முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில்

தமிழ் குர்ஆன்

   

 

Go To Index      

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 19


கணக்கிடுவதில் சூரியனுக்கு ஒரு நீதி, சந்திரனுக்கு ஒரு நீதியா?

அல்லாஹ்வின் பிரம்மாண்ட படைப்புகளான சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்கிறது திருக்குர்ஆன் (55:5). நேரத்தையும் காலத்தையும் மனிதர்கள் அறிந்து கொள்வதற்காகவே இவற்றைப் படைத்துள்ளதாக வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.

சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இவ்விரண்டு கோள்களின் தன்மைகளும், இயற்கை குணங்களும் வெவ்வேறானவை, பெரும் வித்தியாசங்கள் கொண்டவை என்றாலும் அவற்றைக் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்பதும், நேரத்தை அறிந்து கொள்ள சூரியனையும், தேதிகளை அறிந்துகொள்ள சந்திரனையும் வல்ல அல்லாஹ் நமக்கு வசப்படுத்தித் தந்துள்ளான் என்றும், அவை அல்லாஹ்வின் கட்டளைப்படி அதன் வரையறைக்குள் துல்லியமாக இயங்குகின்றன என்றும், நமது தினசரி நேரங்களுக்கும், தேதிகளுக்கும் இவ்விரண்டுமே அடிப்படையாகும் என்பதையும் அல்குர்ஆனின் பல்வேறு வசனங்கள் மூலம் நாம் தெளிவாக அறியலாம். (பார்க்க : 2:189, 6:96, 9:36-37, 10:5, 13:2, 17:12, 21:33, 36:38-40)

முஸ்லிம்களின் இறை வணக்கமான தொழுகையையும், முஸ்லிம்களின் கிப்லாவையும் மையப்படுத்தியே சர்வதேசத் தேதிக்கோட்டுப் பகுதியில் கிழமை மாற்றம் நடைபெறுவதை இவ்வுலகிற்கு மறைத்த யூதர்களும், கிருஸ்துவர்களும் இவ்விஷயத்தை வரலாறுகளில் திட்டமிட்டு இருட்டடிப்பும் செய்து விட்டனர். அல்லாஹ்வுடைய மார்க்கமாம் தீனுல் இஸ்லாம் என்ற இந்த சத்திய மார்க்கம் மேலோங்கி விடக்கூடாது என்பதிலும், இஸ்லாமிய நாட்காட்டியை முஸ்லிம்கள் தயாரித்து உலகை வழி நடத்தி விடக் கூடாது என்பதற்காகவும் யூத கிருஸ்துவ மிஷினரிகள் நேர்த்தியான பல சதித் திட்டங்களையும் தீட்டிச் செயல்பட்டுள்ளதை நமது முஸ்லிம் உம்மத் இந்த நவீன யுகத்தில் கூட உணராமல் வாழ்ந்து வருவது வேதனையிலும் வேதனையே. இருப்பினும் அறிந்தோ அறியாமலோ கணக்கீட்டு முறையை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றது, அவற்றை நடைமுறையில் நாம் பின்பற்றித்தான் வருகிறோம்.

கடமையான ஐந்து வேளைத் தொழுகைகள் மற்றும் ஜூம்ஆ தொழுகை, இஃப்தார் முடிவு, சஹர் நேரம் போன்றவைகள் அனைத்தும் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு குறித்த நேரத்தில் பின்பற்ற வேண்டியவை.

ரமழான் நோன்பின் துவக்கம், இருபெருநாட்கள், ஹஜ் மற்றும், ஆஷூரா நோன்பு, மாதமாதம் வெண்மை நாட்களின் மூன்று நோன்பு, அரஃபா நோன்பு, அனைத்துச் சந்திர மாதங்களையும் ஆரம்பித்தல், புனித மாதங்களைச் சரியாக ஆரம்பித்தல் ஆகிய வணக்கங்கள் சந்திரனை மையமாக வைத்துக் குறித்த தேதிகளில் பின்பற்ற வேண்டிய கடமைகளாகும்.

இங்கு சூரியனை அடிப்படையாக வைத்துச் செய்யவேண்டிய காரியங்களான தொழுகை நேரங்களை எவரும் சூரியனால் ஏற்படும் நிழலைப் புறக்கண்ணால் பார்த்து அறிந்து கொள்வதில்லை. அதுபோல ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் (2:187) என்ற இறைக் கட்டளையை எவரும் புறக்கண்ணால் பார்த்து நடைமுறைப் படுத்துவதில்லை. மாறாக விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ள நேரங்களின் அடிப்படையில்தான் அட்டவணையிட்டு நாம் அனைவரும் பின்பற்றுகிறோம். இதற்கு எவரும் ஆட்சேபனை தெரிவிப்பதில்லை.

ஆனால் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட அமல்களைச் செய்வதற்கு மட்டும் நிலவை புறக்கண்ணால்தான் பார்ப்போம் என்று பிடிவாதமாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்? சூரியனுக்கு ஒருநீதி, சந்திரனுக்கு ஒரு நீதியா? வல்ல அல்லாஹ் சூரியனைப் போலவே சந்திரனையும் சேர்த்துதான் துல்லியமாக இயங்குவதாகச் சொல்கிறான். சூரியனை நாங்கள் கணக்கிடுவோம், ஆனால் சந்திரனை கணக்கிட மாட்டோம் என்ற இரட்டை நீதியை நாம் எங்கு போய் சொல்வது? ஒருவேளை மாற்றுக் கருத்துடையோர் சந்திரன் துல்லியமாக இயங்கவில்லை என்கின்றனரா?. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

இந்நிலையில், மேற்படி அறிஞர்களிடம் பிறைகளின் படித்தரங்களை துல்லியமாகக் கணக்கிட்டு வழங்கப்பட்டுள்ள சந்திர நாட்காட்டியை (ஹஜ்ரி காலண்டரை) எதிர்க்கும் நீங்கள் நாம் சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை வைத்து கணக்கிடப்பட்டுள்ள தொழுகைக் கால அட்டவணையை மட்டும் ஏன் ஆட்சேபனை செய்யாமல் பின்பற்றி வருகிறீர்கள் என்ற நமது கேள்விக்கு அவர்கள் விடையாக :''சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின்தான் நோன்பு துறக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை என்றும் மேகமூட்டமான நாட்களில் சூரியன் மறைவதைக் கண்டால் மஃரிபு தொழுங்கள் இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதை கருதிக் கொள்ளுங்கள் என சூரியன் குறித்து நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. ஆனால் பிறைக்குத்தான் இந்த நிபந்தனையைக் கூறினார்கள். மேகமூட்டமாக இருந்தால் 30-ஆக பூர்த்தி செய்யுங்கள் என்ற அளவுகோல் பிறைக்குத்தான் உள்ளது என விடையளிக்கின்றனர்.

ஒரு வாதத்திற்காக சூரியன் விஷயத்தில் இவர்களின் வாதம் சரிபோலத் தோன்றினாலும், மேற்படி மாற்றுக்கருத்துடையோர் கூற்றின்படியே துல்லியமானச் சூரியக் கணக்கீட்டை தொழுகை நேரத்திற்கு ஒப்புக்கொண்டது, நபி(ஸல்) அவர்களின் நேரடி வழிகாட்டுதலான சூரியனின் வெளிச்சத்தால் ஏற்படும் நிழலின் அளவை பார்த்து தொழுகை நேரத்தைக் கணக்கிடவேண்டும் என்பதற்கு எதிரானதா இல்லையா என்பதை அவர்கள்தான் மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

பிறை விஷயத்தில் மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்யுங்கள் என்ற கருத்திற்கு குர்ஆன், சுன்னாவில் எத்தகைய ஆதாரங்களும் இல்லை என்பதை ஃபஇன்கும்ம அலைக்கும் என்பதின் பொருள் என்ன? என்ற தலைப்பிலும், புறக்கண்களால் பார்த்தல் என்ற நிபந்தனை உண்மையிலேயே பிறைகளுக்கு உள்ளதா என்பதை ருஃயத் (காட்சி) என்றால் என்ன? என்ற தலைப்பிலும் விரிவாக விளக்கியுள்ளோம்.

எனவே தொழுகை நேரங்களை அறிந்து கொள்ள சூரியனின் வெளிச்சத்தால் ஏற்படும் நிழலின் அளவை வைத்துக் கணக்கிடப்பட்டுள்ள தொழுகை அட்டவணையைப் பின்பற்றுவதைப் போல, தேதிகளை அறிந்து கொள்வதற்காகவே வல்ல அல்லாஹ்வால் வசப்படுத்தித் தரப்பட்டுள்ள பிறைகளையும் துல்லியமாகக் கணக்கிட்டு நாட்காட்டியைத் தயாரித்துப் பின்பற்றுவதும் தவறேதுமில்லை, என்பது மட்டுமல்ல மிகவும் அவசியமானதுமாகும் என்பதைத் தெளிவாக விளங்கலாம். 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 22-10-2013]
 

 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved