முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில்

தமிழ் குர்ஆன்

   

 

Go To Index      

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 15

ரமழானை முன்கூட்டியே ஆரம்பிப்பது சம்பந்தமான அறிவிப்பு

ரமழானை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம். வழக்கமாக நோன்பு வைக்கும் மனிதரைத்தவிர. எனவே அந்த நாட்களில் அவர் நோன்பு நோற்றுக் கொள்ளலாம். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரழி) அறிவித்தார். நூல்: புகாரி 1815 (தமிழ் மொழிபெயர்ப்பில் : 1914)

மேற்காணும் இந்த ஹதீஸை மேற்கோள் காட்டி பிறந்த பிறையைப் பார்க்கும் முன்பே மாதத்தை ஆரம்பித்து மாதத்தை முற்படுத்தித் தவறிழைக்கின்றனர் என ஹிஜ்ரி கமிட்டியினராகிய நம் மீது மாற்றுக் கருத்துடையோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த ஹதீஸ் சம்பந்தமாக 'யவ்முஷ்ஷக் என்ற வாதம் எடுபடுமா?' என்ற தலைப்பில் ஏற்கனவே நாம் விளக்கியிருக்கிறாம்.  ஒருவர் ரமழான் மாத நோன்புகளை மட்டும் நோற்பவராக இருந்தால், அவர் ரமழானின் முந்தைய மாதங்களின் கணக்கையும், தேதியையும் அறியாமல் நோன்பு வைக்கக் கூடாது. அவர் சந்திரனின் படித்தரங்களைக் கவனித்து அறிந்த பின்னரே நோன்பை ஆரம்பிக்க வேண்டும் அல்லது முடிக்கவேண்டும் என்பது தான் மேற்படி ஹதீஸ் கூறும் நிபந்தனையாக உள்ளது.

மேற்படி ஹதீஸோ ரமழான் துவங்குவதற்கு ஒரு நாளோ இரு நாளோ மீதி இருக்கும் போது நோன்பு வைக்காதீர்கள் என்று திட்டவட்டமாகக் கூறுகின்றது. எனவே அன்றைய சமுதாயம் ரமழான் மாதத்தின் பிறைகளை பார்க்கும் முன்பே ஷஃபான் மாதம் 29 தினங்களில் முடிந்துவிடும், அல்லது 30 தினங்களில் முடிந்து விடும் என்பதை முற்கூட்டியே அறிந்து கொள்ளும் நிலையிலும், பிறை படித்தரங்களை முறையாகக் கணக்கிட்டுக் கொள்ளும் ஞானம் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. மாதம் முடிவதை முற்கூட்டியே அறிந்து கொள்ளும் நிலை (ஞானம்) இருந்திருந்தால் மட்டுமே நபி (ஸல்) அவர்கள் 'ரமழானை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம்' என்ற உத்தரவைப் பிறப்பித்திருக்க முடியும் என்பதை அறிவுடையோர் யாரும் மறுக்க மாட்டார்கள்.

இன்னும் இந்த ஹதீஸை நாம் அலசும் போது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் துல்லியமாக ரமழான் மாதம் எப்போது துவங்கும் என்பதை அறிந்தும், பேணுதலுக்காக முந்தைய மாத நாட்களையும் ரமழானில் சேர்த்து 32 அல்லது 31 நோன்புகள் வைக்கும் பழக்கத்தை ஒருவேளை கொண்டிருந்தார்கள் என்பதால் கூட மேற்படி உத்தரவின் மூலம் அதை இஸ்லாம் தடுத்திருக்கலாம் என்றும் இத்தருணத்தில் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே தான் நபி(ஸல்) அவர்கள் ரமழான் துவங்கும் தினத்தில் தான் சரியாக நோன்பை ஆரம்பித்தே ஆக வேண்டும் என்ற இந்தக் கட்டளையைக் கொடுத்துள்ளார்கள் என சிந்திக்கத் தோன்றுகின்றது.

நபி (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அந்த முஸ்லிம் சமுதாயம் எவ்வித விஞ்ஞான முன்னேற்றங்களும் இல்லாத காலத்தில் பிறைகளைக் கவனிப்பதிலும், மாதத்தைத் துல்லியமாக அறிந்து சரியான நாளில் நோன்பை வைப்பதிலும் மிகச் சரியாக செயல்பட்டு முன்னணியில் இருந்துள்ளார்கள் என்பதை மேற்படி ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது. அதே வேளையில் நாங்கள் நபி (ஸல்) அவர்களைத்தான் முன்மாதிரியாகக் கருதுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய தத்தமது பகுதிப் பிறை, சர்வதேசப் பிறை நிலைப்பாடுகளிலுள்ளவர்கள் பிறைகளைக் கவனிப்பதிலும், மாதத்தைத் துல்லியமாக அறிந்து சரியான நாளில் நோன்பை வைப்பதிலும் மிகவும் பின் தங்கி ரமழான் மாதத்தில் கூட இரண்டு நோன்புகளையோ அல்லது ஒரு நோன்பையோ சர்வசாதாரணமாக இழக்கும் நிலையில் இருப்பதைப் பார்த்துப் பரிதாபப்படுகிறோம், கவலையும் அடைகிறோம்.

மூன்றாம் பிறையைத்தான் நபி(ஸல்) அவர்கள் முதல் பிறையாக எடுத்துக் கொள்ளக் கட்டளையிட்டுள்ளார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை அவர்கள் கூறியதாக அவதூறாகப் பிரச்சாரம் செய்யும் மௌலவிமார்கள் தயவுசெய்து மேற்படி ஹதீஸை நிதானமாகப் படித்து தங்களின் தவறான நிலைப்பாட்டைத் திருத்திக்கொள்ள கடமைப்பட்டுள்ளார்கள்.

பொதுவாக ரமழானின் ஃபர்ளான நோன்பை ரமழான் மாதத்தில்தான் நோற்க வேண்டும். ஒருவர் ரமழான் மாதம் எனக்கு தவறி விடக் கூடாது என்பதற்காக ஷஃபானின் இறுதி நாளிலோ அல்லது இறுதி இரு நாட்களிலோ நோன்பை ஆரம்பித்து முந்த வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள். அதே சமயம் வழக்கமாக ஒருவர் திங்கள், வியாழன் போன்ற கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால் அவருக்கு இந்த சட்டம் பொருந்தாது என்பதையும் நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.

மேலே பதியப்பட்டுள்ள ஹதீஸை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் மாதத்தை முற்படுத்தக் கூடாது என கூறி விட்டதால், நாங்கள் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்தே தவிர நோன்பு வைக்க மாட்டோம். காரணம் முற்படுத்துவதைத் தான் நபி (ஸல்) தடை விதித்துள்ளார்கள், எனவே நாங்கள் நோன்பு நோற்கும் நாளை முடிந்தவரை பிற்படுத்துவோம் என்றும் ரமழான் மாதம் ஆரம்பித்து ஒரு நாளோ இரண்டு நாட்களோ கழிந்து விட்டதை நாங்கள் தெளிவாக அறிந்து கொண்டாலும் கூட பரவாயில்லை என்றும் கூறி வருகின்றனர். என்ன வேடிக்கை விபரீதம் இது! ரமழான் மாதம் ஆரம்பித்தும் நோன்பு வைக்காமல் இருப்பதுதான் அவர்கள் புரிந்துவைத்துள்ள இஸ்லாமிய மார்க்க சட்டமா? இது கைசேதத்துக்குரியதே!

ரமழான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, எவர் உங்களில் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்கட்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ அவர் மற்ற நாட்களில் நோற்கட்டும்;. உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காகக் குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பூர்த்தி செய்து, அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துவதற்காக அல்லாஹ் இலகுவை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல்குர்ஆன் 2:185)

யார் அம்மாதத்தை அடைகின்றாறோ அவர் நோன்பு நோற்கட்டும் என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இவ்வசனம் மூலம் ரமழான் மாதத்தை நாம் எப்போது அடையப் போகின்றோம் என்பதை முற்கூட்டியே அறிந்து வைத்திருந்தால் தான் நாம் சரியாக அடைய முடியும் என்பதைக் கூட இவர்கள் சிந்திக்காமல், யார் அம்மாதத்தை அடைகின்றாறோ என்ற வாசகத்தைத் தவறாக விளங்கி, உலக முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களில் ரமழானை அடைவார்கள் என்று பிரச்சாரம் செய்வது வேடிக்கைதான்.

மாற்றுவது நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதன்முலம் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர், அவர்கள் அதை ஒரு வருடத்தில் அனுமதிக்கப்பட்டதாகக் கொள்கின்றனர். அல்லாஹ் தடுத்திருக்கும் எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக மேலும் ஒரு வருடத்தில் அதைத் தடுத்துக் கொள்கின்றனர். எனவே, அல்லாஹ் எதைத் தடுத்தானோ (அதை) அவர்கள் ஆகுமாக்கிக் கொண்டார்கள். அவர்களின் தீச்செயல்கள் அவர்களுக்கே அழகாக்கப் பட்டுவிட்டன. மேலும் அல்லாஹ், நிராகரிப்பவர்களை நேர் வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் (9:37)

மேலும், மாதத்தை முன்னும் பின்னும் மாற்றுவது இறை நிராகரிப்பு என்பதையும் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் மேற்கண்டவாறு கூறுகின்றான். எனவே மாதத்தை முற்படுத்துவதும், பிற்படுத்துவதும் அல்லாஹ் அனுமதிக்காத ஒன்று என்பதை நாம் தெளிவாக விளங்க முடிகின்றது.

நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸ் ரமழான் மாதத்தைச் சரியாக அதற்குரிய நாளில் கண்டிப்பாகத் துவங்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஹதீஸ் ஆகும். அதில் 29-வது நாளின் மாலை, 30-வது நாளின் மஃரிபில் (இப்படி சொல்வதே மார்க்க அடிப்படையில் தவறானதாகும்), பிறந்த பிறையை மறையும் நேரத்தில் பார்த்து விட்டு அடுத்த நாள் மாதத்தை துவங்குங்கள் என்றோ, பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்க்காமல் துவங்காதீர்கள் என்றோ எந்த வாசகமும் மேற்படி ஹதீஸில் இடம் பெறவில்லை. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் ரமழானை முற்கூட்டியே அறிந்து சரியான நாளில் துவங்க வேண்டும் என்பதை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தும் ஹதீஸ் என்றால் அது மிகையில்லை.

ரமழானை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம் என்று சொன்னால் தாராளமாக பின்தங்கலாம் என்றா பொருள் கொள்வது? சற்று சிந்தியுங்கள் மக்களே. மேற்கண்ட ஹதீஸ் வாசகத்தைப் படித்துப் பார்த்தாலே இன்று நடைமுறையில் மாற்றுக் கருத்துடையோர் பிரச்சாரம் செய்வதைப் போல 'பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்துவிட்டு (ஒரு நாள் கழித்தோ, இரண்டு நாட்களை கழித்தோ, மூன்று நாட்களை கழித்தோ) அவரவர்கள் தத்தமது பகுதியில் தங்களது மாதத்தை ஆரம்பிக்கலாம், காரணம் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற சொற்றொடர் இதைத் தான் கூறுகிறது. எனவே மாதத்தின் துவக்கத்தை அவரவர்கள் வௌ;வேறு கிழமைகளில் துவக்குவது ஒன்றும் குற்றமில்லை' என்ற தவறான கருத்தை தடை செய்யும் ஒரு ஹதீஸாகவும் இது இருக்கின்றது.

ஆகவே, எவர்கள் மாதத்தைச் சரியான நாட்களில் ஆரம்பிக்கின்றார்களோ அவர்களைப் பார்த்து மாதத்தை முன்கூட்டியே நீங்கள் ஆரம்பித்து விட்டீர்கள் எனவே இந்த ஹதீஸிற்கு மாற்றம் செய்து விட்டீர்கள் என்று கூறுவது நகைப்பிற்குரிய விஷயமாகும். ஏனென்றால், அவர்களுடைய பிறை நிலைப்பாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை அறிந்த விரக்தியில் இது போன்ற அவதூறுகளைக் கூறிச் சரியாக மாதத்தைத் துவங்குபவர்களைக் குழப்பி விடலாம் என முடிவு செய்துள்ளார்கள் போலும்.

மார்க்கத்தின் பெயரால் இதுபோன்ற குழப்பங்களை யூதர்கள் ஏராளமாகவும், தாராளமாகவும் செய்துள்ள நிலையில் நம்மைப் பொய்பிப்பதற்காக வேண்டி சிலர் அந்த யூதர்களின் பணியைக் கையில் எடுத்து வேலை செய்யுமளவிற்கு துணிந்துவிட்டார்களோ என்ற அச்சமும், ஐயமும் ஏற்படுகிறது. அல்லாஹ்வே அறிந்தவன்.

மேலும், இது போன்று குழப்பம் விளைவிப்பவர்கள், ஏற்கனவே அவர்களே தள்ளுபடி செய்த பல பலஹீனமான அறிவிப்புகளையும் தற்போது தூசி தட்டி எடுத்து மக்கள் மன்றத்தில் வைத்து ஏமாற்றியும், குழப்பியும் வருகின்றார்கள். மக்கள் ஏமாற்றப் படாமல் இருப்பதற்காகவே அவர்கள் எடுத்து வைக்கும் இந்த தலைப்புச் சம்பந்தப்பட்ட அனைத்துச் செய்திகளையும் தற்போது நாம் அலசிடக் கடமைப்பட்டுள்ளோம்.

நீங்கள் எண்ணிக்கையை முழுமையாக்கும் வரை, அல்லது பிறையைக் கவனிக்கும் வரை மாதத்தை முற்படுத்தாதீர்கள் பிறகு நீங்கள் நோன்பு வையுங்கள். இன்னும் நீங்கள் பிறையைக் கவனிக்கும் வரை அல்லது எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்தும் வரை நீங்கள் நோன்பை விடாதீர்கள். ஹஜ்ஜாஜ் பின் அர்தாஹ் அவர்கள் இந்த செய்தியை இர்ஸாலாக அறிவிக்கின்றார்கள். (அறிவிப்பவர்: ரிப்யீ பின் ஹிராஷ் நூல்: நஸாயீ 2406)

மேற்கண்ட செய்தியை அறிவிக்கும் ரிப்யீ பின் ஹிராஷ் என்பவர் நபித்தோழரல்ல என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டுகிறோம். நபி (ஸல்) அவர்களைக் காண்பதற்காக பிரயாணம் செய்து வந்த ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள், நபி (ஸல்) அவர்களை மதீனாவில் அடக்கம் செய்த பின்பே மதீனா வந்தடைந்தார்கள் என்றும் எனவே அவரை மஹ்ஸர்மி என்றும் இப்னு ஹஜர் போன்ற ஹதீஸ் கலை மற்றும் வரலாற்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எந்த நபித்தோழரிடமிருந்து மேற்படி செய்தியை இந்த ரிப்யீ பின் ஹிராஷ் கேட்டார் என்பதற்கும் இதில் விடையில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

தாபியீன்களிடமிருந்தும், ஸஹாபாக்களிடமிருந்தும் ஒருவர் ஹதீஸை அறிவித்தால், அவர் இன்னாரிடமிருந்து அறிவித்தேன் என்று அன்னாரது பெயரைக் குறிப்பிட்டு தெளிவாகக் கூறினால்தான் அவர் யாரிடம் இருந்து அறிவித்தார் என்பதை உறுதிபடக் கூற முடியும். அவர் ஒரு நபரிடம் இருந்து கேட்டேன், அல்லது ஒரு ஸஹாபியிடமிருந்து கேட்டேன் என்று பொத்தாம் பொதுவாக அறிவித்தால் அவர் எந்த ஸஹாபியிடம் இருந்து கேட்டார் என்பதைத் தெளிவு படுத்தாத வரை அது முர்ஸலாகவே கருதப்படும். மேலும் ஒரு தாபியீடமிருந்து அதே நபர் அறிவிக்கும் போது கூட அந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையானது நபி(ஸல்) அவர்கள் வரை தொடர் முறியாமல் சென்றடைந்தால்தான் அதை ஹதீஸ் என்ற தரத்தில் சேர்க்க முடியும். இந்நிலையில் மேற்படி ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் தாபியிகளிடமிருந்தும், ஸஹாபிகளிடமிருந்தும் பல செய்திகளை அறிவித்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது. எனவே அவர் யாரிடம் இருந்து மேற்படிச் செய்தியை அறிவித்தார் என்பதை பெயர்கூறி அறிவிக்காத வரை, ஹதீஸ் கலையின் விதியின் அடிப்படையில் அச்செய்தியை ஸஹீஹான தரத்தில் அமைந்த நபிமொழியாகக் கருதிடவே இயலாது என்பதே நிதர்சனமான உண்மையாகும், விதியுமாகும்.

இதுபோன்ற அறிவிப்புகளை முர்ஸல் வகை அறிவிப்பு எனப்படும். முர்ஸல் என்றால் இடையில் விடுபட்டது என்பது இதன் சொற்பொருளாகும். ரிப்யீ பின் கிராஷ் அறிவித்த இரண்டு கிராமவாசிகளின் பிறை செய்தியில் முர்ஸல் பற்றிய குறிப்பை முன்னரே தெரிவித்துள்ளோம். (பார்க்க) முர்ஸலான அறிவிப்புகள் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கும் நிலையில் மேற்படி இந்த அறிவிப்புகளுக்கு மட்டும் அது விதிவிலக்காகிவிட்டதா? என்று இவற்றை ஆதாரமாகக் கருதுபவர்களிடம் நாம் கேட்க விரும்புகிறோம். தங்களது பிறை நிலைப்பாட்டை நிலை நிறுத்துவதற்காக முர்ஸலான, ழயீபான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக்கூட ஸஹீஹான ஹதீஸ் என்று பிரச்சாரம் செய்பவர்களிடம் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். இதுவே மார்க்கத்தில் வளைத்தல், திரித்தல், திணித்தல், நுழைத்தல் என்பதாகும்.

மேலும் மேற்கண்ட அறிவிப்பின் இறுதியில் இடம் பெறும் குறிப்பில், ஹஜ்ஜாஜ் பின் அர்தாஹ் அவர்கள் இதை இர்ஸால் செய்து அறிவித்துள்ளதாக இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். இந்த அறிவிப்பாளர் தொடரில் வரும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாஹ் என்பவர் பலஹீனமானவர் ஆவார். இவரை இருட்டடிப்பு செய்பவர், ஹதீஸில் பொய்யுரைப்பவர், அவரின் ஹதீஸில் அதிகமான முரண்பாடுகள் உள்ளன என்றும் அவரை பலமில்லாதவர், இருட்டடிப்பு செய்பவர்களில் ஒருவராக இருந்தார், அதிகத் தவறு செய்யக் கூடியவர் என்றெல்லாம் மேற்படி ஹஜ்ஜாஜ் அவர்களை ஹதீஸ் கலை வல்லுனர்கள் விமர்சித்துள்ளதை பிறை பார்த்தலும் இரண்டு சாட்சிகளும் என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே படித்தோம். (பார்க்க)

இன்னும் இப்னு ஹிப்பான், அபூதாவூத், நஸாயீ, தாரகுத்னீ, அல் பஹ்ரு அஸ் ஸுஹார் எனும் முஸ்னத் பஸ்ஸார், அல் இர்ஷாத் ஃபீ மஃரிபஃத்தி உலமாவுல் ஹதீஸ், முஜமஅல் அவுஸத், முஸ்னத் அஹ்மத், சுனன் குப்ரா மற்றும் மஃரிபதுல் ஸூனன் வல் அஸார் போன்ற நூல்களில் வரும் அறிவிப்பில் ரிப்யீ பின் ஹிராஷ் அறிவிக்கும் இந்த முர்ஸலான செய்தியை ஜரீர் இப்னு அப்துல் ஹமீத் அழ்ழாபி என்பவர் அறிவிக்கும் போது மட்டும் ரிப்யீ பின் ஹிராஷ் என்பவர் ஹுதைபா (ரழி) அவர்களிடம் கேட்டதாக அறிவித்துள்ளார்.

ரிப்யீ பின் ஹிராஷின் மாணவரான மன்ஸூர் என்பவர் இந்த செய்தியைத் தனிநபராகவே தனித்து அறிவிக்கின்றார். மேற்படி மன்ஸூருக்கு பல மாணவர்கள் இருந்துள்ளனர். அம்மாணவர்களில் ஜரீர் இப்னு அப்துல் ஹமீத் அழ்ழாபி என்பவர் மட்டும் இச்செய்தியை அறிவிக்கும் போது மேற்படி ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் ஹுதைபா (ரழி) அவர்களிடம் கேட்டதாகவும், ஹதீஸ் கலை அடிப்படையில் அது 'ஷாத்' ஆகவும் அறிவிக்கின்றார். ஆனால் அதே மன்ஸூரின் மற்ற மாணவர்கள் அனைவரும் ரிப்யீ பின் ஹிராஷ் முர்ஸலாக அறிவிப்பதாகவே அறிவித்துள்ளனர். இப்படி ஒரே ஆசிரியரின் கீழ் பாடம் பயின்ற பல மாணவர்கள் ஒருவிதமாக அறிவிக்க, அதில் ஒரேயொரு மாணவர் மட்டும் அதற்கு மாற்றமாக அறிவித்து முரண்படும் அறிவிப்புகள் ஹதீஸ்கலையில் 'ஷாத்' எனக் கூறப்படும். 'ஷாத்' ஆன செய்திகள் ழயீபான வகையைச் சார்ந்த நிராகரிக்கப்படும் செய்தியாகும்.

இன்னும் இதில் வேடிக்கை என்னவென்றால், அதே மன்ஸூரின் மாணவர்கள் இடம்பெறும் பட்டியலில் ஹஜ்ஜாஜ் என்பவரும் ஒன்று. அவரோ ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் நேரடியாக இந்த செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் பெற்றதாகக் கூறுகிறார். ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் சந்தித்ததுமில்லை, கண்டதுமில்லை என்ற நிலையில் ரிப்யீ பின் ஹிராஷ் அவர்கள் நேரடியாக இந்தச் செய்தியை நபி(ஸல்) அவர்களிடமிருந்து பெற்று அறிவிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?. நபி(ஸல்) அவர்ளை ரிப்யீ பின் ஹிராஷ் காண செல்லும் போது நபி(ஸல்) அவர்கள் மரணித்திருந்தார்கள் என்ற செய்தியை நாம் முன்னரே குறிப்பிட்டுள்ளோம். எனவே இந்தச் செய்தியை எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் இச்செய்தி முர்ஸல் என்ற நிலையையும் தாண்டி, பல குழப்பங்களும், பலஹீனங்களும் இணைந்துள்ளதை அறியலாம்.

மாதத்தை உங்களில் யாரும் ஒரு நாளின் நோன்பைக் கொண்டோ, இரு நாளின் நோன்பைக் கொண்டோ முந்த வேண்டாம். வழக்கமாக நோன்பு வைக்கும் மனிதரைத் தவிர. இன்னும் அதை கவனிக்கும் வரை நீங்கள் நோன்பு வைக்காதீர்கள். பிறகு அதை கவனிக்கும் வரை நோன்பை வையுங்கள். எனவே உங்களுக்கு மத்தியில் மேகம் திரையிட்டால் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்யுங்கள். பிறகு நோன்பை விடுங்கள். மேலும் மாதம் என்பது 29 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இமாம் அபூதாவூத் அவர்கள் கூறுகின்றார்கள் அதை ஹாதிம் பின் அபூ ஸஹீரா அவர்கள் ஷுஃபா அவர்களிடம் இருந்தும் ஷுஃபா ஹஸனிடமிருந்தும் ஹஸன் ஸிமாக்கிடமிருந்தும் இதே அர்த்தமுள்ள அறிவிப்பை அறிவித்துள்ளார்கள். ஆனால் அதில் பிறகு நீங்கள் நோன்பு வையுங்கள் (சும்ம அஃப்திரு) எனும் வார்த்தையை அவர்கள் கூறவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார். நூல்:அபூதாவூத் 1995இந்த அனைத்து அறிவிப்புகளிலும் ஸிமாக் பின் ஹர்ப் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறும்போது 'ழயீஃபுல் ஹதீஸ்' 'முள்தரபுல் ஹதீஸ்' 'மனன ஆற்றலில் மோசமானவர்' என்று விமர்சிக்கின்றனர். மேலும் குறிப்பாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அவரைப் பற்றி கூறும்போது இக்ரிமா இடமிருந்து இவர் கூறும் ஹதீஸ்களில் அதிக 'முள்தரபுகள்' (அதாவது மாற்றியும், திரித்தும் கூறியவை) இடம் பெற்றிருக்கும். மேலும், இவரின் மனன ஆற்றல் கடைசி காலத்தில் மோசமாகி விட்டது. ஆகையினால் இக்ரிமாவிடமிருந்து இவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப் படாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்கள்.

எனவே நாம் ஆதாரப் பூர்வமான செய்தியாகப் புகாரியில் இருந்து இந்த தலைப்பில் பதிந்த முதல் ஹதீஸைத் தவிர்த்து மற்ற அனைத்தும் பலஹீனமானவைகளே என்பது இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் கூறுவதைப் போல மேகம் என்ற பதம் இடம்பெறும் அறிவிப்பு ஆதாரப்பூர்வமான ஹதீஸாகவும் இல்லை. இவர்கள் கூறிவருவது போல் அது போன்ற செய்தி புகாரி, முஸ்லிம் கிதாபுகளிலும் இல்லை.
ஸஹீஹான ஒரு ஹதீஸின் வாசகத்தை எடுத்துக் கொண்டு அதை பலஹீனமான அறிவிப்போடு கலந்து, அதன் வார்த்தைகளை வெட்டி ஒட்டி இதோ பாருங்கள் நபி (ஸல்) இப்படி கூறியுள்ளார்கள் என்று கூறி இதுவும் ஆதாரம் என்று யூத முரப்பிகளைப் போல இன்று சிலர் செய்யத் துணிந்துள்ளதை எண்ணி உண்மையிலேயே அதிர்ச்சி அடைகிறோம்.

அல்லாஹ்வின் பெரும் கிருபையால் நூற்றுக்கணக்கான ஹதீஸ் புத்தகங்களை இருந்த இடத்தில் இருந்து கொண்டே புரட்டிப் படிக்கும் கணிப்பொறி யுகத்தில் கூட இத்தகைய தில்லுமுல்லு ஆசாமிகள் இருக்கின்றனர் என்றால் பண்டையக் காலங்களில் இவர்களின் வகையறாக்கள் ஹதீஸ்களில் என்னென்ன விளையாட்டுகளைப் புரிந்திருப்பார்கள் என்பதை எண்ணி கவலையுறுகிறோம்.

மக்களே உங்களை ஏமாற்றுவதற்காக இந்த பலஹீனமான செய்தியை பதிந்து புகாரி, முஸ்லிமில் உள்ளது என ஒரு எண்ணையும் குறிப்பிட்டு ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருபவர்களை நீங்களே இனங்கண்டு கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பேருதவியால் சத்தியத்தை அசத்தியத்திலிருந்து பிரித்தறிவிக்கும் முகமாக மிக விரிவான ஆய்வுப் புத்தகம் இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளியாகும் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை.

பிறையைப் புறக்கண்ணால் பார்த்துத் தான் அமல்செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரமாகக் கருதப்படும் அறிவிப்புகள் யாவும் மிகவும் பலவீனமான செய்திகளாக இருப்பதையும், இவர்களின் பிறை நிலைப்பாடுகள் அந்த அறிவிப்புகளின் மூலம் நிரூபணமாகவில்லை என்பதையும் தெளிவாக நாம் காண்கிறோம்.

ஒரு ரிவாயத்து பலஹீனம் என்று தெரிந்து விட்டால் அதை மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிப்பதுதானே தூய்மையான எண்ணம் கொண்ட எந்த ஒரு அறிஞரின் கடமையாக இருக்க வேண்டும். மாற்றுக் கருத்துடையோர் பலஹீனமான ரிவாயத்துகளையே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதை பார்க்கையில், இவர்களின் நிலைப்பாட்டிற்கு ஒரு ஸஹீஹான ரிவாயத்துகூட தேறவில்லையா? மேலும், இவர்களின் இன்றைய பிறை பார்க்கும் நிலைப்பாட்டிற்கு நேரடியாக ஒரு ஆதாரம் கூட இல்லையா? இட்டுக்கட்டப்பட்ட, பலஹீனமான செய்திகளை வைத்துக் கொண்டுதான் இவ்வளவு காலம் மக்களை வழிநடத்தினார்களா? என்றே கேட்கத் தோன்றுகிறது.

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 23-09-2013]
 

 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved