முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Index   

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?


பகுதி : 3

1. யார் அந்த விடுபட்ட நபர்?

மேற்கண்ட அறிவிப்பாளர்கள் வரிசையில் இனம் காணப்படாத, பெயர் தெரியாத ஒருவரிடமிருந்;து அபூ உமைர் என்பவர் இந்த செய்தியை அறிவிப்பதாக வருகிறது. இந்த அறிவிப்பாளர் வரிசையில் விடுபட்டவர் யார்? அவரின் பெயர் என்ன? என்பதை இன்றுவரை யாரும் தெளிவுபடுத்தவில்லை. இன்னும் அவ்விடத்தில்; விடுபட்டவர் ஸஹாபியா? தாபிஈயா? அல்லது மற்றவரா? என்றும் தெளிவாக அறியப்படவில்லை. இத்தகைய அறிவிப்புகளை முர்ஸல் என்றும் இஸ்மு முப்ஹம் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுகின்றனர். மூடலாக (இஸ்மு முப்ஹமாக), நபித்தோழர் பெயரை மறைத்து, அன்னார் இன்னார் என்று பொத்தாம் பொதுவாக அறிவித்தால்; அந்த ரிவாயத்தை அடிப்படை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளவோ, அதிலிருந்து சட்டங்கள் வகுக்கவோ கூடாது என்பது ஹதீஸ் உடைய (உஸூல்) அடிப்படை சட்டமாகும்.

மேற்கண்ட அறிவிப்பாளர்களின் வரிசையில் நபித்தோழரின் பெயர் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக வரும் முர்ஸலான, இஸ்முமுப்ஹமான அறிவிப்பை தங்களுக்கு பலமான ஆதாரமாக விபரம் அறிந்த அறிஞர்கள் எவரும் முன்வைக்கவே மாட்டார்கள், அதை முன்வைப்பதில் நியாயமும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக எனக்கு இந்த நபித்தோழர் சொன்னார் என்று அச்செய்தியோடு தொடர்புடைய நபித்தோழரின் பெயரைக் குறிப்பிட்டு சொன்னால்தானே அது நபி (ஸல்) அவர்கள் வரை தொடர்பு முறியாத முழுமைபெற்ற அறிவிப்பாக அமையும். மாறாக எனது சித்தப்பா சொன்னார், என் குடும்பத்தார்கள் சொன்னார்கள், ஒரு நபித்தோழர் சொன்னார் என்று வரும் ஒரு அறிவிப்பை நாம் எவ்வாறு பலமான அறிவிப்பாளர் வரிசையாக எடுத்துக்கொள்ள முடியும்? என்று மக்களே சிந்தியுங்கள்.

மேலும் அவரின் சித்தப்பாவோ சித்தியோ யாராக இருந்தாலும் அவர்கள் நபித்தோழர்களா? அவர்கள் நபி (ஸல்) வாழ்ந்த காலத்தில் தான் வாழ்ந்தார்களா? அவர்கள் எப்போது நபியின் தோழமையை பெற்றார்கள்? நபி (ஸல்) அவர்களை எப்போதாவது சந்தித்துள்ளார்களா? போன்ற விபரங்கள் துல்லியமாக அறியப்பட்டால் மட்டுமே அபூஉமைர் அந்த நபித்தோழரிடமிருந்து அறிவித்தார் என்பதை யாராலும் உறுதிபடக் கூறமுடியும்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எனது சமுதாயத்தில் இறுதி காலத்தவரிடையே சிலர் தோன்றவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத புதுப்புது ஹதீஸ்களையெல்லாம் உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே அவர்கள் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். (அறிவிப்பாளர் : அபூஹூரைராஹ் (ரழி), நூல் : முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும். (அறிவிப்பாளர் : அபூஹூரைராஹ் (ரழி), நூல் : முஸ்லிம்)

மேலும் இந்த வாகனக்கூட்டம் ரிவாயத்து சம்பந்தமாக எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் அந்த நபித்தோழர் இன்னார்தான் என்று பெயர் பதிவுசெய்யப்படவில்லை என்பதையும் இங்;கே நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். எனவே இந்த அறிவிப்பு பலவீனமானது என்பதற்கு அதன் முர்ஸலான, இஸ்மு முப்ஹமான நிலையே முதலாவது காரணமாகும்.


2. அபூ உமைர் விமர்சனத்திற்கு உள்ளானவர் :

இந்த அறிவிப்புத் தொடரில் முதலாவதாக இடம் பெற்றுள்ள அபூஉமைர் என்ற அபூஉமைர் பின் அனஸ் என்பவர் இனம் காணப்படாதவர். ஏனெனில் அவரின் பிறப்பு இறப்பு போன்ற எந்த வாழ்க்கைக் குறிப்பையும், அவரின் நம்பகத்தன்மையை பற்றிய குறிப்புகளையும், ஹதீஸ்கலை அறிஞர்கள் எங்குமே குறிப்பிடவில்லை.

இவரின் பெயர் அபூஉமைர்தானா? அல்லது அபூஉமைர் என்பது இவரின் புனைப்பெயரா? இவரின் உண்மையான பெயர் என்ன? என்பதில்கூட பல சந்தேகங்கள் உள்ளன. இவர் பெயரைப்பற்றிக் கூறும்போது இமாம் ஹாக்கிம் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் என கூறப்பட்டுள்ளதாக சந்தேகத்துடைய வாசகத்தைக் கொண்டு கூறுகின்றார்;கள். மேலும் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறும்போது, அபூஉமைர் என்பது இவரின் புனைப்பெயராகும் எனக் கூறுகின்றார்கள்.

மேலும் இவரிடமிருந்து அபூ பிஷ்ர் என்பவரை தவிர வேறு எவரும் இந்த அறிவிப்பை பெற்றதாக எந்தத் தகவலும் ஹதீஸ்கலை வல்லுனர்களால் குறிப்பிடப்படவில்லை. இவரின் இனம் காணப்படாத தன்மையை அல் பாவர்தி (ரஹ்), இப்னு அப்துல்பர் (ரஹ்), இப்னுல் கத்தான்(ரஹ்) போன்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் கீழ்கண்டவாறு விமர்சித்துள்ளனர்.இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள அல் பாவர்தி (ரஹ்) அவர்கள் தம்முடைய முஸ்னதில், அவரின் பெயர் அப்துல்லாஹ் எனக் குறிப்பிடுள்ளார்கள். அபூஉமைரின் உண்மை நிலைமையை அறிந்து கொள்வதற்கு இதுமட்டும் போதுமாகாது. மேலும் இதில் அபூஉமைரின் நிலை குறித்த அறியாமையும் அவருடைய தந்தையின் சகோதரர்களின் பெயர்கள் குறிப்பிடாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த ஹதீஸை ஸஹீஹ் என கூற இயலாது. எனவே இந்த ஹதீஸ் நிராகரிக்கப்பட்டதாகும் எனக் கூறியுள்ளார்கள்.அபூ பிஷ்ரை தவிர அபூ உமைரிடமிருந்து வேறு எவரும் அறிவிக்கவில்லை. மேலும் எந்த அறிவிப்பாளர் இவ்வாறு (தனி நபர் அறிவிப்பாளராக) இடம்பெறுகிறார்களோ அவர் இனம்காணப்படாத அறிவிப்பாளர் ஆவதோடு அவரை ஆதாரத்திற்கு ஏற்கமுடியாது என இமாம் இப்னுஅப்துல்பர் (ரஹ்) அவர்கள் தம்ஹீது 9/36
இல் கூறியுள்ளார்கள்.அபூதாவுதிற்கு ஷரஹ் எழுதிய இமாம் அய்னி (ரஹ்) அவர்கள் இமாம் இப்னு அல் கத்தான்(ரஹ்) தம்முடைய புத்தகத்தில் கூறியுள்ளதாக தெரிவிப்பதாவது: நான் இந்த ஹதீஸை ஆய்விற்கு உட்படுத்துவது கடமை என எண்ணுகிறேன். அபூ உமைரின் நம்பகத் தன்மை உறுதி ஆகும் வரை இந்த அறிவிப்பை ஏற்க முடியாது. அவருக்கு (அப்துல் ஹக்கிற்கு) இது பெரிய விஷயம் எனத் தெரியவில்லை. அபூஉமைரிடமிருந்து அபூ பிஷ்ர் வாயிலாக இரண்டு அல்லது மூன்று ஹதீஸ்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. அவருடைய அறிவிப்பை ஏற்பதற்கு நிபந்தனையாக உள்ள அவரின் வாழ்க்கைக் குறிப்பை அறிந்த யாரையும் நான் அறியவில்லை. மேலும் அவர் புகழ்பெற்ற நபரும் அல்ல. அவர் இஸ்லாத்தில் உள்ளவாரா என நம்பிக்கையான தகவல்களைப் பெறுவதில்கூட கருத்து வேறுபாடுகள் உள்ளன. இவ்வாறு ஷரஹ் அபூதாவுது லில்அய்னி கிதாபில் கூறப்பட்டுள்ளது. அல் அஹ்காமுல் குப்ரா மற்றும் அல் அஹ்காமுல் ஷூஃரா போன்ற ஹதீஸ் நூட்களின் ஆசிரியரே மேற்குறிப்பிட்டுள்ள அப்துல் ஹக் (ரஹ்) அவர்களாவார்கள்.

இன்னும் இனம் காணப்படாத ஒருவர் அறிவிக்கும் புதிய தகவல்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்பதை ஹதீஸ்கலை வல்லுனர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.இனம் காணப்படாதவருடைய அறிவிப்பின் சட்டமானது : ஹதீஸ்கலை அடிப்படையில் அறிவிப்பாளர் பற்றிய அறியாமை ஒரு பிழை. அப்பிழையினால் அச்செய்தியை மறுத்துவிடுவோம்.

எவர் நம்மிடம் ஹதீஸ் பெறுவதில் அறியபட்டவராக உள்ளாரோ அவரிடமிருந்தே தவிர மற்றவர்களிடமிருந்து நாம் ஹதீஸை எழுதமாட்டோம் என இமாம் அப்துல்லாஹ் பின் அவ்ன்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிந்த நபரிடமிருந்தே தவிர மற்றவர்களிடமிருந்தும் நாம் அறிவிப்பை ஏற்கமுடியாது என இமாம் ஷாஃபிஈ(ரஹ்) கூறினார்கள்.

இப்னு ஸீரீன், நகயீ மற்றும் தாபிஈன்களில் மற்றவர்களும் இந்த கருத்தில்தான் உள்ளனர். மேலும் இந்த கருத்தை எதிர்த்ததாக ஹதீஸ்கலை வல்லுனர்களில் எவரையும் நான் அறிந்ததுமல்ல, பார்த்ததுமல்ல என ஆணித்தரமாக கூறியுள்ளார்கள்.

அறியப்பாடாதவர்களின் செய்திகள் ஆதாரமாகாது என இமாம் பைஹகீ (ரஹ்)கூறினார்கள்.

எவருடைய நம்பகத்தன்மை அறியப்படவில்லையோ அவர் ஆதாரமாக மாட்டார். மேலும் அவரிடமிருந்து அறியாமையும் நீங்காது என இமாம் தஹபி (ரஹ்) கூறினார்கள்.

இமாம் அஹ்மது (ரஹ்) அவர்களின் கூற்றில் வெளிப்படையானது நிலைமை அறியப்படாதவரின் செய்தி சரியானது அல்ல. மேலும் அவர் ஆதாரத்திற்கு சன்றாகமாட்டார் என இப்னு ரஜப் கூறினார்கள். (நூல் : அல்ஜர்ஹ் வத்தஃதீல்)

ஆக இந்த ரிவாயத்தை அறிவிக்கும் அபூஉமைர் குறித்து யார் என அறியப்படாதவர், இந்த அறிவிப்பு ஒரேயொரு மாணவரைக் கொண்டே அறிவிக்கப்படுகின்றது, அவர் இஸ்லாத்தில் உள்ளவாரா என்பதில்கூட கருத்து வேறுபாடுள்ளது என்பனபோன்ற பாரதூரமான விமர்சனங்கள் இருப்பதாலும், இனம் காணப்படாதவரிடமிருந்து நாம் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, அறியப்படாதவரின் செய்தி சரியானது அல்ல,

அறியப்பாடாதவர்களின் செய்திகள் ஆதாரமாகாது என பல்வேறு இமாம்களின் எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும், வாகனக்கூட்டம் சம்பந்தமான இந்த அறிவிப்பு பலம்பொருந்தியதல்ல என்பதற்கு, இதன் முதன்மை அறிவிப்பாளர் விமர்சனத்திற்குள்ளான நிலையே இரண்டாவது காரணமாகும். அபூஉமைர் குறித்து கூடுதல் விமர்சனங்களை தனித்தலைப்பில் பின்னர் காண்போம்.


3. முஹம்மது நபி (ஸல்) ஹராமான நோன்பை நோற்றார்களா?

இன்னும் அறிவிப்பாளர் வரிசையில் வரும் முதல் நபரே யாரென்று அறியப்படாத நிலையில் பதியப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தெரிவிக்கும் செய்தியும்கூட தரம் வாய்ந்ததாக இல்லை. காரணம் நபி (ஸல்) அவர்கள் நம்மைப்போன்ற மனிதராக மட்டும் அல்லாமல் அல்லாஹ்வுடன் வஹிமூலம் தொடர்புடைய இறைத்தூதராகவும் இருந்தார்கள். இப்படித்தான் உலக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நம்பியிருக்கிறோம்.

நாட்களை மாற்றுவது இறை மறுப்பாகும் என்கிறது இறைவேதம் அல்குர்ஆன் (9:37). பெருநாள் தினத்தில் நோன்பு பிடிப்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.நோன்புப் பெருநாள் தினத்திலும், ஹஜ்ஜுப் பெருநாளன்றும் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்களே தடை செய்துள்ளார்கள்.இரு நாட்கள் நோன்பு நோற்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தனர். அவை நோன்பை முடித்து பெருநாள் கொண்டாடும் (ஈதுல் ஃபித்ர்) தினமும், குர்பானி இறைச்சியை நீங்கள் சாப்பிடும் (ஈதுல் அள்ஹா) தினமும் ஆகும். (அறிவிப்பாளர்;: உமர் (ரழி), நூல்: புகாரி - 1990).நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெரு நாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்பதையும், இரு புஜங்களில் ஒன்றை மட்டும் மறைத்து, மற்றொன்று வெளியே தெரியும் வண்ணம் ஒரு துணியைப் போர்த்திக் கொள்வதையும், ஓர் ஆடையை சுற்றிக் கொண்டு முழங்கால்களைக் கட்டி அமர்வதையும், சுப்ஹுக்குப் பிறகும், அஸ்ர் தொழுகைக்குப் பிறகும் தொழுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்! என அபூசயீத் (ரழி) அவர்கள் கூறனார்கள். (அறிவிப்பாளர் : அபூசயீத் அல்குத்ரீ(ரழி), நூல் : புஹாரி - 1991,1992.)

இந்நிலையில் மேற்படி வாகனக்கூட்டம் சம்பந்தமான அறிவிப்பின் உட்கருத்தானது பெருநாளன்று நோன்பு நோற்பது ஹராம் என உம்மத்திற்குச் சொன்ன நபி (ஸல்) அவர்களே தம் தோழர்களோடு சேர்ந்துகொண்டு ஒரு ஹராமான நோன்பை நோற்றிருந்தார்கள் எனச் சித்தரிக்கிறது (நவ்வூதுபில்லாஹ்).

இப்படி நாம் சொல்லும்போது இது அல்லாஹ்வின் ஏற்பாடு என்றும், ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் நான்கு ரக்அத்துகள் கொண்ட தொழுகையில் மறதியாக இரண்டாவது ரக்அத்திலேயே ஸலாம் கொடுக்கவில்லையா? தொழுகையின் போது இமாம் இவ்வாறு பிழைசெய்தால் சட்டம் என்ன என்பதற்கு அந்த ஹதீஸ் வழியாகத்தானே சட்டம் எடுக்கிறோம். அதுபோலத்தான் இந்த ஹதீஸையும் எடுத்துக் கொள்ளவேண்டும் என சிலர் வாதிடுகின்றனர்.

என்ன வேடிக்கை இது!, நபி (ஸல்) அவர்கள் மறதியாக செய்த ஒன்றையும். நோன்பு ஹராமான நாளில் ஹராமான நோன்பு பிடித்தார்கள் என்ற செய்தியையும் இணைத்து அதுபோலத்தான் இதுவும் என்று எவ்வாறு கூற இயலும்? இது ஒருகாலமும் பொருந்தாத தவறான வாதமாகும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பது ஹராம் என்று கூறிய நாளில் அவர்களே நோன்பை நோற்று ஹராமான காரியத்தை செய்திருப்பார்களா? என்று சற்று சிந்திக்க வேண்டும் மக்களே!.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் ஒரு ஹராமை இட்டுக்கட்டும் செய்தியை தாங்கியுள்ளதே இந்த வாகனக்கூட்டம் சம்பந்தமாக வரும் அறிவிப்பு பலவீனம் என்பதற்கு மூன்றாவது காரணமாகும்.


4. நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துகிறதா? கேவலப்படுத்துகிறதா? :

நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் ஒருமாத காலம் பிரிந்திருந்த நாட்களில், அம்மாதத்தின் இறுதியில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த மாதம் 29 நாட்களை கொண்டது என கூறிய ஸஹீஹான ஹதீஸ் நஸயில் (2104) பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழானின் நாட்கள் இருபத்து ஒன்பதா அல்லது முப்பதா என்ற சந்தேகம் ஏதும் ஏற்பட்டு இருந்தாலோ அல்லது நோன்பு பிடிக்க ஹராமான நாளில் நோன்பு நோற்றிருந்தாலோ வல்ல அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் வஹி அறிவித்து தனது தூதரை பாதுகாத்துவிடுவான் என்பது தெளிவாகிறது.

இப்படியிருக்க வாகனக்கூட்டம் ஒன்று வந்து, அதுவும் பெருநாள் பகலின் இறுதிப் பொழுதில் வந்து நபி (ஸல்) அவர்களுக்கே கற்றுக்கொடுக்கும் அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஒரு போதும் கண்ணியக் குறைவாக நடத்தியிருக்க மாட்டான் என்று முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் மீதும், நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தின் மீதும் முதலில் நம்பிக்கை வைக்கவேண்டும். இந்த நம்பிக்கையை தகர்க்கும் மேற்படி செய்தியை எப்படி சரியானது என ஏற்றுக்கொள்ள முடியும்? எனவே இறைதூதர் (ஸல்) அவர்களின் கண்ணியத்தை கேள்விக் குறியாக்கும் இந்நிலையே இந்த அறிவிப்பு இட்டுக்கட்டப்பட்டதுதான் என்பதற்கு நான்காவது காரணமாக அமைகிறது.


 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 12-04-2013]
 

 


 

 

Hit Counter

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved