழ பகுத்தறிவு கொடுக்கப்பட்ட மனிதன், அந்த மறுமையை மறந்து வாழ்கிறான் என்றால், அல்லது மறந்து வாழ்கிறான் என்றால், அவன் மனிதன் என்ற அந்தஸ்தையே இழந்து விடுகிறான். நான்கு கால் பிராணிகள் போல், இவன் இரண்டு கால் பிராணியாக இவ்வுலகில் வாழ்கிறான். ஆனால், நான்கு கால் பிராணிக்கோ நாளை மறுமையில் நரக வேதனை இல்லை. இந்த இரண்டு கால் பிராணிக்கோ நிச்சயமாக நாளை மறுமையில் நரக வேதனை உண்டு. அந்த நரக வேதனையைக் கண்கூடாகப் பார்க்கும்போது, ''நாங்களும் மண்ணோடு மண்ணாய்ப் போன இந்த மிருகங்களைப்போல், மண்ணோடு மண்ணாய் போயிருக்ககூடாதா?'' என்று கதறுவார்கள். ஆனால் அவர்களது கதறல் எவ்வித பலனையும் தராது. இந்த உலகிலேயே சிந்தித்து விளங்கி உணர்ந்து வாழ்ந்தால்தான் தப்பினார்கள், இல்லையோல் அதோகதிதான்.

பகுத்தறிவு என்றால் ''பிரித்து அறிதல்'' என்று தமிழ் அகராதியில் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் ஒவ்வொரு விஷயத்திலும் யதார்த்தமான உண்மையான நிலையைப் பிரித்து அறிந்து கொள்வதுதான் பகுத்தறிவாகும். உண்மையான நிலையைப் பிரித்தறியத் தவறும்போது அது பகுத்தறிவாக ஆக முடியாது. உதாரணமாக குற்றம் சுமத்தப்படுபவர்களில் உண்மையான குற்றவாளியைப் பிரித்தறிந்து தண்டிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு நீதிபதியை எடுத்துக்கொள்வோம். அவர் மிகவும் நீதியாக நடக்கக்கூடிய நீதிபதிதான். லஞ்சம் வாங்கிக்கொண்டு தன்மனசாட்சிக்கு விரோதமான உண்மைக்குப் புறம்பாகத் தீர்ப்பளிக்கும் ஒரு நீதிபதி அல்ல. குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் மிகமிக எச்சரிக்கையான நடந்து கொள்கிறார்.

இந்த நிலையில் அவர் தீர்ப்பளிக்கும் எல்லாத் தீர்ப்புக்களிலும் உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தீர்ப்பளித்து வருகிறார் என்று சொல்ல முடியாது. சில தீர்ப்புகளில் குற்றமற்றவரைத் தண்டிக்கும் நிலையும், சில தீர்ப்புக்களினால் உண்மைக் குற்றவாளியையை விடுதலை செய்து விடும் நிலையும் ஏற்படத்தான் செய்கிறது. இது மனித வாழ்க்கiயில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்த இடங்களில் அந்த நீதிபதி உண்மைக்கு மாற்றமான முடிவுக்கு வந்தமையினால், அவரின் பிரித்தறியும் பகுத்தறிவில் கோளாறு ஏற்றபட்டுவிட்டது என்பதை மறுக்க முடியாது. இதற்கு என்ன காரணம்? சம்பவத்தை நேரடியாகப் பார்த்தவர்கள் மூலம் சரியான தகவலைப் பெறத் தவறிவிட்டார் அந்த நீதிபதி என்று தான் சொல்லவேண்டும். சம்பவத்தோடு நேரடியாகத் தொடர்புடையவர்கள், அல்லது நேரடியாகக் கண்டவர்கள் தரும் வாக்க மூலத்தை வைத்துத்தான் அவர் தீர்ப்பு செய்ய வேண்டியுள்ளது. அவரது புலன்கள் இந்தத் தீர்ப்பு செய்யும் விஷயத்தில் அவருக்குத் துணை செய்ய முடியுமே அல்லாமல், அவரது புலன்களைக் கொண்டு மட்டும் தீர்ப்பு செய்து விடமுடியாது. நாஸ்திகர்கள் செய்யும் பெருந்தவறு நீதிபதியின் தீர்ப்புக்கு புலன்கள் மட்டும் போதும். சம்பவத்தோடு தொடர்புடையவர் அல்லது சம்பவத்தை நேரில் கண்டவரின் வாக்கு மூலம் தேவையில்லை என்று கருதுவதுதான். சம்பவத்தோடு தொடர்புடையவர் அல்லது நேரில் கண்டவரை இவர்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டு, புலன்களைக் கொண்டு மட்டும் முடிவு செய்ய முற்பட்டு விடுகிறார்கள். அவர்கள் பெரும் நஷ்டத்தில் இருப்பதற்கும், அவர்களது பகுத்தறிவு முழுமை பெறாததற்கும் இதுவே பிரதான காரணமாகும்.

19- சம்பந்தப்பட்டவரின் வாக்குமூலம்:
அதாவது இறைவைனைப்பற்றி, மறுமையைப்பற்றி மனிதன் தனது புலன்களைக் கொண்டு மட்டும் முடிவு செய்யும்போது அவனது பகுத்தறிவு முழுமைப் பெறாமல், புலன்களைக்கொண்டு மட்டும் அறிந்த ஒரு குறைவான அறிவோடு நின்றுவிடுகின்றது. எப்போது அவர்கள் இறைவனோடு தொடர்புடைய, இறைவனால் அனுப்பட்ட இறைத்தூதர்களின் வாக்கு மூலத்தை, தங்களின் புலன்களின் துணையோடு முறையாக அணுகுகிறார்களோ அப்போதே அவர்களின் பகுத்தறிவு முழுமை பெறுகிறது. உண்மை நிலைகளை சரியாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது. அதேசமயம் அந்த நீதிபதி, சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட அல்லது நேரடியாகப் பார்த்த சரியான நபர் மூலம் தகவல் பெறத் தவறிவிடுவதன் காரணமாகத் தவறான தீர்ப்பு அளிக்க நேரிடுகிறதோ, அதேபோல் உண்iமான மாற்றப்படாத சட்டங்களையுடைய, அதிகாரத்தில் இருக்கிற உண்மைத் தூதரை விட்டு, பொய்த் தூதர்களையோ, அல்லது சட்டங்கள் மாற்றப்பட்ட அதிகாரத்தில் இல்லாத தூதர்களின் வாக்கு மூலங்களையோ, அல்லது அந்தத் தூதர்களின் பெயரால் நடைமுறையில் இருக்கும் மனித யூகங்கள் கலக்கப்பட்ட வாக்கு மூலங்களையோ தங்களின் புலன்களைக் கொண்டு விளங்கிச் செயல்பட்டாலும் பகுத்தறிவில் கோளாறு ஏற்படவே செய்யும்!.

20- மனிதப் புனிதர்கள்:
உலகில் தோன்றிய இறைத்தூதர்களைப்பற்றி நாஸ்திகளும் நன்கு அறிவார்கள். அவர்களின் நல்லொழுக்கம், மனித சமுதாயத்தின்பால் அவர்களுக்கிருந்த அன்பு, மனித மேம்பாட்டுக்காக அவர்கள் செய்த கடும் உழைப்பு, அதனால் அவர்கள் மக்களிடம் பெற்ற துன்பங்கள், அளவற்ற துன்பங்களை மக்கள் அளித்தும் அதற்கு மாறாக அந்த மக்கள் மீது அந்த இறைத்தூதர்கள் காட்டிய பரிவு அனைத்தையும் நாஸ்திகர்களும் அறிவார்கள். குறிப்பாக அவர்கள் அனைவரும் மனிதருள் மாணிக்கங்களாக வாழ்க்கை நடத்தியுள்ளார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள். இந்த நிலையில் இறைவனைப் பற்றியும், மறுமையைப் பற்றியும் அவர்கள் ஏன் பொய் பகர வேண்டும்? அதானல் அவர்கள் அடைந்த லாபம் என்ன? என்பதை நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டும். நாஸ்திகர்கள் சொல்வது போல் இறைவனோ, மறுமையோ இல்லை என்றால், அந்த சான்றோர்கள் அதையே மக்களிடம் சொல்லி மனித சமுதாயத்திற்கு அவர்கள் அரசர்களாக ஆகி இருக்கலாம். எண்ணற்ற உலக சுகபோகங்களை அனுபவித்திருக்கலாம். தங்களையே இறைவனாக மக்களை ஒப்புக்கொள்ள வைத்திருக்கலாம். குறிப்பாக இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் அதிகமதிகம் இருந்தன. நாஸ்திகர்களால் அறிஞர்களாப் போற்றப்படுகிறவர்கள் கொடுத்த திட்டங்களைவிட, மிக உன்னதமான திட்டங்களை அந்த மேன்மக்கள் சுயமாக கொடுத்திருக்க முடியும். ஆனால் இதற்கு மாற்றமாக அந்த மனிதப் புனிதர்கள் தாங்கள் இறைவனின் அடிமை என்றும், இறைவனால் அனுப்பபட்ட தூதர்கள் என்றும், இறைவன் கட்டளைகளுக்கு தாங்களும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், மக்களும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்? தங்களையே மிக வன்மையானக் கண்டித்துச் சொல்லும் வசனங்களைக்கூட இறைவனிடமிருந்து வந்த வசனங்கள் என்று மக்களிடம் ஏன் சொல்ல வேண்டும்? (இறுதிமறை அல்குர்ஆனில் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கண்டித்து இறக்கப்பட்டுள்ள பல வசனங்களைப் பார்க்கிறறோம்.)

இறைவன் ஒருவன் இல்லை என்றால், மறுமை என்ற ஒன்று இல்லை என்றால், அந்தப் புனிதர்கள் ஏன் இவ்வாறெல்லாம் செயல்பட்டிருக்க வேண்டும்? என்று நாஸ்திகர்கள் நிதானமாகச் சிந்தித்து பார்க்க வேண்டும். அந்த மனிதப் புனிதர்களான தூதர்களைத் தன்னுடைய அறிவிப்புகள் மூலம் இறைவனே செயல்பட வைத்துள்ளான்.
இறைவனோடு அந்தத் தூதர்களுக்கு நேரடித் தொடர்பு இருந்ததால், அந்த இறைவனை அத்தூதர்களை ஐயமின்றி விளங்கிகொண்டார்கள். இறைவனால் அறிவிக்கப்பட்ட மறுமை வாழ்க்கையையும் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். அந்த மறுக்கமுடியாத உண்மைகளையே மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள் என்பதை முறையாகச் சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ளாமல் இருக்கமுடியாது.

''மக்களிடம் அப்படி இறைவன் இருக்கிறான் என்று சொன்னால்தான் மக்களைக் கவர முடிந்தது. அதன் மூலம் சீர்திருத்தங்களைச் செய்ய முடிந்தது. எனவே உண்மைக்குப் புறம்பாக அந்தத்தூதர்கள் கூறினார்கள்'' என்று நாஸ்திகர்கள் வாதிடலாம். இதுவும் தவறாகும். இறைவன் இல்லை என்று சொல்லி மக்களிடம் செல்வாக்குப் பெறுவதாக இருந்தால், இந்த நாஸ்திகர்கள் இன்று மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பதைவிட மிக அதிகமாக செல்வாக்குப் பெற்றிருக்க முடியும். ஆனால், இறைவனின் கட்டளைக்கு மாற்றமாக இறைத்தூதர்கள் நடக்க முடியாது. இறைவன் இல்லை என்ற பொய்க் கொள்கையை மக்கள் முன்வைத்தால்தான், தாங்கள் செல்வாக்குப்பெற முடியும், தங்களால் சில சாதனைகளைப் புரிய முடியும் என்று நம்பியே நாஸ்திகர்கள் பொய்க் கொள்கையைக் கடைப்பிடிப்பதால், இறைத்தூதர்களும் அவ்வாறு உண்மைக்குப்புறம்பாக நடந்திருப்பார்கள் என்ற தவறான எண்ணத்தில் நாஸ்திகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

எனவே மனிதன் தனது புலன்களைக்கொண்டு மட்டும் அறிந்து கொள்வது நிறைவான பகுத்தறிவல்ல. இறைவனையும், மறுமையையும் தெளிவாக அறிந்த, இறைவனோடு நேரடித் தொடர்பில் இருந்த இறுதித்தூதரின் வாக்கு மூலங்களின் அடைப்படையில் புலன்களைப் பயன்படுத்தி அறியும் அறிவே முழுமையான பகுத்தறிவாகும். இந்தப் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தும் எந்த மனிதனும் இறைவனையோ, மறுமையையோ இறுதித்தூதரையோ மறுக்க ஒரு போதும் முற்படமாட்டான்.

21- இறைமறுப்புக்குப் பிரதான காரணம் என்ன?
இனி, நாஸ்திகர்கள் இறைவனையும், மறுயையையும் மறுத்துக் கூற பிரதான காரணங்கள் என்ன? அவர்களின் அந்த எண்ணம் சரியா? அவர்கள் எண்ணப்படி அவர்கள் தங்கள் திட்டத்தில் வெற்றி அடைந்தார்களா? என்று பார்ப்போம்.

ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் (ஆதத்துக்கும் ஹவ்வாவுக்கும்) பிறந்த இந்த உலக மக்களிடம் இன்று எண்ணற்ற மதங்களையும், ஜாதிகளையும், பிரிவுகளையும், எற்றத் தாழ்வுகளையும், விரோத மனப்பான்மைகளையும் பார்க்கிறோம். ஒரு சாரார் இன்னொரு சாரார் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக மக்கள் ஜனத்தொகையில் குறைந்த விகிதாச்சாரத்தில் உள்ளவர்கள் பெரும்பான்மை மக்களை ஆட்டிப்படைக்கின்றனர். சமத்துவ, சகோதரத்துவம் உள்ள சீரான வாழ்க்கையை மனித சமுதாயத்தில் பார்க்க முடியவில்லை. மனித சமுதாயத்தின் பெரும் தொகையினரை தீண்டத்தகாதவர்கள் என மதத்தின் பெயராலேயே ஒதுக்கி வைத்து, கொடுமைகள் பல இழைக்கப்பட்டு வருகின்றன. நாய்க்கிருக்கும் அந்தஸ்த்து கூட இந்த மனிதர்களுக்கு இல்லை என்ற கொடுமையையும் பார்க்கிறோம். (உயர் ஜாதியினர் நாயை தொடுவது தீட்டு என்று கூறுவதில்லை.) ஆக இப்படி சமுதாயத்தில் காணப்படும் அத்தனை கொடுமைகளுக்கும், இறைவனையும், மறுமையையும் நம்புவதே காரணமாக இருக்கிறது. இறைவனையும், மறுமையையும் சொல்லியே பெரும்பான்மை மக்களைச் சிறுபான்மை மக்கள் ஏமாற்றுகின்றனர். அந்த மயக்கம் காரணமாகத்தானே பெரும்பான்யையினர் சிறுபான்மையினருக்கு கட்டுப்படுகின்றனர். எனவே இறைவனும், மறுமையும் இல்லை. மரணத்தோடு மனித வாழ்க்கை முடிவுற்று விடுகின்றது என்று நிலைநாட்டி விட்டால், இப்படிப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் அழித்துவிடலாம். ஓர் உன்னத சமுதாயத்தை உருவாக்கிவிடலாம் என்பது நம் ஊர் நாஸ்திகர்களின் எண்ணமாகும்.

நாஸ்திகர்கள் கூறக் கூடிய கொடுமைகள் அனைத்தும் சமுதாயத்தில் இடம் பெற்றுள்ளன என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். அவை அனைத்தையும் அகற்றி, ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை அமைக்க அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் வரவேற்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை அமைக்க அவர்கள் கொடுக்கும் திட்டம்தான் மிகவும் தவறான ஒரு திட்டமாகும். ஆபத்தான ஒரு திட்டமாகும். அவர்களின் திட்டம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் எப்படிப்பட்ட ஒரு நிலையை உண்டாக்கி இருக்கிறது என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். நாட்டில் மலிந்து காணப்படும் கெடுதிகளுக்கு, இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே மர்க்கத்தை-நேர்வழியை-மதங்களாக்கி-மக்களை பல பிரிவினர்களாக்கி அதன் மூலம் அற்ப உலக ஆதாயம் அடைந்து வரும் புரோகிதர்கள் எந்த அளவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்களோ அதே அளவு அதில் எவ்வித குறையுமின்றி நாஸ்திகர்களும் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதை நாஸ்திகர்கள் உணர வேண்டும்.

22- கள்ளை ஒழிக்க தென்னையை ஒழிப்பதா?
கள் குடிப்பது கூடாது. குடி குடியைக் கெடுக்கும், இது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. மக்களை இந்த உண்மையை உணர வைத்து அவர்களை குடியை விடச்செய்வதே அறிவுள்ளவர்கள் செய்யும் நல்ல முயற்சி. தென்னை மரத்திலிருந்துதானே கள் வருகின்றது, தென்னை மரத்தை வெட்டி வீழ்த்தி விட்டால், கள் குடி ஒழிந்துவிடும் என்று தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துபவனை அறிவாளி என்று அறிவாளிகள் சொல்ல மாட்டார்கள். மாறாக, தென்னை மரத்தைக் கொண்டு மக்கள் பெறும் நல்ல பல பலன்களை இழக்க நேரிடும் என்பதே உண்மையாகும். குடிகாரன் தென்னை மரத்திலிருந்து கள் கிடைக்கவில்லை என்பதற்காகக் குடியை விடப்போவதில்லை. ஸ்பிரிட்டைக் காய்ச்சிக் குடிக்க ஆரம்பிப்பான். அவனுக்கு வேண்டியது போதை. அந்தப் போதையை எப்படி எல்லாம் பெற்றுக் கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் பெற்றுக் கொள்ள முயல்வான். குடியை ஒரு போதும் விடமாட்டான். இதேபோல் மூட்டைப் பூச்சி தொல்லைத் தாங்கமுடியவில்லை என்பதற்காக வீட்டைக் கொளுத்தி விட்டு காட்டில் போய் அவதிப்படமாட்டான் அறிவுள்ள மனிதன். வீட்டிலிருந்து கொண்டே மூட்டைப்பூச்சித் தொல்லையைப் போக்க உரிய வழியையே பார்ப்பான்.
இப்படிப்பட்ட அறிவற்ற ஒரு முயற்சிதான், இறைவனின் பெயரால் சிறு சாரார் பெரும் சாராரை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதற்காக, இறைவனே இல்லை என்று நிலைநாட்டச் செய்யப்படும் முயற்சியுமாகும். கள்ளுக்குப் பயந்து தென்னையை வெட்டி வீழ்த்தியதால், தென்னையிலிருந்து பெறப்படும் பல பலன்களை மனிதன் இழப்பது போல், சமூகத்தில்; ஒரு சிறு தொகையினர் மக்களை ஏமாற்றுகின்றனர் என்ற காரணத்தால் இறைவன் இல்லை என்று சொல்வது, சமுதாயத்தில் பெரும்பான்iயினர் இறை நம்பிக்கையின் மூலம் அடையும் பெரும் பலன்களை இழக்கச்செய்வதாகும்.

நாஸ்திகர்கள் பிரதானமான ஒரு விஷயத்தை சிந்திக்கத் தவறி விடுகின்றனர். மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைபடும் காரியங்களிலேயே, அவற்றைப் பெற்றுக் தருவதாகச் சொல்லிக் கொண்டு, ஒரு சாரார் அதன் மூலம் பிழைப்பு நடத்துவர். அவசியம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு இந்த இடைத்தரகர்களும் முக்கியத்தும் பெறுகின்றனர். அவர்களின் தில்லுமுல்லுகளும் அதிகரிக்கின்றன. இந்த இடைத்தரகர்களின் தில்லுமுல்லுகளை ஒழிப்பதற்கு வழி, மனிதனுக்கு அத்தியாவசியமானவற்றை அவசியமில்லாமல் ஆக்கிக் கொள்வது என்று நாஸ்திகர்கள் சொன்னால், அதை எந்த அறிவாளியும் ஏற்றுக் கொள்ள முடியுமா? எளிதாக விளங்க உதாரணம் ஒன்றறைச் சொல்கிறோம்.

23- உணவின் அவசியத்தை வைத்து நடைபெறும் அக்கிரமங்கள்:
மனிதனுடைய வாழக்கைக்கு உணவு பிரதானமானதாக இருக்கிறது. உணவில் பிரதானமாக நாம் அரிசியைப் பயன்படுத்துகிறோம். ஆகவே அரிசி நமக்கு அத்தியாவசியமான ஒரு பொருளாக இருக்கிறது. இந்த அரிசியை மக்களுக்கு கிடைக்கச்செய்ய அரிசி வியாபாரிகள் என்ற இடைத்தரகர்கள் உண்டாகி விடுகிறார்கள். இந்தத் தரகர்களின் எண்ணிக்கை அரிசியை இவர்களிடமிருந்து வாங்கிச் சாப்பிடும் மக்கள் தொகையைவிட மிகக்குறைந்த எண்ணிக்கையினரே. இவர்கள் முறையாக அரிசியைப் பெற்று ஒரு நியாயமான ஆதாயத்தோடு கலப்படம் எதுவும் செய்யாமல் மக்களுக்குக் கொடுத்தால், இது உண்மையில் ஒரு சேவையாகும். ஆனால் இந்த நாட்டில் நடைமுறையில் என்ன நடைபெறுகிறது? மக்களுக்கு அரிசியின் அத்தியாவசியத் தேவையை அறிந்து கொண்ட அந்தத் தரகர்கள் அந்த அரிசியில் மண்ணையும், கல்லையும் கலந்து அரிசி என்று விற்கிறார்கள். அதாவது மக்களின் அவசியத் தேவையைப் பலகீனமாகக் கருதி கல்லையும், மண்ணiயும் அரிசியாக்கிக் காசாக்குகிறார்கள். இந்த ஈனச் செயலை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் செய்யமாட்டான். இந்த ஈனச் செயலுக்குரிய கொடிய தண்டனையை மறுமையில், தான் பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியான இறை நம்பிக்கையுள்ள எவனும் செய்ய மாட்டான். மனித உருவத்தில் வாழும் மிருகங்கள் மட்டுமே இந்தச் செயலைச் செய்யமுடியும். இங்கு நாஸ்திகர்கள், நமக்கு அரிசி தேவையிருப்தால்தானே இந்த ஈனர்களுக்கு கல்லையும், மண்ணையும் அரிசியாக்கி காசாக்கும் சந்தர்ப்பம் எற்படுகிறது. எனவே மக்களே யாரும் அரிசி வாங்காதீர்கள். அரிசியை சமைத்து சாப்பிடாதீர்கள் என்று போதிக்க முன்வருவார்களா?, அப்படி அவர்கள் வந்தால் அவர்களை யாரும் அறிவாளிகளாக ஏற்றுக் கொள்வார்களா? இப்போது மனிதன் உபயோகிக்கும் பெரும்பாலான உணவுப் பொருள்களிலும் கலப்படங்கள் பெருத்து விட்டதை அறிகிறோம். கலப்படம் செய்ய முடியாத உணவுப் பொருள்கள் மட்டுமே தப்பியுள்ளன. அதிலும் நாஸ்திகர்கள் மக்களிடையே இருந்த இறைநம்பிக்கையை போக்கிய பின் இந்த உணவுப் பொருட்களில் கலப்படங்கள் மிக அதிகமாகி விட்டன என்பதை அனுபவ வாயிலாகவே அறிகிறோம். இந்த அளவு உணவுப்பொருள் கலப்படங்கள் மலிந்த மனித சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவினர் சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைப்பதைப் பார்க்கும் நாஸ்திகர்கள், மக்களே! உணவு சாப்பிடாதீர்கள், பட்டினியாக இருங்கள் என்று சொல்வதில்லை.

24- கல்வியின் பெயரால் நடக்கும் அநியாயங்கள்!
அடுத்து, மனிதன் கல்வியறிவை அடைய விரும்புகிறான். மக்களுக்கு கல்வியைப் போதிக்கிறோம் என்று ஒரு சாரார் கிளம்புகிறார்கள். உண்மையில் இதனை ஒரு சேவையாகக் கருதி அவர்கள் செய்வார்களானால், அது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் நாட்டில் இன்று என்ன நடந்து கொண்டிருகிறது?

சாதாரணமாக, எல்.கே.ஜி யிலிருந்து கல்வியின் பெயரால் எத்தனை துறைகள் இருக்கின்றனவோ அத்தனையிலும் அநியாயங்கள். லஞ்ச லாவண்யங்கள், தில்லுமுல்லுகள், மோசடிகள் சொல்லித்தீராது, எழுதித்தீராது. நாஸ்திகர்களுக்கும் இவை அனைத்தும் நன்றாகவே தெரியும். கல்வியின் பெயரால் ஒரு சிறுவர்க்கம் சமுதாயத்தையே ஏய்த்துப் பிழைக்கின்றது. எனவே இந்த சமுதாயத்திற்குக் கல்வியே தேவையில்லை. கல்வி அறிவற்ற ஆதிகால வேடுவர்கள் போல் வாழ்க்கையை நடத்துவோம் என்று நாஸ்திகர்கள் சொல்ல மாட்டார்கள். இப்படி மனித சமுதாயத்திற்கு, மனித வாழ்விற்கு அத்யாவசியமான அனைத்துத் துறைகளிலும் இடைத்தரகர்களாக ஒரு சிறு வர்க்கம் புகுந்து கொண்டு, முழுச் சமுதாயத்தையும் ஏமாற்றி வருகின்றனர். மனிதனுக்குத் தேவை என்று வந்துவிட்டால் அந்த தேவையின் அளவை அனுசரித்து ஒரு சிறுவர்க்கம், அதை துஷ்பிரயோகம் செய்து அவர்கள் பிழைப்பு நடத்துவது தவிர்க்க முடியாததாகவே மனித வாழ்க்கையில் அமைந்துவிடுகிறது. மனிதன் இவ்வுலகில் வாழ்வதாக இருந்தால் அவனது தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டே ஆக வேண்டும். தேவைகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. தேவைகளைத் துறந்து வாழ் என்று மனிதனுக்கு உபதேசம் செய்பவன் அறிவாளியாக இருக்க முடியாது. மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் இப்படிப்பட்ட மோசடிகள், தில்லுமுல்லுகள், ஏமாற்றுகள் நடந்தும், அந்தத்துறைகள், மனித வாழ்க்கைக்கு அவசியமில்லை என்று கூறதுணியாத நாஸ்திகர்கள், மனித சமுதாயத்தின் அடிப்படை நம்பிக்கையான இறை நம்பிக்கை மட்டும் அவசியமில்லை என்று கூறத்துணிவதேன்?

மனித வாழ்க்கையின் வெற்றியே அந்த இறை நம்பிக்கையின் அடிப்படையிலேயே இருக்கிறது. மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் காணப்படும் சீர்கேடுகள் சீராக, இறைநம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் மிகமிக அத்தியாவசியமானவையாக இருக்கின்றன. அதன் காரணமாக அவற்றின் அத்தியாவசியத்;திற்கு ஏற்றாற் போல், அந்தத் துறையில் ஒரு சாரார் புகுந்து. தங்களின் அற்ப உலக ஆதாயத்திற்காக அரிசியின் பெயரால், அரிசியில் கல்லையும், மண்ணiயும் கலப்பதுபோல், சத்திய மார்க்கத்தில், சத்திய மார்க்கத்தின் பெயரால் அசத்திய மதங்களைக் கலக்கத்தான் செய்வார்கள். அரிசியில் கல்லிருந்தால், அதிலுள்ள கல்லை அகற்ற முயற்சிக்க வேண்டுமே அல்லாமல், அரிசியைச் சாக்கடையில் கொட்டத்துணியக் கூடாது. அதேபோல் சத்தியமார்க்கத்தில், கலக்கப்படுள்ள அசத்திய மதங்களை அகற்றப் பாடுபட வேண்டுமேயல்லாது, சத்திய மார்க்கத்தையும் அழித்துவிட முற்படக் கூடாது. இது மனித சமுதாயத்திற்கு பயங்கர நஷ்டத்தையும், அழிவையும், வீழ்ச்சியையுமே ஏற்படுத்தும். இதை நாஸ்திகர்கள் நிதானமாக சிந்தித்து விளங்கிக்கொள்ள வேண்டும்.

25- அரசியல் மோசடிகள்:
மனித கூட்டு வாழ்க்கைக்கு அரசியல் மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்த அவசியத்தைப் பயன்படுத்திக் கொண்டு சமுதாயத்தில் ஒரு சிறு தொகையினரான அரசியல்வாதிகள் என்னென்ன அநியாயங்களைச் செய்கிறார்கள்!. சமுதாய நலனை விட தங்கள் நலனை எந்த அளவு முற்படுத்துகிறார்கள், அப்படி இருந்தும் சமுதாய நலன் கருதி நாஸ்திகம் பேசுவதாகச் சொல்லிக் கொள்பவர்களிலும் பலர் எந்த அளவு இந்த அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் அரசியலின் பெயரால் மக்களுக்கு இழைக்கும் கொடுமைகள் அனைத்தையும் அடுத்து விரிவாகவே பார்ப்போம்.

சமுதாய மேன்பாட்டிற்காக, மனித குல ஒற்றுமைக்காக நாஸ்திகர்கள் எடுத்து வைக்கும் திட்டங்கள் தவறு, சரியனவை அல்ல. மேலும், மனிதர்களுக்குச் சீரழிவையே உண்டாக்கும் என்ற விவரங்களைப் பார்த்து வருகிறோம். இனி சமுதாய கூட்டு அமைப்பிற்கு அரசியல் அத்தியாவசியமாக இருக்கின்றது. இந்தக் காரணத்தை பயன்படுத்தி அரசியல் இடைத் தரகர்களான அரசியல்வாதிகள் எப்படிப்பட்ட கொடுமைகளை எல்லாம் மனித சமுதாயத்திற்கு இழைத்து வருகின்றனர். நாஸ்திகர்கள் தங்கள் சித்தாந்தங்களின் படி ''அரசியல் வேண்டாம், அரசியல் என்று ஒன்று இல்லை, அரசியலை கற்பிப்பவன் முட்டாள்'' என்று கோஷங்கள் போடுவதற்குப் பதிலாக, அரசியல் மிகமிகத்தேவை என்றே சொல்கின்றனர். அந்த அரசியலில் இவர்கள் மிகப்பெரும் பங்கே வகிக்கின்றனர். தமிழ் நாட்டில் செல்வாக்கினைப் பெற்றுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகலெல்லாம் நாஸ்திகத்தைப் பரப்பிய பெரியாரின் போதனைகளின்படி செயல்படுகிறோம் என்று சொல்லிக் கொள்கிறவர்கள்தான் அங்கம் வகிக்கின்றனர். பெரும்பாலான இன்றைய அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய குண நல ஒழுக்கங்கள் எப்படிப்பட்டவை? என்பதை அன்றாட பத்திரிக்கைகளைப் பார்ப்பவர்கள் மிக அதிகமாக தெரிந்து வைத்துள்ளனர்.

கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், விபச்சார விடுதி நடத்துபவர்கள், அவற்றிற்காக துணிந்து பல கொலைகளை செய்பவர்கள் இன்னும் இது போன்ற பஞ்சமா பாதகங்களில் ஈடுபடுவோர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் அரசியல்வாதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும் நாட்டு மக்கள் அன்றாட செய்திகள் மூலம் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். இப்படிப்பட்ட சமூக விரோத காரியங்கள் இன்றைய பல அரசியல்வாதிகளின் பூரண ஆதரவோடும், ஒத்துழைப்போடும்தான் நடந்து வருகின்றன என்பதை நம்மை விட நாஸ்திகர்கள் நன்கு அறிவார்கள். அப்படியிருந்தும் அவர்கள் ''அரசியலே அவசியம் இல்லை'' என்று சொல்லுவதில்லையே!.

அரசியல் அமைப்பு நாட்டுமக்களின் நலனைக் கருதியே இருக்கிறது என்று மேடைக்கு மேடை பேசுகிறார்கள். ஆனால், நாட்டுமக்களின் நலனைவிட அரசியல்வாதிகளாகிய தங்களின் நலனை முன்வைத்தே சட்டங்கள் அமைக்கின்றனர். அவர்களால் இயற்றப்படும் சட்டங்களைக் கொண்டு, அரசியல்வாதிகளாகிய அவர்களும், அவர்களுக்குத் துணை நிற்கும் அரசாங்க அதிகாரிகளும் கொழுத்து வளர்கின்றனரே அல்லாமல், நாட்டு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாடி வதங்கி அவஸ்தப்படும் அவலக் காட்சிகளைத்தான் பார்த்து வருகிறோம். உதாரணத்திற்கு மக்களின் அன்றாட தேவைக்கு அத்தியாவசியமான பொருட்களில் விற்பனைவரி என்று அரசு அமைத்திருக்கும் வரிமுறையை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். மக்கள் நலனைக் கருதும் அரசாக இருக்குமேயானால் ஏழை மக்கள் உபயோகிக்கும் பொருட்களில் வரிவிதிக்கும் முறையை ஒருபோதும் மேற்கொள்ளாது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஒருமுனை வரிவிதிப்பைக் கொண்டும் திருப்தி படாமல், பல பொருட்களில் பலமுனை வரிவிதிப்பு முறையை அமுல்படுத்தியிருப்பதையும் பார்க்கின்றோம். இந்த பலமுனைவரிவிதிப்பு முறை நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ பலன் தரும் ஒரு முறையல்ல. மாறாக அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் வியாபாரிகளிடமிருந்து பணத்தைக் கொள்ளை கொள்ளையாகப் பிடுங்கும் ஒரு வழியாகும்.

ஒருமுனை வரி விதிப்பதால் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எவ்வித இழப்பும் ஏற்படாது. மாறாக, செழிப்பான ஒரு நிலையைப் பார்க்கலாம். ஆனால், இன்றைய அரசியல்வாதிகளோ, அரசாங்க அதிகாரிகளோ அதற்கு தயாராவார்களா என்றால் நிச்யமாக ஒருபோதும் தயாராகமாட்டார்கள். காரணம், இத்திட்டத்தைக் கொண்டு நாட்டு மக்கள் பயனடைவார்களேல்லாமல் இந்த அரசியல்வாதிகளோ, அரசாங்க அதிகாரிகளோ கொழுத்த இலாபம் அடைய முடியாது. அரசியல்வாதிகளுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் உற்பத்தியாளர்களிடமும், வியாபாரிகளிடமும் இருக்கும் செல்வாக்கு இல்லாமல் போய்விடும். இவர்கள் இலட்ச லட்சமாக, கோடி கோடியாக உற்பத்தியார்களிடமிருந்தும், வியாபாரிகளிடமிருந்தும் திரட்ட முடியாது.
வியாபாரிகள் அதிகாரிகளின் மிரட்டல்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஆளாக வேண்டியிராது. உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் இலட்ச லட்சமாக கோடி கோடியாக, இன்றைய அரசியல்வாதிகளுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் கொடுத்துவிட்டு அதனை வியாபார முதலீடாகக் கருதி ஆதாயத்தோடு அவற்றைப் பெற்றுக் கொள்ள தரமில்லாத பொருட்களை தயார் செய்தும், கலப்படங்கள் செய்தும் பொதுமக்களை வஞ்சிக்கும் நிலை ஏற்படாது. ஆக இப்படி பலமுனை வரியால் நாட்டுமக்களுக்கு ஏற்படும் பல தீமைகளகை; களைய முடியும்.

26- ஏன் விலை போகிறார்கள்?
பெரும் பெரும் வியாபாரிகளும், உற்பத்தியாளர்களும், அரசியல்வாதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும் விலைக்கு வாங்கி விடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதே என்று யாரும் கேட்டால், அவர்கள் ஏன் அப்படி விலை போகிறார்கள்? என்பதே நமது கேள்வியாகும். சமீபத்தில் ஒரு அரசியல் கட்சி தனக்கு தேர்தல் நிதி இரண்டரைக் கோடி சேர்ந்துள்ளதாக அறிவித்தது. இன்னொரு கட்சி ஒன்றரை கோடி சேர்ந்துள்ளதாக அறிவித்தது. இப்படி தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பணம் தேவைதானா? ஒரு வேட்பாளருக்கு விளம்பர வகைகளுக்காகவும், தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் அவை முறைப்படி இருக்குமானால், எவ்வளவு செலவாகி விடப்போகிறது! புள்ளி விவரம் தெரியாமல்தான் இன்றைய அரசியல்வரிகள் இருக்கின்றனரா? கோடிக்கணக்கில் உற்பத்தியாளர்களிடமிருந்தும், வியாபாரிகளிடமிருந்தும் தங்களை விற்றுப் பெறவேண்டிய அவசியமென்ன வந்து விட்டது? கோடிக்கணக்கில் கொடுப்பவர்கள் அவர்களின் துணை கொண்டு பல கோடி திரட்டிட முடியும் என்ற தைரியமில்லாமலா கொடுக்கின்றனர். நாளை இவர்கள் ஆட்சியல் அமரும்போது கோடி கோடியாக கொடுத்தவர்களுக்கு அடிபணியாமல் இருக்க முடியுமா? அதன் விளைவு என்னவாகும், அப்படிப்பட்ட ஆட்சிகளைக் கொண்டு, வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு நலன் ஏற்படும் என்று நாஸ்திகர்கள் நம்புகின்றார்களா? இப்படிப்பட்ட அரசியலில் இவர்களும் பங்கெடுக்கின்றார்களே, அப்படியானால் அதன் இரகசியம் என்ன? நாட்டு மக்களின் நலனிலும், ஒற்றுமையிலும், சமுதாய மேம்பாட்டிலும் உண்மையில் அக்கறை உடையவர்கள் இப்படிப்பட்ட அரசியலமைப்பைச் சரி என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? இதற்கு நாஸ்திகர்களின் பதில் தான் என்ன?
உணவு விடுதிகளில் சாப்பிடும் உணவு வகைகளுக்கும் வரி விதிக்கும் கீழ் நிலைக்கு இன்றைய அரசு ஆளாகியுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நமது நாட்டில் பிரபலமாக பேசப்பட்ட பீரங்கி ஊழல்-இந்திய பாதுகாப்புத் துறைக்கே கேடுதரும், அவமானத்தைத் தரும் நிகழ்ச்சி. அரசியல்வாதிகளின் முறைகேடான செயல்களால் அரசியலுக்கே இழுக்காக அமைந்துள்ளது. இன்று பரபரப்பூட்டும் பல கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உடந்தையென கூறப்படுகிறது, இதுவும் அரசியலுக்கு ஏற்பட்டுள்ள ஓர் அவப்பெயர். மேலும் சாராயத் தொழிலிலும், சூதாட்டத் தொழிலிலும் அரசியல்வாதிகளின் அணி வகுப்பே மேலோங்கி நிற்கிறது. சுருங்கச் சொன்னால், இன்று நம் நாட்டில் நீக்கமற நிறைந்துள்ளது ஊழல்தான். அந்த ஊழல்களுக்கு முழு முதற்காரணமாக, களமாக இருப்பவர்கள் இன்றைய அரசியல்வாதிகளே!.

இன்றைய அரசியலை நாஸ்திகர்கள் சரி என்று ஒப்புக்கொண்டு அவர்களும் இன்றைய அரசியலில் எப்படி பங்கு வகிக்கிறார்கள், இவ்வாறு நாம் கேட்பதின் காரணம், இறைவனின் பெயரால் மதப்புரோகிதர்கள் மக்களை ஏமாற்றி அவர்கள் சுய ஆதாயம் அடைந்து வருகிறார்கள் என்பதற்காக ''கடவுள் இல்லை! இல்லவே இல்லை! கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை ஆக்கியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி!'' என்று கோஷமிடும் நாஸ்திகர்கள் இங்கு அரசியலின் பெயரால் அரசியல்வாதிகள் என்ற புரோகிதர்கள் மக்களை ஏமாற்றி அவர்கள் சுய ஆதாயம் அடைந்து வருவதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் நாஸ்திகர்கள் ''அரசியல் இல்லை! இல்லவே இல்லை! அரசியலைக் கற்பிப்பவன் முட்டாள்! அரசியலை ஆக்கியவன் அயோக்கியன்! அரசியலை ஒப்புக் கொள்கிறவன் காட்டுமிராண்டி!'' என கோஷமிடுவதில்லையே! ஏன்? மாறாக, இப்படிப்பட்ட முடை நாற்றமெடுக்கும் அரசியல் சாக்கடையில் இவர்களும் முங்கிக் குளிப்பதேன்? இதுவே நமது கேள்வியாகும். நாஸ்திக நண்பர்கள் விடையளிப்பார்களா?

நாஸ்திகர்கள் சிந்தித்து விளங்கத்தவறிய அந்தப் பேருண்மையை நாம் தெளிவுபடுத்துகிறோம். மனிதன் தேவையுடையவனே, தேவையற்ற ஒரு மனிதனை நம்மால் பார்க்க முடியாது. தேவை எந்தளவு முக்கியமானதாக அமைகிறதோ, அந்த அளவிற்கு நெருக்கடியும் ஏற்படும் எனவே, இடைத்தரகர்கள் ஏற்படுவதும் இயல்பே. இப்படிப்பட்ட இடைத்தரகர்களின் மனிதாபிமானமற்ற மிருகச் செயல்களைக் கண்டித்து, அவர்களைத் திருத்தப் பாடுபட வேண்டுமேயல்லாமல். அவர்கள் திருந்தாவிட்டால் அவர்களை அகற்றிட பாடுபட வேண்டுமேயல்லாது அத்தரகர்கள் உண்டாகக் காரணமாயிருந்த தேவைகளை மறுப்பது மனிதச் செயலல்ல. மனிதன் மனிதனாக வாழ இறைநம்பிக்கை மிகமிகத் தேவையானதாகும். இறைநம்பிக்கை உறுதியாகவும், தெளிவாகவும் உள்ள எந்த மனிதனும் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுவான் என்று நாம் நம்பவே முடியாது. போலி ஆஸ்திகர்களைப் பார்த்து இந்த நாஸ்திகர்கள் ஒரு பெரிய தப்பான முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றே சொல்ல முடியும். மக்களிடையே சரியான, முறையான, தெளிவான, உண்மையான ஓரிறை நம்பிக்கையை உண்டாக்குவதன் மூலம், இன்று மக்களிடையே மலிந்து காணப்படும் பல ஊழல்களையும், தவறுகளையும், ஒருவரை ஒருவர் ஏமாற்றும் கொடுஞ்செயல்களையும் அகற்றி நேர்மையான, உன்னதமான சகோதரத்துவம் நிலவும் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதே அந்தப் பேரூண்மையாகும்!.

இறைவனின் பெயரால் ஒரு சிறிய கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்க வழி ஏற்படுகின்றது. எனவே இறைவனைக் கற்பிப்பது மடமையாகும் என்று நாஸ்திக நண்பர்களின் கூற்றிலுள்ள மடமையைத் தெளிவாகப் பார்த்தோம். மேலும் இதே போல் ஒரு சிறு கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப்பிழைக்கும் அரசியல் அவசியமில்லை என்று இந்த நாஸ்திகர்கள் சொல்லுவதில்லை. மாறாக அதில் இவர்களே முன்னணியில் இருக்கின்றனர் என்ற விபரத்தையும் கண்டோம். மக்களுக்கு அத்தியவசியமாகத் தேவைப்படும் காரியங்களிலேயே இடைத்தரகர்கள் புகுந்து, தங்கள் சுய ஆதாயத்திற்காக பெருங்கூட்டத்தை ஏமாற்ற முற்படுவர். இதைக் காரணங்காட்டி அந்த அத்தியாவசியக் காரியங்கள் இல்லை என்றோ, அல்லது தேவையில்லை என்றோ சொல்வது அறிவாளிகளி;ன் கூற்றல்ல. குடியை ஒழிக்கத் தென்னை மரங்களையும், பனை மரங்களையும் வெட்டிச் சாய்க்கும் அறிவீனர்களின் கூற்றேயாகும் என்பதையும் தெளிவாகப் பார்த்தோம்.

27- கடவுளுக்கு அடுத்து அரசியல்:
''கடவுளுக்கு அடுத்தப்படியாக அரசியல்;, அனைவரையும் ஆட்கொள்ளத்தான் செய்யும்!'' இது திரு சி.என். அண்ணாத்துரையின் கூற்றாகும். திரு. சி.என். அண்ணாத்துரை நாஸ்திகத்தைத் தமிழ்நாட்டில் பரப்பிய திரு. ஈ.வெ. ராவின் பிரதம சிஷ்யர் என்பது நாடறிந்த உண்மை.

அரசியலை ஆதரிப்பவர்கள், இறை நம்பிக்கையை எதிர்ப்பது விவேகமான செயல் அல்ல என்பதையே இக்கூற்று ஊர்ஜிதம் செய்கிறது. அரசியலிலுள்ள ஊழல்களை அகற்றி, தூய்மையான அரசியலை மக்களுக்குக் கொடுக்க அறிவாளிகள் கடமைப்பட்டுள்ளனர். இதேபோல் இறை நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள ஊழல்களை அகற்றி, தூய்மையான இறை நம்பிக்கையை மக்களுக்கு போதிப்பது அறிவாளிகளின் கட்டாயக் கடமையாகும்.

அடுத்து, ''இறைவனே இல்லை'' என்று கூக்குரலிடுவதன் மூலம் மக்களிடையே ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள், ஒழுக்கமற்ற நிலைகள் இவற்றை அகற்றி, சமத்துவ, சகோதரத்துவ, சுபிட்ச வாழ்க்கையை மக்களுக்கு இந்த நாஸ்திகர்கள் கொடுத்திருக்கிறார்களா? என்றால் இல்லை என்ற பதிலைத்தான் நாம் பெற முடியும்.

28- கம்யூனிஸத்தின் அழிவு:
ரஷ்ய நாட்டில் 1917-ல் நாஸ்திகர்களின் அரசாங்கம் நிலை நாட்டப்பட்டது. கடவுள் நம்பிக்கையை மக்களிடமிருந்து அகற்ற பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்காக பல கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. பல கோடிக்கணக்காண மக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். ஸ்டாலின் தனது பொதுவுடமைக் கொள்கைகளை நிலைநாட்ட இரண்டு கோடி மக்களை கொன்றிருப்பார் என்று மதிப்பிடப்பட்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களைப் பலி கொடுத்த பின்பாவது, நாஸ்திகத்தால் மக்களுக்குச் சுபிட்சமான ஒரு வாழ்க்கையைத் தர முடிந்ததா? என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். இதற்கு உடைந்து சிதறிய ரஷ்யாவே உலகத்துக்குப் போதுமான சாட்சியாக உள்ளது.

இன்று அகில உலகிலும் நீக்கமற நிறைந்து காணப்படும் வன்செயல்களுக்கு வன்முறையின்றி எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை என்ற நாஸ்திகவாதிகளின் தவறான தத்துவமே முழு முதல் காரணமாகும். நாஸ்திகத்தை நிலைநாட்ட முற்பட்ட ரஷ்யா, தனது செயல்களை இரும்புத் திரைக்குப் பின்னால் மூடி மறைத்துக்கொண்டது ஏன்? என்று சிந்திப்பவர்களுக்கு நாஸ்திகவாதத்தின் இயலாமை புலப்படும்.

கோர்பசேவ், ரஷ்ய அதிபரான பின் நாஸ்திகவாதம் தவறான சித்தாந்தம் என்பதைச் சிறிது சிறிதாக உணர்ந்து வந்தார், பகிரங்கமான கூறவும் முற்பட்டார். பொதுவுடைமைக் கொள்கையால் ஆளப்பட்ட ரஷ்யாவில் கடந்த 75 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள சீரழிவுகள், ஒழுக்கக்கேடுகள், மனித அமைதிக்கும், சுபிட்சத்திற்கும் ஏற்பட்டுள்ள பங்கங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யர்கள் நாஸ்திக வாதம் தவறென்ற முடிவுக்கு வந்து, தங்கள் விடிவுக்கு வேறு வழிகள் உண்டா? என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். இன்று ரஷ்யா சிதறி பல குட்டி நாடுகளாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டன.
ரஷ்யா நாட்டில்தான் நாஸ்திக வாதம் தோல்வியுற்றது என்றில்லை. அதற்கடுத்து சீனாவில் நிலைநாட்டப்பட்ட நாஸ்திக வாதமும் தோல்வி கண்டு வருகின்றது. சீனாவின் ஆட்சியாளர்களும் தங்கள் நாஸ்திகவாதக் கொள்கைகளிலுள்ள குறைகளை உணர்ந்து தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள முற்பட்டிருக்கிறார்கள்.

29- தமிழகத்தில் நாஸ்திகம்:
தமிழகத்தில் நாஸ்திகத்தைப் பரப்ப பெரும் முயற்சி செய்யப்பட்டது. தமிழகத்தின் துயர் துடைக்கப் பட்டுள்ளதா? தமிழக மக்கள் அனைவரும் அனைத்தும் பெற்று, சுபிட்சமான, சந்தோஷ, சமத்துவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? என்று எண்ணிப்பாருங்கள்.

சாராய சாம்ராஜ்ய அதிபதிகளும், விபச்சார விற்பன்னர்களுமே வளர்ந்துள்ளனர். மது, மாது, சூது இவற்றால் ஒரு சிலர் குபேர வாழ்க்கை வாழ்வதற்கு வழியேற்பட்டுள்ளது. பெருந்தொகையினர் நாள் முழுவதும் உழைத்தும், கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வழி இல்லாமலும், உழைத்துப் பெற்ற அற்ப காசையும் குடியில் அழித்தொழித்து அல்லல்படுவதையுமே கண்கூடாகக் கண்டு வருகிறோம். நாஸ்திக வாதம் இப்படிப்பட்ட மக்களை திருத்த முடியவில்லை. ஒழுக்கம் நிறைந்த மக்களைப் பார்ப்பது அரிதாகவே இருக்கிறது. தமிழக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இருக்கும் தமிழக சட்டசபையில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் தமிழகத்தைத் தலை குனிய வைத்துள்ளன.

ஆக, உலகின் மூன்றில் ஒரு பங்கினரை ஆட்கொண்ட நாஸ்திக வாதம் தனது இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டத் தொடங்கிவிட்டது. நாஸ்திகத்தால் ஆட்கொள்ளப்பட்ட பலர் தங்கள் தவறை உணர்ந்து திருந்த முன் வந்திருக்கின்றனர். இது நாஸ்திக நண்பர்கள் மறுக்க முடியாத உண்மையாகும்.

சத்தியத்திற்கு மாற்றமான கொள்கைகள் இவ்வுலகில் என்றுமே வேரூன்றியதில்லை. அவற்றின் ஆரம்ப காலத்தில் அவை பெரும் முற்போக்குத் திட்டங்கள் போலும், மக்களின் சர்வ பிரச்சனைகளையும் தீர்க்கும் சர்வலோக நிவாரணிகள் போலும் தோற்றமளித்தாலும், அவை நடைமுறைப்படுத்தப்பட்டு, செயல் வடிவில் பார்க்கும்போது அவற்றின் போலித்தனம் தெளிவாக தெரிந்தே தீரும். அந்த அடிப்படையில் ''நாஸ்திக வாதமும்'' நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு, அதன் இயலாமை உள்ளங்கை நெல்லிக்கனி போல் நிலை நாட்டப்பட்டுள்ளது.
இதன் பிறகாவது நாஸ்திகவாத்தில் நம்பிக்கை உடையவர்கள் சிந்திப்பார்களா? முனிதன் என்றால் அவனுக்கு சுய அறிவு இருக்க வேண்டும். சுய அறிவு இல்லை என்றால் கேள்வி அறிவாவது இருக்க வேண்டும். சுய அறிவும் இல்லை, கேள்வி அறிவும் இல்லை, அனுபவ அறிவாவது இருக்க வேண்டும். இது இறுதிநிலை, சுய அறிவும் இல்லை, கேள்வி அறிவும் இல்லை, அனுபவ அறிவும் இல்லை என்றால் அவனை மனிதனாக உலகம் மதிக்காது.

30- முஸ்லிம்களின் குறையேயன்றி இஸ்லாத்தில் குறை இல்லை
இவ்வுலகில் நாஸ்திகக் கொள்ளையை நிலைநாட்டிட பல ஆண்டுகளாக முயற்சிகள் செய்தும் அதன் நோக்கங்கள் நிறைவேறவில்லை என்பதைப் பெரிதாகப் பேசும் நீங்கள் இஸ்லாத்தின் பெயரால் 1400 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்தும் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியவில்லையே. அதனை ஏன் உணரத் தவறி விட்டீர்கள், எனக் கேட்கலாம். அதற்கான விடையாவது, சுமார் 23 வருட முயற்சியிலேயே இறைவனின் இறுதித்தூதர் இவ்வுலகில் குறிப்பிட்ட இலக்கை எட்டி, செயல் முறையிலே காட்டி விட்டார்கள். முஹம்து (ஸல்) அவர்கள் தனது வாழ்நாளிலேயே தனது முயற்சிகளின் பலனை கண்ணால் கண்டவர்கள், முடி சூடா மன்னராகத் திகழ்ந்தவர்கள் என்பதை சரித்திரம் அறிந்த எவரும் மறுக்க மாட்டார்.

இந்த முஸ்லிம் சமுதாயம் என்று இறை கொடுத்த நேர்வழி விட்டு, மனித அபிப்பிராயங்களை மார்க்கதில் நுழைத்து, இஸ்லாத்தின் உண்மை நிலையைச் சிதைத்து மனிதர்களால் கற்பிக்கப்பட்ட மற்ற மதங்களைப் போல் இஸ்லாத்தையும் ஒரு மதமாக்கியதோ அன்றே இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு வீழ்ச்சி ஏற்பட்டது. இன்று முஸ்லிம்களில் பெரும்பாலோர் மனித அபிப்பிராயங்களையே இஸ்லாத்தின் பெயரால் நடைமுறைப்படுத்திக் கொண்டிருகின்றனர். மனித அபிப்பிராயங்கள் நீக்கப்பட்டு, இறை கொடுத்த நேர்வழி மட்டும் நடைமுறைப் படுத்தப்பட்டால், முஸ்லிம்கள் ஒரு தன்னிகரில்லா உயர் சமுதாயமாக உயர்ந்து, மற்ற சமுதாயங்களுக்கு வழிகாட்ட முடியும் என்றே நாங்கள் சொல்கிறோம்.

31- இவ்வுலகிலாவது நாஸ்திகம் நல்ல பலனைத் தருகிறதா?
இவ்வளவு தெளிவாக நாஸ்திகத்தின் தீமைகளை விளக்கிய பின்பும் அவற்றில் நம்பிக்கையுள்ள நாஸ்திக நண்பர்களுக்காக, மறுமையைப் பற்றிய சிந்தனையை விட்டு, இவ்வுலக சிந்தனையை மட்டும் கருத்தில் கொண்டு, அந்த இவ்வுலக சுபீட்ச வாழ்க்கைக்காவது நாஸ்திகம் நல்ல பலனைத் தருகிறதா? அல்லது ஆஸ்திகம் நல்ல பலனைத் தருகிறதா? என்று தெளிவாக அடுத்துப் பார்ப்போம்.

கல்லையும், மண்ணையும், மிருகங்களையும், பறவைகளையும் இன்னும் கண்ட கண்ட பொருட்களையெல்லாம் கடவுள்களாக மூடத்தனமாக நம்பிச் செயல்படும் மக்களைத் திருத்தும் நல்ல நோக்கோடு, இறைவன் இல்லை என்ற தவறான தத்துவத்தை நில நாட்டுவதன் மூலம் மக்களிடையே ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள், ஒழுக்கமற்ற நிலைகள் இவற்றை அகற்றி, சுபிட்சமான ஒரு வாழ்க்கை முறையை மனித சமுதாயத்திற்கு அளிக்கும் திட்டத்தில் நாஸ்திகர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்பதற்குரிய ஆதாரங்களை விபரமாகப் பார்த்தோம்.


ஆக இதுவரை இறைவன் இல்லை என்று இறைவனை மறுக்கும் நாஸ்திகர்களின் போக்கு மிகவும் தவறானது, ஆபத்தானது, விவேகமற்றது என்பதை உரிய ஆதாரங்களுடன் விரிவாகப் பார்த்தோம். நடுநிலையோடு நமது ஆய்வை அணுகுகிறவர்கள் இறைவன் இல்லை என்ற தவறான கொள்கையை மாற்றிக் கொள்வர்கள் - இறை நம்பிக்கiயாளர்களாக - ஆஸ்திகர்களாக மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது. இவ்வளவு தெளிவான விளக்கங்களுக்குப் பிறகும் நாஸ்திகக் கொள்கையில் நம்பிக்கையுடன் இருக்கும் நண்பர்களுக்கு இறுதியாக சில விளக்கங்களை எடுத்துச் சொல்ல விரும்புகிறோம்.

32- நிச்சயம் இரண்டில் ஒன்று:
பிறந்த மனிதன் இறக்கிறான், மரணத்தைத் தவிர்க்கும் ஒரு வாழ்க்கையை மனிதன் வாழவில்லை என்பதில் நாஸ்திக நண்பர்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நிச்சயமாக நாம் அனைவரும் மரணத்தை எதிர்பார்த்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாளைக்கு மரணமடையப் போகிறோம். எனவே இப்போது மரணத்தின் பின்னுள்ள நிலையைப்பற்றி நம் இரு சாராரும் மறுக்க முடியாத உண்மை நிலை இரண்டில் ஒன்றுதான். அதாவது நாஸ்திக நண்பர்கள் கூறுவது போல், இறைவனும் இல்லை, மரணத்தின் பின் விசாரணiயும் இல்லை, சொர்க்க நரகமும் இல்லை, மரணத்தோடு மனிதன் மண்ணோடு மண்ணாக ஆகிவிடுகிறான், மறு உலக வாழ்க்கை என்ற ஒன்று இல்லை என்பது உண்மையானால் நாஸ்திகர்களும் தப்பித்துக் கொள்வார்கள், நாமும் தப்பித்துக்கொள்வோம். மறுமையில் நஷ்டம் இரு சாராருக்கும் இல்லை என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் கூற்று பொய்யாகி, நமது கூற்று உண்மையானால் அவற்றை மறுத்துக் கொண்டிருந்த நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் கொண்டு துன்பப்படபோகிறார்கள். காரணம், அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மறுமைக்குரிய எவ்வித முன்னேற்பாடும் செய்யவில்லை. ஆனால், நாம் மறுமையை நம்பி அதற்குரிய முன்னேற்பாடுடன் செல்வதால் இறை அளிக்கும் தண்டனைகளிலிருந்து தப்பித்து சுவர்க்கம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆக, எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நாம் பாதுகாப்பின் பக்கமே (ளுயகந ளுனைந) இருக்கிறோம். நாஸ்திகர்களோ கடுமையான ஆபத்தின் பக்கம் (றுசழபெ ளுனைந) இருக்கிறார்கள். இப்போது நாஸ்திகர்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம், மறுமை என்ற ஒன்று இருப்பதாக நம்பி, இவ்வுலக வாழ்க்கையை நீங்கள் வீணாக்கிக் கொள்கிறீர்களே, அது உங்களுக்கு நஷ்டம் தானே? என்ற கேள்வியே அது. இதிலும் அவர்கள் அறியாமையிலேயே இருக்கிறார்கள் என்றே நாம் சொல்லுவோம்.

உலக ஆசாபாசங்களை விட்டு விலகியவர்களே வெற்றி பெற முடியும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. சிற்றின்ப வாழ்க்கையைத் துறந்தவர்களே சித்தி பெற முடியும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. இறை மறை இவ்வாறு கூற வில்லை, இவை அனைத்தும் மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட மதங்களின் கூற்றுக்களாகும். மாறாக, உலக வாழ்க்கையில் ஆசாபாசங்களுக்கிடையே அனைத்து இன்பங்களையும் முறையாக அனுபவித்துக் கொண்டே முழுமையான வெற்றி பெறும் ஒரு வாழ்க்கைத் திட்டத்தையே இஸ்லாம் மனித வர்க்கத்திற்கு கொடுத்துள்ளது. இறை கொடுத்த வழியில் நடப்பவர்கள் அணு அளவும் தங்கள் இம்மை வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும். இவ்வுலக வாழ்க்கையில் சுபிட்சமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் வழி முறைகளையே இறைவன் வாழ்க்கை நெறிகளாக மனிதனுக்கு அளித்துள்ளான். நாஸ்திகர்களை விட இறை கொடுத்த மறைவழி நடப்பவர்களே இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களை நிறைவாக அடைந்து, மன திருப்தியுடன் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்று உறுதிபட நம்மால் சொல்ல முடியும். இதனை பின்னால் நாம் விரிவாக விளக்குவோம்.

33- மதத்தால் விளைந்த விளைவு:
நாஸ்திகர்களின் இத்தவறான கூற்று மனித அபிப்பிராயங்களை கொண்டு மார்க்கத்தை மதமாக்கி, குருட்டு நம்பிக்கையில் இறைவன் பெயரைச் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அப்படிப்பட்ட மதவாதிகளின் வாழ்க்கை நிலைகளைப் பார்த்துச் சொல்வதாகும். இறை கொடுத்த மறைவழி கண்டு சொல்லுவதில்லை.
ஆதி மனிதன் ஆதாம் முதல் இன்று வரை இந்த மனித சமுதாயத்திற்கு இறைவன் கொடுத்தது மனிதனுக்கு சாந்தியை அளிக்கும் சாந்தி மார்க்கம்-இஸ்லாம் ஆகும். காலத்திற்கு காலம் இறை கொடுத்த வழி மறந்து, மனிதன் தனது மனோ இச்சையினால் அமைத்துக் கொண்ட வழி முறைகளே மதங்களாகும். மதங்களிலும் பல நல்ல போதனைகள் இருக்கின்றனவே என்ற மனமருட்சி அவசியமற்றதாகும். சட்ட விரோதமாக தயாரிக்கப்படும் கள்ள நோட்டுக்களிலும் செல்லா நோட்டுக்களிலும் நல்ல நோட்டுக்களிலுள்ள பல அம்சங்கள் இருக்கலாம். அதனால் அவை நல்ல நோட்டுகளாக ஆகிவிடுவதில்லை எனவே சத்திய மார்க்கம் மனிதக்கரம்பட்டு மதமாகி விட்டால் அது தனது பரிசுத்த நிலையை இழந்து விடுகிறது. இறை கொடுத்த தூய வாழ்க்கை நெறி பிறழ்ந்து வழி தவறிச் செல்லும் நிலை அங்கு உருவாகி விடுகிறது.

34- மனிதன் மாறுட்ட கருத்துடையவனே!:
மனிதன் மாறுபட்ட கருத்துகளை உடையவன் என்பதில் ஐயமில்லை. எனவே பற்பல கருத்துக்கில் பற்பல மதங்கள் தோன்றின. ஆயினும் மனிதன் தனது கற்பனையினால் தோன்றிய மதங்களுக்கும் இறைச் சாயம் பூசி இருப்பதால் நாஸ்திகர்கள் இந்த மதங்களை எல்லாம் தூய வாழ்க்கை நெறி கொடுத்த இறைவனுடன் சம்பந்தப்படுத்தி ஏமாறுகின்றனர். மனித சமுதாயத்தில் வேற்றுமைகளை உண்டுபண்ணும் மதங்களை கொடுத்த ஒரு இறைவன் இருக்க முடியுமா?, என்று வினா எழுப்புகின்றனர். ''கைசேதம், இறை கொடுத்த இறுதி மறையாக ஒரு புள்ளியும் பழுது படாத நிலையிலுள்ள குர்ஆனை ஒப்புக்கொள்ளும் முஸ்லிம்களாவது தங்கள் வாழ்க்கை முறைகளில் மனித அபிப்பிராயங்களைக் கலக்காமல் தூய இஸ்லாமிய நெறிமுறையில் வாழ்கின்றார்களா? என்றால் இல்லை என்ற பதிலைத்தான் பெற முடியும்.'' வெகு சொற்பமான முஸ்லிம்கள் அந்த அடிப்படையில் வாழ்ந்தாலும் இது நாஸ்திகர்களின் கண்ணில் படுவதில்லையே.

முஸ்லிம்கள் என்ற பெயரோடு உலகலாவிய அளவில் இஸ்லாமிய நெறி பிறழ்ந்து வாழும் பெரும்பான்மை சமுதாயத்தைத்தானே முஸ்லிம்களாக அவர்கள் பார்க்க முடியும். முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளும் இறை கொடுத்த இறுதி மறைக்கும், இஸ்லாமிய நெறி பிறழ்ந்து வாழும் பெரும்பான்மை சமுதாயம் கொடுக்கும் விளக்கத்தைத்தானே அவர்கள் சரி என்று ஏற்க முடியும். இது மனித இயல்புதானே, இதை மறுக்க முடியுமா? குர்ஆனும், ஹதீஸும் தெளிவாக மறுக்கின்ற எத்தனையோ கணக்கற்ற சடங்குகளை இந்த முஸ்லிம் சமுதாயத்தினர் செய்து கொண்டிருக்கினறனர். மரணமே இல்லாத, என்றும் நித்தியனான இறைவனை விட்டு விட்டு இவர்களைப்போல் இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் இவ்வுலகில் வாழ்ந்து மரணித்தபின் அவர்களுக்காக சமாதிகளைக் கட்டி, தர்காக்களை உண்டாக்கி அங்கே பூஜை புணஸ்காரம் செய்யும் மக்கள்தானே தங்களை உண்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாற்று மதங்களிலுள்ள ஜாதிப் பிரிவினைகள் போல் இஸ்லாத்திலும் மத்ஹபுகளின் பெயரால் பிரிவினைகளை உண்டாக்கிக் கொண்டு பெருமை பேசுபவர்கள் தானே தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இறைவனின் உண்மைத் தூதர்-இறுதித்தூதர் தன்னோடு இருந்தவர்களையெல்லாம் தனது தோழர்கள் என அழகாக அழைத்து நடைமுறைப்படுத்திக் காட்டித் தந்திருக்க அதற்கு மாற்றமாக பீர்-முரீது என்று மற்ற மதத்தினரைக் காப்பியடித்து, குரு சிஷ்ய நடைமுறையை நடைமுறைப்படுத்தும் தரீக்கா வாதிகள்தானே தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறர்கள். இன்று முஸ்லிம் சமுதாயத்தின் மிகப்பெரும்பான்மையினர் இப்படிப்பட்ட மனித அபிப்பிராயங்களால் உண்டாக்கப்பட்ட மதங்களைக் கடைபிடித்துக் கொண்டு தங்களை உண்மை முஸ்லிம்கள் என்று சொல்லி வருவதால், நாஸ்திகர்கள் இவர்களின் இந்த சொற் செயலை வைத்துத்தான் இஸ்லாத்தையம் கணிக்கின்றனர். மூட நம்பிக்கைகளையும் அர்த்தமற்ற சடங்கு சம்பிரதாயங்களையும் செய்யத் தூண்டும் மக்களை மடைமையில் மூழ்கச் செய்யும் மதங்களைப் போல் இஸ்லாமும் ஒரு மதமே என்று தவறாகக் கணக்குப் போடுகின்றனர். நாஸ்திகர்களின் மதிப்பீடுகள் எல்லாம் இந்த அடிப்படையில் அமைந்தவையே.

35- நாஸ்திகர்களின் குறையல்ல:
இதற்கு நாம் நாஸ்திகர்களைக்குறை சொல்ல மாட்டோம். அப்படி அவர்கள் தவறாக இஸ்லாத்தை எண்ணும் வகையில் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணாக நடக்கும் மிகப் பெரும்பான்மை முஸ்லிம்களையே குறை சொல்லுகிறோம். முஸ்லிம் அல்லாதவர் இஸ்லாத்தைத் தவறாக விளங்கி கொள்ள இவர்களே காரணகர்தாவாக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறோம். மிகப் பெரும்பான்மை முஸ்லிம்கள் இவ்வாறு நடப்பதால் இஸ்லாம் அவற்றையே போதிக்கிறது என்று அவர்கள் எண்ணுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஆயினும் நாஸ்திக நண்பர்களுக்கு நாம் சொல்லிக் கொள்ள விரும்புவது, தயவு செய்து இன்றைய முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளைப் பார்த்து நீங்கள் இஸ்லாத்தை எடை போடாதீர்கள். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனின் இறுதித்தூதர் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிக் கிடந்த மக்களிடம் போதனை செய்து அவர்களை அகில உலக மக்களின் வழிகாட்டிகளாக ஆக்கினார்களே அந்தச் சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்கள் என்று செல்லுகிறோம். இறைகொடுத்த இறுதிமறைக் கட்டளைகள் மனித அபிப்பிராயங்கள் கலக்காமல் அவை தூய்மையான நிலையில் கடைபிடிக்கப்பட்ட போது அவை உலக மக்களிடம் ஏற்படுத்திய அதிசயிக்கத்தக்க உன்னத மாறுதல்களை மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள் என்று சொல்லுகிறோம். உலகலாவிய மக்கள் இப்படி நடக்க ஆரம்பித்துவிட்டால் உலகின் பிரச்சினைகள் தீர்ந்து சுபிட்சமான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமைந்துவிடும் என்று நாஸ்திகர்கள் கற்பனையாகச் சொல்லுவதுபோல், நாமும் இனிமேல் நடக்கப்போவதை கற்பனை செய்து பார்க்கச் சொல்லவில்லை. நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்ட உண்மைச் சரித்திரத்தைப் பார்க்கச் சொல்லுகிறோம். ஆனால் வருந்தத்தக்க விஷயம் இதற்கு முன்னால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டட மறைவழி எப்படி மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டு அவர்கள் வழி தவறிச் சென்றார்களோ அதேபோல் இறுதித் தூதருக்குக் கொடுக்கப்பட்ட இறுதி மறை போதிக்கும் வழி மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டு இவர்களும் வழி தவறிச் சென்றிருக்கிறார்கள். எனவே இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்களின் நிலையை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள் என்று சொல்லுகிறோம். முஸ்லிம்கள் செய்யும் தவறுகள் இஸ்லாத்தின் தவறுகளல்ல என்பதை நாஸ்திக நண்பர்கள் உணர வேண்டுகிறோம். அந்த இறைவழியை எடுத்துச் சொல்லும் அல்குர்ஆன் மனிதக் கரங்களால் மாசுப்படுத்தப்படாமல் பாதுகாப்பான நிலையில் உள்ளது அதனை முறைப்படி விளங்க முற்படுங்கள் என்றே நாஸ்திக நண்பர்களுக்குச் சொல்லுகிறோம்.

36- ஆத்திரமோ, அனுதாபமோ வேண்டாம்!
அந்த குர்ஆனையும் நாங்கள் அணுகிப் பார்த்து விட்டோம், அதிலும் பல குறைகளைக் கண்டு பிடித்து விட்டோம். எங்களது தோழர்கள் அவற்றைத் தெளிவுபடுத்தி பல நூல்கள் வெளியிட்டிருக்கின்றனர் என்று அவர்கள் சொல்லலாம் நாம் அவர்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புவது இதுதான் மனித இயல்பின்படி குற்றங்காணும் குறுகிய கண்ணோட்டத்தோடு எதனைப் பார்த்தாலும் சரியானவையும் தவறாகவே தெரியும். அதேபோல் நியாயப்படுத்தும் குறுகிய கண்ணோட்டத்தோடு எதனைப் பார்த்தாலும் தவறானவையும் சரியாகவே தெரியும். எனவே ஆத்திரமோ, அனுதாமோ இல்லாமல் நடுநிலையோடு அல்குர்ஆனை ஆராய முன் வாருங்கள். ஆல்குர்ஆனைக் கொண்டு இறைவனின் இறுதித்தூதர் 1400 வருடங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்திக் காட்டிய வாழ்க்கை நெறியை ஆராய்ந்து பாருங்கள். அதில் நீங்கள் கற்பனை செய்துள்ளதை விட உயரிய மேலான சுபீட்சமான ஒரு வாழ்க்கைத்திட்டம் மனிதர்களுக்காக இருப்பதை அறிந்து கொள்வீர்கள். மற்ற மதங்களைப்போல் இஸ்லாமும் ஒரு மதமே என்ற உங்களின் தவறான எண்ணம் மாறி இஸ்லாம் ஒரு மதமல்ல, அது இறைவனால் மனித வர்கத்திற்குக் கொடுக்கபட்டுள்ள வாழ்க்கை நெறி, அதைவிட சிறந்த வாழ்க்கை நெறியை உலகில் தோன்றிய எந்த மனிதனும் தர முடியாது. எந்த இஸமும் தர முடியாது என்ற மறுக்க முடியாத மாபெரும் உண்மையை நீங்களும் விளங்கிக் கொள்வீர்கள்.

அந்த இறை கொடுத்த மறை வழி மனிதன் இவ்வுலகிலும் அவன் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் முறையாகவும், நிறைவாகவும் அனுபவிக்க வழி வகுத்துத் தந்திருக்கிறது. அது துறவு வாழ்க்கையை கற்பிக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்வீர்கள். இறை வழங்கிய மறைவழி விட்டு மனிதன் தனது சுயவழி தேடிக்கொண்டதின் விளைவே இவ்வுலக வாழ்க்கையை முறையாக அனுபவிக்க முடியாமல் போகிறது என்பதையும் துறவு வாழ்க்கை கொண்டே மனிதன் முக்தி பெற முடியும் என்பது தவறான ஐதீகம் என்பதை எல்லாம் விளங்கிக் கொள்வீர்கள்.

அது இறை நம்பிக்கை உடையவர்களே நாஸ்திகர்களைவிட இவ்வுலக வாழ்க்கையின் மனமகிழ்வை முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதை ஆதாரங்களுடன் பார்ப்போம்.

நாஸ்திகர்களுக்கு இறுதி அறிவுரையாக ஒன்றைப் பார்த்தோம். அதாவது நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆஸ்திகர்கள் இறைவனும் மறுமையும் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதில் நாஸ்திகர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாராருக்கும் இல்லை. நாஸ்திகர்களும் தப்பி விடுவார்கள். ஆஸ்திகர்களும் தப்பி விடுவார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சமயம் நாஸ்திகர்களின் கூற்று பொய்யாகி ஆஸ்திகர்களின் கூற்று உண்மையானால் ஆஸ்திகர்கள் தப்பிக்கொண்டார்கள். நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் கொண்டார்கள் என்பதையும் நாஸ்திகர்கள் மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

36- மதங்களாலேயே நஷ்டம்:
மறுமையை நம்பி இவ்வுலக வாழ்க்கையில் ஆஸ்திகர்கள் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனரே என்று நாஸ்திகர்கள் கேட்டால் மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட மதங்களை நம்பி மூடநம்பிக்கைகளில் மூழ்கி துறவற வாழ்க்கையையும், அனாச்சாரங்களைக் கொண்ட தடைகளையும் தாங்களாக ஏற்படுத்திக் கொண்ட மதவாதிகளே நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் இவ்வுலக வாழ்க்கையயும் நஷ்டப்படுத்திக் கொள்கின்றனர் மறுவுலக வாழ்க்கையையும் நஷ்டப்படுத்திக்கொள்கின்றனர். மாறாக இறை கொடுத்த நேரான வாழ்க்கை நெறியை முறையாகக் கடைபிடித்து ஒழுகிறவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களை முறையாக முழுiயாக அனுபவித்து வருகின்றனரே அல்லாமல் அவற்றில் எதனையும் அவர்கள் இழக்க வில்லை, நஷ்டப்படுத்திக் கொள்ள வில்லை என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தோம்.

மதவாதிகள் இவ்வுலக வாழ்க்கையையும், மறுவுலக வாழ்க்கையையும் நஷ்டப்படுத்திக் கொள்கின்றனர். நாஸ்திகர்கள் இவ்வுலக வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் முழுமையான சுவையோடு அவற்றை சுவைப்பவர்களாக இல்லை என்பதோடு மறுமை வாழ்க்கையை மற்றிலுமாக நஷ்டப்படுத்திக் பெரும் துன்பத்தில் மாட்டப் போகிறார்கள் என்பதே உண்மையாகும். நாஸ்திகத்தை விட்டு விடுபட்டும், மதங்களை விட்டு நீங்கியும், இறை கொடுத்த மறைவழி ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு அது காட்டும் நேர்வழி நடப்பவர்கள் மட்டுமே இவ்வுலக வாழ்க்கையின் சுவையை முழுமையாகச்சுவைத்து வாழ்வதோடு, மறுமையில் எல்லையில்லா பேரின்பத்தை அடைந்து அனுபவிக்கும் பாக்கியவன்களாக இருக்கிறார்கள். காரணம் இறை கொடுத்த மறைவழி என்பதே இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனிதன் பெறவேண்டிய அனைத்துப் பாக்கியங்களையும் தவறாது முழுமையாகப் பெற்று முழுமையான நிறைவான வாழ்வு வாழ்வதற்குரிய தன்னிகரில்லா ஒரே வழியாகும்-வாழ்க்கை நெறியாகும்.

37- இறை கொடுத்த மறை வழி அல்லாத வேறு வழி இல்லை:
மனிதனைப் படைத்த இறைவனையன்றி வேறு யார் அப்படிப்பட்ட உயரிய வழியைக் காட்டித்தந்துவிட முடியும்? மனித இனத்திலுள்ள ஒருவன் படைத்த ஒரு கருவியை முறையாக இயக்க கருவியைப் படைத்த மனிதனின் வழிகாட்டல் தேவைப்படுகிறது. இந்நிலையில் குறைமதி படைத்த மனிதன், இறைவன் படைத்த மனிதக்கருவியை இயக்க, படைத்த இறை கொடுத்த மறைவழி விட்டு அதே குறை மதியைக் கொண்டு நாஸ்திக வழியையோ அல்லது மதவழியையோ அமைத்துக் கொண்டால் இந்த மனிதக் கருவி உருப்படுமா? என்பதைச் சிந்திக்க வேண்டுகிறோம். மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள சீரழிவிற்கு இந்த மனித அபிப்பிராயங்கள்தான் காரணமாகும். மனிதன் தனது மனித அபிப்பிராயங்களை நீக்கி இறை ஆணைக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை வாழ்வது கொண்டே இங்கும், மறுமையிலும் வெற்றி பெறமுடியும்.
இப்போது நாஸ்திகர்கள் அவர்கள் வெகுவாக முக்கியத்தும் கொடுக்கும் இவ்வுலக வாழ்க்கையையும் முழுச்சுவையோடு, மனமகிழ்வோடு அனுபவிக்கும் நிலையில் இல்லை. அவர்களின் மனோநிலை அதற்கு இடம் தருவதில்லை என்பதை விரிவாக ஆராய்வோம்.

38- நம்பிக்கை:-
மனித வாழ்வில் நம்பிக்கை பெரும்பங்கு வகிக்கின்றது என்பதனை நாஸ்திக நண்பர்கள் உணரவேண்டும். நம்பிக்கையில்லாது மனிதன் இயங்க முடியாது. மனிதனது அசைவு ஒவ்வொன்றும் அவன் பெற்றுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைகின்றது. நம்பிக்கை சம்பந்தப்படாத எந்த ஒரு முயற்சியும், மனிதனிலிருந்து வெளிப்படுவதில்லை அந்த அளவு மனித இரத்தத்தோடு ஊறியதாக நம்பிக்கை திகழ்கிறது. மனித வெற்றியும், தோல்வியும் அவனது நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைகிறது. நம்பிக்கை மனித வாழ்வின் அடிப்படையாக இருப்பதனால்தான் அவன் எளிதாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி விடுகிறான்.

பெரும் செல்வந்தன் ஒருவன் ஒரு ஏழையைப் பார்த்து உனது மகன் படிப்பு விஷயத்தில் நான் பண உதவி செய்கிறேன் என்று வாக்களித்து விட்டாலே போதும், இன்னும் அவன் வாக்களித்த படி உதவி அளிக்கவில்லை, ஆயினும் அந்த ஏழைக்கு அந்த உறுதிமொழியிலுள்ள நம்பிக்கை எவ்வளவோ மன ஆறுதலையும், நிம்மதியையும் தருகிறது. நோயால் துன்பப்படும் ஒரு நோயாளி, டாக்டரிடம் சென்று காட்டி சிகிச்சை பெற்றுக் கொண்ட மாத்திரத்தில் அவனில் ஏற்படும் நம்பிக்கை பாதி நோயை குணப்படுத்திவிடுகிறது. ஒரு கல்லை, மனித கரங்களால் செதுக்கப்பட்ட ஒரு சிலையை தெய்வமாக நம்பி அதனிடம் வேண்டுதல் செய்வது கொண்டு எவ்வளவோ மன ஆறுதலையும், அமைதியையும் அடைகிறான் மனிதன். மூடநம்பிக்கைகளில் மூழ்குவதற்கும், அவற்றை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு தொங்குவதற்கும் அடிப்படைக் காரணமே அவனது மன அமைதியேயாகும். ஆக மனிதன் கொள்ளும் நம்பிக்கை அது நன்னம்பிக்கையாக இருந்தாலும் சரி, அல்லது மூட நம்பிக்கையாக இருந்தாலும் சரி அவனது பிரச்சினைகள், அல்லது நோய்கள் தீர்ந்து போகும் என்று உள்ள ஆறுதலைப் பெற்றுத்தந்து மனநிம்தியை அளிக்கிறது. தனது துன்பங்களிலும், நோய்களிலும் இன்னும் இது போன்ற பிரச்சினைகளிலும், தனக்கு உதவி செய்யக்கூடிய ஒரு தெய்வீக சக்தி இருக்கிறதென்ற நம்பிக்கையானது ஆஸ்திகர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களில் மன ஆறுதலையும், நிம்மிதியையும் தருவதை யாரும் மறுக்க முடியாது.

ஆஸ்திகர்களாக இருந்தாலும், நாஸ்திகர்களாக இருந்தாலும் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றுதான். வறுமை, நோய் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான நெருக்கடிககள் இவை அனைத்தும் ஒன்றேதான். ஆஸ்திகர்களுக்கு இவை அனைத்திலும் தமக்கு உதவி செய்யக்கூடிய தெய்வீக சக்திகள் இருக்கின்றன என்ற நம்பிக்கiயானது அவர்களது பிரச்சனைகளில் பாதி தீர்ந்து விட்டது போன்ற மன ஆறுதலையும், நிம்மதியையும் தருகிறது. நாஸ்திகர்களைப் பொறுத்தமட்டில் அப்படிப்பட்ட சக்திகளில் நம்பிக்கை இல்லாததால், அவர்களது வாழ்க்கைப் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்ளவேண்டும் என்ற மன உறுத்தல், அதேசமயம் அவர்கள் அடுத்தடுத்து ஊக்கத்துடன் உழைத்தாலும், மனித சக்திகளை மீறிய பிரச்சினைகளில் அவர்களால் ஒன்றும் சாதிக்க முடியாது தோல்வி ஏற்படும். இதனால் மன நிம்மதியும், அமைதியும் இல்லாதது அவஸ்தைப்படும் நிலை. இதுவே உண்மையாகும், ஆக நாஸ்திகர்களைவிட ஆஸ்திகர்களே இவ்வுலக வாழ்க்கையை நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் அனுபவிக்க முடிகிறதென்ற உண்மையை நாஸ்திகர்களும் மறுக்க முடியாது.


39- நல்ல நம்பிக்கையும் மூட நம்பிக்கையும் சமமாகா!
நம்பிக்கை நன்னம்பிக்கையாக இருந்தாலும், மூட நம்பிக்கையாக இருந்தாலும் மனித வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளில் அந்த நம்பிக்கை நல்ல விளைவை ஏற்பத்தினாலும் நன்னம்பிக்கையும், மூட நம்பிக்கையும் சமமாக மாட்டா. நன்னம்பிக்கை மனிதனைப் படைத்த ஒரே ஒரு இறைவனை மட்டும் தெய்வமாக நம்புவதாகும். மூட நம்பிக்கைகள் கல்லையும், மண்ணையும், தன் கைகளால் செதுக்கிய சிலைகளையும், இறந்துபோன நல்லடியார்களையும், மிருகங்களையும், பட்சிகளையும் தெய்வசக்திகள் பெற்றவையாக-பெற்றவர்களாக நம்புவதாகும். இந்த மூடநம்பிக்கைகள் படைத்த இறைவனுக்கு இணைவைக்கும்பெரும் குற்றங்களாக இருப்பதால் அவை கொண்டு இவ்வுலகில் மனிதனது பல பிரச்சனைகளில் அவனுக்கு மன நிம்மதியையும், ஆறுதலையும் தந்தாலும் மறுமையில் அதனால் அவன் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிறான். இதனை நாம் இவ்வாறு விளக்கலாம். திருடுவது குற்றம் என்பதை ஆஸ்திகர்களும் மறுக்கமாட்டார்கள், நாஸ்திகர்களும் மறுக்கமாட்டார்கள். ஆயினும் ஒரு மனிதன் ஒரு பத்து ரூபாயைத் திருடிப் பெற்றுக் கொண்டு ஒரு ஹோட்டலுக்குச் சொன்று சாப்பிட்டால் அவனது பசி நீங்கத்தான் செய்யும். கஷ்டப்பட்டு உழைத்து பெறும் ரூபாயைக் கொண்டு பெறும் அனைத்து பலன்களையும் திருடிப் பெற்ற ரூபாயைக் கொண்டு அடைந்து கொள்ள முடியும். அதனால் திருடுவதை யாரும் நியாப்படுத்த மாட்டார்கள். இங்கே இவ்வுலகில் உழைத்துப் பத்து ரூபாய் பெற்றுக் கொண்டாலும் அந்த பத்து ரூபாய்களில் வித்தியாசமில்லை. ஆனால் திருடிய குற்றத்திற்காக பின்னால் பிடிபட்டாலோ, அல்லது மறுமையிலோ துன்பத்தை அனுபவிக்கப் போகிறான்.

எனவே நாஸ்திகர்கள் மக்களுக்கு திருட்டு மூலம் பணம் சேர்க்க முயல வேண்டாம், கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்க்க முயலுங்கள் என்று அறிவுரை கூற வேண்டுமேயல்லாது. ரூபாய் இருப்பதால் தானே மனிதன் திருடுகிறான், ரூபாய் நோட்டுக்களை எரித்து இல்லாமல் ஆக்கிவிட்டால் மனிதன் திருட்டு என்ற தீங்கில் ஈடுபட மாட்டான் என அறிவுரை பகர்வது அறிவுடைமையாகாது என்பதை நாஸ்திகர்கள் நிச்சயமாக மறுக்க முடியாது.

40- மூட நம்பிக்கை மன அமைதி தந்தாலும் அகற்றப்பட வேண்டும்:
இதேபோல் மனிதன் நன்னம்பிக்கை கொண்டாலும், மூட நம்பிக்கை கொண்டாலும் அந்த நம்பிக்கையானது பல விஷயங்களில் அவனுக்கு மன ஆறுதலையும், நிம்மதியையும் தரத்தான் செய்கிறது. கடும் காய்ச்சலாக இருக்கும் நோயாளியை ராகு காலம் கழித்துதான் சிகிச்சைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற மூட நம்பிக்கை. இன்னும் பல நோய்களில் மக்களிலிருக்கும் மூட நம்பிக்கை காரணமாக சிகிச்கை செய்யாமல் உயிரிழைப்பை ஏற்படுத்துவது, மூட நம்பிக்கைகள் காரணமாக இவ்வுலகில் பொருள் நஷ்டத்தையும், உயிர் நஷ்டத்தையும் ஏற்படுத்துவது போன்ற மூட நம்பிக்கைளைச் சுட்டிக்காட்டி நாஸ்திகர்கள் நமது கூற்றை மறுக்கலாம், ஆயினும் அந்த நிலைகளிலும் தெய்வ சித்தப்படியே காரியங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை அவர்களுக்கு மன ஆறுதலையும், நிம்மதியையும் அளிக்கின்றது. எனவே தனது கஷ்ட நஷ்டங்களில் தனக்கு உதவி செய்யும் தெய்வீக சக்திகள் உண்டு என்ற நம்பிக்கை மனிதனுக்கு மன ஆறுதலையும், நிம்மதியையும் தருகிறது என்பது நாஸ்திகர்களும் மறுக்க முடியாத உண்மையேயாகும்.

ஆயினும் மக்கள் கொண்டுள்ள மூட நம்பிக்கைகளை மக்களது உள்ளங்களில் இருந்து அகற்றி நன்னம்பிக்கையாளர்களாக அவர்கள் வாழ அவர்களுக்கு அறிவுரை பகர வேண்டும். இதுவே அறிவுடைமையாகும் திருடிச் சாப்பிட்டாலும் பசி அடங்குகிறது என்பதால் திருடுவதை நியாயப்படுத்த முடியாது. பின்னால் அதன் விளைவை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது போல், படைத்த இறைவன் மீது வைக்கவேண்டிய நம்பிக்கையை, படைக்கப்பட்ட படைப்புகள் மீது- கல்லிலும், மண்ணிலும், இறந்து மண்ணில் அடக்கப்பட்டவர்கள் மீதும் மற்றும் பிராணி பட்சிகளிலும் வைப்பது குற்றம். அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் இவ்வுலக வாழ்க்கையில் மனநிம்தியும் ஆறதலையும் அளித்தாலும் படைத்த இறைவனது கோபத்திற்கு ஆளாகி மறுமையில் மாபெரும் நஷ்டவாளி ஆகி நரகில் புக நேரிடும் எனபதை உணர்த்தவேண்டும். மூட நம்பிக்கைகளை முற்றாக நீக்கிடப்பாடுபடும் அதே வேளை படைத்த அந்த ஒரே இறைவன் மீது நன்னம்பிக்கை வைக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

41- ஆஸ்திகர்களே நிம்மதியடைகிறார்கள்:
இதுவரை நாம் விளக்கியதிலிருந்து மனிதனில் ஏற்படும் நம்பிக்கை காரணமாக இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாஸ்திகர்களை விட, இறைவனையும், மறுமையையும் நம்;பும் ஆஸ்திகர்களே இவ்வுலகில் மன ஆறுதலுடனும், நிம்மதியுடனும் வாழ முடிகின்றது. ஆயினும் அந்த நம்பிக்கை மூட நம்பிக்கையாக இருந்தால் இவ்வுலகில் மன நிம்மதி கிடைத்தாலும் மறுமையில் பெரும் நஷ்டமே ஏற்படும். அந்த நம்பிக்கை படைத்த இறைவன் மீது மட்டும் வைக்கும் நன்னம்பிக்கையாக இருந்தால் இவ்வுலகில் நிம்மதியான சந்தோசமான வாழ்க்கையை அளிப்பதோடு மறுமையிலும் ஈடில்லா வெற்றியையும், இணையில்லா உன்னத வாழ்க்கையையும் அளிக்கிறது. ஆக இறைவனைப் பற்றிய, மறுமையைப் பற்றிய நம்பிக்கை என்ற அடிப்படையில் இவ்வுலகில் நாஸ்திகர்களை விட ஆஸ்திகர்களே அதிஷ்டசாலிகள் என்பதை உணர்ந்து கொண்டீர்கள்.

42- இஸ்லாமிய இறை நம்பிக்கை:
அடுத்து இஸ்லாமிய இறை நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் காரியங்களைக் கொண்டு மனிதன் இவ்வுலகில் நஷ்டமடைகின்றானா? அவன் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை இழக்கின்றானா? என்பதை ஆராய்வோம்.
இறை நம்பிக்கையால் நாஸ்திகர்களை விட ஆஸ்திகர்களே இவ்வுலகில் மன நிம்மதியுடனும், சந்தோசத்துடனும் வாழ முடிகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கநெறிப்படி ஒரே இறைவனில் மட்டும் நம்பிக்கை வைப்பவர்கள் இவ்வுலகிலும் பூரண மன நிம்மதியைப் பெறுகின்றனர். எனவே இறை நம்பிக்கையால் கண் முன் காணும் இவ்வுலக வாழ்க்கையை ஆஸ்திகர்கள் நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை விரிவாகப் பார்த்தோம்.

இனி இஸ்லாமிய இறை நம்பிக்கையின்படி செயல்படுத்தப்படும் செயல்களினால் மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் தனது பங்கை நஷ்டப்படுத்திக் கொள்கிறானா? என்பதை ஆராய்வோம்.

43- தொழுகை:
ஒரே இறைவனை மட்டும் ஏற்று முஸ்லிமாகி விட்ட ஒருவரின் முன்னுள்ள அடுத்த பிரதான கடமை தொழுகையாகும். ஐங்கால தொழுகையில்லாத ஒருவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் உரிமையை இழக்கின்றான். முஸ்லிம் என்றால் அதற்குரிய பிரதான அடையாளமே தொழுகைதான். ஆயினும் எப்படியோ இஸ்லாமிய சமுதாயத்திற்குள்ளும் புகுந்து கொண்டுள்ள புரோகிதர்கள், அந்தத்தொழுகையில் இவர்களாக பல வீணான விதிகளை அமைத்துக் கொண்டு செயல்படுத்தி வருவதால் எளிதாக உள்ள தொழுகையை மிகக் கஷ்டமான ஒரு செயலாக உருமாற்றப்பட்டுள்ளது. அது ஒரு வெறும் சடங்காக ஆக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தின் பெரும்பான்மையினர் அந்த ஐங்கால தொழுகையை விட்டு விட்டு தங்களை முஸ்லிம்கள் என மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர். தொழுகை இல்லாதவர்களை அல்லாஹ் முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதற்குப் பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் போதிய சான்றுகளாக இருக்கின்றன.

நபி வழியில் அமைந்துள்ள தொழுகை நிறைவேற்றுவதற்கு மிகவும் எளிதாக இருப்பதோடு அது மனிதனின் உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்களை அகற்றி மானக்கேடான பாவகரமான செயல்களை விட்டும் அவனைப் பாதுகாக்கிறது. இவ்வுலகில் மனிதன் மனிதனாக வாழ ஐங்கால தொழுகை அவனைப் பக்குவப்படுத்துகிறது. இன்று முஸ்லிம் சமுதாயத்திலுள்ள பெரும்பான்மையினர் மூட நம்பிக்கைகளிலும் பாவகரமான செயல்களிலும் மனித சமுதாயத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் காரியங்களிலும் மூழ்கியுள்ளதற்கு அடிப்படைக்காரணம் அவர்கள் ஐங்கால தொழுகையை நிறைவேற்றாமல் அதில் பொடுபோக்காக இருந்து வருவதுதான். மற்ற மதவாதிகளைப் போல் முஸ்லிம்களிலுள்ள பெரும்பான்மையினரும் மதவெறி கொண்டு மனித அமைதிக்குப் பங்கம் விளைவிக்கத் துணிவதற்குக் காரணம் ஐங்கால தொழுகையைக் கடைபிடிப்பது கொண்டு அவர்கள் அடைந்து கொள்ள வேண்டிய மனித அந்தஸ்தை அடைந்து கொள்ளத் தவறியதுதான். மனிதன் மனிதனாக வாழும் பக்குவத்தை ஐங்காலத் தொழுகை தரவேண்டுமென்றால் அது இறைவனால் வழிகாட்டப்பட்டு நபி (ஸல்) அவர்களால் தொழுதுகாட்டப்பட்ட முறையில் கண்டிப்பாக அமைந்திருக்க வேண்டும். மனித அபிப்பிராயங்கள் நுழைக்கப்பட்டு மனிதர்களாக உண்டாக்கிக் கொண்ட தொழுகை முறைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளபடவும் மாட்டா மனிதப் பக்குவத்தையும் தரமாட்டா.

இந்த மறுக்க முடியாத உண்மைகளை மனித நேயத்தை வளர்க்கும் பண்பாடுகளை ஒருகால் நாஸ்திகர்கள் ஏற்க மறுக்கலாம். எனவே அவர்களும் மறுக்க முடியாத ஐங்கால தொழுகைகளின் உலக ஆதாயங்களை மட்டும் அறியத் தருகிறோம் சிந்தித்துப் பார்க்கட்டும்.

ஐங்கால தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு முன் நீரினால் ஒளூ செய்வது கொண்டு ஒரு தொழுகையாளி தனது உறுப்புகளில் அசுத்தம் சேர வாய்ப்புகள் அதிகமுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்து கொள்கிறார். இது அவரது ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிவகுப்பதை நிச்சயமாக நாஸ்திகர்கள் மறுக்க முடியாது, அதல்லலாமல் தொழுகையில் கடைபிடிக்கப்படும் செயல் முறைகள் மனித உடலுக்கு ஆரேக்கியத்தைத் தரும் தேகப்பயிற்சி முறையில் அமைந்திருப்பதையும் நாஸ்திகர்களால் மறுக்க முடியாது. மதவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள உடல் அசைவின்றி அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து நிஷ்டையில் மூழ்குவதை இஸ்லாம் வழிபாடாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஐங்கால தொழுகைகள் மனித உள்ளத்திற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தையும் வலுவையும் தருகின்றன என்பதை நடுநிலையாளர்கள் மறுக்கமுடியாது.


44- தமிழகத்தில் நாஸ்திகம் பரவக் காரணம்:
தமிழகத்தில் நாஸ்திக வாதம் பரவுவதற்கு அடிப்படைக் காரணமே மக்களிடையே காணப்படும் ஜாதி வேற்றுமைகளும், தீண்டாமையுமேயாகும். கடவுளின் பெயரால் மக்களில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி ஹரிஜனங்களை உயர் ஜாதிக்காரர்கள் (மனிதனை மனிதனே இழிவுபடுத்தும் சாதிவேற்றுமை) கொடுமைப்படுத்தும் மனித நேயத்திற்கு முரண்பட்ட கொடுஞ்செயலை சகிக்க முடியாமைதான் தமிழகத்தில் நாஸ்திகம் வளரக் காரணமாயிற்று. ஹரிஜன மக்கள் கோவில் பூசாரிகளாக ஆவது ஆகாத செயல் என்பது ஒரு புறமிருக்க, அவர்கள் கோவிலுக்குள்ளே நுழைவதும் அனுமதிக்கப்படாத செயலாக இருந்து வருகிறது. ஆனால் அந்த ஹரிஜனங்களில் ஒருவர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொண்டால் ஹரிஜன் என்ற (கீழ் சாதிக்காரன்) நிலைமாறி பள்ளியினுள் நுழைந்து மற்ற முஸ்லிம்களோடு தோளோடு தோள், காலோடு கால் இணைந்து நின்று தொழும் சம அந்தஸ்தைப் பெற்றுக்கொள்கிறார். அவர் முன் வரிசையில் நின்று தொழும் நிலையில் சுஜூது செய்யும்போது அவரது கால்கள் இருந்த இடத்தில் பின் வரிசையில் நின்று தொழும் ஒரு செல்வாக்குள்ள பெரும் பணக்கார முஸ்லிமின் நெற்றிபடும் நிலையைக் காணமுடியும்.

அதாவது தொழுகை மனித உள்ளங்களை ஒன்று படுத்தும் ஓர் உன்னத சாதனமாக அமைந்துள்ளது. அந்த ஐங்கால தொழுகைகளைத் தொழாமல் இருப்பதால் தான் இன்று பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயத்தவர் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் பிளவுபட்டு சீரழிந்து வருகின்றனர். மற்றவர்களால் இவர்கள் மீது குதிரை சவாரி செய்ய முடிகிறது பட்டும் புத்தி வராத முஸ்லிம்களபை; பற்றி என்ன சொல்லமுடியும்?.

45- வேறு எங்கும் பார்க்க முடியுமா?
இன்னும் ஒரு அதிசயத்தையும் நாஸ்திகர்கள் சிந்தித்து உணர வேண்டும். இஸ்லாத்தைத் தழுவிய ஒரு ஹரிஜன வகுப்பைச் சார்ந்தவர் மற்றவர்களுக்கு இமாமாக நின்று தொழ வைக்கும் முறைகளை முறையாகக் கற்று கொள்வாரேயானால் அவர் பரம்பரை முஸ்லிம்களுக்கு முன் நின்று இமாமாக தொழுகை நடத்தும் வாய்ப்பையும் அடைந்து கொள்கிறார். அவர் வேதத்தைக் கற்றுக் கொள்வதற்கும், கற்றுக்கொண்டதை செயல்படுத்துவதற்கும், தகுதி இருந்தால் முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்கும்வதற்கும் இஸ்லாத்தில் தடையேதும் இல்லை. இந்த வகையில் மனிதர்களிடையே மதவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஜாதி வேற்றுமைகளையும் ஏற்றத் தாழ்வையும் அகற்றி மனித சமுதாயமே சமத்துவ நிலையில் செயல்படும் அரிய வாய்ப்பை இஸ்லாமிய வாழ்க்கை நெறியில் பிரதான கடமையாக அமைந்துள்ள ஐங்கால தொழுகை பெற்றுத் தருகிறது என்பதை நாஸ்திகர்கள் மறுக்க முடியுமா?

ஆள்பவன்-ஆளப்படுபவன், ஏழை-பணக்காரன், கருப்பன்-வெள்ளையன், படித்தவன்-படிக்காதவன், உயர் ஜாதியான்-தாழ்ந்த ஜாதியான் போன்ற ஏற்றத் தாழ்வுகளையும், இன, மொழி, பிரதேசம், நாடு போன்ற பாகுபாடுகளையும் ஒழித்து மனிதன் என்றாலே ஓரினம், ஓரிறைவனை மட்டுமே வணங்கக் கடமைப்பட்டவன் என்ற சிந்தனையை வளர்த்து, சமத்துவ சமுதாய அமைய, ஒற்றுமை ஓங்க, சாந்தி நிலவ, தரணி சிறக்க இத்தொழுகைமுறை வழி வகுக்கிறது என்பதையும் நாஸ்திகர்கள் சிந்திக்கக் கடமை பட்டவர்களாக இருக்கிறார்கள்.

47- பார்க்குமிடமெல்லாம் பட்டாளங்கள்:
முஸ்லிம்கள் அனைவரும் ஐங்காலத் தொழுகைகளைத் தவறாது தங்கள் மஹல்லா (ஊர்) மஸ்ஜிதுகளுக்கு வந்து ஜமாஅத்தாக தொழுது வரும்போது, அந்தப் பகுதியில் ஒரு தளபதிக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒரு சிறந்த படையே இருக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்? இப்படி நாடு முழுவதும் ஆங்காங்கே படைகள் இருந்தால் எதிரிகளால் அவர்களை முறியடிக்க முடியுமா? எதிரிகள் தாக்கம் அபாயம் இருக்கிறது எனவே படைவீரர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையோ படைவீரர்களில் யாரும் விடுப்பில் செல்லக் கூடாது விடுப்பில் சென்றுள்ளவர்கள் அனைவரும் உடன் படைக்கு வந்து சேர வேண்டும் என்ற அறிவிவிப்போ இன்றி எப்போதும் தயாராக இருக்கும் இப்படை போன்று வேறொரு படையை யாரால் காட்ட முடியும்? தினசரி ஐங்கால தொழுகைகளிலும் ஆஜராவது எவ்வித முன் அறிவிப்புமின்றி தயாராக இருக்கும் வாய்ப்பை அளிக்கிறது என்பதை மறுக்க முடியுமா? ஆண்டுக்கொரு முறை ஊர்வலம் நடத்தி மாற்றாரின் உள்ளங்களில் வீண் சந்தேகங்களையும் குரோத உணர்வையும் வளர்க்காமல் அன்றாட அனுஷ்டானத்தின் மூலம் விரோதிகளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாமல் அதே சமயம் எதிரிகளின் தாக்குதல்களை எந்தச் சமயத்திலும் முறியடிக்கும் தயார் நிலையிலும் இருக்கும் வாய்ப்பை இத்தொழுகை முறை அளிக்கிறது. அதல்லாமல் அன்றாட நாட்டு நடப்பையும் மஹல்லா (ஊர்) நிலைகளையும் அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறியத் தரும் நல்ல சந்தர்ப்பத்தையும் அளிக்கிறது.

இப்படி எண்ணற்ற உலகப்பலன்களையே தொழுகை மூலம் முஸ்லிம்கள் அடைந்து கொள்கிறார்கள். அதல்லாமல் தங்கள் எஜமானன் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனுக்கு அடிபணிந்து நடந்ததற்காக மறுமையில் அவர்கள் அடையப்போகும் பாக்கியங்களை ஏட்டில் எழுதி முடிக்க முடியாது.

48- அவர்கள் வீணர்களே!
இப்படி எண்ணற்ற பலன்களைத் தரும் தொழுகையை நிறைவேற்றுவதில், முஸ்லிம்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று யாரும் சொன்னால் அவர்களை வக்கிர புத்திக்காரர்கள் என்றே சொல்ல முடியும். மனித உடல் ஆரோக்கியத்திற்காக, குறைந்தது ஒரு நாளைக்கு 5 மணி நேரம் தூங்கியாக வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறவர்கள், உள்ள ஆரோக்கியத்திற்காக சில மணிநேரங்கள் விளையாட்டுக்களிரும் பொழுது போக்குகளிலும் செலவழிக்க வேண்டும் என்று வற்புத்துகிறவர்கள் உடல் ஆரோக்கியத்தையும், உள்ள ஆரோக்கியத்தையும் ஒருங்கே தரும் தொழுகையில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து வேளையும் சேர்த்து 1 மணி நேரம் செலவழிப்பதை வீண் முயற்சி என்பார்களேயானால் அவர்கள் வீணர்களே என்றி வேறுயாராக இருக்க முடியும்?.

நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவத்திற்கு நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதியை செலவிடுவதை நியாயப்படுத்துகிறவர்கள், எவ்வித செலவுமின்றி அதைப் போன்றதொரு பயிற்சியை அளிக்கும் தொழுகையை கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் அறிவீனார்களாக மட்டுமே இருக்கமுடியும்.

ஆக முஸ்லிம்கள் தொழுகையைக் கொண்டும் நாஸ்திகர்கள் பெரிதாக நினைக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் பெறற்கரிய பேறுகளைப் பெற்று பெருவாழ்வு வாழ்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

நாஸ்திகர்கள் எண்ணுவதுபோல் முஸ்லிம்கள் ஏக இறை நம்பிக்கையின் அடிப்படையில் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டாயக் கடமையான ஐங்கால தொழுகைகளை நிறைவேற்றுவதால் இவ்வுலகில் எவ்வித நஷ்டமும் அடைவதில்லை. மாறாக நாஸ்திகர்கள் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அழிந்துபோகும் இவ்வுலக வாழ்க்கையிலும் பெறற்கரிய பேருகளையே பெற்று வருகின்றனர் என்பதை விரிவாகப் பார்த்தோம்.

அதேபோல் இஸ்லாம் முஸ்லிம்கள் மீது விதித்துள்ள கடமைகள் அனைத்தும் நிறைவேற்றுவது கொண்டு இணையில்லாத ஒரே இறவைனின் பொருத்தத்தைப் பெற்றுக்கொள்ளவதோடு இவ்வுலகையும் முறையாக அனுபவித்தே வருகின்றனர்.

49- ஜகாத்:
இஸ்லாம் விதித்துள்ள அடுத்த பெருங்கடமை ஜகாத்தாகும். செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தின் ஒரு பகுதியை வருடாவருடம் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்க உத்திரவிடப்பட்டுள்ளது. செல்வம் ஓரிடத்தில் மிதமிஞ்சி குவிந்து விடாமலிருக்க இஸ்லாம் வழி வகுத்திருக்கிறது. ஜகாத்தை முறையாக நிறைவேற்றும் ஒரு முஸ்லிம் இவ்வுலகில் தனக்குரியதை இழப்பதாக எண்ண முடியாது. தனக்குரியதை முறையாக அனுபவித்துக் கொண்டு இல்லாத ஏழைகளுக்குத் தனது செல்வத்திலிருந்து பகிர்தளித்து ஆனந்தமடைகிறான்.

உலகில் ஒரு சாரார் வறுமையிலேயே வாடுவதும் பிரிதொரு சாரார் மிதமிஞ்சிய செல்வத்தால் ஆடம்பர வாழ்வு வாழ்வதும் நாஸ்திகம் பிறக்க ஒரு காரணமாகும். எனவே ஏழைகளுக்கு உதவும் எந்த முயற்சியையும் வீண் முயற்சி என்று எந்த நாஸ்திகரும் சொல்ல முடியாது. ஏழைகளுக்கும் அதேசமயம் செல்வந்தருக்கும் ஏற்புடையதான இதைவிட ஒரு உன்னத நடைமுறையை உலகம் தோன்றி இது நாள்வரை எந்த ஒரு மனிதனும், இயக்கமும், இஸமும் தந்துள்ளதாக எவரும் சுட்டிக்காட்ட இயலாது. பெர்னாட்ஷா கூறியதுபோல் இஸ்லாத்தை முறையாக செயல்படுத்தத் தவறும் முஸ்லிம்களைக் குற்றப்படுத்த முடியுமேல்லாது, இறை கொடுத்த வாழ்க்கை நெறியான இஸ்லாமிய மார்க்கத்தைக் குறைகூற முடியாது.

50- நோன்பு:
இஸ்லாம் அடுத்து விதித்துள்ள பெருங்கடமை நோன்பாகும். வருடத்தில் குறிப்பிட்ட ஒரு மாத முழுவதும் சூரிய உதயத்தறிகு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை பகல் முழுவதும் உண்ணாமல், பருகாமல், சுகிக்காமல் தனது இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது நோன்பாகும். உலகில் மக்களிடையே இடம்பெறும் பெரும் குற்றச்செயல்களுக்கு அடிப்படைக் காரணம் மேலே சொன்ன மூன்று காரியங்களில் மனிதன் தனது இச்சையைக் கட்டுப்படுத்த முடியாமையேயாகும். இவற்றில் தனது இச்சையைக் கட்டுப்படுத்தும் பக்குவம் பெற்றவன் குற்றச் செயல்களிலிருந்து பெரும்பாலும் விலகி இருக்க முடியும் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஓர் உயர்ந்த பயிற்சி முறையை வீண் முயற்சி, உலகை நஷ்டப்படுத்தும் செயல் என்று நாஸ்திகர்கள் கூறமுடியாது.

அதல்லாமல் நோன்பின் மூலம் மனிதனின் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைப்பதாக மருத்துவர்கள் சான்று பகர்கின்றனர். ஒரு செல்வந்தன் சகலமும் பெற்றிருந்தும் அந்த மாதத்தின் பகல்பொழுது முழுவதும் பசித்திருப்பதால், தாகித்திருப்பதால் ஏழைகள் பசியினால் அனுபவிக்கும் வேதனையை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும், அதன் மூலம் ஏழைகள் மீது இரக்கம் காட்டும் பண்பையும் நோன்பு வளர்க்கிறது. இங்கும் நாஸ்திகர்கள் எண்ணுவது போல் முஸ்லிம்கள் இவ்வுலகை நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை, மாறாக பேரின்பமும் பெரு வாழ்வுமே பெறுகின்றனர்.

51- ஹஜ்:
அடுத்து இஸ்லாம் விதித்துள்ள ஹஜ் கடமை, பரந்து விரிந்து கிடக்கும் உலகின் பல பகுதிகளில் வாழும் மக்களில் வசதியும், வாய்ப்பும் உடையவர்கள் வருடத்தில் ஒரு முறை உலகின் மையப் பகுதியான மக்காவில் கூடி தங்கள் சகோதர அன்பை வளர்த்துக் கொள்ளவும், உலக ஒற்றுமையை வளர்க்கவுமான வாய்ப்பையும் பெறுகின்றனர். மக்கள் மன சந்தோஷத்திற்காக உல்லாசப் பிரயாணங்கள் போவதை நாஸ்திகர்கள் மறுப்பதில்லை. அதனை வீண் வேலை என்று வர்ணிப்பதில்லை. உலகில் தங்கள் பங்கை அனுபவிக்கத் தவறிவிடுகின்றனர் என்று சொல்லுவதில்லை. எனவே முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது கொண்டு இவ்வுலகில் தங்களின் பங்கிலிருந்து எதனையும் இழப்பதில்லை. உலகை அனுபவிப்பதில் குறை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

இதேபோல் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான எந்தச் செயலும் அவர்களுக்கு இவ்வுலகில் எவ்வித நஷ்டத்தையும் தருவதாக இல்லை, அவர்களின் நியாயமான எவ்வித பங்கையும் இழப்பதாக இல்லை. சுருங்கச்சொல்லின் மனிதன் இவ்வுலக வாழ்க்கையை முறையாகவும், சரியாகவும், நேர்மையாகவும் முழுச் சுவையுடனும் அனுபவிப்பதற்கு இஸ்லாம் கூறும் ஒரே இறை நம்பிக்கையோ, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் செயல்பாடுகளோ தடையாக இல்லை என்பதை நாஸ்திகர்களுக்குச் சொல்லிக்கொள்கிறோம்.

52- படைத்தவனே வழிகாட்ட வேண்டும்:
இங்கு ஒரு உதாரணம் கூறி விளங்க வைக்கலாம். குறைமதி படைத்த மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஞ்ஞானக் கருவியை பிறிதொரு மனிதன் பயன்படுத்த முற்படும்போது, அதனைத் தயார் செய்தவனின் வழிகாட்டலை எவ்விதக் குறையும் இல்லாமல், தன் சொந்த யுக்தியை அதில் செலுத்தாமல் அப்படியே பின்பற்றும் போது அந்தக் கருவி எந்த நோக்கத்தோடு தயார் செய்யப்பட்டுள்ளதோ அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடிகிறது. இதனை நாஸ்திகர்கள் மறுக்க மாட்டார்கள், அப்படியானால் நிறைமதியுள்ள இறைவன், அவன் படைத்த மனிதக் கருவியை குறைமதி படைத்த மனிதன் தம் யூகம் கொண்டு இயக்க முடியுமா? இதனை நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டும். இன்று உலகில் ஏற்பட்டுள்ள சர்வ நாசங்களுக்கும், குழப்பங்களுக்கும், அமைதியின்மைக்கும் குறைமதி படைத்த மனிதன், தானே தனது வாழ்க்கைத்திட்டத்தை அமைத்துக் கொண்டதேயாகும். மதங்கும், இஸங்களும் மனித யூகப்படி அமைந்தவையே! இவை மனித அபிப்பிராயத்தில் நலன் விளைவிப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கினாலும் உண்மையில் நலன் விளைவிப்பவை அல்ல. இறைவன் படைத்த மனிதனின் வாழ்க்கை முறையை குறைமதி படைத்த மனிதன் அமைப்பது கொண்டு மனிதன் வெற்றி பெற முடியாது.

ஓவ்வொரு நபிக்கும் இறைவனிடமிருந்து நேர்வழி கொடுக்கப்பட்டது, நபிமார்கள் தங்கள் சொந்த மனித யூகத்தை மக்களுக்கு மார்க்கமாகப் போதிக்கவில்லை. இது விஷயத்தில் ஒவ்வொரு நபியும் மிக எச்சரிக்கையாக இருந்தனர். அதில் சிறிது தவறு இடம் பெற்றாலும் இறைவன் உடனடியாக செய்தி (வஹி) அனுப்பித்தித் திருத்தினான். ஆனால் ஒவ்வொரு நபிக்கும் பின்னால் அந்த நபிமார்களைப் பின்பற்றியவர்கள் தங்கள் மனித யூகங்களை மார்க்கத்தில் புகுத்தி இறைவன் கொடுத்த ஒரே நேர்வழி பல மதங்களாக உருவெடுக்க வழி வகுத்துள்ளனர். இதனை நாஸ்திக நண்பர்கள் ஆழ்ந்து சிந்தித்து தவறு எங்கே இடம்பெற்றுள்ளது என்பதை உணர வேண்டும். அதாவது மனிதனின் வாழ்க்கை நெறியாக இறைவன் பல மதங்களைக் கொடுக்கவில்லை இறைவன் கொடுத்தது ஒரே ஒரு வாழ்க்கை நெறியைத்தான் மனிதர்களே தங்கள் சொந்தக்கற்பனை கொண்டு பல மதங்களைத் தோற்றுவித்துள்ளார்கள். இறைவன் மனிதனிடமிருந்து ஏற்றுக்கொள்வது அவன் கொடுத்த வாழ்க்கை நெறியை மட்டுமே. இறைவன் கொடுத்த மறைவழி-நேர்வழி-மார்க்க நெறி எது? மனிதன் படைத்த மதவெறி எவை? என ஆய்ந்து பகுத்துணர்ந்து நேர்வழியை ஏற்றுச் செயல்பட ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கடமைப்பட்டுள்ளனர்.

53- ஆணவம் கெட்டதே!
முஸ்லிம்கள் ஒரே இறை நம்பிக்கையால், அந்த ஒரே இறைவனது கட்டளைகளைச் செயல்படுத்துவதால், இவ்வுலகில் எவ்வித இழப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதை அறிந்தோம். இன்னொரு முக்கியமான ஒன்றையும் இங்கு நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம். இறைவன் மீது பூரண நம்பிக்கை உள்ள ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு பெரியதொரு செயற்கரிய செயலைச் சாதித்தாலும் அது இறைவனின் அருட் கொடையால் ஆனது என அமைதி அடைகிறான். இங்கு பணிவு ஏற்படுகிறது அகங்காரமோ ஆணவமோ ஏற்படுவதற்கு வழியில்லாமல் போய் விடுகிறது. ஆகங்காரமும், ஆணவமும் மிகக் கெட்ட குணங்கள். என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள். அதே சயமம் ஒரு நாஸ்திகர் ஒரு சாதனையை நிகழ்த்திவிட்டால் இவர் மீதுதான் அவருக்கு முழு நம்பிக்கை இருக்குமேயல்லாது, தன்னை ஆட்டிப்படைக்கும் இறை சக்தி மீது அவருக்கு நம்பிக்கை இல்லை எனவே அவரிடம் அவரை அறியாமலேயே அகங்காரமும், ஆணவமும் குடி கொள்ளும் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க முடியாது ஒரு சாதனையின் முழுப் பொறுப்பும் தன்னைச் சார்ந்ததே வேறு யாரும் கிடையாது என்ற மேல் எண்ணமே அவரை அகங்காரமும், ஆணவமும் கொள்ளச் செய்து விடும் பின் எங்கே பணிவு ஏற்படும்?

நாஸ்திகர்களின் நம்பிக்கைப்படி இறைவனோ, மறு உலக வாழ்க்கையோ இல்லை என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும் இதனால் ஆஸ்திகர்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இவ்வுலகில் எவ்வித நஷ்டமும் அடையவில்லை. அவர்களுக்குறியதை முறையாக அனுபவிக்கின்றனர். ஆனால் நாஸ்திகர்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக இறைவன் ஒருவன் இருந்து, மறுமை வாழ்க்கையும் உண்டென்றால் அதனால் பெரும் நஷ்டம் அடையப் போவது நாஸ்திகர்களே என்பதையும் தெளிவாக விளக்கிவிட்டோம். எனவே இறை நம்பிக்கையற்ற நிலை இவ்வுலக வாழ்க்கையையும் பாதிக்கிறது மட்டுமல்லாமல் மறு உலகிலும் ஈடு செய்ய முடியாத பெரும் நஷ்டத்தை உண்டாக்குகிறது இதனை நாஸ்திகர்கள் உணர வேண்டும்.

54- நாஸ்திகர்களின் நல்லெண்ணம்!
நாஸ்திகர்களுக்கு நாஸ்திக எண்ணம் ஏற்பட அடிப்படைக் காரணமே மனித சமுதாயத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றேயாகும். மனித சமுதாயத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகள் அகன்று சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் அமைய வேண்டும். ஏழைகளின் இன்னல்கள் தீர்ந்த அவர்கள் இவ்வுலகில் சுபிட்சமாக வாழ வேண்டும். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் நிலை மாற வேண்டும். அதற்கு இடையூறாக மதங்களின் பெயரால் மக்கள் அனுஷ்டித்து வரும் நம்பிக்கைகளும் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. கடவுளின் பெயராலேயே மதங்கள் அனைத்தும் அமைக்கப்படுள்ளன. எனவே கடவுளே இல்லை என்று நிலைநாட்டி விட்டால் மதங்கள் அனைத்தையும் ஒழித்துவிடலாம் என்பது அவர்களின் எண்ணமாகும். சமுதாய மேம்பாடு குறித்து அவர்களின் நல்லெண்ணத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. மனித சமுதாயத்தின் மீது அவர்களுக்குள்ள அக்கறையை நாம் மறுக்க முடியாது, மனித சமுதாயம் உய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கமே அவர்களின் இலட்சியம் என்பதிலும் ஐயமில்லை. அதன் காரணமாகத்தான் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள் எளிதாக நாஸ்திக வாதத்தால் கவரப்படுகிறார்கள். முறையான சிந்தனையற்றவர்கள் மட்டுமே மதங்களின் பெயரால் முன்னோர்களான மனிதர்களினால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளிலும், மூடச்சடங்குகளிலும் மூழ்குகின்றனர். இது வேதனைக்குரிய விஷயமே. அதே சமயம் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள நாஸ்திகர்கள் தங்களின் சிந்தனா சக்தியை முறைப் படுத்துவார்களேயானால் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள மதங்களுக்கும் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள முடியும்.

55- உலகிற்கு வழிகாட்ட முஸ்லிம்கள் முன் வரவேண்டும்.
நாஸ்திகர்கின் போக்கில் மாற்றம் ஏற்பட முஸ்லிம்களும் உண்மை முஸ்லிம்களாக வாழ முற்படவேண்டும். உலக மக்களுக்கு முஸ்லிம்கள் ஓர் அழகிய முன் மாதிரியாகத் திகழ வேண்டும். மாற்று மதத்தார்கள் தங்களின் முன்னோர்களின் பெயரால் நடைமுறைப் படுத்தும் மூட நம்பிக்ககைளைப் போல்-மூடச் சடங்குகளைப் போல் இவர்களும் விட்டு விடவேண்டும். முன்னைய நபிமார்களின் நேர்வழி மனிதக் கரங்களால் கறைபட்டு பல மதங்களாக மாறியது போல் முழுமை பெற்ற இஸ்லாமிய நெறியும் மனிதக் கரங்களால் கறைபட்டு மதமாக பரிணாமித்துள்ளது என்பதை உணர்ந்து திருந்த முன்வர வேண்டும். முன்னோர்களைக் கண்மூடிப் பின் பற்றாமல்-தக்லீது செய்யாமல் குர்ஆன், ஹதீஸை விளங்கிச் செயல்பட முன் வர வேண்டும்.

நாஸ்திக நண்பர்களின் சிந்தனைக்கு சில குர்ஆன் வசனங்கள்:

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும். 7:10

(நபியே!) நீர் கூறுவீராக் ''கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா? 28:71
இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்; (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! 28:73
கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையளிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன் அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். 16:5

அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொலிவும்) அழகுமிருக்கிறது. 16:6

மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன். 16:7

இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். 16:8

இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான். 16:9

அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன. 16:10

அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவன்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது. 16:11

இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. 16:12

இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது. 16:13

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். 16:14

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்). 16:15

(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள். 16:16

இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும். 30:46

இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா ஒன்று மிகவும் இனிமையாக, (தாமந்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது. மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! 35:12

இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். 16:89

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்;. ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள்;. அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர். 2:257


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
  
   Miscellaneous

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved