Free Quran Software

Harun Yahya

Understand Islam

Quran Miracles

Islam & Terrorism

Why did we choose Islam?

Others

  திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கேள்வி பதில்

கட்டுரைகள்

ஆய்வுகள்

வரலாறு

 தமிழ் குர்ஆன்

 
 

அமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறை புறக்கண்களுக்குத் தெரிந்ததா?
இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் மறுப்பு

பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அமாவாசை அன்று பிறை கண்களுக்குத் தென்பட்டதாம்! இது என்னங்க புதுக்குழப்பம்? பிறை தெரியாமல் இருப்பதால்தானே அதற்கு அமாவாசை நாள் என்று பெயர் எனக் கேட்கிறீர்களா?. தங்களை விஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் அமாவாசை பிறை என்ற அவதூறை தற்போது கிளப்பியுள்ளனர். இதுபற்றிய உண்மை நிலையை அறிய இக்கட்டுரையை இறுதிவரை பொறுமையாகப் படித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.

சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகளை அறிந்து கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும் ஆரம்பிக்க வேண்டும் என ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பிரச்சாரம் செய்தும், பின்பற்றியும் வருகிறோம். இதற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து தக்க ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம்.

அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட வடிவ நிலைகளைக் கொண்ட பிறை படித்தரங்கள் நமக்கு அந்தந்த நாளின் தேதியை அறிவிக்கிறது. அவற்றை நாம் தொடர்ந்து கவனித்து வந்தால் மாதத்தின் இறுதி நாளுக்கு முந்தையநாள் வரையுள்ள பிறையை புறக்கண்களால் பார்க்க முடியும். அதாவது ஒரு மாதத்திற்கு 30 நாட்கள்தான் என்றால் 29 நாட்கள் பிறைகளைப் பார்க்க முடியும். அதுபோல 29 நாட்கள்தான் அந்த மாதத்திற்கு உண்டு என்றால் 28 பிறைகளை அந்த மாதத்தில் நாம் பார்க்க முடியும். அல்குர்ஆன் கூறும் (36:39) உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளை எனும் 'உர்ஜூஃனில் கதீம்' என்ற சந்திரனின் இறுதி வடிவம் மாதத்தின் இறுதிநாளுக்கு முந்தைய நாள் ஃபஜ்ரு வேளையில் கிழக்குத் திசையில் புறக்கண்களுக்கு காட்சியளிக்கும்.

'உர்ஜூஃனில் கதீம்' என்ற புறக்கண்ணால் பார்க்க இயலும் சந்திரனின் அந்த இறுதிப் படித்தரத்திற்கு அடுத்தநாள் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) உடைய தினமாகும். அமாவாசை என்று மக்கள் புரிந்துள்ள புவிமைய சங்கமம் என்பது ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு கோட்டில் அல்லது ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் தினமாகும்.

அந்த புவிமைய சங்கம (Geocentric Conjunction) தினத்தில் தேய்பிறை மற்றும் வளர் பிறையை பொதுவாக புறக்கண்களால் பார்க்க முடியாதவாறு அது மறைக்கப்படும் . இதற்குத்தான் 'கும்ம', 'கும்மிய', 'உஃமிய', 'கபி(F)ய', 'க(G)ம்மிய', 'ஹஃபிய்ய' அல்லது 'குபிய'வுடைய நாள் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் தந்துள்ளார்கள்.

இந்த அமாவாசை நாளுக்கு அடுத்த நாள் சூரியனுக்குப் பின்னால் சந்திரன் கிழக்கு திசையில் தோன்றி (உதித்து) மேற்கு திசையில் அந்தப்பிறை மறையும் போது நமக்குக் காட்சியளிக்கும். அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் அந்த முதல் பிறை புறக்கண்களுக்குத் தென்படும். இதுவே முதல் நாளுடைய சந்திரனின் படித்தரமாகும்.

முதல் நாளுக்குரிய அந்தப் பிறை அந்த முதல் நாளின் (கிழமையின்) பாதிப் பகுதியை (சுமாராக 12 மணி நேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும். இதுதான் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் சந்திரனில் ஏற்படும் படித்தரங்களான பிறைகளை மவாகீத்துலின்னாஸ் - மக்களுக்குத் தேதிகளை காட்டும் (
Calendar For Mankind) என்று இந்த உம்மத்திற்கு வலியுறுத்தியதாகும்.

அல்லாஹ்வின் உதவியால் நமது பிரச்சாரங்களின் விளைவாக விழிப்படைந்த மக்கள் அல்லாஹ்வின் நாட்காட்டியின் முக்கியத்துவத்தை உணரத் துவங்கி விட்டனர். பலர் சரியான நாட்களில் தங்கள் அமல்களை அமைத்து வருகின்றனர் - அல்ஹம்துலில்லாஹ்.

இதை அறிந்த ஷைத்தான் தனது சகாக்கள் மூலம் நமது பிரச்சாரங்களையும், ஹிஜ்ரி நாட்காட்டியையும் பொய்யாக்கிட தொடர்ந்து முயன்று வருகிறான். உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் தனது ஏஜென்டுகளை நியமித்து அவர்களை ஏவிவிட்டு ஹிஜ்ரி நாட்காட்டிக்கு எதிராக பல தவறான கருத்துக்களை போதித்து மக்களிடையே சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகிறான். அதன் வெளிப்பாடே அமாவாசை அன்று பிறையை புறக்கண்ணால் பார்க்கலாம் என்ற வெற்றுக் கோஷத்தின் பின்னனியாகும்.

குறிப்பாக சமீபகாலமாக ஜோர்டான் நாட்டிலிருந்தும் இதுபோன்ற பல பொய்த் தகவல்கள் ஜோராக ஜோடிக்கப்படுகின்றன. அமாவாசை அன்று தேய்பிறை கிழக்கில் புறக்கண்களுக்கு சர்வசாதாரணமாகத் தெரிகின்றது என்று ஜோர்டான் நாட்டின் ICOP என்ற குழுவினர் தங்கள் இணையதளங்களின் மூலம் தொடர்ந்து பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றனர். 'முகம்மது ஒதே' என்பவரின் வழிகாட்டுதலில் அமைந்த
icoproject என்ற இணைதளம், காலித் சவுகத் என்பவரின் moonsighting இணையதளம், makkahcalendar என்ற பெயரில் இயங்கும் மற்றொரு இணையதளம் போன்றவை இத்திருப்பணியை செய்து வருகின்றன.

மேற்படி இணையதளங்கள் வெளியிடும் போலி விண்ணியல் தத்துவ முத்துக்களை தமிழில் பரப்பிட தமிழகத்திலும் அவர்களுக்கு ஏஜெண்டுகள் கிடைத்துள்ளனர். மேற்படி போலி விஞ்ஞானிகளின் பிறை அறிவிப்புகளை அலட்சியம் செய்து புறக்கணித்து உங்களுடைய ஈமானை பாதுகாத்துக் கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு குழுவாக செயல்படும் மேற்படியார்கள், கடந்த 2013 வருடம் ஜூலை 8-ஆம் தேதி திங்கள் கிழமை அன்று அமாவாசை என்னும் புவிமைய சங்கம நாளிலும் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தினர். அதாவது அமாவாசை தினமான அன்று சூரியன் மறைந்த பின்னர் தெஹீட்டி என்ற தீவில் வளர்பிறை பார்க்கப்பட்டது என்று ஒரு போட்டோவோடு இதுபோன்றே செய்தியும் வெளியிட்டனர். அச்செய்தியின் உண்மை நிலையை 'தெஹீட்டி பிறையும் தடுமாறிய சிந்தனையும்!' என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டு நாம் மக்களுக்கு தெளிவாக்கினோம். (பார்க்க) அதில் நாம் எழுப்பிய வாதங்களுக்கு எந்தப் பதிலையும் சொல்லாமல் இன்றுவரை மேற்படியார்கள் மௌனம் சாதிக்கின்றனர்.

பின்னர்
Conjunction  என்னும் சங்கம நிகழ்வு உலக நேரம் 16 மணிக்கு மேல் நடைபெறும் போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய நாடுகளில் உள்ளோர் அமாவாசை நடைபெறும் முன்பாகவே அடுத்த நாளின் காலைப் பொழுதை அடைந்து விடுகின்றனரே அவர்கள் எவ்வாறு நோன்பை வைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினர். அந்த விமர்சனத்திற்கும் 'ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்' என்ற தலைப்பில் மிக விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. (பார்க்க)

குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதல்படி அமைந்த நமது அறிவுப்பூர்வமான விளக்கங்களால் ஒவ்வொரு முறையும் மேற்படியார்கள் மூக்கறுபட்டே போகிறார்கள். நமது பிரச்சாரங்களை எதிர்கொள்ள வேறு வழியில்லத அவர்கள் தொலை நோக்கியால் எடுக்கப்பட்ட ஒரு பிறை போட்டோவை வைத்து அதில் கிராஃபிக்ஸ் சித்து விளையாட்டுகளைப் புரிந்து எதாவது ஒரு அமாவாசை அன்று அதை வெளியிட திட்டமிட்டிருந்தனர் போலும்.

எனவே கடந்த 30-01-2014 அமாவாசை தினத்தில் பிறையை புறக்கண்களால் பார்க்கலாம் என்று முற்கூட்டியே அறிவிப்பும் வெளியிட்டனர். மேற்படி அமாவாசை தேதியில் தேய்பிறை புறக்கண்களுக்குத் தெரியும் என அவர்கள் பட்டியலிட்டுச் சொன்ன எந்த நாட்டிலும் எந்தப் பிறையும் தெரியவில்லை (அது எங்கே தெரியப் போகிறது).

இது ஒரு பக்கம் இருந்தாலும், நாம் எதிர்பார்த்தபடி சங்கம தினத்திற்குப் பின்னர் அவர்கள் தயாராக வைத்திருந்த போட்டோவை மறக்காமல் வெளியிட்டனர். இவர்கள் பிறை தெரியும் என்று அறிவித்த பட்டியலில் இடம்பெறாத ஈரானில் அந்தப் பிறை பார்க்கப்பட்டதாக கூறி ஒரு போட்டோவோடு தகவல் வெளியிட்டு அனைவரையும் திசை திருப்பினர்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கமநாளில் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்று நாம் சுயமாகச் சொல்லவில்லை. மாறாக இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும்.

எனவே தற்போது ஹிஜ்ரி நாட்காட்டியை பொய்படுத்திட சங்கம தினத்தில் பிறை தெரிந்ததாகப் பொய்யான போட்டோக்களை வெளியிட்டு இவர்கள் நம்மைப் பொய்ப்படுத்திட முயற்சி செய்யவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை பொய்யாக்கிட முனைந்துள்ளனர் என்பதே உண்மையிலும் உண்மை.

குறிப்பாக பிறையை புறக்கண்ணால் பார்த்தே பின்பே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறிவரும் முஸ்லிம்கள்கூட அமாவாசை தினத்தில் பொதுவாக பிறை புறக்கண்களுக்கு தெரியாது என்பதில் எந்த மாற்றுக் கருத்துகளும் கொள்ள வில்லை.


கடந்த 30-01-2014 அமாவாசை அன்று ஈரானில் புறக்கண்களுக்குத் தெரிந்ததாக வெளியிடப்பட்ட போட்டோ பிறை!

கீழ்க்காணும் இணைப்புகள் மேற்படி பொய்ச் செய்தியை வெளியிட்ட இணைதளங்களோடு நடைபெற்ற சில கருத்துப் பரிமாற்றங்களின் பதிவுகளாகும். அவற்றை சற்று படித்துப் பார்த்தாலே மேற்படி அமாவாசை பிறை போட்டோ பற்றிய உண்மை விஷயங்கள் இன்னும் தெளிவாக விளங்கும்.

இணைப்பு 1 : மேற்படி ஜோர்டான் நாட்டின் ஜோடிப்பு இணையதளம் வெளியிட்ட அமாவாசை போட்டோ பிறை பற்றி அந்த இணையதள நிறுவனர் முகம்மது ஒதேக்கு சகோதரர் ஒருவர் எழுதிய ஈமெயில் (பார்க்க).

அதில் மேற்படி போட்டோவில் உள்ள பிறை எந்த அளவிற்கு பொய்யானது என்பதையும், போட்டோ கூறும் அறிவியில் ரீதியான குறிப்புகள் எந்த அளவிற்குப் பிழையானது என்பதையும் சுட்டிக் காண்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி பிறையை புறக்கண்களாலோ, பைனாகுலர் போன்ற சிறு தொலை நோக்கியாலோ பார்ப்பதற்கு சாத்தியம் இல்லாத நிலையையும், மேற்படி போட்டோ ஒரு செட்டப் போட்டோதான் என்பதையும் அந்த போட்டோவை வைத்தே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு 2 : பிறை விஷயத்தில் மேற்படி ஜோர்டானைச் சார்ந்த முகம்மது ஒதேயை தக்லீது செய்யும் தமிழக இணையதளம் ஒன்று 'அமாவாசை அன்று பிறையைக் காண இயலாதா! நாளைக் காணலாம்' என்று தலைப்பிட்டு கடந்த 29-01-2014 அன்று செய்தி வெளியிட்டது. அச்செய்தியில் மேற்படி அமாவாசை பிறையை இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் தெரியும் என்று ஒரு பட்டியலையும் வெளியிட்டனர். குறிப்பாக தமிழகத்தில் காயல்பட்டினத்திலும் தெரியும் என்றும் அதை போட்டோ எடுத்து அனுப்புங்கள் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காயல்பட்டினத்தைச் சார்ந்த சகோதரர்களிடம் இச்செய்தியைப் பற்றி வினவினோம். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற ஏராளமான நாடுகளில் விற்பனையாகும் ஒரே பல்பொடி கோபால் பல்பொடி என்ற பழைய ஆல் இந்தியா ரேடியோ விளம்பரத்தின் தாக்கமாக அச்செய்தி இருக்கலாம் என்றனர். அச்செய்தி வெளியிட்ட இணையதளத்தில் ஹிஜ்ரி கமிட்டியினர் சில விளக்கங்கள் கேட்டு கருத்துக்களைப் பதிந்தனர். (பார்க்க)

இணைப்பு 3 : மேற்படி தமிழக ஏஜெண்டு இணையதளம் கடந்த 31-01-2014 அன்று 'அமாவாசை அன்று தேயும் பிறை காணப்பட்ட காட்சி' என்று தங்களின் பல்பொடி விளம்பரத்தை போட்டோவுடன் மீண்டும் வெளியிட்டது. முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கொண்ட அதற்கும் விளக்கம் கேட்டு ஹிஜ்ரி கமிட்டியைச் சார்ந்த சகோதரர் கருத்துக்களைப் பதிந்தனர். (பார்க்க)

அமாவாசை என்னும் புவிமைய சங்கம நாளில் பிறை புறக்கண்களுக்குத் தெரிவாதாக பிரச்சாரம் செய்பவர்களை நோக்கி நாம் கேட்டுவரும் அடிப்படையான சில கேள்விகள்.

1. புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ பொதுவாக அனைத்து உலக நாடுகளிலும் ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தெரிகிறதா?

2. புவிமைய சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ உங்களின் அபிமானத்திற்குரிய ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கு என்று சொல்லும் அப்பகுதியிலோ, அமெரிக்காவிற்கு மேற்கு என்ற அந்தப் பகுதியிலோ ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தெரிகிறதா?

3. மேற்படி புவிமைய சங்கம நாளில், அரிதாக சில மாதங்களில் மட்டும் தெரியும் வாய்ப்புள்ளது என்று நீங்கள் கூறும் அப்பிறையை முஸ்லிம்கள் புறக்கண்களால் பார்த்ததாக சாட்சிகள் உள்ளதா?

4. அப்படி அரிதான மாதங்களில், அவ்வாறு அரிதாக தென்படுவதாகக் கூறும் அப்பிறை சாதாரணமாக புறக்கண்களால் பார்க்கப்படுகிறதா அல்லது (
Telescope, Charge-Coupled Devices (CCDs) image) தொலைநோக்கி கொண்டு புகைப்படம் எடுக்கப்படுகின்றதா?

5.
Telescope போன்ற தொலைநோக்கி மூலம் பார்க்கப்பட்ட பிறைதான் இது, Telescope உதவி கொண்டுதான் இந்த போட்டோவை எடுக்கப்பட்டது என்றால் Hubble Telescope போன்ற நவீன கருவிகள் மூலம் ஒவ்வொரு நாளும் பிறையை நேரடி ஒளிபரப்பு செய்தால் அதை ஏற்று செயல்படத் தயாரா?

6. தொலைநோக்கி (
Telescope) மூலம் பிறை பார்க்கப்படுவதும், புறக்கண்களால் பார்க்கப்படுவதும் ஒன்றுதான் என்று உங்கள் நிலைப்பாடாக அறிவிக்கத் தயாரா?

7. அரிதான ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் அதன் அடிப்படையில்தான் அமல் செய்ய வேண்டும் என்று பொதுவான மார்க்க சட்டம் வகுப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றதா? இதற்கு ஆதாரம் என்ன?

8. 'ஃபஇன் கும்ம அலைக்கும் - ஃபக்திரூலஹூ' - அதாவது மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படுமே அந்நாளில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை வைத்து, முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ அல்லது சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ கடந்த 1400 வருடங்களில் புவிமைய சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ புறக்கண்களுக்குத் தெரிந்துள்ளதா? அவ்வாறு தெரிந்துள்ளதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா?

9. அல்லது இனிவரும் காலங்களிலாவது முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ, சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ தெரியும் வாய்ப்புள்ளதா?

10. சந்திரனின் 100 சதவிகித ஒளிரும் தன்மையிலிருந்து சுமார்
0.5%, 1% அல்லது 1.5% அளவு ஒளி மட்டும் பூமிக்குத் தெரிய வாய்ப்புள்ளதாக விண்ணியல் கணக்கீடு சொல்லும் அந்தப் பிறையின் படித்தரத்தை ஒரு மனிதன் தனது புறக்கண்களால் சர்வ சாதாரணமாக பார்க்க இயலுமா? அது சாத்தியம்தானா?

11. சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அந்திக் கருக்கலினால் (
Twilight) ஏற்படும் ஒளிச் சிதறல்களுக்கு மத்தியில் வெரும் ஒரு சதவிகிதம்கூட இல்லாத அப்பிறையைத் தொலைநோக்கி (Telescope) மூலமாகக்கூட தேடிப் பார்ப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதிருக்கும். இந்நிலையில் அதை சர்வ சாதாரணமாக ஒருவர் புறக்கண்ணால் பார்த்து கேமராவால் போட்டோவும் எடுக்க முடிந்தது என்பதை எப்படி நம்பச் சொல்கிறீர்கள்?

12. மேற்படி பிறையைக் கண்டதாகத் தகவல் வெளியிட்டது யார்? முஸ்லிம்களா? முஸ்லிம்களே பிறை சாட்சி சொன்னாலும் அதன் சாதக பாதகங்களை விஞ்ஞான உண்மைகளோடு சரிபார்த்து (!) அதன் பிறகே ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலுள்ளவர்கள், படம்பிடித்தவர் யார் என்று அறியாத நிலையிலும் அவர் எடுத்ததாக வெளியாகும் செய்திகளைக்கூட நம்பி எந்த அடிப்படையில் இணையதளங்களிலே பரப்புகின்றீர்கள்?

13. அமாவாசையில் பிறை தெரிந்ததாக வெளியிடப்படும் தகவல்களில் பிறை பார்த்து போட்டோ எடுத்தவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாகவே உள்ளனர். இப்படி காஃபிர்கள் ஒரு படத்தை வெளியிட்டு பிறை சாட்சி சொன்னாலும் அந்த சாட்சியத்தை ஏற்று முஸ்லிம்கள் அமல் செய்யலாமா?

14. அமாவாசை நிகழ்வை அறிவியில் ஆய்வாளர்கள் உலக நேரத்தில் குறிப்பிடுகையில் அதை அவரவர்களின் லோக்கல் நேரத்திற்கு (
Local Time) மாற்றி அமைத்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவது ஏன்?

15. ஜூம்ஆ தொழுகையை அமெரிக்க மக்கள் வெள்ளிக்கிழமை அன்று அவர்களின் ஜூம்ஆ வக்தில் தொழும் போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற கிழக்கத்திய நாடுகள் சனிக்கிழமையாக விடிந்து விடும். அதனால் சனிக்கிழமைதான் அமெரிக்க மக்கள் ஜூம்ஆ தொழுகிறார்கள் என்று சொல்வீர்களா?

இப்படி பல்வேறு வினாக்களை எழுப்பி வருகிறோம். இவை அனைத்திற்கும் இதுவரை மௌனமே பதிலாக வந்துள்ளது. இவர்கள் கூறியபடி இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளிலோ அல்லது பிரத்தியேகமாக காயல்பட்டினத்திலோ கடந்த 30-01-2014 அமாவாசை அன்று தேய்பிறை (
Waning Crescent) புறக்கண்களுக்கு எங்கும் தென்படவில்லை.

ஈரானில் பார்க்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த அமாவாசை பிறை உலகில் ஈரானுக்குக் கிழக்குத் திசையில் அமைந்துள்ள நாடுகளிலும் புறக்கண்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும், ஆனால் தெரியவில்லை. ஈரான் ஃபஜ்ரு வக்தைத் துவங்குவதற்கு சுமார் 6:30 (ஆறரை) மணிநேரங்கள் முன்னர் ஃபஜ்ரைத் துவங்கிய ஆஸ்திரேலியாவில் (ஈரானில் பார்த்ததாக சொல்லப்படும் அளவைவிட) பிறை அதிக சதவிகிதம் பெரிதாகவும், வெளிச்சமாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படியனால் ஆஸ்திரேலியா உட்பட மற்றெந்த கிழக்கத்திய நாடுகளிலும் இப்பிறை புறக்கண்களுக்கோ, கேமரா, டெலஸ்கோப்களுக்கோ ஏன் தெரியவில்லை? தமிழகத்தில் காயல்பட்டினத்தில் தெரியும் என்று முன்னறிவிப்பு செய்யப்பட்ட இப்பிறை காயல்பட்டினம் உட்பட இந்தியாவின் எப்பகுதியிலும் தெரியவில்லையே அது ஏன்?


மேலும் இவர்கள் இன்னென்ன நாடுகளில் மேற்படி அமாவாசைப் பிறை புறக்கண்களுக்குத் தெரியும் என்று பச்சை வர்ணமிட்டு வெளியிட்ட படத்தில்கூட ஈரான் நாடு இடம் பெறவில்லை. இவர்கள் பச்சை வர்ணமிட்ட எந்த நாட்டிலும் பிறை புறக்கண்களுக்குத் தெரிந்ததாக இதுவரை செய்திகள் இல்லை. எனவே இவர்களின் கணிப்பு தவறு என
100% நிரூபணமாகி விட்டது. இந்த நிலையில்கூட இவர்களின் தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். காரணம் இவர்களின் நோக்கம் சத்தியத்தை அறிய வேண்டும் என்பதில்லையே!. கடமையான தொழுகையை அந்தந்த வக்திற்குள் தொழுவதில் பேணிப்பு இல்லாதவர்கள், நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திய சுன்னத்தான தாடியைக்கூட பேணாமல் மலித்துக் கொண்டு திரிபவர்கள் குர்ஆன் சுன்னாவின் சத்தியத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.

இன்னும் அமாவாசை அன்று புறக்கண்களுக்கு பிறை தெரிந்ததாக வெளியிடப்படும் போட்டோக்கள் பெரும்பாலும் பிற மதத்தவர்களின் பெயரிலேயே வெளியிடப்படுகின்றன. பிறையில் யூதப் பிறை, கிருஸ்துவப் பிறை, ஷியாப் பிறை என்றெல்லாம் இருப்பதாக நாம் கூறவில்லை. அதே நேரத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளை முடிவு செய்வதற்கு பிற மதத்தவர்களின் பிறைத் தகவலை எப்படி ஏற்பது? என்றுதான் நாம் கேட்கிறோம். மேலும் அத்தகவல்கள்கூட பொய்த் தகவலாகவே உள்ளன. இவ்வாறு முஸ்லிமல்லாதவர்கள் ஒரு போட்டோவை வெளியிட்டால் அப்பிறை சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளலாமா? இதற்கு தீர்க்கமான ஒரு முடிவைச் சொல்லுங்கள் என்று நாம் கேட்கிறோம்.

நமது கேள்விக்கு நேரடியான பதிலைத் தர முடியாதவர்கள் நம்மை நோக்கி ஒரு எதிர் கேள்வியை எழுப்பி அறிவார்ந்த வாதம் வைப்பதாக நினைக்கின்றனர். அதாவது ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சமான அமாவாசை நாள், பவுர்ணமி தினம், வளர்பிறை மற்றும் தேய் பிறைகளின் கணக்கீட்டை அமெரிக்காவின் நாஸாதானே வெளியிட்டுள்ளது. காஃபிர்களின் பிறை சாட்சியத்தை ஏற்கலாமா? என்று வினா எழுப்பும் நீங்கள் நாஸாவின் கணக்கீட்டை எந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறீர்கள்? என்பதே அவர்களின் கேள்வியாகும்.

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற பழமொழி தமிழில் உண்டு. ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் போது ஆத்திரப்படாமல் நிதானமாகவும், உளத்தூய்மையோடும், நல்லெண்ணத்துடனும் ஆய்வு செய்தால்தான் அறிவுப்பூர்வமான, உண்மையான கேள்விகளும், கருத்துக்களும் பிறக்கும்.
ரமழான் நோன்பு ஆரம்பம், இரு பெருநாட்கள் போன்ற மார்க்கத்தின் இபாதத்துகளை நிர்ணயம் செய்வதற்கு பிறையை புறக்கண்களால் பார்த்து சாட்சியம் அளிப்பது அவசியம் என்று இவர்களும் நம்பியுள்ளனர். அதன் அடிப்படையிலேயே பிறைத் தகவல்களையும், பிறை இன்னென்ன நாடுகளில் தெரிய வாய்ப்புள்ளது என்று வரைபடம் வரைந்தும் அவர்களின் இணையதளங்களில் வெளியிடுகின்றனர். அப்படி பிறை பார்ப்பதை நம்புபவர்களிடம் பிறை பார்த்த சாட்சியத்தை உறுதிபடுத்தும் அம்சத்தைப் பற்றி நாம் கேள்வி கேட்டால், நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான கணக்கீட்டை மையப்படுத்தி நாஸாவின் கணக்கை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.

நாஸா வெளியிட்டுள்ள கணக்கீடுகள் சரியானதுதானா என்று நாம் பரிசோதித்து அறிந்து சரிபார்க்க முடிந்த காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்நிலையில் இப்படியொரு கேள்வியை நம்மை நோக்கி இவர்கள் எழுப்பியுள்ளது இவர்களின் முதிர்ச்சியற்ற நிலையையே காட்டுகிறது. அடிப்படையற்ற, அறிவிலித்தனமான கேள்வியை கேட்டுவிட்டு அறிவார்ந்த கேள்வியை எழுப்பியதாக நினைத்துக் கொள்கின்றனர் போலும்.

முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்காகவா நாஸா நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது? அல்லது நாஸா விஞ்ஞானிகள் என்ன ஹிஜ்ரி கமிட்டியினருக்கு சொந்தக்காரர்களா? முஸ்லிம்கள் சந்திரனின் படித்தரங்களால் அமைந்த ஹஜ்ரிகாலண்டரை வெளியிட வேண்டும் என்பதற்காகவா அவர்கள் சந்திரனின் படித்தரங்களை கணக்கிட்டுள்ளார்கள் - இல்லையே!. அவர்களின் சுய ஆராச்சிக்காகவும், அவர்களின் செயற்கைக் கோள்கள் உட்பட விஞ்ஞான ஆய்வு சாதனங்கள் துல்லியமாக இயங்கவுமே சூரியன், சந்திரன் மற்றும் பிற கோள்களின் சூழற்சிகளை துல்லியமாகக் கணக்கிட்டு வைத்துள்ளார்கள். அவர்களின் சுயநலத்திற்காகத்தான் இவ்வளவு ஆய்வுகளையும் செய்து வைத்துள்ளார்களே தவிர முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல. இவையே உண்மையாகும். இதுவல்லாமல் ஹிஜ்ரி காலண்டரை எங்கள் கணக்கீட்டின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுங்கள் என்று இதே நாஸாவினர் ஒரு கணக்கீட்டை உலகிற்குத் தந்தால் அதில் முதலில் சந்தேகம் கொள்பவர்களாக நாங்கள்தான் இருப்போம்.

இவர்கள் அமாவாசை அன்று வெளியிடப்படும் போட்டோ பிறைகளை உண்மை என தக்லீது செய்வதைப்போல நாம் நாஸாவை தக்லீது செய்யச் சொல்லவில்லை. நாஸா வெளியிடும் அந்தத் துல்லியமான பிறைக் கணக்கை சரிபார்க்காமலும், உறுதி செய்யாமலும் நாம் ஹிஜ்ரி காலண்டரின் கணக்கை வெளியிடவில்லை. மேலும் நாஸாவின் சந்திரக் கணக்கீட்டை மட்டும் வைத்துக் கொண்டு நாம் காலண்டர் வெளியிடவில்லை. அப்படி நாம் தயாரிப்பதாகத் தவறான ஒரு யூகத்தை இவர்களுக்குச் சொன்னது யார்? இதையாவது தெளிவுபடுத்தட்டும்.

நாஸா வெளியிட்டுள்ள சந்திர, சூரியக் கணக்கீடுகள் சரியானதுதானா என்பதை பரிசோதிக்கும் அளவிற்கு ஆய்வாளர்களை ஹிஜ்ரி கமிட்டிக்கு அல்லாஹ் வழங்கி தனது நாட்காட்டியை தவறுகளிலிருந்து தூய்மையாக்கி வைத்துள்ளான் - அல்ஹம்துலில்லாஹ். ICOP இணையதளம் காஃபிர்கள் அளிக்கும் டெலஸ்கோப் போட்டோ பிறைகளை தக்லீது செய்து வெளியிடுவதைப் போலவோ, அந்த ICOP வெளியிடும் தகவல்களை காயல்பட்டினத்தின் பெயரைத் தாங்கிய இணையதளம் கண்மூடி பின்பற்றுவதைப் போலவோ, ஹிஜ்ரி கமிட்டி நாஸாவைக் கண்மூடி பின்பற்றச் சொல்லவில்லை.

இன்னும் நாம் வெளியிட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகளுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பிறைகளே சாட்சியாகும். ஹிஜ்ரி நாட்காட்டி பௌர்ணமி என்று தெரிவித்துள்ள அந்தக் கிழமை பௌர்ணமி தினமாக உள்ளதா? இல்லையா என்பதை மக்களே உறுதிபடுத்திக் கொள்ளலாம். நாம் அமாவாசை எனும் புவிமைய சங்கம தினம் என்று குறிப்பிட்டுள்ள அந்த நாள் அமாவாசை தினமாக உள்ளதா இல்லையா? என்பதையும் மக்களே உறுதிபட அறிந்து வருகின்றனர். மேலும் சந்திரனின் முதல் கால்பகுதி நாள், இறுதிகால்பகுதி நாள் என்று நாம் காலண்டரில் குறிப்பிட்டுள்ள நாட்களில் பிறையின் வடிவங்களும் அதன் கோணவிகிதமும் சரியானதாக உள்ளனவா என்பதையும் நீங்களே பார்த்து ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்கிறோம்.

அல்லாஹ்வின் உதவியால் ஹிஜ்ரி நாட்காட்டியை பல வருடங்களாக எங்கள் சொந்தப் பொருளாதாரத்தில் வெளியிட்டு இதை ஒரு சவாலாகவே வைத்து வருகிறோம். அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளை அவனது நாட்காட்டியை இதுவரை யாராலும் பொய்யாக்கிட இயலவில்லை – அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் நாட்காட்டிக்கு எதிரான ICOP போன்ற அரைவேக்காடுகள் என்னதான் முயற்சித்தாலும், கியாமநாள் வரை சூழ்ச்சிகள் செய்தாலும் அவர்களால் வெற்றிபெற இயலாது என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.

இறுதியாக, இதே முகம்மது ஒதேயின்
ICOProject  இணையதளம் வெளியிட்டுள்ள (Accurate Times) மென்பொருளைப் பணன்படுத்தியே பிறை இன்னென்ன பகுதிகளில் புறக்கண்களுக்குத் தெரியும் என்று வரைபடத்தை அவர்கள் வெளியிடுகின்றனர். அந்த மென்பொருளில் பிறை வரைபடத்தை மூன்று (Criteria) அடிப்படைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைத்துள்ளனர். அதாவது

1.முகம்மது ஒதே உடைய அடிப்படை,

2.மற்றொரு நபரான பெர்ணட் எல்லப் என்பவரின் அடிப்படை மற்றும்

3.தென் ஆப்பிரிக்க வானியற் கூடத்தின் அடிப்படை (
SAAO)

என மூன்று வகையான வரைபடங்களை தயாரிக்க முடியும். இதில் கடந்த 31-01-2014 அமாவாசை அன்றைய பிறை எங்கு தெரியும் என்பதை அவர்கள் வெளியிட்டுள்ள மென்பொருளின் துணை கொண்டே மேற்படி மூன்று அடிப்படைகளிலும் வரையப்பட்டு கீழே கொடுத்துள்ளோம். அவற்றில் அமாவாசை பிறை தெரியும் என்று கூறும் அந்த வரைபடங்கள் எந்த அளவுக்கு ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றன என்பதை நீங்களே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


 


மக்களே நமது ஹிஜ்ரி காலண்டரின் துல்லியமான பிறைக் கணக்கீட்டை பொய்யாக்க நினைத்தவர்களின் சூழ்ச்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளதுதான் வரலாறு. அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளுக்கு முன் தோற்றுப்போனவர்கள் நமது எஜமானனான அல்லாஹ்விடம் மண்டியிடாமல் அடம் பிடிக்கின்றனர். தோற்றதில் விரக்தியுற்று அமாவாசை அன்று பிறை தெரிகிறது என்று பொய்ச் செய்திகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர். அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் எதிராகப் போர்ப்பிரகடனம் செய்யத் துணிந்துள்ளனர். அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு யார் நேர்வழி காட்டிட முடியும்? இதுபோன்ற ஜாஹிலியாவிலிருந்து நம்மை வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாக. அமாவாசை அன்று தெரியாத தேய்பிறையை புறக்கண்களுக்குத் தெரிகிறது என்று கூறி ஏமாற்றும் அனைவருக்கும் இதையே ஹிஜ்ரி கமிட்டியின் மறுப்பாக வெளியிடுகிறோம்.

அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - மு ஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.') (அல்-குர்ஆன் 9 : 33)

மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே நாடுகிறான். (அல்-குர்ஆன் 8 :8)

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9 : 32)

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு ஊதி அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் புரணமாக்கியே வைப்பான். முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். (அல்-குர்ஆன் 61 : 8,9)

இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான் (அல்-குர்ஆன் 10 : 82)

  

 

 

நன்றி : ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 09-Rabiul Akhir- 1435 / 08-02-2014]

 
 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இறைமார்க்கம் கண்டோர்

Email : info@ottrumai.net


Hilal


Caravan


SECRET SOCIETY


Phase-III


ARRIVAL OF ANTICHRIST


நட்சத்திர பதிவுகள்

பிறையும் புறக்கண்ணும்

வாகனக் கூட்டம் ஹதீஸ்?

தெஹீட்டி பிறை தடுமாறிய சிந்தனை

இஸ்லாமியப் பெயர்கள்

பிரிவுகளை களைந்திடுவோம்!!

அவதார் - ஹாலிவுட் தாக்குதல்கள்

பிறை சமுதாயத்தை பிரிக்குமா?

இளைஞர்களே எச்சரிக்கை!!

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது

இஸ்லாமியப் பொதுஅறிவு

இறுதிநாள் நெருங்குகிறது

டயானா படுகொலை

நல்ல குழந்தைகள் உருவாக

மறுமை நாளின் அடையாளங்கள்

குழந்தை - ரகசியக் களஞ்சியம்.

த டாவின்ஸி கோட்

வெள்ளத்தின் நுரை, 73 பிரிவு

நாஸ்திக நண்பர்களே! 

மனைவியை மகிழ்விப்பது எப்படி?


 

 

 

 

  

 Best view :1280 by 800 px

         Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved       |    Since 2004