முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Index   

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?


பகுதி : 16


ஏன் இந்த ஆள்மாறாட்டம்?

இந்த வாகனக்கூட்டம் செய்தியை அறிவிக்கும் அபூ உமைரைப் பற்றி நாம் ஏற்கனவே எழுதியுள்ள குறிப்புகளில், அவருடைய பெயர் அப்துல்லாஹ் இப்னு அனஸ் என்பதிலும், இவரை அனஸ் (ரழி) அவர்களின் மூத்த மகன் என்று கூறுவதிலும் உறுதியற்ற வார்த்தைகளை கொண்டே கூறப்படுகின்றது என்பதை ரூவாத்துத் தஹ்தீபீன் என்ற கிதாபிலிருந்து முன்னர் குறிப்பிட்டோம்.

இருப்பினும் மேற்படி அபூஉமைரை, கீழ்க்காணும் 3 நபர்களில் ஒவ்வொருவரோடும் இணைத்து அந்த அப்துல்லாஹ்தான் இந்த அபூஉமைர் என்று குழப்பி சிலர் ஆள்மாறாட்டம் செய்யவும் துணிந்துள்ளனர்.

1. நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் மகன்களுள் ஒருவரான நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள்.

2. அபூஃபாத்திமா அப்துல்லாஹ் பின் அனஸ் (ரழி) என்ற ஸஹாபி.

3. அப்துல்லாஹ் பின் அனஸ் என்ற ஒரு தாபியி.


1. நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களும் அபூஉமைரும் ஒரேநபர் அல்ல:

பிறை விஷயத்தில் மக்கள் விழித்துக் கொண்டதை உணர்ந்துகொண்ட மாற்றுக்கருத்துடையோர், தங்களின் பிறை நிலைபாட்டிற்கு ஆதாரமாக விளங்கும் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை, இனம் காணப்படாத அபூஉமைரை வைத்து தூக்கிப்பிடிப்பது கடினம் என்பதினால், அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களது மகன் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள்தான் இந்த அபூஉமைர் என்றும். இந்த அபூஉமைர் அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் மூத்த மகனாவார் என்றும் கூறிவருகின்றனர்.

பிரபலமான நபித்தோழர்களில் ஒருவருவரான அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் வரலாற்றை நாம் அனைவரும் அறிந்ததுதான். அதில் குறிப்பாக செல்வ செழிப்பிற்காகவும், அதிகமான குழந்தைகளை பெறவேண்டியும் நபி (ஸல்) அவர்களின் பிரத்தியேகமான பிரார்த்தனையை பெற்றவர்கள்தான் அனஸ் பின் மாலிக் (ரழி) என்பதும் நினைவில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்நபி (ஸல்) அவர்களின் பிராத்தனையின் காரணமாக அதிகமான மக்கள் செல்வங்களை வல்ல அல்லாஹ் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களுக்கு வழங்கியிருந்ததை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களுக்கு சுமார் 80 குழந்தைகள்வரை இருந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

அத்தகைய பாரம்பரியமிக்க அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் பெரிய குடும்பத்தோடும், அவர்களின் மகன்களின் ஒருவரான நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களோடும் வரலாறு இல்லாத அபூஉமைர் என்ற இவரை இணைத்துவிட்டால், இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு பலமானதாக ஆகிவிடும் என்று இவர்கள் எண்ணிவிட்டார்கள் போலும்.

இஸ்லாமிய வரலாற்று சுவடுகளில் நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் மகனான அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களுக்கு சில பதிவுகள் இருப்பதாலும், அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களுடைய மக்களில் ஒரு ஸஹாபியாக இருப்பதாலும், நபி (ஸல்) அவர்களுடைய தோழமையைப் பெற்றவர்கள் என்பதற்கும் சில சான்றுகளும் இருப்பதாலும் அத்தகைய அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள்தான் அபூஉமைர் என்று கூறி அபூஉமைரை ஸஹாபியாக ஆக்கிவிட்டால் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை ஸஹீஹ் ஆக்கிவிடலாம் என்ற அவர்களின் திட்டத்தை நாம் தெளிவாகவே விளங்க முடிகிறது.

இருப்பினும் அல்லாஹ்வின் பெரும் கிருபையால் நூற்றுக்கணக்கான ஹதீஸ் புத்தகங்களை இருந்த இடத்தில் இருந்துகொண்டே புரட்டிப் படிக்கும் கணிப்பொறியுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை மறந்து இவ்வாறு ஹதீஸ்களில் ஆள்மாறாட்டங்கள்கூட செய்யத் துணிந்தவர்களின் சூட்சமத்தையும், நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களும் அபூஉமைரும் வௌ;வேறு நபர்கள் என்பதையும் நாம் விளக்கிட கடமைப்பட்டுள்ளோம்.

அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் பற்றிய சிறு குறிப்பு :அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் மூத்த மகன் ஆவார்கள். ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டு, இஸ்லாத்திற்கு தொல்லை புரிந்த காலித் பின் சுஃப்யான் என்பவனை கொலை செய்யவதற்காக நபி (ஸல்) அவர்களால் ஏற்படுத்தப்பட்ட படைவீரர்களின் சிறுஅணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர்கள்.

எனவே நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இவர்கள் நபி (ஸல்) அவர்களது தோழமையைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஹிஜ்ரி 76-ஆம் ஆண்டு ஹஜ்ஜாஜ் பின் யூஸூஃபால் கொலை செய்யப்பட்டார்கள் என்ற குறிப்பையும் நாம் காணமுடிகிறது.

இன்னும் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களுக்கு

1. ஜூஹ்ரா,
2. யஜீத் பின் ரஸ்க்,
3. அப்துல்லாஹ் பிப் அபீ உமாமா,
4. அப்துல்லாஹ் பின் முஸன்னா,
5. அப்துல்லாஹ் பின் ஹபீப்


என்ற மாணவர்கள் இருந்துள்ளனர். இப்படி அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் ஒரு நபித்தோழர் என்பதற்கும் அவர்களுக்கு வரலாறுகள் உண்டு என்பதற்கும் இச்சுறுக்கமான பதிகவுகளே போதுமானதாகும்.

நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களும், வாகனக்கூட்டம் செய்தியை அறிவித்த யாரென்றே அறியப்படாத இந்த அபூஉமைரும் இருவேறு நபர்களே என்பதை மாற்றுக் கருத்துள்ளவர்கள் இன்னும் தெளிவாக புரிந்துகொள்வதற்கு கீழ்க்காணும் விஷயங்களை திறந்த மனதோடு சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

1. நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் ஒரு ஸஹாபி ஆவார்கள். அபூஉமைரை தஃபியீன்களில் மிகவும் சிறிய தரத்தில் உள்ளவர். அதிகபட்சம் அவரை ஒரு தாபியி காலத்தில் வாழ்ந்தவர் என்று சொல்லலாம். ஹதீஸ்கலை அறிஞர்கள் அனைவரின் கருத்துப்படியும் இதுதான் உண்மை. அபூஉமைர் மிகவும் சிறிய தாபியி என்பதிலும், அவர்கள் தபகாவில் 4வது தரம் என்பதிலும் கருத்து வேறுபாடுகள் இல்லை. இதற்கான குறிப்புகளை சில கிரந்தங்களில் இடம் பெறும் அறிவிப்பாளரின் தொடரில் நாம் ஏற்கனவே சொல்லியுள்ளோம். தபகாவில் 4வது தரம் என்பது, ஹதீஸ் அறிவிப்புகளில் தாபிகளுக்கு அடுத்த நிலையில் வரும் தபஅதாபியின்களின் காலத்திற்கு மிக நெருக்கமாக வாழ்ந்தவர் என்பதை புரிந்து கொள்ளலாம். இந்நிலையில் தபஅதாபியின்களுக்கு நெருக்கமான காலத்தில் வாழ்ந்த மிகவும் சிறிய தாபியான அபூஉமைரை நபித்தோழராக எவ்வழியிலும் சித்தரிக்க முடியாது.

2. இந்த வாகனக் கூட்டம் அறிவிப்பை அறிவிக்கும் அபூஉமைருக்கு, அவரிடமிருந்து இந்த ஹதீஸை அறிவித்த அபூ பிஷ்ரு என்பவர் பிரத்தியேக மாணவராகிறார். அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள்தாம் அபூஉமைர் என்றால் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் மாணவர்களின் பட்டியலில் இந்த வாகனக்கூட்டம் ஹதீஸை ரிவாயத்து செய்த அபூபிஷ்ரு அவர்கள் இடம்பெறாதது ஏன்?

3. இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பானது அபூஉமைரிடமிருந்து அபூபிஷ்ரு அவர்கள் மட்டும்தான் தனித்து அறிவிக்கிறார்கள். அபூபிஷ்ரு அவர்கள் இந்த வாகனக்கூட்டம் செய்தியில் மிக முக்கியமான அறிவிப்பாளர் என்ற நிலையில் அபூஉமைரை ஸஹாபியாக்கி காப்பாற்றிட முனைந்தவர்கள் அவரின் பிரத்தியேக மாணவரான அபூபிஷ்ரை மறந்து கைவிட்டது ஏனோ?

4. இன்னும் அபூபிஷ்ரைத் தவிர்த்து முஹம்மது பின் இஸ்ஹாக், யூனுஸ் பின் அபீத் போன்றவர்கள் இனம்காணப்படாத அபூஉமைரின் மாணவர்களே இல்லை என்ற சர்ச்சைகள் இருந்தாலும், அபூஉமைரின் மாணவர்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படும் ரபீஃ பின் சலீம், ஜியாத், ஜைத் பின் ஜைத், முஹம்மது பின் இப்ராஹிம் போன்றவர்களில் ஒருவரின் பெயர்கூட அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் மாணவர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். (அபூ உமைரிடமிருந்து அபூபிஷ்ரைத் தவிர வேறு எவரும் எந்தச் செய்தியையும் அறிவிக்கவில்லை என்பதை முன்னரே விளக்கிவிட்டோம்.) இப்படி மாணவர்களின் பட்டியலை வைத்தும் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களும், அபூஉமைரும் இருவேறு நபர்களே என்பது தெளிவாகிறது.

நபித்தோழர் என்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், நபி (ஸல்) அவர்களை நேரில் சந்தித்திருக்க வேண்டும், அவர்களுடைய தோழமையைப் பெற்றிருக்கவேண்டும் என்பதில் உலக முஸ்லிம்களில் எவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது. இந்நிலையில் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களும் அபூஉமைரும் ஒருவரே என்று வாதிடுவதில் உள்ள விபரீதத்தை விளங்காமல் அவர்கள் இவ்வாறு வாதிடுகிறார்கள்.

உதாரணமாக இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை பொறுத்தவரையில், அபூஉமைருடைய உமூமத்திலிருந்து பெயர் கூறப்படாத ஒருவர் வழியாக அபூ உமைருக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டதாகவும், அபூஉமைர் மூலம் அபூபிஷ்;ருக்கு இச்செய்தி வந்தாகவும், பின்னர் அபூபிஷ்ரு மூலம் ஷூஃபா, ஹூஸைம், அபூஅவானா ஆகிய மூவர் இச்செய்தியை அறிவித்துள்ளார்கள். அபூ பிஷ்ரு என்பவர் மட்டுமே இந்த அறிவிப்பை அபூ உமைரிடமிருந்து தனித்து அறிவித்திருப்பதும், அந்த அபூபிஷ்ரு அவர்கள் அபூஉமைரைத் தவிர்த்து தனது மற்ற ஆசிரியர்களிடம் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை பற்றி வினவியதற்கான எந்தக் குறிப்புமில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

5. ஹிஜ்ரி 126ல் மரணமடைந்த அபூபிஷ்ரு அவர்கள் தபகாவில் 5-வது தரத்திலுள்ள ஒரு தபஅதாபியி ஆவார்கள். இப்போது அபூஉமைரை ஸஹாபி என்று கூறினால் அவரிடமிருந்து அறிவித்த அபூபிஷ்ரு அவர்களை தபஅதாபியிலிருந்து தாபியி என்று கூறவேண்டும். காரணம் தபஅதாபிகள் என்பவர்கள் ஸஹாபிகளின் காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல, மாறாக அவர்கள் தாபிகளின் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்னும் நிலையில், ஒரு தபஅதாபியானவர் ஒரு தாபியின் துணையின்றி ஸஹாபியிடமிருந்து நேரடியாக ஒரு செய்தியை அறிவிக்க இயலாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

6. மேலும் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களும் அபூஉமைரும் ஒருவர்தான் என்று வாதிட்டால் ஒரு தபஅதாபியான அபூபிஷ்ரை தாபியாகவும், அவரிடமிருந்து அறிவித்த அவரது காலத்திற்கு பின்னர் வந்த இமாம்களை தபஅதாபிகளாகவும் மாற்ற வேண்டும்.

7. இன்னும் அபூஉமைரே ஸஹாபியான பிறகு அவர்களுக்கு வாகனக்கூட்டம் செய்தியை எந்த உமூமத்தும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த வாகனக்கூட்டம் செய்தியை அபூஉமைர் அவர்கள் நேரடியாகவே அறிவித்திருப்பார்கள். இந்த அறிவிப்பாளர் வரிசையில் உமூமத்தை குறிப்பிட எந்த அவசியமும் ஏற்பட்டிருக்காது.

8. இன்னும் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டில் ஒருசிறு படைக்கு தளபதியாக நபி (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டார்கள் என்பதை வைத்து ஒரு இளைஞராகவோ, அல்லது அந்த வயதை தாண்டியவராகவோதான் அவர்கள் இருந்திருக்க வேண்டும். நோன்பு கடமையாக்கப்பட்ட ஹிஜ்ரி 2ம் வருடத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் மரணித்த வரையிலுள்ள ஹிஜ்ரி 12ம் வருடம் வரையுள்ள ஆண்டுகளில் வாகனக்கூட்டம் அறிவிப்பை வைத்து மதீனாவில் அனைவரும் நோன்பை முறித்த சம்பவம் நிகழ்ந்திருந்தால், அச்சம்பவத்தை மதீனாவிலிருந்த அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களும் நிச்சயமாக அறிந்தே இருந்திருப்பார்கள். இவர்களும் அபூஉமைரும் ஒருவர்தான் என்றால் தனக்கு உமூமத் வழியாக இச்செய்தி அறிவிக்கப்பட்டது என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. வாகனக்கூட்டம் வந்ததையும், நபி (ஸல்) கட்டளையிட்டதையும், அவர்கள் நோன்பை விட்டதையும் அவர்களாகவே சொல்லியிருப்பார்கள். அறிவிப்பாளர் வரிசையில் உமூமத்தை குறிப்பிட எந்த அவசியமும் ஏற்பட்டிருக்காது.

இப்படி பல்வேறு கோணங்களில் ஆய்வுசெய்தால் அபூஉமைரை நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களோடு ஒப்பிடவே முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இன்னும் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் 80 குழந்தைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் அப்துல்லாஹ் என்ற பெயரைக் கொண்டிருந்ததற்கு வாய்ப்புகளும் இருக்கின்றனர். அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் மகன்களில் அப்துல்லாஹ் என்ற பெயருடைய எந்த ஸஹாபியோடும் அபூஉமைரை இணைத்திட முடியாது என்பதற்கும், அப்துல்லாஹ் என்ற பெயருடைய எந்த ஸஹாபியோடும், இன்னும் வரலாறுகள் உள்ள எந்தத் தாபியியோடும் இந்த அபூஉமைரை இணைத்துக் குழப்பிவிட இயலாது என்பதற்கும் மேற்கண்ட விஷயங்களே பொதுவான சான்றுகளாக அமைந்துவிடுகின்றன.

இதை ஏன் நாம் குறிப்பிடுகிறோம் என்றால், அனஸ் என்ற பெயரிலும், அப்துல்லாஹ் பின் அனஸ் என்ற பெயரிலும் இஸ்லாமிய வரலாற்றில் பல ஸாலிஹீன்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர். அதனால்தானோ என்னவோ அபூஉமைரின் பெயர் அப்துல்லாஹ் பின் அனஸ் என்று கூறி குழப்பிவிட்டால், அவர்களை யார் யார் என்று தனியாக அடையாளம் கண்டு தெளிவுபடுத்துவது கடினம் என்று நினைத்துகூட இவ்வாறு திட்டமிட்டு ஆள்மாறாட்டம் நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.


2. நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் (ரழி) அவர்களும் அபூஉமைரும் ஒரேநபர் அல்ல:

இன்னும் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களைப் போலவே மற்றொரு நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் (ரழி) அவர்களுக்கும் வரலாற்று பதிவுகள் இருக்கின்றன. இவர்கள் நாம் மேலே குறிப்பிட்டுள்ள அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் மகன் அல்ல. மாறாக இந்த அப்துல்லாஹ் பின் அனஸ் (ரழி) அவர்கள் அனஸ் என்பவரின் மகனாவார்கள். இவர்களுக்கு அபூஃபாத்திமா என்ற புனைப்பெயரும் உண்டு.அபூஃபாத்திமா அப்துல்லாஹ் பின் அனஸ் (ரழி) என்ற இவர்களின் மாணவர்களாக அபூஉம்ரான், இயாஸ் பின் உனைஸ், அப்துல்லாஹ் பின் யஜீத், கைஸர் பின் கழீப் பின் மவ்ஹிப், கைஸர் பின் முர்ராஹ், நுஃமான் பின் தாபித் பின் ஜூத்தி (அவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் பொழியட்டுமாக) போன்றவர்களை நாம் அடையாளம் காணமுடிகிறது. ஆக அபூஉமைரை, இந்த அபூஃபாத்திமா அப்துல்லாஹ் பின் அனஸ் (ரழி) என்ற இந்த ஸஹாபியோடு இணைத்தாலும், அல்லது அப்துல்லாஹ் என்ற பெயருடைய எந்த ஸஹாபியோடு இணைத்தாலும், மேற்கண்ட நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் விஷயத்தில் எழுதப்பட்ட பொதுவான சான்றுகளில் அது அடிபட்டு விழுந்தும் விடுகிறது.


3. தாபியியான அப்துல்லாஹ் பின் அனஸ் அவர்களும் அபூஉமைர் இல்லை:

இல்லை இல்லை நாங்கள் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களையோ, வேறு எந்த ஸஹாபியையோ நாங்கள் அபூஉமைரோடு இணைத்துச் சொல்லவில்லை, மாறாக அப்துல்லாஹ் பின் அனஸ் என்ற ஒரு தாபியிதான் இந்த அபூ உமைர், என்று யாரும் வாதிக்கலாம் என்பதால் அந்த அப்துல்லாஹ் பின் அனஸ் என்ற தாபியியைப் பற்றியும் நாம் அறிந்து கொள்வோம்.அப்துல்லாஹ் பின் அனஸ் என்ற இந்த தாபியி சிரியாவிலுள்ள திமிஸ்க் (னுயஅயளஉரள) என்ற ஊரில் வாழ்ந்தவர்கள். உமையாக்களுடைய கிலாஃபத்தின் போது இவர்கள் மரணித்தார்கள் என்ற தகவலும் காணக் கிடைக்கின்றன. அதாவது ஹிஜ்ரி 661 முதல் 750 வரையிருந்த உமையாக்களின் ஆட்சி காலம் அது. இவர்களுடைய மாணவர்களும் யாரென்று அறியப்படவில்லை.

இன்னும் வாகனக்கூட்ட அறிவிப்பை அபூஉமைரிடமிருந்து அறிவிக்கும் அபூபிஷ்ரு அவர்கள் அப்துல்லாஹ் பின் அனஸ் என்ற இந்த தாபியிக்கு மாணவராக இருந்ததாகவோ, அல்லது ஹதீஸ்களை பெற்றதாகவோ எந்தக் குறிப்புமில்லை. மதீனாவில் வாழ்ந்த அன்ஸாரித் தோழர்களின் உமூமத்திற்கும் இந்த அப்துல்லாஹ் பின் அனஸ் என்ற இந்த தாபியிக்கும் தொடர்புகள் இருந்ததற்கான எந்தத் தகவல்களும், வாய்ப்புகளுமில்லை.

மாணவர்கள் யாரென்று கண்டறியப்படாத இந்த அப்துல்லாஹ் பின் அனஸ் என்ற தாபியிதான் அபூஉமைர் என்று வாதித்தால் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பே வெளிவந்திருக்கக் கூடாது. காரணம் மாணவர்களே இல்லாத ஒருவரிடமிருந்து, இவரிடமிருந்து யாரும் ஹதீஸ்களை பெற்றதற்கான தகவல் இல்லாத ஒருவரிடமிருந்து, அபூபிஷ்ரு ஒரு ரிவாயத்தை எவ்வாறு அறிவிக்க இயலும்? இப்படி அப்துல்லாஹ் பின் அனஸ் என்ற இந்த தாபியியை அபூஉமைரோடு ஆள்மாறாட்டம் செய்வதிலும் மாற்றுக் கருத்துள்ளவர்கள் தோற்றுதான் போவார்கள்.

மக்களே! இப்படி பலஹீனமான ரிவாயத்துகளை எப்படியும் ஸஹீஹானதாக ஆக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் பிறை சம்பந்தமாக வரும் முர்ஸலான, பலஹீனமாக அனைத்து செய்திகளையும் நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களோடும் அவர்களது 80 பிள்ளைகளோடும் ஒவ்வொன்றாக தொடர்புபடுத்தி, அவற்றிற்கு இவர்களாகவே ஒரு அறிவிப்பாளர் வரிசையையும் தயார்செய்து மக்களுக்கு கூறிவிட்டால், பலஹீனமான அத்தகைய அனைத்து ரிவாயத்துகளுமே ஸஹீஹான ஹதீஸைப்போல தோற்றமளித்துவிடும். பின்னர் அதில் உமூமத்து பிரச்சனை இருக்காது, ஆய்வுகளுக்கும் அவசியமிருக்காது, இதையும் அவர்கள் செய்வார்களா என்ன? செய்தாலும் செய்வார்கள்! 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 22-04-2013]
 

 


 

 

Hit Counter

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved