முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில்

தமிழ் குர்ஆன்

   

 

Go To Index      

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 22

பிரபல தவ்ஹீது(!) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம் - PART 22. கிரகணத் தொழுகை கடமையான தொழுகையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற பழமொழி தமிழில் உண்டு. ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் போது ஆத்திரப்படாமல் நிதானமாக, உளத்தூய்மையோடு, நல்லெண்ணத்துடன் ஆய்வு செய்தால்தான் அறிவுப்பூர்வமான, உண்மையான கருத்துக்கள் ஆய்வின் வெளிப்பாடாக அமையும். ஆனால் மேற்கண்ட அறிஞர் அவர்களோ, நமக்குத் தேதிகளைத் தெரிவிக்கும் சந்திரனைப் பற்றி நாம் கூறினால், அவர் நேரத்தைக் தெரிவிக்கும் சூரியனைப் பற்றி நம்மிடம் கேள்வி கேட்டு விட்டு அறிவார்ந்த கேள்வியை கேட்டு விட்டதாக நினைத்துக் கொள்வார் என்பதை அவரது எழுத்தில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

மக்களே! முதலில் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அமையப் பெற்ற தொழுகையைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பிறைகளின் காட்சியால் அமைவது தேதிகளாகும். 29 அல்லது 30 தேதிகளை உள்ளடக்கியதே ஒரு மாதமாகும். இவ்வாறு ஒவ்வொரு மாதத்தையும், அந்த மாதத்தின் துவக்கம் மற்றும் முடிவின் அடிப்படைகளையும் பிரித்தறிந்து, பிறையின் படித்தரங்களை (மனாஜிலை) கவனிப்பது என்பது தொழுகை வக்திலிருந்து எவ்வாறு தனித்து விளங்குகிறது என்பதையும் விளங்க வேண்டும்.

வக்து என்பது அந்தந்த பகுதியின் நேரத்தைப் பொறுத்ததுதான். நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது (4:103) என்ற குர்ஆனின் கூற்றை நிதானமாக சிந்தித்தறிய ஏன் இவர்கள் தவறுகிறார்கள்?. வெள்ளிக்கிழமை ஜூம்ஆநாளில் உலக முஸ்லிம்கள் அனைவரும் அவரவர் ஜூம்ஆ நேரத்தில் ஜூம்ஆ தொழுகையை அவரவர்கள் ஜமாஅத்தோடு தொழுவதைப் போல, ஒருநாளின் லுஹருடைய வேளை வந்துவிட்டால் அந்த நாளின் லுஹர் தொழுகையை அந்த லுஹர் வக்தில் தொழுதே ஆக வேண்டும். அதுபோல நோன்பு வைத்திருப்பவர் அவரவர் மஃரிபில் சூரியன் மறையும் போதும் அவரவர் நோன்பை முடித்து விட்டு மஃரிபு தொழுகையைத் தொழ வேண்டும். இவ்வாறான தொழுகைகள் அந்தந்த கிழமைகளுக்குள் அந்தந்த வக்துக்குள் தொழ வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.

கடமையான ஐந்து வேளைத் தொழுகைகள் அதற்குரிய நேரங்களின் அடிப்படையில் அமையப் பெற்ற அமல்களாகும். ஒரு கிழமைக்குரிய ஐந்து கடமையான தொழுகைகளையும், சுன்னத்தான உபரியான தொழுகைகளையும் 24 மணிநேரம் கொண்ட அந்தந்த கிழமைக்குள் தொழுது முடித்து விடுகிறோம். இதுவே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் ஆகும்.

அதாவது வியாழக்கிழமை தொழ வேண்டிய லுஹர் தொழுகையை, வெள்ளிக்கிழமை அன்று நாம் தொழ மாட்டோம். அதுபோல வெள்ளிக்கிழமை தொழ வேண்டிய ஜூம்ஆ தொழுகையை வெள்ளிக்கிழமை அல்லாத மற்ற நாட்களில் தொழக் கூடாது. ஆக வல்ல அல்லாஹ் முஸ்லிம்களாகிய நமக்கு விதியாக்கியுள்ள தொழுகை என்பது அவரவர்களின் 'வக்து' அடிப்படையில் அமைந்த, ஒரு கிழமைக்குள் தொழுது முடிக்க வேண்டிய, நேரம் குறிப்பிடப்பட்ட ஃபர்ளான கடமையாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வெள்ளிக்கிழமை என்ற 24 மணிநேரங்கள் கொண்ட அந்த நாள், உலக முஸ்லிம்கள் அனைவரின் ஐங்காலத் தொழுகையை உள்ளடக்கிய சிறப்பான ஒரு நாளாகும். இந்த வெள்ளிக்கிழமை என்பது ஒரு வருடத்தின் அனைத்து மாதங்களிலும், அந்தந்த மாதங்களின் ஒவ்வொரு வாரங்களிலும் உள்ள 7 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வெள்ளிக்கிழமை நாளில் ஜூம்ஆ என்ற இரண்டு ரக்அத்துகள் கொண்ட ஃபர்ளானத் தொழுகையை முஸ்லிம்கள் அனைவரும் 24 மணிநேரம் கொண்ட அந்த வெள்ளிக்கிழமைக்குள், ஜூம்ஆவுடைய வக்திற்குள் தொழதிட வேண்டும். ஜூம்ஆ தொழுகை உட்பட பர்ளான தொழுகைகளை தொழாமல் விட்டுவிட்டால் கடமையாக்கப்பட்ட வணக்கத்தைச் செய்யாத குற்றமும் பாவமுமாகும்.

ஆனால் கிரகணத் தொழுகை என்பது இத்தகைய நிபந்தனைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.

1. ஒரு வாரத்தின் எல்லா நாட்களிலும் சூரிய, சந்திரக் கிரகணங்கள் ஏற்படுவதில்லை.

2. சூரிய, சந்திரக் கிரகணத் தொழுகைகளை குறிப்பிட்ட கிழமைக்குள்தான் தொழுது முடிக்க வேண்டும் என்ற அளவுகோல் இல்லை.

3. வருடத்தின் எல்லா மாதங்களிலும் இக்கிரகணங்கள் ஏற்படுவதுமில்லை.

4. கிரகணத் தொழுகை என்பது முஸ்லிம்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட ஃபர்ளான கடமையுமல்ல.

5. கிரகணம் என்பது பொதுவாக உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒரே நாளுக்குள் காட்சியளிபதுமில்லை.
(அதாவது ஜூம்ஆ தொழுகை உட்பட பர்ளான தொழுகைகள் கிழக்குத் திசையின் துவக்கத்தில் வசிக்கும் முஸ்லிம்களிலிருந்து ஆரம்பித்து மேற்குத் திசையின் முடிவு வரை வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஒரே நாளுக்குள் தொழுது முடிப்பதைப்போல கிரகணம் அனைத்து மக்களையும் உள்ளடக்கும் வகையில் இல்லை.)

இவற்றை தெளிவாக பிரித்தறிந்து விளங்கி முஸ்லிம்களாகிய நம்மீது கடமையான ஐங்கால தொழுகைகளிருந்து கூட இந்தக் கிரகணத் தொழுகை இவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை புரிய வேண்டும். இவ்வாறு கடமையான பிற தொழுகையுடனேயே இந்தக் கிரகணத் தொழுகையை ஒப்பிட இயலாது என்ற நிலையில் மனிதர்களுக்குத் தேதியை அறிவிக்கும் பிறையின் காட்சியையும், ரமழான் மாதத்தை துவங்குவதையும், இந்தக் கிரகணத் தொழுகைகளை வைத்து எவ்வாறு ஒப்பிட முடியும்?. மக்களே சிந்தியுங்கள்.

இன்னும் உலக முஸ்லிம்களாகிய நாம் வெள்ளிக்கிழமை என்ற 24 மணி நேரங்கொண்ட ஒரு நாளுக்குள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி விடுகிறோம். அதுபோல 24 மணிநேரம் கொண்ட ஒரு முழு நாளுக்குள் பெருநாள் தொழுகைளை தொழ முடியும், தொழவும் வேண்டும். அதுபோல 24 மணிநேரம் கொண்ட ஒரு முழு நாளுக்குள் நோன்பையும் துவங்க இயலும். குர்ஆனும் சுன்னாவின் தெளிவான வழிகாட்டுதல் இதுதான். இப்படி நாம் கூறினால், அமெரிக்காவில் முஸ்லிம்கள் லுஹர் தொழுதால் அந்த நேரத்தில் நீங்களும் லுஹர் தொழுவீர்களா? இன்னும் சவுதிஅரேபியா தொலைக்காட்சியில் நோன்பு திறக்கும் காட்சி ஒளிபரப்பாகும் வேளையில்தான் நீங்களும் நோன்பைத் திறப்பீர்களோ? இன்னும் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா? என்று கேள்விகளை அடுக்கிவிட்டு, ஒற்றுமை கோஷம் போட வந்து விட்டார்கள் பாருங்கள் என்று அறிஞர் வினா எழுப்புகிறார்.

உலக மக்கள் 'ஒரே நாளில்' பெருநாள் கொண்டாட முடியும் என்பதை 24 மணிநேரம் கொண்ட ஒரு முழுமையான நாளைக் குறிக்கிறது என்பதை அறியாமல் 'ஒரே நேரத்தில்' நாம் பெருநாள் கொண்டாடச் சொன்னதாக அவதூறை பரப்புவது நியாயமா?.

இவ்வாறு நாள்ஃகிழமை (
Day/Date) என்பதையும், நேரம் (Time) என்பதையும் பிரித்தறியாமல் வாதம் புரிவதே அறிஞரின்(!) வாடிக்கையாகி விட்டது. அவரை பேரறிஞராக ஏற்றுள்ள அவரது இயக்கத்தினரும் 'ஆஹா எப்படிப்பட்ட கேள்வி இது? குறுக்கை நொறுக்கும் அளவிற்கு அல்லவா அண்ணனின் வாதம் உள்ளது? மாஷா அல்லாஹ்! தபாரக்கல்லாஹ்!' என்று நினைத்து புளங்காகிதம் அடைகின்றனர்.

இன்னும் ஒரு வருடத்திற்கு ஷஃபான் 29-வது நாள் மற்றும் ரமழான் 29-வது நாள் என்ற அந்த இரண்டு நாட்கள் மட்டும், பிறையைப் பார்க்க வேண்டுமாம்! அதுவும் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்கச் சட்டமாம்! பிறை பார்க்க வேண்டியதே 'யவ்முஷ்ஷக்' என்ற சந்தேகத்திற்குரிய நாளில் மட்டும்தானாம்! இவ்வாறு மார்க்கத்தின் பெயரால் மக்கள் தவறாக விளங்கியுள்ளதற்கும் மேற்படி அறிஞர்களே காரணம்.

லூனார் (Lunar) என்றாலே கிறுக்கு என்று பொருள் என்றும் பிறை என்றாலே கிறுக்குப் பிடிப்பது போன்றுதான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளதை இங்கு மீண்டும் நினைவு கூறுகிறோம். பிறை விஷயத்தில் மேற்படி அறிஞரைப் போன்ற ஞானமில்லாதவர்கள் செய்த பிரச்சாரத்தினால்தான் நோன்பு வைக்க ஹராமான நாட்களில் பலர் நோன்பை நோற்கின்றனர். ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் என பிளவுபட்டு பெருநாள் கொண்டாடுகின்றனர். இவற்றை யாரும் மறுக்க இயலுமா?.

எனவே மேற்கூறிய விளக்கங்களை மனதில் நிறுத்தி, முதலில் கிரகணத் தொழுகை என்பது கடமையான ஐவேளைத் தொழுகையிலிருந்தும் எவ்வாறெல்லாம் வேறுபடுகிறது என்பதை அறிந்து மனதில் உள்வாங்கிக் கொள்ள வேண்டுகிறோம்.

3. அவரவர் 'வக்தில்' தொழுவதைப் போல மாதத்தின் முதல் நாளையும் அவரவர்களே முடிவு செய்யலாமா?

அவரவர் வக்தில் தொழுகையை நிறைவேற்றுவதைப் போல ஒரு மாதத்தின் முதல் நாளையும் அவரவர்களே முடிவு செய்யலாம் என்பது மிகமிகத் தவறான வாதமாகும்.

சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்ற இறைவசனத்தின் அடிப்படையில் இரண்டையும் துல்லியமாகக் கணக்கிடலாம் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். இந்நிலையில் ஒரு மாதம் எந்த கிழமையில் ஆரம்பமாகிறது என்பதை வரையறுக்கும் சந்திரனை, தொழுகை நேரத்தை வரையறுக்கும் சூரியனின் விதிகளோடும், தன்மைகளோடும் ஒப்பிட்டு இணைத்துக் கூறுவது அறிவுடைமையாகாது.

சந்திரனின் படித்தரங்கள் (மனாஸில்) மனிதர்களுக்குத் தேதியைக் காட்டக் கூடியது. சூரியன் அந்தந்த நாளின் நேரத்தைக் தெரிவிக்கக் கூடியது. ரமழான் நோன்பு என்பது இவ்விரண்டையும் அடிப்படையாக வைத்து குறித்த தேதியில், நேரம் குறிக்கப்பட்ட ஃபஜ்ரு முதல் மஃரிபு வரையுள்ள வக்திற்குள் நிறைவேற்ற வேண்டிய கடமை என்பதை விளங்க வேண்டும்.

சூரியனின் சுழற்சியை மையமாக வைத்து அளவிடப்படும் தொழுகை நேரங்கள் அவரவர் 'வக்தின்' அடிப்படையில் நிர்ணயிக்கப் படுவதைப் போல, சந்திரனின் படித்தரங்களில் (மனாஜில்) முதல் படித்தரமான பிறந்த பிறையையும் அவரவர்கள் தத்தமது பகுதியில் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற கூற்று மிகவும் பிழையானதாகும். இந்தத் தவறான கூற்றுக்கு கிரகணத் தொழுகையை மையப்படுத்தி அதுதான் இதற்கு ஆதாரம் என்று கூறுவது அபத்தமானதே! மக்களின் சிந்தனையைத் திசை திருப்புவதே!. இப்படி குழப்பமான கருத்துக்களை பரப்பிவரும் அறிஞர் தமது சிந்தனையை சீர்தூக்கிப் பார்த்து சீர்திருத்தம் செய்ய வேண்டுகிறோம்.

சூரிய, சந்திரக் கிரகணங்கள் ஒரு மாதத்தின் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று மூன்று வெவ்வேறு நாட்களில் ஏற்படுவதில்லை. இந்நிலையில் கிரகணத்தை மையமாக வைத்து ரமழான் முதல் நோன்பை முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறான நாட்களில் துவங்கினாலும் அது தவறல்ல என்று மேற்படி அறிஞர் வாதிப்பது மிகவும் பிழையானதாகும். இதை மீண்டும் இங்கு நினைவு படுத்துகிறோம்.

சந்திரனும், சூரியனும் தன்மைகளால் வெவ்வேறானவை, பெரும் வித்தியாசங்கள் கொண்டவை என்பதை நாம் பலமுறை தெளிவாக விளக்கியுள்ளோம். புரியும்படி சொல்வதென்றால், ஒரு மாதத்தின் முதல்நாளின் சூரியனில் துவங்கி 7-வது நாளின் சூரியன், 14-வது நாளின் சூரியன் உட்பட அந்த மாதத்தின் இறுதிநாள்வரை தென்படும் சூரியன் வரை அனைத்து நாட்களில் தென்படும் சூரியனையும் நாம் கண்காணித்தால் அதன் காட்சிகளில் எந்த வித்தியாசங்களும் காணப்படுவதில்லை. அதன் வடிவத்திலும், அதன் வெளிச்சத்திலும், புறக்கண்களுக்குத் தெரியும் கால அளவிலும் பெரும் வித்தியாசங்கள் எதுவும் தெரிவதில்லை. ஆனால் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு அளவிலான மாற்றங்களை நாம் சந்திரனில் காணலாம்.

மேலும் ஒரு மாதத்தின் அனைத்து நாட்களிலும் தென்படும் சூரியனானது, பூமியில் மனிதர்கள் வாழும் (துருவப்பகுதி தவிர்த்து) அனைத்து பகுதிகளிலும் எவ்வித பாரபட்சமும் இன்றி காலை முதல் மாலை வரை, சுமார் 12 மணி நேரங்கள் அனைத்து மனிதர்களும் புறக்கண்களால் பார்க்கும் அளவிற்கு முழுவதுமாக காட்சியளிக்கிறது. அதாவது மாதத்தின் முதல் நாளிலிருந்து இறுதி நாள் வரை கிழக்கில் துவங்கி மேற்குத் திசை வரையுள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒரே சீராக சுமார் 12 மணி நேரங்கள் எவ்வித மாறுதல்களுமின்றி காட்சி அளிப்பதைக் காண்கிறோம். ஆனால் சந்திரனோ காட்சியளிப்பதிலும்கூட சூரியனைப் போன்ற தன்மை வாய்ந்தது அல்ல.

சந்திரனின் படித்தரங்களில் தலைப்பிறை என்று மக்கள் விளங்கியுள்ள முதல் நாளுக்குரிய பிறை உலகின் ஏதாவது ஒரு நாட்டில் முந்தைய மாதத்தின் கடைசி நாளான புவிமைய சங்கம நாளில் (Geocentric Conjunction Day) பிறக்கும். அவ்வாறு பிறந்த அந்தப்பிறை, அதற்கு அடுத்த நாளான புதிய மாதத்தின் முதல்நாளில், மஃரிபு நேரத்தில், உலகில் சில பகுதிகளில் மட்டும், சில நிமிடங்களுக்கு மட்டுமே புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும். அவ்வாறு காட்சியளித்த முதல் நாளின் பிறை குறிப்பிட்ட சில நிமிடங்களில் மறைந்தும் விடும். இவ்வாறு தெரிந்த முதல் நாளின் பிறையை விட இரண்டாவது நாளின் பிறை, மூன்றாவது நாளின் பிறை என்று அடுத்தடுத்து வரும் நாட்களின் பிறைகள் அது பிறக்கும்நேரம், மறையும் நேரம், பிறையின் வடிவம், அது காட்சியளிக்கும் நேரம் என்று வித்தியாசப்படும். இப்படி ஒவ்வொரு நாட்களிலும் வித்தியாசப்படும் அளவில்தான் வல்ல அல்லாஹ் பிறைகளின் படித்தரங்களை (மனாஜிலை) வடிவமைத்து உள்ளான். அந்த வித்தியாசமான வடிவங்களே நமக்குத் தேதிகளை அறிவிக்கின்றன (2:189, 10:5, 36:39).

நேரத்தையும், காலத்தையும் கணக்கிடுவதற்காக சூரியனையும் சந்திரனையும் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். சூரியனால் ஏற்படும் நிழலை மையமாக வைத்து தொழுகை நேரங்கள் கணக்கிடப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வோம். அதே நேரத்தில் சந்திரனின் (மனாஜில்) படித்தரங்களால் அமைந்த தேதிகளை கணக்கிட மாட்டோம், அதை எதிர்ப்போம் என்பவர்கள் இப்படிப்பட்ட வாதத்தை முன்வைப்பது நியாயம்தானா?.

சூரியனின் சுழற்சியை மையமாக வைத்து அளவிடப்படும் தொழுகை நேரங்கள் அவரவர் 'வக்தின்' அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அதைப்போல, சந்திரனின் படித்தரங்களில் (மனாஜில்) முதல் படித்தரமான பிறந்த பிறையையும் அவரவர்கள் தத்தமது பகுதியில் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்று சூரியன் மற்றும் சந்திரனின் தன்மைகளை, காட்சியளிப்பதையும் சம அளவில் வைத்து வாதம் வைத்துள்ளார். அதனாலேயே சந்திரனும் சூரியனும், தன்மைகளாலும் காட்சியளிப்பதிலும் வெவ்வேறானவை, பெரும் வித்தியாசங்கள் கொண்டவை என்பதை விளக்கியுள்ளோம். அதே நேரத்தில் சூரியனை வைத்து நேரத்தையும், சந்திரனை மையமாக வைத்து காலத்தையும் கணக்கிட வேண்டும் என்ற வல்ல அல்லாஹ்வின் கட்டளையையும் இங்கு நினைவு படுத்துகிறோம்.

சரி, சூரியக்கிரகணத்தை விட்டுவிடுகிறோம் காரணம் சூரியனும் சந்திரனும் தன்மைகளால் வெவ்வேறானவை என்று ஒப்புக் கொள்கிறோம். ஆனால் சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படத்தானே செய்கிறது. எனவே அந்த சந்திரக் கிரகணத்தை அவரவர்கள் தத்தமது பகுதியில் தொழுவதைப் போல அவரவர்கள் தத்தமது பகுதிகளில் பிறையை புறக்கண்களால் பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் என்று அறிஞர் வாதம் வைத்தாலும் வைக்கலாம்.

முதலில் அவர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வைத்து கிரகணத் தொழுகைகளில் சூரியக் கிரகணத்தை சொல்லவில்லை, அந்த உதாரணம் தத்தமது பகுதியில் நோன்பு நோற்றலுக்குப் பொருந்தாது என்று அறிஞர் முதலில் ஒப்புக் கொள்ளத் தயாரா? இன்னும் சந்திரக் கிரகணத்தை அவரவர்கள் தத்தமது பகுதியில் தொழுவதைப் போல அவரவர்கள் தத்தமது பகுதிகளில் பிறையை புறக்கண்களால் பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தும் மிகவும் தவறானது என்பதை இச்சிற்றேடின் பிற்பகுதியில் விளங்கலாம்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் குறுக்கிடுவதால் சூரியக்கிரகணம் ஏற்படுகிறது. சூரியக்கிரகணம் ஏற்படுவதற்கு சந்திரன் முக்கியப் பங்காற்றுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி குறுக்கிட்டு, அதன் நிழல் சந்திரனில் பட்டு சந்திரன் மறைக்கப்படுவதே சந்திரக் கிரகணமாகும். இன்னும் பவுர்ணமி நாளில்தான் சந்திரக் கிரகணம் ஏற்படும். பவுர்ணமி நாளில் சந்திரனின் உதயத்தையும், அதன் அஸ்தமனத்தையும் பொதுவாக உலக மக்கள் அனைவரும் கவனிக்கும் அளவில் சந்திரனின் காட்சி அமையும். அப்படி அமைந்தும் அன்று ஏற்படும் சந்திரக் கிரகணம் பொதுவாக உலகமக்கள் அனைவருக்கும் காட்சியளிப்பதில்லை. ஆக இந்த சந்திரக் கிரகணத்தையும், அந்த சந்திரக் கிரகணத் தொழுகையை மையப்படுத்தி சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்று விவாதிப்பது அறிவுடைமையாகாது. இப்படி வாதம் வைப்பதுதை அறிஞரின் பாஷையில் சொல்வதென்றால் 'கிறுக்கத்தனமான வாதம்' என்று சொல்லலாம்.

சூரியனின் வெளிச்சத்தால் அமையும் நிழலின் அளவைக் கொண்டு நேரத்தைக் கணக்கிடுகிறோம். அந்த சூரியன் கிழக்கில் துவங்கி மேற்கு வரையுள்ள அனைத்து மக்களுக்கும் தினமும் சுமார் 12 மணிநேரங்கள் எவ்வித வடிவ மாறுதல்களுமின்றி காட்சியளிக்கிறது. சூரியன் காட்சியளிப்பதைப் போல சந்திரனும் ஒவ்வொரு நாளும் ஒரே சீராக சுமார் 12 மணி நேரங்கள் எவ்வித வடிவ மாறுதல்களுமின்றி காட்சியளிப்பதில்லை. அவ்வாறு காட்சியளித்தால் மட்டும்தான் தொழுகை நேரங்களை அவரவர் வக்தை வைத்து முடிவு செய்வதைப் போல நோன்பையும் முடிவு செய்யலாம் என்ற வாதத்தில் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். சூரியக்கிரகணம் ஏற்படுவதற்கு சந்திரன் முக்கியப் பங்காற்றுகிறது என்பதால் சூரியக் கிரகணமும் சந்திரனை அடிப்படையாக்க கொண்டதுதான்.

இன்னும் 24 மணி நேரங்கொண்ட வெள்ளிக்கிழமை என்ற ஒருநாளுக்குள் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி முடிக்கிறோம். அதைப் போல 24 மணிநேரம் கொண்ட ஒரே நாளில் பெருநாளையும், ஒரே நாளில் நோன்பையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு சந்திர நாட்காட்டியின் மூலமாக நாம் தீர்வைச் சொல்லி இருக்கிறோம். இவ்வாறு தீர்வை நாம் சொல்லி இருக்கையில், அமெரிக்காவில் முஸ்லிம்கள் லுஹர் தொழுதால் நீங்களும் லுஹர் தொழுவீர்களா? இன்னும் சவுதிஅரேபியா தொலைக்காட்சியில் நோன்பு துறக்கும் காட்சி ஒளிபரப்பாகும் வேளையில்தான் நீங்களும் நோன்பை துறப்பீர்களோ?  என்று இவர் எழுப்பியுள்ள கேள்விகளின் தரத்தை சற்று நிதானமாக சிந்திக்க வேண்டுகிறோம்.

சூரியனின் அம்சங்களைப் போலவா சந்திரனின் அம்சங்கள் இருக்கின்றன? பிறந்த தலைப் பிறையானது உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் 12 மணி நேரங்கள் சூரியனைப் போல காட்சியளித்துக் கொண்டேதான் கடந்து செல்கிறதா? முதல் நாளின் சூரியனைப் போலத்தான், முதல்நாளின் தலைப் பிறையும் நம்மிடையே உருண்டோடி வரும் என்று நினைத்துக் கொண்டதால்தான் மேற்கண்ட கேள்விகளும், முன்னர் கூறியுள்ள பல்வேறு பிறை நிலைப்பாடுகளும் எழுந்துள்ளன. மேற்படி அறிஞர் அவர்கள் இவற்றை அறிந்து கொள்ளாதது ஏனோ?.

சூரியனையும், சந்திரனையும் நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்று நாம் சுயமாகச் சொல்லவில்லை. மாறாக சூரியனை வைத்து நேரத்தையும், சந்திரனை மையமாக வைத்து காலத்தையும் கணக்கிட வேண்டும் என்பது வல்ல அல்லாஹ்வின் கட்டளை என்பதாலே இரண்டையுமே கணக்கிடத்தான் வேண்டும் என்கிறோம். அதே நேரத்தில் இவ்விரண்டு கோள்களின் தன்மைகளும், இயற்கை குணங்களும் வெவ்வேறானவை, பெரும் வித்தியாசங்கள் கொண்டவை என்பதையும் தெளிவு படுத்தியுள்ளோம்.

எனவே உலக மக்கள் 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளுக்குள் அமைந்த கடமையான தொழுகைகளை அவரவர்கள் தத்தமது 'வக்தில்' தொழுகின்றனர். அதேபோல பிறையின் படித்தரங்களால் அமையப்பெற்ற மாதத்தின் துவக்கத்தையும் அவரவர்களே தத்தமது பகதியில் முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் வைப்பது மிகமிக பிழையானதாகும் என்பதை அறிஞர் அவர்கள் விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு புறிந்து கொள்ள வேண்டுகிறோம்.


 

 


 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 24-04-1435 / 23-02-2014]
 

 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved