முதல் பக்கம்

வீடியோ

ஆய்வுகள்

கட்டுரைகள்

வரலாறு

இஸ்லாம்

தமிழ் குர்ஆன்

   

 

Go to Index                   

சர்வதேசத்தேதிக் கோடு (IDL) பிரிட்டிஷ்காரர்களின் தனிவுடமையல்ல.

 

கேள்வி : உங்கள் ஹிஜ்ரி நாட்காட்டியானது International Date Line – IDL எனும் சர்வதேசத்தேதிக் கோட்டிலிருந்து ஒரு நாளைத் துவங்குவதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தேதிக் கோட்டை பிரிட்டிஷ்காரர்கள்தான் கண்டுபிடித்து போட்டனர். எனவே உங்கள் ஹிஜ்ரி காலண்டர் இஸ்லாமிய நாட்காட்டியாக எப்படி ஆகும்?

பதில் : International Date Line – IDL எனும் சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதியில்தான் ஒவ்வொரு கிழமையும் (நாள்) மாறுகிறது என்பதை ஒட்டுமொத்த உலக மக்களும் எவ்வித கருத்து வேறுபாடின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர். உதாரணமாக ஒவ்வொருநாளும் சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதிக்கு அருகிலுள்ள கிழக்கத்திய நாடுகளான ஃபிஜி, நியூசிலாந்து போன்ற பகுதியிலிருந்துதான் புதிய நாள் துவங்குகிறது.

இதற்கு வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆத் தொழுகையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். Dateline-க்கு அருகில் கிழக்குப் பகுதி நாடுகளிலுள்ள முஸ்லிம்கள்தான் முதலில் ஜூம்ஆ தொழுகையை தொழுகின்றனர். பிறகு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்று ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து நாடுகளிலுள்ள முஸ்லிம்களையும் அந்த ஜூம்ஆ தொழுகை கடந்து செல்கிறது. பிறகு மேற்கில் அமெரிக்கா, அலாஸ்கா போன்ற நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தொழுது முடித்த பின்னர், அதே சர்வதேசத்தேதிக் கோட்டின் இறுதிப் பகுதியான அமெரிக்கன்சமோவா பகுதியில் வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகை முடிவடைகிறது. இதைத்தான் 24 மணிநேரங்கள் கொண்ட முழுமையான ஒருநாள் என்கிறோம். இதில் யாருக்கும் எத்தகைய மாற்றுக் கருத்துமில்லை. புரிந்துகொள்வதற்காக இந்த உதாரணம்.

இந்நிலையில், 'உங்கள் ஹிஜ்ரி நாட்காட்டியானது Dateline லிருந்து நாளைத் துவங்குவதாக உள்ளதே'' என்று வாதம் வைத்துள்ளனர். தேதிக்கோட்டிலிருந்து (Dateline) நாள் துவங்குவது தவறு, அது ஹராம் என்ற எண்ணம் இவர்களுக்கு இருப்பது இக்கேள்வியிலிருந்து தெரிகிறது. அப்படியானால் பூமியின் எந்தப் பகுதியிலிருந்து ஒருநாள் துவங்குகிறது? என்பதை நடைமுறை உண்மையிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும். மேலும் இன்று வெள்ளிக்கிழமைதான் (16-10-2015) என்பதை இவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா இல்லையா? இன்றைய வெள்ளிக்கிழமை எங்கிருந்து ஆரம்பமாகியது என்பதையும் கூற வேண்டும். ஒரு தேதியை தேதிக்கோட்டிலிருந்து துவங்காமல் எங்கிருந்து துவங்குவது?

இன்னும் 'Dateline'-ஐ பிரிட்டிஷ்காரர்கள்தான் கண்டுபிடித்தனர் என்பதும் இவர்களின் முக்கிய வாதம். கிபி 1884-ல் தேதிக்கோட்டுப் பகுதி (Dateline) அதுதான் என்று உலகம் ஒப்புக் கொள்வதற்கு சுமார் 600 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம்கள் அந்தப் பகுதிக்கு சென்றுவிட்ட வரலாற்றை இவர்கள் படிக்கவில்லை. கிபி 1884-க்கு முன்னரே உலகில் வெள்ளிக்கிழமை உட்பட ஏழு கிழமைகள் இருக்கத்தான் செய்தது. கிபி 1884-க்கு முன்னரே சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை என்ற அந்த நாளில்தான் ஜூம்ஆ தொழுகையை தொழுது இருப்பர்.

இந்நிலையில், 'Dateline' பகுதியை பிரிட்டிஸ்காரர்கள்தான் கண்டுபிடித்தனர்' என்றால், கிபி 1884-க்கு முன்னர் பூமியின் எந்தப் பகுதி முஸ்லிம்கள், வெள்ளிக்கிழமையுடைய ஜூம்ஆ தொழுகையை முதலில் நிறைவேற்றினர் என்பதை ஆதாரத்துடன் இவர்கள் நிரூபிக்க வேண்டும். கிபி 1884-க்கு முன்னர் பூமியிலுள்ள முஸ்லிம்களுக்கு தொழுகைகளும், கிப்லாவும் இருக்க வில்லையா? நவ்வூதுபில்லாஹ்.

கடந்த அக்டோபர் 1884-ல், வாஷிங்டனில் நடைபெற்ற International Meridian Conference இல் சர்வதேசத்தேதிக் கோட்டுப்பகுதி என்று அறிவித்ததை ஏதோ பிரிட்டிஷ்காரர்கள் IDL-லை அகழ்வாராய்ச்சி செய்து புதிதாக உறுவாக்கியதைப் போல சித்தரிக்கின்றனர். Dateline பகுதி பிரிட்டிஷ்காரர்களின் தனிவுடமையல்ல.

முஸ்லிமல்லாதவர்களின் கண்டுபிடிப்புகள் ஹராம் என்று எண்ணிக் கொண்டார்கள் போலும். புதிய கண்டுபிடிப்புகள் நாம் பயன்படுத்தும் போது அவற்றை யார் கண்டுபிடித்தார்? அவருடைய மதம் என்ன? அவருக்கு எந்த ஊர்? என்று நாம் பார்ப்பதில்லை. அப்படி பார்க்க வேண்டிய அவசியமுமில்லை. கண்டுபிடித்த விஷயம் சரியாக இருந்து, மார்க்கத்தில் தடை இல்லாமலிருந்தால் போதுமானது. அவற்றை பயன்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை. உதாரணமாக முஸ்லிம்களாகிய நாம் தினமும் பயன்படுத்தும் தொழுகை கால அட்டவணையின் நேர அளவுகளின் சூத்திரத்தையும், அதன் கணக்கீட்டையும் கண்டுபிடித்தது யார்? என்று நாம் ஆராய்ச்சி செய்வதில்லை. அதை ஏற்று சரிகண்டு பின்பற்றத்தான் செய்கிறோம்.

அதுபோலத்தான் அமெரிக்கன்சமோவாவையும், ஃபிஜி தீவுகளையும் பிரிக்கும் பகுதியாக உள்ள சர்வதேசத்தேதிக் கோட்டுப்பகுதி மிகச் சரியான இடத்தில் அமைந்துள்ளது. அந்த இடத்தில்தான் வியாழக்கிழமையிலிருந்து, வெள்ளிக்கிழமை மாறுகிறது. தினமும் கிழமை மாற்றம் அந்த இடத்தில்தான் நடைபெறுகிறது. அல்குர்ஆனின் 55:17-வது வசனம் சிலாகித்துச் சொல்லும் இடமாகவும் இது இருக்கிறது. இவ்வாறு அல்லாஹ்வின் அத்தாட்சிகள் உள்ள இடமாக இவ்விடம் திகழ்கிறது.

இன்னும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி மார்க்க அடிப்படையில் அமைந்ததுதான் என்பதற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து நேரடி ஆதாரங்களை மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்து விட்டோம். அவ்வாறு நிரூபித்த பின்னரும் 'உங்கள் ஹிஜ்ரி காலண்டர் இஸ்லாமிய நாட்காட்டியாக எப்படி ஆகும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஹிஜ்ரி நாட்காட்டியின் பற்றி அடிப்படை ஞானமில்லாமல் இவர்கள் விமர்சிப்பது துரதிஷ்டவசமும், துர்பாக்கிய நிலையுமாகும்.

எவ்வித கருத்து வேறுபாடின்றி இவர்களே ஏற்றுக் கொண்டுள்ள தொழுகை அட்டவணையின் கிழமைகள் எந்த Dateline - ஐ அடிப்படையாகக் கொண்டது? மேலும் அதன் கிழமைகள் எங்கிருந்து துவங்கிறது? என்பதையாவது இவர்கள் சிந்திக்கக் கூடாதா?

இவர்களது பிறை நிலைபாட்டின்படி பிறைபார்க்கும் தமிழக, தேசிய எல்லைகளுக்கு மார்க்க ஆதாரமுண்டா? என்பதை ஆய்வு செய்யாமல் Dateline பற்றி தாருமாறாக விமர்சிப்பது நகைப்புக்குரியது. Dateline பகுதியை ஹிஜ்ரிகமிட்டி கிரையப்பத்திரம் செய்து வாங்கிவிட வில்லை. தற்போதிருக்கும் உண்மையான சர்வதேசத்தேதிக் கோட்டுப்பகுதியை மாற்றி, தான் விரும்பும் இடத்திலிருந்துதான் ஒவ்வொருநாளும் துவங்க வேண்டும் என்ற கற்பனை ஆசையில் இவர்கள் மிதக்கின்றனர். அவர்கள் விரும்பும் அந்த இடத்தை புதிய சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியாக (New IDL) அறிவித்து உலக நாடுகளை ஏற்றுக் கொள்ளச் செய்யட்டுமே!. பிறகு அதன் அடிப்படையில் ஒரு சந்திரக் காலண்டரையும் தயாரித்து மக்கள் மத்தியில் தரட்டும். அதன் பின்னர் ஹிஜ்ரி நாட்காட்டி இஸ்லாமிய நாட்காட்டியா? என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்பட்டும். இவர்களது மனோ இச்சைகள் ஒருபோதும் மார்க்கமாகாது.

நாள் : 03-முஹர்ரம்-1437, வெள்ளிக்கிழமை (அக் 16)
 

 


 


 

 


 

Visit : www.mooncalendar.in

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved