முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில்

தமிழ் குர்ஆன்

   

 

Go To Index      

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 23

பிரபல தவ்ஹீது(!) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம் - PART 34.அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல அவரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்கலாமா?

பிறையானது மனிதர்களுக்கு அந்தந்தக் கிழமைகளுக்கான தேதிகளைக் காட்டுவதேயன்றி, கிரகணத் தொழுகையின் வக்தோடு அதை முடிச்சு போடுவது அறிவுடைமையாகாது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இது ஒருபுறமிருக்க, நமக்கு கிரகணம் ஏற்படாத வேளையில் மற்ற பகுதியில் தோன்றும் கிரகணத்திற்காக நீங்கள் தொழுவீர்களா என்று மேற்படி அறிஞர் கேட்டுள்ளார். நிச்சயமாக நாம் அவ்வாறு தொழ மாட்டோம், தொழத் தேவையில்லை என்பதே அதற்கான பதிலாகும்.

உதாரணமாக நாம் லுஹர் தொழுகையை நிறைவேற்றுகிறோம் என்றால் அதற்காக சூரியனால் ஏற்படும் நிழலைக் கணக்கிட்டு அது லுஹர் நேரம்தானா என்பதை அறிந்து லுஹர் தொழுவதைப் போல, நமக்குக் கிரகணம் ஏற்படுவதை கவனித்து அது எற்படும் பட்சத்தில்தான் நாம் தொழ வேண்டும்.

தொழுகை என்ற வணக்கம் அவரவரின் நேரத்தை பொறுத்ததே என்பதையும் மற்ற தொழுகைகளோடு இந்தக் கிரகணத் தொழுகை என்பது எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் முன்னர் கண்டோம். கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி கிரகணத் தொழுகையானது ஒரு கிழமையை மையமாக வைத்தோ, அல்லது ஒரு இடத்தை மையமாக வைத்தோ தொழும் தொழுகை அல்ல.

புரியும் படி சொன்னால், அமெரிக்கசமோவா (
American Samoa) மற்றும் ஃபிஜி (Fiji) தீவுகளைப் பிரிக்கும் சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியில் கிரகணம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஃபிஜியைவிட சுமார் 23 மணி நேரங்கள் பின் தங்கியிருக்கும் அமெரிக்கசமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், ஃபிஜி நாட்டு மக்கள் வெள்ளிக் கிழமையிலும் இருப்பர். இந்த வேளையில் சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியில் நடைபெறும் அந்த கிரகணத்தை இரு நாட்டு மக்களும் ஒரே நேரத்தில் வெவ்வேறு கிழமைகளில் பார்க்க நேரிடும். கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் போதனைபடி இரு நாட்டு மக்களுமே கிரகணத் தொழுகையைத் தொழலாம். இவ்வாறு ஃபர்ளான கடமையில்லாத இக்கிரகணத் தொழுகையை தொழுவதற்குத் தவறினால் அவர்கள் மீது குற்றமில்லை. இதுதான் கிரகணத் தொழுகையின் இலகுவான சட்டமாகும்.

குறிப்பாக ஃபிஜியைவிட சுமார் 23 மணி நேரங்கள் பின் தங்கியிருக்கும் அதே அமெரிக்கசமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், அதே பிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையிலும் இருப்பதை அறிந்தோம். அவ்விரு நாட்டு மக்களும் நண்பகலில் ஒரே சூரியனுக்குக் கீழ் இருந்தாலும் அமெரிக்கசமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையின் நான்கு ரத்அத்துக்கள் கொண்ட லுஹர் தொழுகையைத் தொழவேண்டும், ஃபிஜி தீவின் மக்கள் வெள்ளிக்கிழமையின் இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட ஜூம்ஆ தொழுகையைத் தொழ வேண்டும். இவ்வாறு விதியாக்கப்பட்ட ஃபர்ளான கடமையான ஐங்காலத் தொழுகையைக் குறித்த நேரத்தில் தொழுவதற்குத் தவறினால் குற்றமாகும், தண்டனைக்கு உரியதுமாகும். இதுதான் கடமையான தொழுகையின் சட்டமாகும்.

பின்னர் 23 மணிநேரங்கள் கழித்து அமெரிக்கசமோவா நாட்டு மக்களுக்கு வெள்ளிக் கிழமையுடைய ஜூம்ஆவின் வக்து வரும் வேளையில், அவர்களும் ஃபிஜி நாட்டு மக்கள் தொழுததைப் போல இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட ஜூம்ஆ தொழுகையை அவர்களும் தொழுவார்கள். அந்த நேரத்தில் ஃபிஜி நாட்டு மக்களோ சனிக்கிழமையின் லுஹர் தொழுகையைத் தொழுது கொண்டிருப்பார்கள். இவ்வாறு கிரகணத் தொழுகையின் சட்டங்கள் பர்ளான தொழுகையோடுகூட ஒப்பிடும்படியாக இல்லை.

ஆக இந்தக் கிரகணத் தொழுகையை அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழ வேண்டும் என்பதை வைத்துக் கொண்டு, அவரவர்கள் பிறையை பார்த்து நோன்பை நோற்கட்டும் என்று வாதம் வைப்பது வழிகேட்டில்தான் கொண்டு சேர்க்கும். இப்படி கேள்வி கேட்டு குழப்பி விட்டால் அவற்றை தெளிவுபடுத்தி மக்களுக்கு விளக்கிட ஹிஜ்ரி கமிட்டியினருக்கு சிரமம் ஏற்படலாம் என்றெண்ணி அறிஞர் பெருமகனார்(!) இதுபோன்ற வறட்டு வாதங்களை நம்மை நோக்கி அள்ளி வீசுகிறாரா? – யாமறியோம்.

எனவே அவரவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிரகணம் ஏற்பட்டால் அந்த மக்கள் கிரகணத் தொழுகை தொழுவதைப் போல, அவரவர்கள் பிறையையும் அவரவர்கள் பகுதியில் புறக்கண்ணால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் நோன்பைத் துவங்கலாம் என்று வாதிப்பது மிகவும் தவறானதாகும்.

இருகிழமைகள் இருந்து கொண்டே இருக்கும் உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் கிரகணம் நடைபெறும் போது அப்பகுதியில் இரண்டு வெவ்வேறு கிழமைகளால் பிரிந்து இருக்கும் நாட்டவர்கள் கிரகணத்தைக் கவனிக்கும் வாய்ப்பு ஏற்படலாம். அப்போது அவர்கள் அனைவரும் கிரகணத் தொழுகைiயை தொழலாம் என்று நாம் கூறுகிறோம். இப்படி நாம் கூறுவதை வைத்துக் கொண்டு சங்கம தினத்தில்தான் சூரியக்கிரகணம் ஏற்படுகிறது எனவே புவிமைய சங்கமமும் இரண்டு நாட்கள் என்று புரிந்து கொள்ளலாமா? என்ற ஒரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். அதாவது இருவேறு கிழமைகள் கொண்ட அந்தப் பகுதியினர் கிரகணத் தொழகையை ஒரே நேரத்தில் தொழலாம் என்பதால் புவிமைய சங்கம நாள் என்பதும் அவர்களுக்கு இருவேறு தினங்களாகுமா? என்ற ஐயமே இது.

அதுபோல பௌர்ணமி நாளில்தான் சந்திரக் கிரகணம் ஏற்படும். இருகிழமைகள் இருந்து கொண்டே இருக்கும் உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் இந்த சந்திரக் கிரகணம் ஏற்பட்டு அவ்விரு நாட்டவரும் ஒரே நேரத்தில் சந்திரக் கிரகணத்தை பார்க்கவும் நேரிடும். அப்போது சந்திரக் கிரகணத் தொழகையையும் அந்தப் பகுதியினர் ஒரே நேரத்தில் தொழலாம். அப்படித் தொழுவதால் பௌர்ணமி தினம் அவர்களுக்கு இரண்டு நாட்களில் வரும் என முடிவு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளும் எழலாம். இவற்றிற்கான விடைகளையும் தெளிவாக விளங்கிடக் கடமைப்பட்டுள்ளோம்.

இரண்டு வெவ்வேறு கிழமைகளைக் கொண்ட உலகத் தேதிக் கோட்டுப் பகுதிகளில் அருகருகே வசிக்கும் அந்நாட்டு மக்களுக்குத்தான் இதுபோன்ற பிரச்சனை ஏற்படும். இந்த இடம் தவிர்த்து பூமியில் மிகப் பெரும்பான்மையாக மக்கள் வசிக்கும் வேறு எந்த நாடுகளிலும் உள்ள முஸ்லிம்களுக்கு இரண்டு வெவ்வேறு கிழமைகளில் கிரகணத் தொழுகை தொழும் வாய்ப்புகள் ஏற்படுவதே இல்லை. இது முதலாவது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

இது உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் இருவேறு கிழமைகளிலுள்ள நாடுகளில் கிரகணங்கள் ஏற்பட்டு, அக்கிரகணத்தை அவ்விரு நாட்டு மக்களும் ஒரே நேரத்தில் பார்க்கும்போது மட்டும் ஏற்படும் ஒரு விஷயமாகும். இது இரண்டாவது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். மேலும் அங்கு இருவேறு கிழமைகளிலுள்ள மக்கள் பார்க்கும் அளவிற்கு கிரகணங்கள் அடிக்கடி ஏற்படுவதுமில்லை. எனவே பூமியிலுள்ள பிற நாட்டு மக்கள் இதுபற்றி எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. இது மூன்றாவது விஷயமாகும்.

உலகத் தேதிக் கோட்டுப் பகுதியின் இருவேறு கிழமைகளிலுள்ள பகுதிகளில் அருகருகே வசிக்கும் நாட்டு மக்கள்கூட இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. காரணம் சுன்னத்தான கிரகணத் தொழுகையைப் பொருத்தவரை குறிப்பிட்ட ஒரு கிழமைக்குள்ளாகவோ, அல்லது குறிப்பிட்ட ஒரு எல்கையை மையமாக வைத்தோ கிரகணத் தொழுகையை தொழும்படி நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிடவில்லை. மாறாக கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்பதே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும் என்பதை முன்னரே அறிந்தோம்.

கடமையான தொழுகைகள், நோன்புப் பொருநாள் தொழுகை, ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை, நோன்பு நோற்பது, ஹஜ்ஜூவுடைய கிரியைகளைச் செய்வது போன்றவை குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட வக்திற்குள் செய்து முடிக்க வேண்டிய கடமைகளாகும். ஆனால் சுன்னத்தான கிரகணத் தொழுகை என்பது அப்படி அல்ல. நபி (ஸல்) அவர்கள் கிரகணம் நடைபெரும் கிழமையை மையப்படுத்தியோ அல்லது கிரகணம் நடைபெறும் இடத்தை மையப்படுத்தியோ கிரகணத் தொழுகை தொழும் படி கட்டளையிட்டிருந்தால் நாமும் அவ்வாறுதான் தொழவேண்டும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் நாம் கிரகணத்தைப் கவனிக்கும் போது தொழுது கொள்ளுங்கள் என்றே கூறியுள்ளார்கள். இது முக்கியமாக கவனிக்க வேண்டிய நான்காவது அம்சமாகும்.

இரண்டு கிழமைகள் அருகருகே பிரியும் உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கசமோவா (American Samoa) மக்கள் வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையையும் மற்றும் ஃபிஜி (Fiji) தீவுகளின் மக்கள் வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையையும் தொழுவதை சற்று முன்னர் படித்தோம். அவ்விரு நாட்டவரும் ஒரே சூரியனை ஒரே நேரத்தில் காண்பதால் தங்கள் கடமையான தொழுகைகளை மாற்றித் தொழுவதில்லை. காரணம் நேரம் குறிக்கப்பட்டுவிட்ட கடமையான தொழுகைகளில் ஒன்றான ஜூம்ஆ தொழுகை என்பதை வெள்ளிக்கிழமை என்ற ஜூம்ஆ நாளுக்குள்தான் தொழ வேண்டும் என்பதே நிபந்தனை. இதுபோன்ற நிபந்தனை சூரியக் கிரகணத் தொழுகைக்கோ, சந்திரக் கிரகணத் தொழுகைக்கோ இல்லை.

இதை இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் சூரியக் கிரகணம் நடைபெற்று மேற்படி இருநாட்டு மக்களும் அந்த கிரகணத்தின் காட்சியை பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்கசமோவா (
American Samoa) மக்கள் வியாழக் கிழமையின் லுஹர் தொழுகையையும், சூரியக் கிரகணத் தொழுகையையும் தொழுவார்கள். ஃபிஜி (Fiji) தீவுகளின் மக்களோ வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையையும், சூரியக் கிரகணத் தொழகையையும் தொழுவார்கள். இவ்விரு நாட்டு மக்களும் ஒரு சூரியக்கிரகணத் தொழுகையைத் தொழுவதை வைத்து இவ்விரு நாட்டு மக்களுக்கும் ஒரே கிழமைக்கு உரியவர்கள் என்று யாரும் கூறிவிட முடியாது.

அதுபோல அமெரிக்கசமோவா மக்கள் வியாழக் கிழமை இஷாவிலும், ஃபிஜி (
Fiji) தீவுகளின் மக்கள் வெள்ளிக் கிழமையின் இஷாவிலும் இருக்கும்போது சந்திரக் கிரகணத்தை பார்க்க நேரிடலாம். அவ்வாறு பார்க்க நேரிட்டால் அவ்விரு நாட்டவரும் அந்தந்த கிழமைகளின் இஷாத் தொழுகையைத் தொழுதுவிட்டு கிரகணத் தொழுகையையும் தொழுவார்கள். அப்படி கிரகணத் தொழுகையை தொழுவதை வைத்துக் கொண்டு அவ்விரு நாட்டு மக்களும் ஒரே கிழமையில் உள்ளார்கள் என்று யாரும் கருதிட மாட்டோம்.

மேலும் இவ்விரு நாட்டுமக்களும் ஒரு சூரியக்கிரகணத் தொழுகையை வியாழன், வெள்ளி என்ற இரு கிழமைகளில் தொழுவதை வைத்துக் கொண்டு இரண்டு கிழமைகளில் சூரியக் கிரகணம் நடைபெறுகின்றது என்றும் கூற முடியாது. காரணம் சூரியக் கிரகணம் என்ற அந்த நிகழ்வின் துவக்கம் வியாழன் அல்லது வெள்ளிக் கிழமை என்ற அந்த இரு கிழமைகளில் ஏதேனும் ஒரு கிழமையில் தான் இருக்கும்.
இன்னும் வெள்ளிக் கிழமை ஏற்படும் கிரகணத்தை வியாழக் கிழமையிலுள்ள அமெரிக்கசமோவா (யுஅநசiஉயn ளுயஅழய) மக்கள் இடமாற்றத் தோற்றப் பிழையாகத்தான் (
Parallax Error) வியாழன் அன்று காண்கிறார்கள். இதுதான் உண்மையாகும். எனினும் கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி அவர் தொழுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சூரியக்கிரகணம் மாதத்தின் இறுதிநாளான புவிமைய சங்கம தினத்தில்தான் ஏற்படும் என்பதை அறிந்துள்ளோம். சூரியக் கிரகணம் நடைபெறும் போது இரண்டு கிழமைகளில் இருக்கும் நாட்டவர்களும் தொழலாம் என்கிறோம். இப்படி நாம் கூறுவதை வைத்து புவிமைய சங்கமமும் இரண்டு நாட்கள் ஏற்படுமா? என்று கேட்பது அடிப்படையிலேயே தவறான கேள்வியாகும். காரணம்

• புவிமைய சங்கமம் (
Geocentric Conjunction) என்பது பூமியிலுள்ள குறிப்பிட்ட கிழமைக்குள், ஒரு குறிப்பிட்ட பகுதியை மையமாகக் கொண்ட ஒரு நிகழ்வாகும். சூரியக் கிரகணம் அப்படி அல்ல.

• இந்த சங்கம நிகழ்வு என்பது சில நொடிப் பொழுதுகள் நடைபெறும் நிகழ்வாகும். மாறாக சூரியக் கிரகணத்தைப் போல மணிக்கணக்கில் நிகழும் நிகழ்வல்ல.

• புவிமைய சங்கமம் என்பது ஒவ்வொரு மாத இறுதியிலும் தவறாமல் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். கிரகணங்கள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் நடைபெறுவதில்லை.

குறிப்பாக இந்த புவிமைய சங்கம தினத்தை அமாவாசை என்று பிற மதத்தினர் பொதுவாக அழைக்கின்றனர். பிற மதத்தவர்கள் தங்களின் மத வழிபாடுகளை குறிப்பிட்ட அந்த அமாவாசை தினத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட (அதாவது இரண்டு நாட்கள்கூட) அமாவாசை தினங்களாகக் கருதி நடைமுறைப் படுத்துகின்றனர். ஆனால் நாம் குறிப்பிடும் இந்த புவிமைய சங்கமம் என்பது சந்திர மாதத்தின் இறுதி நாளான 'தனித்த ஒருநாளில்' – 'ஒரு கிழமையில்' -'ஒரு தேதியில்' மட்டுமே நடைபெறும் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. புவிமைய சங்கம நாள் என்பது முழுமையான ஒருநாள் மட்டுமே. ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் அல்ல. எனவேதான் புவிமைய சங்கம நாளை அமாவாசை தினம் என்றுகூட அழைப்பதை நாம் பெரும்பாலும் தவிர்த்து வருகிறோம்.

எனவே மேற்கூறிய விளக்கங்களை திறந்த மனதோடு உள்வாங்கிட வேண்டுகிறோம். உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் இரு கிழமைகளில் கிரகணத் தொழுகை நடைபெறும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இருப்பினும் இது வழக்கமாக நடைபெறும் ஒரு சம்பவம் அல்ல. காரணம் அனைத்து கிரகணங்களும் அவ்விடத்தில் நடைபெறுவதில்லை. எனவே மேற்படி கிரகணங்களை மையப்படுத்தி இரண்டு தினங்களில் சங்கமநாள் என்றோ, பௌர்ணமி தினம் இரண்டு நாட்களில் வரலாம் என்றோ முடிவு செய்வது தவறானதாகும்.

கடமையான தொழுகைகள், நோன்புப் பொருநாள் தொழுகை, ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை, நோன்பு நோற்பது, ஹஜ்ஜூவுடைய கிரியைகளைச் செய்வது போன்றவை குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட வக்திற்குள் செய்து முடிக்க வேண்டிய கடமைகளாகும். ஆனால் சுன்னத்தான கிரகணத் தொழுகை என்பது அப்படி அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறோம். நாம் கிரகணத்தை எப்போது கவனிக்கின்றோமோ அப்போது தொழ வேண்டிய ஒரு சுன்னத்தான தொழுகையாகும். இதை புரிந்து கொண்டால் எந்தக் குழப்பங்களும் வராது.

5.கிரகணத் தொழுகையையும், நோன்பு நோற்பதையும் ஒப்பிடுவது தவறானதே!

கிரகணத் தொழுகையை மையப்படுத்தி நோன்பு நோற்பதை ஒப்பிட்டுக் கூறவியலாது. அதுபோல இந்தக் கிரகணத் தொழுகையை வைத்து பிறைகளைக் கவனித்து மாதங்களைத் துவங்கும் ஒரு விஷயத்தோடும் ஒப்பிட்டுக்கூற முடியாது. இவற்றை அடுக்கடுக்கான உதாரணங்களை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்.

1. கிரகணம் என்பதே உலகின் சில பகுதிகளில், குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு மட்டுமே தெரியும் நிகழ்வாகும். கிரகணமானது உலகில் ஒரு நாட்டில் துவங்கி, பின்னர் அனைத்து நாடுகளையும் கடந்து, அது ஆரம்பித்த நாட்டிற்கே திரும்பிச் சென்று முடியாது, இதுவே அறிவியலின் நிரூபிக்கப்பட்ட உண்மை. இதை உணர்ந்துதான் இந்தக் கேள்வியை தைரியமாக அறிஞர் எழுப்பியுள்ளார். இப்படி கேள்வி எழுப்பியதிலிருந்தே கிரகணம் என்ற அந்த நிகழ்வும், 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு கிழமைக்குள் அனைத்து முஸ்லிம்களும் நோன்பு பிடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடும் ஒன்றில்லை என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

2. இன்னும் ஒரு வருடத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் எப்போதாவது நடைபெறுவதுதான் இந்தக் கிரகணத் தொழுகை. இக்கிரகணத் தொழுகை சுன்னத்தான ஒரு அமல்தான் என்பதைத் தெரிந்த நிலையிலும், அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு நோற்றலோடு ஒப்பிட்டு அறிஞர் வாதம் புரிந்துள்ளதை என்னவென்று சொல்வது?.

3. இந்தக் கிரகணத் தொழுகையை வைத்து அவரவர்கள் ரமழானைத் துவங்க அவரவர்கள் பகுதிகளில் பிறையைப் பார்த்து முடிவு செய்யட்டும் என்ற வாதம், அறிஞரின் நிலைப்பாட்டின் படியும் தவறான வாதமல்லவா?. உதாரணமாக தமிழகத்தில் சூரிய சந்திரக் கிரகணம் தெரிகின்றது என்று வைத்துக் கொள்வோம். முதலில் அந்தக் கிரகணம் புறக்கண்களுக்குத் தெரிய ஆரம்பித்த பகுதியிலிருந்து துவங்கும். பிறகு தமிழகம் முழுவதும் அது காட்சியளிக்கும். பின்னர் அது முடியும் வரையுள்ள பல்வேறு நாடுகளிலுள்ள பலகோடி மக்களையும் சென்றடைந்து முடியும். கிரகணம் தெரிந்த அனைத்து நாட்டு முஸ்லிம்களும் கிரகணத் தொழுகையை அவர்களுக்கு தெரிகின்ற அந்தந்த நேரத்தில்தான் தொழுவார்கள்.

இப்படியிருக்க இந்தக் கிரகணத் தொழுகையை வைத்து தத்தமது பகுதிகளில் பிறை பார்க்கும் நிலைப்பாட்டை எவ்வாறு நிலைநாட்ட முடியும்? தத்தமதுபகுதி பிறை நிலைப்பாடு என்பதே கேரளாவில் பார்க்கும் பிறை தமிழகத்தை கட்டுப்படுத்தாது, தமிழகத்தில் பார்க்கப்பட்ட பிறை இலங்கை முஸ்லிம்களை கட்டுப்படுத்தாது, தமிழகத்திற்குள்ளேயே ஒரு ஊரில் பார்க்கப்படும் பிறை மற்ற ஊர்களுக்குப் பொருந்தாது என்பதுதானே?

4. ஆனால் சூரிய,சந்திரக் கிரகணங்கள் அப்படி அல்லவே? தமிழகத்தில் கிரகணம் நடைபெறுகிறது என்றால் தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும், அல்லது சில ஊர்களில் மட்டும் என்ற பாகுபாடு வைத்தா கிரகணம் ஏற்படுகிறது? அல்லது இலங்கையில் கிரகணம் தெரிந்து, தமிழ்நாட்டில் தெரியாமல் மறைந்து, பின்னர் கேரளாவில் தெரிந்து, இப்படியா கிரகணம் நடக்கிறது? இல்லையே. பிறகு கிரகணத் தொழுகையை வைத்து தத்தமது பகுதி பிறை அல்லது தமிழகப்பிறை நிலைப்பாடுகளை எவ்வாறு நிலைநாட்டிட முடியும்?

5. இலங்கையில் ரமழான் முதல் நோன்பாக இருக்கும், அதேநாளில் தமிழகத்தில் ஷஃபான் முப்பதாகவும், கேரளாவில் ரமழான் முதல் நோன்பாகவும் இருக்கலாம் என்பதே தத்தம்பகுதி பிறை அல்லது தமிழகப்பிறை நிலைப்பாட்டின் மையக் கருத்தாகும். கிரகணத் தொழுகையை வைத்து கேள்வி எழுப்பியது மாபெரும் தவறு என்பதை கிரகணம் தெரியும் பாதையின் அளவை அறிந்து கூடவா புரிந்து கொள்ள முடியவில்லை?

இதில் ஒரு நகைச்சுவை என்ன தெரியுமா? அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத்தனம் என்றுதான் அதைக் கூற வேண்டும் என்று வாதம் வைக்கிறார். இப்படி ஒரு வாதத்தை வைத்தவர் இறுதியில் அவராகவே சந்திரன் அடிப்படையில் மாதத்தைத் தீர்மானிக்கும் போது சூரியக் கணக்கில் உள்ள நேர வித்தியாசத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்று அதே பிறை ஆய்வு புத்தகத்தில் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் வாக்குமூலமும் தந்துள்ளார். சத்தியத்தை இப்படித்தான் அல்லாஹ் நிலைநாட்டுவான் போலும்.

மேலும், 'ஃபஇன்கும்ம அலைக்கும்' என்பதற்கு உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்றும் பிறை வானில் இருக்கிறதா இல்லையா என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். உண்மையில் வானில் பிறை இருந்து அதை மேகம் மறைத்திருந்தால் கூட அம்மாதத்தை முப்பது நாட்களாகக் கருதிக் கொள்ளுங்கள் என்றும் மேற்படி அறிஞர் அவர்கள் சர்வ சாதாரணமாக எழுதி புத்தகமும் வெளியிட்டுள்ளார்.

அவருடைய வாதப்படியே நாமும் கேட்கிறோம், தமிழகத்திலோ அல்லது தத்தமது பகுதியிலோ ஒருநாளில் முழு சந்திரக்கிரணம் (
Total Lunar Eclipse) ஏற்பட்டு அது முடியும் வரை அதைப் புறக்கண்ணால் யாரும் பார்க்க முடியாத அளவிற்கு (ஃபஇன்கும்ம அலைக்கும் ஆக உள்ளது, அதாவது அவருடைய மொழியாக்கத்தின்படி) மேகமூட்டமாக இருக்கும் நிலை ஏற்பட்டால், இப்போது தவ்ஹீது(!) அறிஞர் கிரகணத் தொழுகையை தொழுவாரா மாட்டாரா? இக்கேள்விக்கு என்ன ஃபத்வா கொடுக்கப் போகிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

மக்களே இனி மேற்படி அறிஞர் கிரகணத்தைப் பற்றி பேசி உங்களை மயக்கினால், சந்திரக்கிரகணம் நாளில் மேகமூட்டமாக ஆகி தத்தமது பகுதியில் சந்திரனை புறக்கண்ணால் பார்க்க முடியாமல் போய் விட்டால் என்ன செய்வது? கிரகணத் தொழுகையை தொழலாமா? அல்லது வேண்டாமா? என்று நீங்கள் அவரிடம் எதிர் கேள்வி எழுப்புங்கள்.

மேலும் சந்திரக்கிரகணம் பற்றி சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும் என்று வாதம் எழுப்பியுள்ளார்.

முழுசந்திரக் கிரகணம் ஏற்படும் போது உலகின் பாதி பகுதியில் சுமார் 50 சதவிகித மக்கள் வரை சந்திரக் கிரகணத்தை புறக்கண்களால் பார்க்க முடியும் என்பதை அவரும் அறிந்திருப்பார். இப்போது அறிஞர் கூறும் கிரகண நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உலகிலுள்ள 50 சதவீத மக்களும் அதே சந்திரனை அடிப்படையாக வைத்து மாதத்தை ஆரம்பிக்கலாம், அதன் அடிப்படையிலேயே உலகிலுள்ள 50 சதவீத மக்களும் ஒரே நாளில் நோன்பையும் பிடிக்கலாம் என்று கூறத் தயாரா? என்று அறிஞர் அவர்களிடம் கேள்வி எழுப்புகிறோம். தத்தமது பகுதி பிறைக் கருத்தே சரியானது என்று பிடிவாதமாக இருக்கும் அவர், தனது மனசாட்சியைத் தொட்டு, பிதற்றாமல் உண்மையை உரைப்பாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்?

மேலும் சந்திரக் கிரகணத்தைப் பற்றி தெளிவாக சிந்தித்தால் உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம்தான் நிரூபணமாகிறது. மாறாக அது அடிபட்டுப் போகவில்லை. அதே நேரத்தில் அதே சந்திரக் கிரகணம் பற்றி சிந்தித்தாலே தத்தமது பகுதி பிறையே சரியானது என்ற தவறான வாதம் அடிபட்டு விழுந்து இறந்து விட்டது.

சந்திரக் கிரகணம் பற்றி சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும் என்று வாதம் எழுப்பியவர், குறைந்த பட்சம் அதே சந்திரக் கிரகணத்தை அடிப்படையாக வைத்து உலகிலுள்ள 50 சதவீத மக்களும் ஒரே நாளில் நோன்பையும் பிடிக்கலாம் என்றும் நிச்சயமாக ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அப்படி இவர் ஒப்புக் கொண்டாலும் நாம் ஆச்சரியப் படுவதற்கில்லை.

காரணம் தத்தமது பகுதி பிறையிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று தற்போது தமிழகப் பிறையில் நின்று கொண்டிருக்கும் அவர், சர்வதேசப் பிறை நிலைப்பாட்டை நோக்கிச் செல்கிறார் என்று நாமும் புரிந்து கொள்வோம். இறுதியில் பிறை குழப்பத்திற்கு துல்லிய பிறை கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்த சந்திர நாட்காட்டியின் தீர்வை நோக்கி அவர் பயணித்தே ஆக வேண்டி கட்டாயத்திற்கு அப்பயணம் அவரை கொண்டு வந்து சேர்க்கும் என்பதே உண்மை.

கிரகணத் தொழுகை சம்பந்தமாக அறிஞர் அவர்கள் மிகப் பெரும் ஆய்வுகளைச் செய்துள்ளதைப் போல பேசிய வீடியோ பதிவுகள் நம்மிடம் உள்ளன. அதில் சந்திரக் கிரகணத் தொழுகையைப் பற்றி பேசும் போது, நபி (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி நிமிர்ந்து சந்திரக் கிரகணத்தைப் பார்த்துப் பார்த்து கிரகணம் முடியும் வரை தொழுததாக அறிஞர் குறிப்பிடுகிறார். மேலும் மற்ற தொழுகையின் போது வானத்தைப் பார்க்கக் கூடாது, ஆனால் சந்திரக் கிரகணத் தொழுகையின் போது கிரகணம் முடிந்து விட்டதா என்பதை உறுதிபடுத்த தொழுகையிலேயே வானத்தைப் பார்க்கலாம் என்பதற்கு இது ஆதாரம் என்றும் பேசியுள்ளார்.

பிறை சம்பந்தமாக எந்த ஒரு நிலைப்பாட்டிலும் நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மிச்சமிருக்கும் என்பது அண்ணனின் நிலைப்பாடு. எனினும் கிரகணத் தொழுகை விஷயத்தை அண்ணன் ஆணித்தரமாக வாதிக்கிறார். எனவே கிரகணத் தொழுகை விஷயத்தில் அனைத்துக் கேள்விகளுக்கும் அண்ணனிடம் பதில் உண்டு என்றே தெரிகிறது. ஆகையால் அவருடைய கிரகணத் தொழுகை ஆய்வை மேலும் மெருகூட்டுவதற்காக கீழ்க்காணும் கேள்விகளை அவரின் ஆய்வுக்காக வைக்கிறோம். அறிஞர் அவர்கள் இவற்றை கருத்தில் கொண்டு தனது கிரகணத் தொழுகை ஆராய்ச்சியை மீளாய்வு செய்வார் என்றும் எதிர்பார்க்கிறோம்.

1. நபி (ஸல்) அவர்கள் சந்திரக் கிரகணத் தொழுகையைத் தொழுதார்கள் என்றும், அப்போது சந்திரக் கிரகணம் முடிந்து விட்டதா என உறுதி செய்வதற்கு வானத்தைப் பார்த்தார்கள் என்பதையும் தெரிவிக்கும் ஸஹீஹான ஹதீஸ் எந்தக் கிரந்தத்தில் உள்ளது? குறிப்பு : இங்கு ஸஹீஹான ஹதீஸைத் தாருங்கள் என்று கேட்டிருக்கிறோம்.

2. கிரகணத் தொழுகை சம்பந்தமாக வரும் ஹதீஸ்களில் '...ஃபஇதாரஅய்த்துமூஹூமா' என்று வரும் சொற்றொடர்கள் அவ்விரண்டிற்கும் கிரகணம் ஏற்படுவதை கவனித்தால் என்று சூரியனையும், சந்திரனையும் தனித்தனியாக குறித்து வருகிறதா? அல்லது கிரகணம் என்ற நிகழ்வில் சூரியனும், சந்திரனும் ஒருசேர பங்கு பெற்றிருக்க வேண்டும் என்ற பொருளில் அமைந்துள்ளதா?

3. நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகை தொழுததாக வரும் ஸஹீஹான ஹதீஸ்களில் எந்தந்த நபிமொழிகள் சூரியக் கிரகணத் தொழுகையை குறிப்பிடுகின்றன, எந்தெந்த ரிவாயத்துகள் சந்திக்கிரகணத் தொழுகையைக் குறித்து வந்துள்ளன. அவற்றை அறிஞர் மக்களுக்கு வேறுபடுத்தி பிரித்து விளக்க வேண்டும்.

பிறை சம்பந்தமான ஹதீஸ்களும், அது சம்பந்தமான சான்றுகளும் ஒருங்கிணைக்க முடியாமல் உள்ளன என்பது அண்ணனின் பிறை நிலைப்பாடு. பிறை சம்பந்தமான ஹதீஸ்கள் ஒருங்கிணைந்து இல்லை என்ற அவரின் கருத்து அவை பிரிந்து பிரிந்து தனித்தனியாக உள்ளதை உறுதி செய்கிறது. எனவே அவ்வாறு பிரிந்து கிடக்கும் அத்தகைய ஹதீஸ்களில் சந்திரக் கிரகணத் தொழுகை பற்றிய ஹதீஸ்களை வேறுபடுத்தி பிரிப்பது அண்ணனுக்கு மிக இலகுவானதுதான்.

அல்லது சூரியக்கிரகணம் மற்றும் சந்திரக்கிரகணம் தொடர்பான ஹதீஸ்கள் என்று தனித்தனியாக பிரித்து மக்களுக்கு விளக்கிட அண்ணனுக்கு இயலவில்லை என்றால் பிறை சம்பந்தமாக வரும் ஹதீஸ்களை ஒருங்கிணைக்கவும் முடியவில்லை, பிரிக்கவும் முடியவில்லை என்று அறிஞர் ஒப்புக் கொள்வதாக அது அமையும். ஆக ஒரு விஷயத்தில் ஹதீஸ்களை ஒருங்கிணைக்கவோ, பிரிக்கவோ இயலாத ஒரு மனிதர் அந்த விஷயத்தில் எத்தகைய ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டிருப்பார் என்பதை மக்களே விளங்கிக் கொள்ளுங்கள்.

பிறை விஷயத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளன என்பதும் பிறை சம்பந்தமாக எந்த ஒரு நிலைப்பாட்டிலும் நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மிச்சமிருக்கும் என்பதும் அண்ணின் நிலைப்பாடு. எனவே நாம் இதுவரை எழுப்பியுள்ள அனைத்து கேள்விகளையும் குழப்பம் என்றோ, பதில் சொல்ல முடியாமல் மிச்சியிருக்கும் கேள்வி பட்டியலிலோ சேர்த்து விடாமல் ஆய்வு செய்து அறிவிப்பார் என்று நம்புகிறோம். ஹிஜ்ரி கமிட்டி கூறும் சத்தியமான பிறை நிலைப்பாட்டிற்கு சான்று பகர அறிஞர் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

எனவே கிரகணத் தொழுகையின் சட்டம் கடமையான தொழுகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். அவரவர் 'வக்தில்' தொழுவதைப் போல மாதத்தின் முதல் நாளையும் அவரவர்களே முடிவு செய்ய முடியாது என்பதையும் தெரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல அவரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்பது தவறான முடிவாகும். மேலும் கிரகணத் தொழுகையையும், நோன்பு நோற்பதையும் ஒப்பிட்டுக் கூறிடவே இயலாது என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். 

 


 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 24-04-1435 / 23-02-2014]
 

 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved