முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Index   

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?


பகுதி : 6


யார் இந்த அபூ உமைர்?

வாகனக்கூட்டம் சம்பந்தமாக வரும் இந்த அறிவிப்பை எடைபோடுவதற்கு இதுவரை தெளிவுபடுத்தப்பட்ட விஷயங்களே போதுமானது என்றாலும் ஸஹாபியின் பெயரை விட்டுவிட்டு அறிவித்துள்ள அபூஉமைரைப் பற்றி நாம் ஏற்கனவே விளக்கியதுபோக கூடுதலான தகவல்களை அறிந்து கொள்வது ஆய்விற்கான மிக அவசியமாகும்.

ரூவாத்துத் தஹ்தீபீன் என்ற புத்தகத்தில் - 6/153 :.

அபூஉமைரின் பெயர் அப்துல்லாஹ் இப்னு அனஸ் என்பதிலும், இவரை அனஸ் (ரழி) அவர்களின் மூத்த மகன் என்று கூறுவதிலும் உறுதியற்ற வார்த்தைகளை கொண்டே கூறப்படுகின்றது.

 


இவரின் தபகா : நான்காவது தபகா ஆகும். தஃபியீன்களில் மிகவும் சிறிய தரத்தில் உள்ளவர்.

ஹதீஸ் கலையில் முஸ்லிமான நபித்தோழரை சந்தித்து, முஸ்லிமாகவே மரணித்தவருக்கு தாபிஃ என்று கூறப்படுகிறது. மற்றொறு கூற்றுப்படி நபித்தோழரிடம் தோழமைகொண்டு, நபித்தோழருக்கு தோழராக திகழ்ந்தவருக்கும் தாபிஃ என்று கூறப்படுகிறது.

அபூஉமைர் நான்காவது தபகாவை சார்ந்தவர் என்ற குறிப்பிற்கு இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தக்ரீபுத் தஹ்தீப் பாகம்:1, பக்கம்:25லில், மூன்றாவது தபகா என்பது தாபிஈகளில் நடுத்தரதில் உள்ள தாபிஈயின்கள் ஆவார்கள். உதாரணதிற்கு : ஹஸன், மற்றும் இப்னு சீறீன் போன்றவர்கள். நான்காவது தபகா என்பது தாபிஈகளில் நடுத்தரதில் உள்ள தாபிஈயின்களைவிட சிரிய தாபிஈயின்கள் ஆவார்கள். இவர்கள் பெரிய தாபிஈகளிடமிருந்து அறிவிப்பை பெற்றவர்கள். உதாரணதிற்கு : துஹ்ரி, கதாதா போன்றவர்கள். ஆக இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் கூற்றுபடி அபூஉமைர் சிரிய தாபிஈயி என்று கூறுவதைவிட தப்வு தாபிஈயி என்றோ அல்லது தப்வு தாபியிக்கு நெருங்கியவர் என்றோ கூறுவதே பொருத்தமானது என்று அறியமுடிகிறது.இவரின் தரவரிசை இப்னு ஹஜரிடம் (ரஹ்) : நம்பகமானவர்.

இவரின் நம்பகத்தன்மையைப் பற்றிய எந்த குறிப்பையும் இப்னு ஹஜ்ர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடாததால், எதை அடிப்படையாக கொண்டு இவரை நம்பகமானவர் என்று கூறுகின்றார்கள் என்பது அறியப்படாமலேயே உள்ளது. ஸிகா என்று கூறப்படுபவரின் நம்பகத்தன்மை இன்னொரு அறிவிப்பாளரை கொண்டு உறுதி செய்யப்பட வேண்டும் என்பது ஹதீஸ்கலையில் உள்ள விதியாகும். இருப்பினும் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் அபூஉமைரைப் பற்றி சொன்னது என்ன என்பதை தனித்தலைப்பில் பின்னர் விரிவாக விளக்குவோம்.

மேலும் குறைகள் தாங்கிய அறிவிப்பை ஹதீஸ்கலையில், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட அந்த அறிவிப்பை குறைந்தது இருவராவது, அதே போன்று அறிவித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் ஹதீஸ் கலை அறிஞர்கள் விதித்துள்ளனர். இரண்டாவதாக அறிவிப்பவரின் அந்த அறிவிப்பிலும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளனர்.

மேற்கண்ட நிபந்தனைகள் பூர்த்தியானால்தான் ஒரு அறிவிப்பை அறிவிக்கும் அறிவிப்பாளரை ஹதீஸ்கலையில் நம்பகமானவர் என்று ஏற்றுக்கொள்வார்கள். அந்த தகுதியையும் அபூஉமைர் இங்கு பெறவில்லை என்பதை யாரும் மறுக்கமுடியாத உண்மையாகும். ஏனென்றால் அபூஉமைர் அறிவிக்கும் இந்த அறிவிப்பை போன்று வேறு எந்த அறிவிப்பாளரும் அறிவிப்பு செய்யவே இல்லை.


 

அபுல்ஹஸன் பின் அல்கத்தான் அல்ஃபாஸி (ரஹ்) அவர்கள் கூறியது: அவரின் நம்பகதன்மை நிரூபிக்கப்படவில்லை.

 

இவரின் தரவரிசை தஹபியிடம் (ரஹ்) : அதை அவர் குறிப்பிடவில்லை.

இவரைப் பற்றிய இன்னும் சில அறிஞர்களின் கூற்று ஜாமியுல் உசூல் ஃபி அஹாதிஸர்ரசூல் என்னும் புத்தகத்தில் (6/153) கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.


இதில் அபூஉமைர் பின் அனஸ் இடம் பெற்றுள்ளார், அவரைப் பற்றி இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தஹ்தீபில் கூறும் போது, இவரது ஹதீஸை அபூபக்கர் பின் அல்முன்திரும் இன்னும் மற்றவரும் ஆதாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தஹ்தீபில் கூறும்போது அபூ உமைர் அறிவிப்பை அபூபக்கர் இப்னு அல் முன்திரும் இன்னும் அறியப்படாதவரும் ஆதாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளார் எனக் கூறுகின்றார்கள். இதே இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இதே அபூ உமைரைப் பற்றி ஸிகா - நம்பகமானவர் என கூறியுள்ளார்கள். அதில் ஸிகா என்று ஒரு அறிவிப்பாளரைப்பற்றி கூறும் போது என்ன நிபந்தனைகள் அதில் பூர்த்தி செய்யப்படவேண்டும் என குறிப்பிட்டிருந்தோம். அதை மேலே படித்துக்கொள்ளவும்.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஸிகா என குறிப்பிட்ட ஒரு நபரை வேறு அறியப்படாத ஒருவரும். இன்னும் அபூபக்கர் அல் முன்திரும் அவருடைய அறிவிப்பை சரியெனக் கூறியுள்ளதாக குறிப்பிடுகின்றார்கள். அவர்கள் எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் அந்த அறிவிப்பை சரி காண்கின்றார்கள் என்பதை இங்கு குறிப்பிடவில்லை. அபூபக்கர் அல் முன்திர் அவர்களும் அபூஉமைரைப் பற்றி எங்குமே குறிப்பிடவும் இல்லை என்பதை தனித்தலைப்பில் விளக்கியுள்ளோம்.

ஒரு ஹதீஸ்கலை வல்லுனர், ஒரு அறியப்படாத அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று கூறினால், அவர் எந்த அடிப்படையில் அவரை நம்பகமானவர் என குறிப்பிட்டுள்ளார் என்பதையும், எந்த கிதாபில் அவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார் என்பதைப் பற்றியும் தெளிவான விபரங்கள் அறியப்பட வேண்டும். அப்போதுதான் அவர் நம்பகமானவர் என்று கூறும் அறிவிப்பாளரின் தரத்தை நாம் ஆய்வு செய்து ஏற்பதா? நிராகரிப்பதா? என்பதை முடிவு செய்ய முடியும்.

 


மேலும் இப்னு ஸாஅத் அவர்களும் இவரைப்பற்றி கூறும்போது இவர் நம்பகமானவர் ஆனால் குறைவான ஹதீஸ் உள்ளவர் என்றும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு இப்னு ஸாஅத் அபூ உமைர் நம்பகமானவர் குறைந்த அளவு ஹதீஸ்கள் உள்ளவர் எனக் கூறியள்ளதையும் அடிப்படையாக கொண்டு அபூ உமைர் அறிவிக்கும் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை நாம் ஆதாரமாகக் கொள்ள முடியாது. காரணம் யாரும் அறிவிக்காத இந்த அறிவிப்பை மட்டும் அறிவித்தும், ஒரேயொரு மாணவர் மட்டுமே உள்ள அறிவிப்பாளரை எக்காலமும் நம்பகமானவர் எனக் கூறமுடியாது. இன்னும் இப்னு ஸாத் பற்றிய கூடுதல் விபரங்களை விமர்சனம் பகுதியில் விளக்கமாகக் காணலாம்.


இவரை இப்னுஹிப்பான் (ரஹ்) அவர்கள் தனது ஸிகா புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்கள். இப்னு ஹிப்பான் (ரஹ்) அபூ உமைரை நம்பகமானவர் என்று கூறியதை ஆதாரமாகக் கருத முடியாது. ஏனெனில் இப்னுஹிப்பான் (ரஹ்) அவர்கள் இனம் காணப்படாதவரையும் நம்பகமானவர் எனக் கூறும் வழக்கமுடையவர் என விமர்சிக்கப்படுகின்றார். இப்னு ஹிப்பான் அவர்களின் கூற்றை தனித்தலைப்பில் விரிவாக பின்னர் விளக்குவோம்.

இதில் ஸிகா என்ற சொல்லிற்கு பலம்பொருந்தியவர் என்று பொருளல்ல. ஒரு அறிவிப்பாளரை பலம்பொருந்தியவர் என்பதற்கு குறைந்தது இரண்டு ஆரிவிப்பளர்களாவது அந்த அறிவிப்பை அறிவித்திருக்க வேண்டும்.

இதற்காகவே இனம்காணாத அறிவிப்பாளரை நம்பகமானவர் அல்லது ஹதீஸில் நல்லவர் என்று கூறுவதில் உள்ள நிபந்தனைகளை பலகோணங்களில், பல அறிஞர்களின் கூற்றுகளை ஆதாரமாக வைத்து நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். ஹதீஸ்கலை நூல்களில் ஒன்றான இத்ஹாஃபுன் நபீல் (إتحاف النبيل) கிரந்தத்தின் நிபந்தனைகளையும் கூடுதல் விபரமாக இங்கே தருகிறோம்.

1. இனம்காணப்படாத அவரிடமிருந்து நம்பகமானவர்களின் ஒரு கூட்டம் அறிவித்து இருக்கவேண்டும். அவரின் நம்பகதன்மையை உறுதிபடுத்துவதற்காக குறைந்தபட்சம் அவருக்கு இரண்டு அறிவிப்பாளர்களாவது இருக்கவேண்டும்.

2. அவர்களின் மனன சக்தியைப் பற்றிய குறிப்புகள் இருக்கவேண்டும். அவரிடமிருந்து மனனம் செய்வதில் பலகீனம் அல்லாத நம்பகமானவர்கள் அறிவிக்க வேண்டும். எப்போது அவரிடமிருந்து இந்த உறுதிகளுடன் அறிவிக்கப்படுகிறதோ அப்போதுதான் அவரின் ஹதீஸை ஆதாரத்திற்காக ஏற்றுக்கொள்ளலாம். இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் அவர்கள் கருத்தின்படி அவர் இனம்காணாதவறாக இருந்தாலும் சரியே .

3. அவரை மறுக்கக்கூடிய எந்த தன்மையும் அவருக்கு இருக்கக்கூடாது. இதை இப்னு ஹிப்பான் அவர்கள் நிபந்தனையாக வைத்துள்ளார்கள். அவரிடம் மறுக்கக்கூடிய தன்மை இருக்கும் நிலையில் அவரை இனம்காணாத நபர்களில் எண்ணமுடியாது. மாறாக அதைவிடவும் (கீழாக) அவரை பலவீனமானவர்களில் கணக்கிடப்படுவார். இப்படி அவர் பலஹீனமாகும் பட்சத்தில் அவரிடமிருந்து வரும்; நம்பகமானவர்களின் அறிவிப்பும் பலன் அளிக்காது.

4. இங்கு பிரச்சனையல்லாத அதிகமான மனன சக்தி படைத்த வல்லுனர்கள் உள்ளனர். அவர்கள் நம்பகமானவரிடமிருந்தே தவிர மற்றவர்களிடமிருந்து அறிவிக்கமாட்டார்கள். (பார்க்க : இத்ஹாஃபுன் நபீல் - 208)


 

இவர் அறியப்படாதவர் இவரை ஆதாரத்திற்கு எடுக்க முடியாது என ஹதீஸ்கலையின் மாபெரும் இமாம்களில் ஒருவரான இமாம் இப்னு அப்துல்பர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவரின் நம்பிக்கை தன்மை உறுதிப்படவில்லை என்று அபுல் ஹஸன் பின் அல் கத்தான் அல்ஃபாஸி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இமாம் இப்னு அப்துல் பர்(ரஹ்) மற்றும் இமாம் அபுல் ஹஸன் பின் அல் கத்தான் அல்ஃபாஸி (ரஹ்) அவர்களுடைய மேற்சொன்ன கருத்தையே இந்த அபூ உமைர் விஷயத்தில் நாமும் வழிமொழிகிறோம்.

அபூஉமைருடைய ஆசிரியரும் அறியப்படாதவர் என தஹ்தீபுல் கமாலில் முஜ்ஜி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


 

அபூ உமைருடைய ஆசிரியர்கள் உமூமத் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மற்ற எந்த ஆசிரியரும் குறிப்பிடப்படவில்லை. பார்க்க தஹ்தீபுல் கமால் 7545.

ஆக மொத்தத்தில் அபூஉமைரின் இனம் காணப்படாத தன்மையை யாரும் மறுத்து, அதிகமான தகவல்களை பதிவு செய்து வைக்கவில்லை என்பது தௌ;ளத் தெளிவாக நிரூபணமாகியுள்ளது. எனவே அபூஉமைரின் நம்பகத்தன்மையின் கேள்விக்குறி இன்னும் அப்படியே அவர் மீது தொங்கிக் கொண்டே இருப்பதுடன் அது மேன்மேலும் அதிகரித்தவாறே சென்று கொண்டு இருக்கிறது.

அபூதாவூத், இப்னுமாஜா மற்றும் நஸயீ போன்ற சுனன் கிதாபுகளின் ஆசிரியர்கள் மட்டுமே அபூஉமைரின் முர்ஸலான இந்த அறிவிப்பை பதிவு செய்துள்ளனர். முர்ஸலான இஸ்மு முப்ஹமான இவரது அறிவிப்புகளில் எதையும் இமாம் புகாரி (ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) போன்றவர்கள் தங்களுடைய ஹதீஸ் நூல்களில் இவரின் அறிவிப்பை பதிவு செய்யவே இல்லை. அதே போல் திர்மிதி இமாமும், ஸஹாபியை மறைத்து அறிவிக்கும் இவரின் எந்த அறிவிப்புகளையும் பதிவிடவில்லை. இந்த அறிவிப்பை பதிந்தவர்கள் யாரும் அபூஉமைரின் நம்பகத்தன்மையை குறிப்பிடாமல் சென்றதோடு, இதை அறிவிக்கும் அறிவிப்பாளரின் வரலாற்றுக் குறிப்புகளையும் பதிவிடவில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அத்தோடு உமூமத் யார் என்றும் அவர்கள் யாருடைய உமூமத் என்றும் பதிவிடவில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

ஆக இந்த அறிவிப்பில் ஸஹாபியின் பெயர் இல்லை. பொத்தாம் பொதுவாக அறிவித்துள்ள அபூஉமைரோ யாரென்றே அறியப்படாதவர், விமர்சனத்திற்கும் உள்ளானவர். அவருடைய ஆசிரியரும் யாரென்று தெரியவில்லை. அவரிடமிருந்து அறிவிக்கும் அபூ பிஷ்ரும் விமர்சிக்கப்பட்டவர் என்று பல ஓட்டை உடைசல்களை தாங்கி நிற்கும் இந்த அறிவிப்பை நமதூர் அறிஞர்கள் இத்தனைகாலம் இவைகளை ஆய்வு செய்யாமல் தங்களின் பிறை நிலைபாடுகளுக்கு தக்க ஆதாரம் என்று கருதி மக்கள் மத்தியில் எப்படிதான் பிரச்சாரம் செய்தார்களோ? நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அபூ பிஷ்ர் பற்றிய சிறு குறிப்பு :

 


இவரைப் பற்றி அறிஞர்களின் கூற்று : தஹ்தீபுல் கமாலில் 932 : இவரின் பெயர் ஜஃபர் பின் இயாஸ் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.


அபூ அஹமத் பின் அதீ அல்ஜுர்ஜானி அவர்களின் கூற்று : இவர் பிரச்சனைக்குறியவர் அல்ல என்று எண்ணுகின்றேன். இவரிடமிருந்து ஷூஃபா, ஹூஸைம் ஆகியோர் அறிவிக்கின்றனர். மேலும் பிரபலமான ஹதீஸ்களும் பிரபலமல்லாத அறியபடாத ஹதீஸ்களும் இவர் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : ஸயீத் இப்னு ஜுபைர் இடமிருந்து நம்பத்தகுந்த நபர்களின் இவர் ஒருவர். சில நபர்கள் இவரை ஆதாரத்திற்கு ஏற்றுக்கொள்வார்கள். மேலும் சிலர் இவரை இர்ஸால் செய்பவர் (அதாவது ஸஹாபியை மறைத்து அறிவிப்பவர்) என்றும் கருதியுள்ளார்கள்.

 

ஷுஃபா இப்னு ஹஜ்ஜாஜ் கூறும்போது : இவர் பலஹீனமானவர். இவர் முஜாஹிதிடமிருந்து செவியேற்கவில்லை. ஹபீப் இப்னு ஸாலிம் அவர்களிடமிருந்தும் இவர் செவியேற்கவில்லை.

அபூஉமைரும் மற்றும் அபுபிஷ்ர் அவர்களும் விமர்சனத்திற்குள்ளானவர் எனும் நிலையிலும், இந்த செய்தியின் மற்ற குறைகளையும் நாம் அலசுவோம்.


 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 13-04-2013]
 

 


 

 

Hit Counter

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved