முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Index   

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?


பகுதி : 18


விமர்சனம்-2 :

(தஹ்தீபுத் தஹ்தீப் பா:12, பக்கம் 168, தக்ரீபுத் தஹ்தீப் பா:2, பக்கம் 661) இப்னு ஹிப்பான அவர்கள், அபூ உமைர் குறித்து நம்பகமானவர் எனக் கூறிய பின்பும் சந்தேகம் இருந்தால் இப்னு சஅதும் அதே கருத்தைச் சொன்னதும் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக அபூஉமைர் சிறந்த தாபிஈ என்பது நிரூபனமாகி விடுகின்றது.

விளக்கம் :

இந்த அறிவிப்பின் அறிவிப்பாளர்கள் பற்றி நாம் கூறும் கருத்தை சரிவர உள்வாங்கியிருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. அபூஉமைரின் நம்பகத்தன்மை என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் அனைத்து விதிகளிலும் அடிபட்டு தோல்வியைத்தான் தழுவுகிறது. அபூஉமைரை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) ஸிகா – நம்பகமானவர் என்று கூறவில்லையா? அது போதாதா? என்று எவரும் கேள்வி எழுப்பினால் அது அபூ உமைருக்கு எதிரான கேள்வியாகவே அமையும் என்பதை இமாம் இப்னுஹிப்பானின் கூற்றும், அபூஉமைரின் நம்பகத்தன்மையும் என்ற தனித்தலைப்பில் ஏற்கனவே விளக்கிவிட்டோம்.

அபூஉமைர் என்ற பெயரைக்கூட இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் தங்களது ஸிகா பட்டியலில் சேர்க்காத நிலையில் மேற்கண்டவாறு கேள்வி எழுப்புவதே ஒரு மிகப்பெரிய தவறு என்பது தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் நாம் ஏற்கனவே தெரிவித்துள்ள விளக்கங்களோடு மீண்டும் சில விஷயங்களை சுறுக்கமாகக் காண்போம்.

இந்த அறிவிப்பின் அறிவிப்பாளர் தொடரில் காணப்படும் அபூ உமைர் இப்னு அனஸ் என்பவர் இனம் காணப்படாதவர் ஆவார். ஏனெனில் அவரிடமிருந்து அபூ பிஷ்ர் என்பவரைத் தவிர வேறுயாரும் ஹதீஸை பெற்றதாகத் தகவல் இல்லை.

ஓர் அறிவிப்பின் அறிவிப்பாளருக்கு குறைந்தது இரண்டு நம்பகரமான மாணவர்கள் இருக்க வேண்டும் அப்போதுதான் அவரின் அறியப்படாத தன்மை நீங்கும் என கதீபு அவர்கள் கூறுகிறார்கள். (அல்கிஃபாயா:88, அஸ்ஸியர் 12/281).

இதற்காகவே இனம்காணாத அறிவிப்பாளரை நம்பகமானவர் அல்லது ஹதீஸில் நல்லவர் எனக் கூறுவதில் உள்ள நிபந்தனைகளை பலகோணங்களில், பல அறிஞர்களின் கூற்றுக்களை ஏற்கனவே ஆதாரமாக வைத்து எடுத்துக்காட்டியுள்ளோம். ஹதீஸ்கலை நூல்களில் ஒன்றான இத்ஹாஃபுன் நபீல் (إتحاف النبيل) கிரந்தத்தின் நிபந்தனைகளையும் கூடுதல் விபரமாக மீண்டும் இங்கே தருகிறோம்.

1. இனம்காணப்படாத அவரிடமிருந்து நம்பகமானவர்களின் ஒரு கூட்டம் அறிவித்து இருக்கவேண்டும். அவரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக குறைந்தபட்சம் அவருக்கு இரண்டு அறிவிப்பாளர்களாவது இருக்கவேண்டும்.

2. அவர்களின் மனன சக்தியைப் பற்றிய குறிப்புகள் இருக்கவேண்டும். அவரிடமிருந்து மனனம் செய்வதில் பலஹீனமல்லாத நம்பகமானவர்கள் அறிவிக்க வேண்டும். எப்போது அவரிடமிருந்து இந்த உறுதிகளுடன் அறிவிக்கப்படுகிறதோ அப்போதுதான் அவரின் ஹதீஸை ஆதாரத்திற்காக ஏற்றுக்கொள்ளலாம். இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் கருத்தின்படி அவர் இனம்காணபடதவராக இருந்தாலும் சரியே .

3. அவரை மறுக்கக்கூடிய எந்த தன்மையும் அவருக்கு இருக்ககூடாது. இதை இப்னு ஹிப்பான் அவர்கள் நிபந்தனையாக நியமித்துள்ளார்கள். அவரிடம் மறுக்கக்கூடிய தன்மை இருக்கும் நிலையில் இனம்காணாத நபர் எனக் கூட எண்ண முடியாது. மாறாக அதை விடவும் (கீழாக) அவர் பலவீனமானவர்களில் கணக்கிடப்படுவார்கள். இப்படி அவர் பலஹீனமாகும் பட்சத்தில் அவரிடமிருந்து அறிவிக்கும் நம்பகமானவர்களின் அறிவிப்பும் பலன் அளிக்காது.

4. இங்கு பிரச்சனையல்லாத அதிகமான மனனசக்தி படைத்த வல்லுனர்கள் உள்ளனர். அவர்கள் நம்பகமானவரிடமிருந்தே தவிர மற்றவர்களிடமிருந்து அறிவிக்கமாட்டார்கள்.
(பார்க்க : இத்ஹாஃபுன் நபீல் - 208)

இப்னுஹிப்பான் (ரஹ்) அவர்கள் இனம் காணப்படாதவரையும் நம்பகமானவர் எனக் கூறுவதால் கவனக் குறைவாளர் என விமர்சிக்கப்படுகின்றார் என்பதையும், யாரும் அறிவிக்காத அறிவிப்பை மட்டும் அறிவித்தும், ஒரேயொரு மாணவர் மட்டுமே உள்ள அறிவிப்பாளரை எக்காலமும் நம்பகமானவர் எனக் கூறமுடியாது என்பதால் இப்னு சாத் அவர்களின் கூற்றையும் ஆதாரமாக எடுக்கவியலாது என்பதையும் முன்னரே நாம் விளக்கிவிட்டோம்.

மேலும் ஹதீஸ் கலையின் அடிப்படை விதிகளின்படி ஒரு நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன் பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த அறிவிப்பு ஆகும். அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் தொடர்பு அறுந்த அறிவிப்பாகும். எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் தொடர்பு அறுந்த அறிவிப்பாகும். நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அந்த அறிவிப்பும் பலவீனமாகும். ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமேயாகும். இந்த விதிமுறைகள் அனைத்தையும் ஒரு ஹதீஸை ஆய்வு செய்யும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அடிப்படைகளாகும்.

இந்நிலையில் வாகனக்கூட்டம் அறிவிப்பில் இடம்பெரும் அறிவிப்பாளர் பட்டியலை பலம்வாய்ந்தது என்று காட்டுவதற்காக அபூஉமைர் சிறந்த தாபிஃயி என நிரூபனமாகிவிடுகிறது என்று நாக்கூசாமல் சொல்கிறார்கள். நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாக இந்த ரிவாயத்தை அபூஉமைர் பெறாத நிலையில், இந்த இனம்காணப்படாத அபூ உமைருக்கு அடையாளம் தெரியாத உமூமத்தினர் வழியாகவே இந்த அறிவிப்பு வந்துள்ள நிலையில், உமூமத்தை பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் நேரடியாக அபூஉமைர் சிறந்த தாபிஃயி என்று சொல்வது எதைக் காட்டுகிறது? இது அபூ உமைரை எப்படியேனும் காப்பாற்றிவிட்டால், பிறகு அபூ உமைரின் உமூமத்தினர் அனைவரும் ஸஹாபாக்கள் அவர்களை யாரும் உரசிப்பார்க்கத் தேவையில்லை என்று வாதம் வைப்பதற்குத்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் உண்டோ?

முதலில் தாபிஃயி என்றால் யார் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மொழிவழக்கில் தாபிஊன் என்ற சொல் தாபியிய்யுன் அல்லது தாபிஉன் என்ற சொல்லின் பன்மை வடிவமாகும். மேலும் தாபிஃ என்ற சொல் தபிவு என்ற இறந்த கால வினைச் சொல்லின் இஸ்மு ஃபாயில் வடிவமாகும். தபிஅஹு என்றால் மாஷா கல்ஃபஹு அவனுக்குப் பின்னால் போனான் அல்லது அவனைப் பின் தொடர்ந்தான் என்று பொருள்படுகிறது. அதாவது ஒரு முஸ்லிமான நபித்தோழரை சந்தித்து, முஸ்லிமாகவே மரணித்தவருக்கும், ஒரு நபித்தோழரிடம் தோழமைகொண்டு அந்நபித்தோழருக்கு தோழராக திகழ்ந்தவருக்கும் தாபிஃ என்று கூறப்படுகிறது.

தபகாவில் நான்காவது தரம் என்பது தபஅ தாபிஃயீன்களுக்கு நெருக்கமானது என்பதை நாம் முன்னரே அறிந்து கொண்டோம். அத்தகைய நான்காவது தரத்தில் வைக்கப்பட்டுள்ள அபூ உமைர் என்பவர் உண்மையிலேயே வாழ்ந்திருந்தால், அவர் தாபிஃயியை தோழமை கொண்ட ஒரு தப்வு தாபிஃயியே ஆவார் என்பது உறுதியாகிறது. அபூ உமைரின் இந்த தரவரிசை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். ஏனெனில் ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் நேரடியாக அறிவித்தால் அது தொடர் அறுந்த அறிவிப்புதான் என்பதை முதலில் விளங்க வேண்டும். காரணம் அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்புகள் இருந்திருக்கவில்லை. இனம்காணப்படாத அபூ உமைரை சிறந்த தாபிஃயி என்று கூறி எப்படியேனும் காப்பாற்றிவிட்டால், பிறகு அபூ உமைரின் உமூமத்தினர் அனைவரும் ஸஹாபாக்கள் என்று கூறிவிடலாம் என முயற்சி செய்பவர்களுக்கு அபூஉமைரை தபஅதாபியாகவும், அவருடைய உமூமத்தை தாபிஃயீன்களாகவும்தான் அறிவிக்க வேண்டிய நிலையே ஏற்படும்.

ஒரு வாதத்திற்காக அவர்கள்; கேள்வி எழுப்பியுள்ளதை போல அபூஉமைர் அவர்கள் சிறந்தவர் என்பதற்கு இப்னுஹிப்பான் (ரஹ்) அவர்களின் கூற்றும் இப்னு ஸாத் அவர்களின் கூற்றும் ஆதாரம் என்றே எடுத்துக் கொள்வோம். இதில் நாம் கேட்பது என்னவென்றால் அறிவிப்பாளர் அபூஉமைர் பற்றியும், இந்த முர்ஸலான அறிவிப்பு சம்பந்தமாகவும் இமாம் ஷாஃபிஈ (ரஹ்), பைஹக்கீ (ரஹ்), இமாம் தஹபி (ரஹ்), இப்னு ரஜப் (ரஹ்), இமாம் இப்னு அப்துல்பர் (ரஹ்), இன்னும் இமாம் இப்னுல் கத்தான் (ரஹ்) போன்ற ஹதீஸ்கலை மாமேதைகள் விமர்சித்தும் உள்ளதால் பேணுதல் என்ற அடிப்படையில் இவர்கள் எதை கவனத்தில் கொள்ளவேண்டும்? விமர்சனத்தை அல்லவா கவனத்தில் எடுக்கவேண்டும்? ஒரு அறிவிப்பாளர் பற்றி புகழ்ந்தும், விமர்சித்தும் இருவேறு கருத்துக்கள் வந்துவிட்டால் அறிவிப்பாளர் பற்றிய விமர்சனத்திற்குத்தான் முதலிடம் கொடுக்கவேண்டும் என்பது ஹதீஸ்கலையின் மிகஅடிப்படையான சட்டமல்லவா? இப்போது கூறுங்கள் யாருக்கு ஹதீஸ்கலை தெரியவில்லை என்று?
 

 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 24-04-2013]
 

 


 

 

Hit Counter

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved