முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Index   

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு

வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?


பகுதி :1 - முன்னுரை


இன்னும், முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதன்மையாக முந்திக் கொண்டவர்களையும்; மேலும் எவர்கள் அவர்களை நேர்மையான முறையில் பின் தொடர்ந்தார்களோ அவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். இன்னும் அவர்களுக்காக சுவர்க்கச் சோலைகளை ஏற்படுத்தியுள்ளான். அவற்றின் கீழிருந்து ஆறுகள் ஓடுகின்றன் அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக நிலைத்திருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 09:100).

அல்லாஹ்வின் பெரும் கிருபையால் நூற்றுக்கணக்கான ஹதீஸ் புத்தகங்களை இருந்த இடத்தில் இருந்துகொண்டே புரட்டிப் படிக்கும் கணிப்பொறியுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் - அல்ஹம்துலில்லாஹ். மனித வாழ்வை நெறிவூட்டும் கருத்துக் களஞ்சியமாம் அந்நபிமணி மாமொழிகளை கோர்வை செய்யும் பளுவான பணியை இந்த முஸ்லிம் உம்மத்திற்காக தமது தோள்களில் சுமந்து, தியாகங்கள் பல செய்திட்ட அனைத்து ஹதீஸ் கோர்வையாளர்களையும், இறைபொருத்தம் பெற்ற இமாம்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்க முஸ்லிம்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

பிறை பார்த்த செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறியதாக கூறப்படும் வாகனக் கூட்டம் அறிவிப்பு குறித்து ஹிஜ்ரி கமிட்டியின் இந்த ஆய்வுக் கட்டுரையை படிக்கும் எம் அன்பிற்கினிய நண்பர்களே!. ஹதீஸ்களையும் அதன் சட்ட விதிமுறைகளையும் நமக்காக தொகுத்தளித்த மாமேதைகள், மாபெரும் இமாம்களைவிட கணிப்பொறியுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்குத்தான் அல்லாஹ்விடத்தில் அதிக விசாரணைகள் இருக்குமோ என்ற கவலையில், காலத்தால் எம்மை முந்திவிட்ட அத்தியாகச் செம்மல்களின் பிழைகளை பொறுத்தருள்வாயாக என்று இறைவனிடம் மன்றாடுவதே இந்திய ஹிஜ்ரி கமிட்டியினரின் நிலைபாடு என்பதை மிகமிக ஆழமாக இங்கு பதிய வைக்கிறோம்.

காரணம் ஸஹீஹான ஹதீஸாக இருந்தாலும் அது குர்ஆனுக்கு முரண்படுகிறது, அல்லது எங்கள் சுய அறிவுக்கு பொருந்தவில்லை எனவே அதனை மறுக்கிறோம் என்றும், சில ஹதீஸ்களை பலவீனம் என்றும் சுலபமாகத் தட்டிவிடுவதோடு மட்டுமல்லாது அந்த ஹதீஸ்களை தொகுத்தவர்களையும் விமர்சனம் செய்யும் ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஒரு ஹதீஸை அதன் மூல மொழியில் படித்து விளங்க முடியாதவர்கள்கூட இந்த ஹதீஸ் ழயீஃப் என்று ஃபத்வா கொடுக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதை எண்ணி உண்மையிலேயே மனம் வருந்துகிறோம்.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் என்று பதிவு செய்துள்ள பல ஹதீஸ்களை இமாம் தாரகுத்னீ (ரஹ்) ழயீஃப் என்று சொல்லவில்லையா? என்ற எதிர் வினாக்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த உம்மத் கண்ட மாபெரும் இமாம்களில் ஒருவரான இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் மாணவராக இருந்த சட்ட மாமேதை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் தமது ஆசிரியருக்கு முரண்பட்டு கருத்துச் சொல்லவில்லையா? என்பது எம்மை நோக்கி ஏவப்படும் வாதங்கள். அந்த ஷாஃபிஈ இமாமின் (ரஹ்) மாணவரான இமாம் அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் தமது ஆசிரியரின் ஆய்வுகளுக்கு முரண்பட்டு தீர்ப்பளிக்க வில்லையா? போன்ற கேள்விகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது ஒரு பக்கம் என்றால் இதன் மறுபக்கம் இதற்கு நேர்முரணானது.

இமாம் நவவி (ரஹ்) அவர்களை விட உங்கள் அறிவு மிகைத்து விட்டதா? இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்களைவிட நீங்கள் சிறந்தவர்களா?, இமாம் அல்பானி (ரஹ்) அவர்களை விட ஹதீஸ்களை ஆய்வுசெய்வதில் நீங்கள் வல்லவரோ? என்பன போன்ற எதிர்மறையான விமர்சனங்களும் நமது காதுகளில் விழத்தான் செய்கின்றன. எது எப்படியோ, மேற்குறிப்பிட்ட அனைத்து நல்லடியார்களையும் மதிக்கும் நாம், அத்தகைய அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதிலாக கீழ்க்காணும் இறைவசனங்களையே முன்வைக்கிறோம்.

 

 

அந்த உம்மத்து (சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே!. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:134).

 


'மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார் என (ஃபிர்அவ்ன்) வினவினான்'. ஒவ்வொறு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன் என (மூஸா) கூறினார்.' 'அப்படியென்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன?' என அவன் (ஃபிர்அவ்ன்) கேட்டான். 'இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் உள்ளது. என் இறைவன் தவறுவதுமில்லை மறப்பதுமில்லை என அவர் (மூஸா) கூறினார்.' (அல்குர்ஆன் 20:49-52).

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.) (அல்குர்ஆன் 25:73).

காலத்தால் முந்திவிட்ட முன்னோர்கள் பற்றிய கேள்விகள் நமக்கில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்ட வல்ல அல்லாஹ், தனது வார்த்தைகளான குர்ஆன் வசனங்கள் எடுத்துக் கூறப்பட்டாலும் அதை கண்மூடி பின்பற்றாது ஆய்வு செய்தே பின்பற்ற வேண்டும் என்று நம்பிக்கை கொண்டவர்களுக்கு கட்டளையிட்டுள்ளது புலனாகிறது.

இன்னும் ஹதீஸ்களை புரிந்து கொள்வதிலும் அதை ஆய்வு செய்வதிலும் பிழைகள் ஏற்படுவது இயற்கையே. அதனால்தான் மார்க்க ஆய்வுகளில் சிரமமேற்று, அதில் உண்மையாகவே முயற்சிகள் செய்த பிறகும் நாம் ஆய்வுசெய்தவை தவறாக இருக்கும் பட்சத்தில்கூட அதற்கு ஒரு கூலியும், நமது ஆய்வு சரியானதாக இருப்பின் அதற்கு இரண்டு கூலியும் உண்டு என்று இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

ஆய்வாளர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு. என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பாளர்:அமர் பின் அல்ஆஸ் (ரழி), நூல்:புஹாரி-7352, முஸ்லிம்-1716)

ஹதீஸ்களை ஆய்வு செய்யும் ஆய்வுகளின் கோணங்கள்; மாறுபடலாம் ஆனால் அந்த ஹதீஸின் உட்கருத்தான கருப்பொருள் எல்லாவகையிலும் சரியானதாகவும், உண்மைநிலையிலும் இருக்க வேண்டும். மேலும் உட்கருத்தான கருப்பொருள் சிந்தனைக்கு சரியாக இருந்தாலும் ஹதீஸின் அறிவிப்பாளர்கள் ழயீஃபானவர்களாக இருக்கவும் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இன்னும் ஹதீஸ்களை சரியான கோணத்தில் சிந்தித்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணங்களாக நாம் அனைவரும் அறிந்த கீழ்க்காணும் விஷயங்களையும் நினைவூட்ட விரும்புகிறோம்.

இப்னு உமர் (ரழி) கூறியதாவது: ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையை பெருநாள் தர்மமாக வழங்க வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரழி), நூல்:புஹாரி-1503).

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாவு அளவுள்ள பேரீத்தம்பழம் அல்லது ஒரு ஸாவு அளவுள்ள தீட்டப்படாத கோதுமையை பெருநாள் தர்மமாக நிர்ணயித்து அதை பெருநாள் தொழுகைக்கு முன்பாகவே கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள் (புகாரி 1503) என்ற ஸஹீஹான ஹதீஸை நாம் அனைவரும் அறிவோம்.

மேற்கண்ட ஹதீஸை வைத்துக்கொண்டு கோதுமையையும், பேரீத்தம்பழத்தையும் மட்டுமே நாம் பெருநாள் தர்மமாக வழங்க வேண்டும் என்றோ, இதுவல்லாத அரிசி பருப்பு போன்ற மற்ற உணவுகளை பெருநாள் தர்மமாக கொடுக்கக் கூடாது என்றோ புரியக்கூடாது. மாறாக அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் தங்களின் உணவுப் பொருள்களிலிருந்து தர்மம் வழங்கலாம், அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை என்பதை புரியவேண்டும். மேற்கண்ட ஹதீஸ் மூலம் நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்த பொருளின் அளவையும், அந்த தர்மத்தைக் கொடுக்கவேண்டிய கால நேரத்தையுமே முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதுபோல :

உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்கு சென்றால் அவர் கிப்லாவை முன்நோக்கக்கூடாது. தம் முதுகுப்புறத்தால் (அதை) பின்னால் ஆக்கவும் கூடாது. (எனவே) கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 144)

மேற்கூறிய ஹதீஸ் கூறும் மையக்கருத்தானது நாம் இயற்கை தேவைகளுக்காக செல்லும் போது கிப்லா திசையை முன்பின் ஆக்கக்கூடாது என்பதே. மேலும் மேற்கூறிய செய்தியை நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் போது அவர்களுக்கு கிப்லாவின் திசை வடக்காகவோ தெற்காகவோ இருந்திருக்கலாம் என்பதும் புலனாகிறது. இதை புரிந்திடாமல் மக்காவிற்கு கிழக்கு திசையில் வாழுகின்ற நாம் மலம் கழிக்கும் போது கிப்லா திசையை முன்பின் ஆக்கவும் கூடாது, மேலும் கிழக்கு மேற்காகவும் அமரவேண்டுமென்று சட்டம் எடுத்;தால் உலகின் எத்தகைய பொறியாளராலும் அத்தகைய கழிப்பறையை கட்டமைக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்க.

ஆக மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் மனதில் பதித்து தத்தம்பகுதி பிறை அல்லது சர்வதேச பிறை நிலைபாடுகளுக்கும், பிறைபார்த்த தகவலின் அடிப்படையில் செயல்படுவதற்கும் முக்கிய ஆதாரம் என்று தமிழக முஸ்லிம்களிடத்தில் இதுநாள்வரை பிரச்சாரம் செய்யப்பட்ட பிரபலமான இந்த வாகனக்கூட்டம் சம்பந்தமான ஹதீஸின் ஆய்விற்குள் உளத்தூய்மையோடு நுழைவோம் - இன்ஷா அல்லாஹ். 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 11-04-2013]
 

 

Hit Counter

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved