முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில்

தமிழ் குர்ஆன்

   

 

Go To Index      

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 21

பிரபல தவ்ஹீது(!) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம் - PART 1

வாதம் புரிவதையே வாழ்க்கையாக்கி விட்ட பிரபல தவ்ஹீது அறிஞர்(!) அவர்கள் கிரகணத் தொழுகை சம்பந்தமான பல வாதங்களை அவரது 'பிறை ஓர் ஆய்வு' என்ற புத்தகத்தின் மூலமும், பொதுமேடைகளிலும் எழுப்பியுள்ளார். அண்ணன் ஆய்வு செய்து சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரது இயக்கத்திலுள்ள பலர் அவரின் கூற்றை சரிகண்டு பின்பற்றுகின்றனர். அத்தகையோர் ஹிஜ்ரி கமிட்டியின் மீதான வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு இவ்விளக்கங்களை இறுதிவரை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தவ்ஹீது பெயர் இயக்கத்தின் மேற்படி தலைமை அறிஞர் பிறை தொடர்பாக பல தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பதிந்துள்ளார். அவருடைய தவறான வாதங்கள் அனைத்திற்கும் தக்க பதில்களை www.mooncalendar.in இணையதளத்தில் வீடியோ பதிவுகளாக வெளியிட்டு வருகிறோம்.

மேற்படி அறிஞர் அவர்களின் தவறான பல பிறை வாதங்களில் ஒருசில...

1. சந்திரன் மேற்கில் உதிக்கிறது. மேற்கு திசையில்தான் சந்திரனை பார்ப்பீர்கள். சந்திரன் (பிறை) மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது.

2. நாம் கண்ணால் பார்ப்பது மூன்றாவது பிறைதான். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது பிறையைத்தான் முதல் பிறை என்று சொல்லியுள்ளார்கள்.

3. பிறை விஷயத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளன. காரணம் பிறை சம்பந்தமான ஹதீஸ்களும், அது சம்பந்தமான சான்றுகளும் ஒருங்கிணைக்க முடியாமல் உள்ளன.

4. லூனார் (LUNAR) என்றாலே கிறுக்கு என்று பொருள். பிறை என்றாலே கிறுக்குப் பிடிப்பது போன்றுதான் உள்ளது. எனவே யாராலும் நூறு சதவிகிதம் நிலை நாட்ட முடியாது.

5. தலைப்பிறை சவுதியில் உதிக்கிறது என்றால் சவுதியிலிருந்து பிறை ரிவேஸ்ல வராது. காரணம் அது மேற்கு உதிப்பதால் நம் தலைக்கு நேராக வருவதற்கு 21:30 மணிநேரம் ஆகும்.

6. பிறை பிறந்தால்தான் இரவு ஆரம்பிக்கிறது. இரவில்தான் நாள் ஆரம்பிக்கிறது.

7. முதல் பிறை சிலநேரம் 20 நிமிடம் தெரியும், சில நாளில் 35 நிமிடங்கள் தெரியும், சில வேளை 5 நிமிடங்கள்கூட தெரியும்.

8. இலங்கையில் பிறை பார்க்கப்பட்டதால் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், பிறை பார்க்கப்பட்ட அந்த நேரத்தில் வேறு நாடுகள் லுஹர் நேரத்தில் இருப்பார்கள். அவர் எப்படி நோன்பு வைப்பார்கள்.

9. நீங்கள் என்று தீர்மானிக்கிறீர்களோ அன்றுதான் நோன்பு, பெருநாள். அதை முடிவு செய்தை நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் தள்ளிவிட்டுட்டு போய்விட்டார்கள்.

10. பிறை சம்பந்தமாக எந்த ஒரு நிலைப்பாட்டிலும் 4 கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மிச்சமிருக்கும். எந்த நிலைப்பாட்டில் குறைந்த கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் இருக்கிறதோ அந்த நிலைப்பாட்டிற்கு சென்று விடுவது சிறந்தது.

11. உமர் (ரழி) அவர்களும் ஸஹாபாக்களும் இஸ்லாமிய ஆண்டு கணக்கீட்டை ஹிஜ்ரத்திலிருந்து ஆரம்பித்தது பொருத்தமில்லாதது. நபி (ஸல்) அவர்களின் நபூவத்திலிருந்துதான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

12. சூரியக் (ஆங்கிலக்) காலண்டர் அடிப்படையில் வரும் 365 என்ற வருடக் கணக்குதான் சரியானது. சந்திரக் கணக்கீடு மாதத்தைத்தான் அளவிட முடியும்.

13. கிரிகோரியன் காலண்டர் இது கிருஸ்தவக் காலண்டர் அல்ல. இது சூரியக் காலண்டர். ஹிஜ்ரி காலண்டரைவிட ஆங்கிலக் காலண்டர் பின்பற்றுவதற்கு லேசானாது. லேசானாதுதான் மார்க்கம்.

நவ்வூதுபில்லாஹ்! இத்தகைய அடிப்படையற்ற, மடைமையான வாதங்களை விட்டும் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தை பாதுகாத்திடப் பிராத்திக்கிறோம். கிரகணத் தொழுகை சம்பந்தமாக அண்ணனின் வாதத்திற்குரிய உண்மையான விளக்கத்தையும் உணர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். மக்களுக்கு சத்தியத்தைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமையை உணர்ந்தே இவ்விளக்கங்களை நாம் வெளியிடுகிறோம்.

அவருடைய கேள்விகள் : இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இப்போது நமது கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா? சந்திர கிரகணம் இரவு நேரத்தில் ஏற்படக் கூடியது. அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத் தனம் என்றுதான் அதைக் கூற வேண்டும். கிரகணம் ஏற்படுவதாக முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டு விட்டதால் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டுமா? அல்லது கிரகணம் ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டும் தொழ வேண்டுமா? இந்தக் கேள்வியைச் சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக்
கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது. லண்டனில் சூரிய கிரகணம் தோன்ற ஆரம்பித்து முழுமையாக விலகும் வரை அங்குள்ள மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். தங்களுடைய நாட்டில் எப்போது கிரகணம் ஏற்பட்டதோ அந்த நேரத்தில் துருக்கி, ஈரான் மக்கள் தொழுது கொள்வார்கள். கிரகணமே ஏற்படாத பகுதியில் உள்ள மக்கள் எப்போது தொழ வேண்டும்? லண்டனுடைய கிரகண நேரத்திலா? துருக்கியுடைய கிரகண நேரத்திலா? அல்லது லண்டனிலிருந்து சென்னை வரை கிரகணம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரமும் சேர்த்துத் தொழ வேண்டும் என்று கூறப் போகிறார்களா?


நமது விளக்கம் :

கிரகணத் தொழுகை தொழுவதையும், நோன்பு என்ற இபாதத்தையும் பிரித்தறியாமல் அவை இரண்டும் ஒரே தரத்தில் அமைந்தவை என்று நினைத்துக் கொண்டதால் ஏற்பட்ட ஐயமே இது. ரமழான் முதல் நோன்பை முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறான நாட்களில் துவங்கினாலும் அது தவறல்ல என்பது மேற்படி அறிஞரின் பிறை நிலைப்பாடுகளில் ஒன்றாகும். அதாவது உலகில் பல்வேறு பகுதிகளுக்கும் ரமழான் முதல்நாள் என்பது வெள்ளி, சனி, ஞாயிறு என்று வெவ்வேறு கிழமைகளால் வித்தியாசப் படலாம், அதில் ஒன்றும் தவறில்லை என்றும் கூறிவருகிறார். ரமழான் உட்பட அனைத்து மாதங்களின் முதல் நாளை சரியாகத் துவங்க சந்திரனின் அனைத்துப் படித்தரங்களையும் கவனிக்க வேண்டும். இதுதான் மார்க்கத்தின்
கட்டளை.

ஒரு மாதத்தின் இறுதிநாள் என்ற ஒற்றை நாளில் ஏற்படும் சூரியக் கிரகணம் என்ற அந்த நிகழ்வு அந்த மாதத்தின் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று மூன்று வெவ்வேறு நாட்களில் ஏற்படுவதில்லை. இதுபோல பவுர்ணமிநாள் என்ற ஒற்றை நாளில் ஏற்படும் சந்திரக் கிரகணமும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று மூன்று வெவ்வேறு நாட்களில் ஏற்படுவதில்லை. இன்னும் இந்த சூரிய, சந்திரக் கிரகணங்கள் ஒவ்வொரு மாதமும் ஏற்படுவதில்லை. பல மாதங்கள் கிரகணங்கள் நிகழாமலும் போகும். இவை அறிவியல் கூறும் அடிப்படை உண்மை. ரமழான் முதல் நோன்பை முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறான நாட்களில் துவங்கினாலும் அது தவறல்ல என்பது மேற்படி அறிஞரின் கூற்று. இத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ள மேற்படி அறிஞருக்குக் கிரகணத் தொழுகையை மையப்படுத்தி வாதம் எழுப்புவதற்கு உரிமையில்லை.

காரணம் சந்திரனும், சூரியனும் கிழக்கில் உதித்து மேற்கே மறைகிறது என்பது இன்றைக்கு பாலர் பாடமாகி விட்டது. இந்நிலையில், மேற்படி அறிஞர் அவர்கள் சந்திரன் மேற்கே உதித்து கிழக்குத் திசையில் மறைகிறது என்று அழுத்தமாகக் கூறுகிறார். சந்திரன் உதிக்கும் திசையைக்கூட அறிந்திடாத மேற்படி அறிஞருக்கு சந்திரக் கிரகணத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? மேலும் பிறை என்றாலே கிறுக்குப் பிடிப்பது போன்று உள்ளதாம். பிறைகளைப் பற்றிய அடிப்படை ஞானமில்லாத இவர் இப்பிறை விஷயத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்யவதற்கு என்ன உரிமை இருக்கிறது? மக்களே நீங்கள் சற்று புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று அறிஞர் அழுத்தமாகக் கூறுகிறார். இது மிகமிகத் தவறான வாதமேயாகும். காரணம் கிரகணம் என்பது ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்டு வருவதில்லை. தத்தமது பகுதி பிறை நிலைப்பாட்டினர் ரமழான் நோன்பைத் துவங்குவது போல மூன்று கிழமைகளில் கிரகணங்கள் ஏற்படுவதுமில்லை. இதை பிற்பகுதியில் இன்னும் தெளிவாக விளக்குவோம்.

எனினும் கிரகணத் தொழுகையைப் பொருத்தவரை குறிப்பிட்ட ஒரு கிழமைக்குள்ளாகவோ, அல்லது குறிப்பிட்ட ஒரு எல்கையை மையமாக வைத்தோ கிரகணத் தொழுகையை தொழும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. மாறாக கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்பதே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும்.

வெள்ளிக்கிழமை என்ற ஒரு கிழமையில் மட்டுமே ஜூம்ஆ தொழுகையை தொழ வேண்டும். வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகை என்பது அந்தக் கிழமைக்குள், அந்த ஜூம்ஆவுடைய வக்துக்குள் தொழுது முடிக்க வேண்டிய இரண்டு ரக்அத்துக்கள் கொண்ட தொழுகையாகும். அந்தந்த நாட்களுக்குரிய பர்ளான தொழுகைகள் தொழப்படுவதைப் போல (கிரகணம் நமக்குக் காட்சியளிக்கா விட்டாலும்) அந்தக் கிரகணம் தோன்றும் கிழமையன்றுதான் நாம் தொழ வேண்டும் என்று கிழமையைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடவுமில்லை. இவற்றை அறியாமல் அறிஞர் வாதம் வைத்திருப்பதின் பிழைகளை பின்னர் ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டுவோம் - இன்ஷா அல்லாஹ்.

இந்நிலையில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளது அறிவியல் ஆய்விலும், மார்க்கத்தின் முக்கிய அடிப்படைகளுள் ஒன்றான தொழுகை விஷயத்தை விளங்குவதிலும் அவருக்குள்ள மிகுந்த பின்னடைவைத்தான் காட்டுகிறது. எனவேதான் கிரகணத்தைப் புரியாதவர், பிறை எந்தத் திசையில் உதிக்கிறது என்பதை அறியாதவர்;, கிரகணத் தொழுகையின் அடிப்படையை விளங்காதவர்; மேற்கண்டவாறு கேள்வி எழுப்புவதற்கு தகுதியற்றவர் என்று நாம் சொல்கிறோம். பிறை சம்பந்தமான ஹதீஸ்களும், அது சம்பந்தமான  சான்றுகளும் ஒருங்கிணைக்க முடியாமல் உள்ளன என்று கூறுகிறார். அதே நேரத்தில் அந்த பிறை தொடர்பான கிரகணத் தொழுகை பற்றி அழுத்தமாகப் பேசுகிறார். எனவே கிரகணம் சம்பந்தமாக வரும் ஹதீஸ்களும், அது சம்பந்தமான சான்றுகளும் தற்போது ஒருங்கிணைக்கும் அளவுக்கு ஆகிவிட்டதா என்பதையும் அவர் சொல்ல வேண்டும்.

எனினும் அவரது கேள்விகளுக்குரிய விளக்கங்களைத் தெளிவாக புரிந்து கொள்வதற்காக கீழ்க்காணும் தலைப்புகளில் முறைப்படுத்தி விளக்குகிறோம்.

1. கிரகணம் சம்பந்தமாக வரும் நபிமொழிகள்.

2. கிரகணத் தொழுகை கடமையான தொழுகையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

3. அவரவர் 'வக்தில்' தொழுவதைப் போல மாதத்தின் முதல் நாளையும் அவரவர்களே முடிவு செய்யலாமா?

4. அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல அவரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்கலாமா?

5. கிரகணத் தொழுகையையும், நோன்பு நோற்பதையும் ஒப்பிடுவது தவறானதே!

 

1. கிரகணம் சம்பந்தமாக வரும் நபிமொழிகள்.

சூரியனுக்கும், பூமிக்குமிடையே சந்திரன் குறுக்கிட்டு ஒரே நேர்க்கோட்டில் அம்மூன்றும் அமைந்தால் அது சூரியக் கிரகணமாகும். இஸ்லாமிய சந்திர மாதத்தின் இறுதி நாளான புவிமைய சங்கம தினத்தில்தான் (Geocentric Conjunction Day) சூரியக் கிரகணம் நடைபெறும்.

இதுபோல, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி தன் சுழற்சிப் பாதையில் வரும். இப்படி சூரியன், பூமி, சந்திரன் ஆகிய இம்மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வந்து, சூரியனின் வெளிச்சத்தால் பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுந்து சந்திரனை மறைப்பதை சந்திரக் கிரகணம் என்கிறோம். இஸ்லாமிய சந்திர மாதத்தின் பவுர்ணமி நாளன்றே சந்திரக் கிரகணம் நடைபெறும்.

சூரியன் சந்திரன் அல்லாத மற்ற கோள்கள் நாம் வசிக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் நேர்க்கோட்டில் அமைந்து அவை சூரியனின் ஒளியை மறைத்தாலும் அவற்றை நாம் கிரகணம் என்று அழைப்பதில்லை. உதாரணமாக சூரியக் குடும்பத்தில் பூமிக்கு முன்னர் இருக்கும் இரு கோள்களான புதனும் Mercury), வெள்ளி (Venus) என்ற சுக்கிரனும், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நேர்க்கோட்டில் வந்து கடந்து செல்வதை 'புதன் கோளின் சூரியக் கடப்பு' (Mercury Transit) 'வெள்ளிக் கோளின் சூரியக் கடப்பு' (Venus Transit) என்றே  ழைக்கிறோம்.

அதுபோல நமது சூரியக் குடும்பத்திலுள்ள சூரியன், சந்திரன் மற்றும் பூமி அல்லாத பிற கோள்கள் அவற்றின் சுழற்சிப் பாதையில் நேர்கேட்டிற்கு வந்து அவற்றிற்குக் கிரகணம் ஏற்பட்டால் அதற்காக நாம் தொழத் தேவையில்லை. சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இவ்விரண்டும் பூமியின் நேர்க்கோட்டில் அமைந்து அவ்விரண்டும் பங்குபெறுவதால் ஏற்படும் நிகழ்வையே நாம் பொதுவாக கிரகணம் என்கிறோம். இத்தகைய கரகணத்தை நாம் கவனிக்கும் போதுதான் தொழவேண்டும் என்று மார்க்கமும் கூறியுள்ளது. எனவே கிரகணத் தொழுகை சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸ்களை முதலில் அறிந்து கொள்வதற்காக அவற்றை கீழே தொகுத்துள்ளோம்.

'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம் அப்போது சூரியனுக்கு கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் நின்று மஸ்ஜிதில் நுழையும் வரை தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டவர்களாக சென்றார்கள். எனவே நாங்களும் நுழைந்தோம். சூரியன் தெளிவாகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்'. பிறகு 'நிச்சயமாக எவருடைய மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆகவே நீங்கள் அவற்றை கவனிக்கும்போது நீங்கள் தொழுங்கள். மேலும் உங்கள் மீது இருப்பவை வெளிப்படும் வரை நீங்கள் பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ பக்ராஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்: புகாரி-1006.
 

'நிச்சயமாக மனிதர்களில் எவருடைய மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆனால் அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். ஆகவே நீங்கள் அவற்றை கவனிக்கும்போது நீங்கள் எழுங்கள் தொழுங்கள்'. என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள் என அபூ மஸ்வூத் கூறியதை நான் செவியுற்றேன் என கைஸ் அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரி-1007.
 

'நிச்சயமாக எவருடைய மரணத்திற்காகவும் மேலும் அவரின் வாழ்விற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆனால் அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு  அத்தாட்சிகளாகும். ஆகவே நீங்கள் அவற்றை கவனிக்கும்போது நீங்கள் தொழுங்கள்' என நபி (ஸல்) அவர்களிடமிருந்த இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவித்தவர்களாக இருந்தார்கள். நூல்: புகாரி-1008.
 

ஆயிஷா (ரழி) கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரியனுக்குக் கிரகணம் ஏற்பட்டது. மக்களுடன் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். அப்போது நின்றார்கள் அத்தோடு நிற்பதை நீட்டினார்கள். பிறகு ருகூவுச் செய்தார்கள். அத்தோடு ருகூவை நீட்டினார்கள். பிறகு எழுந்தார்கள், அதிகமாக நின்றார்கள். மேலும் இது முதல் கியாமை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் ருகூவுச் செய்தார்கள். அத்தோடு ருகூவை நீட்டினார்கள். மேலும் இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் ஸஜ்தாச் செய்தார்கள். அத்தோடு ஸஜ்தாவை நீட்டினார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். பின்னர் திரும்பினார்கள் அப்போது சூரியன் விலகியிருந்தது. பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்விற்காகவோ சூரியனும் சந்திரனும் கிரகணம் ஆகுவதில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே அதைக் கவனிக்கும்போது அல்லாஹ்வை அழையுங்கள். நீங்கள் தக்பீர் கூறுங்கள். மேலும் நீங்கள் தொழுங்கள். மேலும் நீங்கள் தர்மம் செய்யுங்கள்' என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள். நூல் : புகாரி-1010.
 

'நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரியனுக்கு கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். அப்போது பகரா அத்தியாயம் ஓதுமளவுக்கு நீண்ட நேரம் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு எழுந்தார்கள். பிறகு நீண்ட நேரம் நின்றார்கள். மேலும் இது முதல் கியாமை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். மேலும் இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் நீண்ட நேரம் நின்றார்கள். மேலும் இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். மேலும் இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். மேலும் இது முதல் ருகூவைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு எழுந்தார்கள். பிறகு நீண்ட நேரம் நின்றார்கள். மேலும் இது முதல் கியாமை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். மேலும் இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள்.  சூரியன் விலகிய நிலையில் தொழுது முடித்தார்கள். பின்னர் எந்த மனிதனின்மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ சூரியனும் சந்திரனும் கிரகணம்
ஆகுவதில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே அதைக் கவனிக்கும்போது அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.' என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி-1018.
 

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இப்ராஹீம் (ரழி) மரணித்த அன்று சூரியனுக்கு கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரியனுக்கு கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். எந்த மனிதனின் மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரியனும் சந்திரனும் கிரகணம் ஆகுவதில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் அதைக் கவனிக்கும்போது நீங்கள் தொழுங்கள் மேலும் அல்லாஹ்வை அழையுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அல்முகீரா பின் ஷூஹ்பா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்: புகாரி-1009.
 

சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே மஸ்ஜிதிற்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். பின்னர் 'இந்த அத்தாட்சிகள் எவற்றை அல்லாஹ் அனுப்புகிறானோ எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் அதன் மூலம் தன்னுடைய அடியார்களை பயத்தை ஏற்படுத்துகின்றான். ஆகவே இவற்றில் எதையேனும் நீங்கள் கவனிக்கும்போது அவனின் நினைவிற்கும், அவனிடம் பிரார்த்திக்கவும் மேலும் அவனிடம் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள் என அபூ மூஸா(ரழி) அறிவித்தார். நூல் : புகாரி-1025. 

 

 

 

 


 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 24-04-1435 / 23-02-2014]
 

 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved